ஜெருசலேமிலிருந்து சக்கரியாஸின் வீட்டிற்கு மாதாவின் பயணம்.

28 மார்ச்  1944.
ஜெருசலேம் பட்டணம்.  இப்பொழுது ஜெருசலேமை அதன் தெருக்கள், வாசல்கள் முதலியவற்றுடன் நான்  நன்கறிகிறேன்.

சேசு காணிக்கையாக்கப்பட்டபோது, கழுதையை சூசையப்பர் விட்டிருந்த தொழுவத்தை நான் அடையாளம் காண்கிறேன்.  இப்போதும் அவர் இரு கழுதைகளையும் அதே தொழுவில் விடுகிறார்.  அவற்றிற்குத் தீனி வைத்த பின் அவர் மாதாவுடன் தேவாலயத்தில் ஆண்டவரைத் தொழச் செல்கிறார்.

பின் அவர்கள் வெளியே வந்து தங்களுக்கு அறிமுகமான ஒரு வீட்டிற்குட் செல்கிறார்கள்.  அங்கே சற்று பசியாற்றிக் கொள்கிறார்கள்.  சூசையப்பர் வெளியே செல்ல மாதா சற்று ஓய்வு கொள்கிறார்கள்.  பின் அர்ச். சூசையப்பர் ஒரு வயதான மனிதருடன் வருகிறார்.  மாதாவிடம்:  “இந்த மனிதரும் நீங்கள் போகும் வழியாகவே போகிறார்.  ஆதலால் உங்கள் உறவினரிடம் செல்ல நீங்கள் தனியே அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியிராது.  இவரை எனக்குத் தெரியும்.  நீங்கள் இவரை நம்பலாம்” என்று கூறுகிறார்.

அவர்கள் மறுபடியும் கழுதையில் ஏறிச் செல்கிறார்கள்.  பட்டண வாசல் வரை சூசையப்பர் சென்று மாதாவை வழியனுப்பி வைக்கிறார்.  (அது அவர்கள் முன்பு வந்த வாசல் அல்ல, வேறொரு வாசல்.)  மாதா அந்த வயோதிபனோடு புறப்பட்டுச் செல்கிறார்கள்.  சூசையப்பருடைய மவுனத்துக்கு நேர்மாறாக அம்மனிதன் இடைவிடாமல் பேசிக் கொண்டே யிருக்கிறான்.  பல காரியங்களில் அக்கறை காட்டுகிறான்.  மாதா பொறுமையுடன் அம்மனிதனுக்குப் பதில் சொல்கிறார்கள்.  சூசையப்பருடைய கழுதையின் சேணத்தில் தொங்கிய மரப் பேழை இப்பொழுது மாதாவிடம் இருக்கிறது.  அந்தப் பெரிய மேல் வஸ்திரத்தையும் அவர்கள் இப்போது அணியவில்லை.  போர்வையையும் மடித்துப் பேழையில் வைத்து விட்டார்கள்.    இருண்ட நீல ஆடையும் வெள்ளை முக்காடும் அணிந்திருக் கிறார்கள்.  அது வெயிலுக்குப் பாதுகாப்பாக உள்ளது...

அந்த வயோதிபனுக்கு காது மந்தமாயிருக்க வேண்டும்.  ஏனென்றால் மென்குரலிலேயே வழக்கமாகப் பேசும் மாதா அம்மனிதனுக்குக் கேட்கும்படி சத்தமாய்ப் பேச வேண்டியுள்ளது.  அவன் கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டாயிற்று.  செய்தி யெல்லாம் சொல்லியாயிற்று. களைப்பால் சேணத்திலிருந்தபடியே உறங்குகிறான்.  பாதைக்குப் பழக்கப்பட்ட அவனுடைய கழுதை வழிபார்த்துச் செல்கிறது.

அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மாதா தன் சிந்தனைகளைக் கூட்டி ஜெபிக்கிறார்கள்.  அந்த ஜெபம் மெல்லிய பாடலாக வருகிறது.  வானத்தை நோக்கிய பார்வை.  நெஞ்சில் குறுக்காகச் சார்த்திய கைகள்.  அவர்களின் உள்ளக் கிளர்ச்சியால் முகம் மகிழ்ந்து பிரகாசமடைகிறது.

இப்போது காட்சி தடைப்படுகிறது.

நேற்று நடந்தது போலவே இக்காட்சி தடைப்படுகிற இந்நேரத்திலும் என் அகக் கண்களுக்குப் புலனாகிற மாதாவின் அருகில் நான் இருக்கிறேன்.  அது எவ்வளவு தெளிவாக உள்ளதென்றால் அவர்களின் ரோஜா போன்ற கன்னங்களை நான் விவரிக்க முடியும்.  அவை திண்ணமாயில்லை.  மெல்லியதாக மிருதுவாக உள்ளன.  உதடுகள் பளிச்சென்று காணப்படுகிற சிவப்பாயிருக்கின்றன.  இருண்ட புருவங்களுக்கு நடுவே இனிதாய் ஜொலிக்கின்றன அவர்களின் நீல விழிகள்.  அவர்களின் முடி இரண்டாய் வகுக்கப்பட்ட மூன்று சுருள்களுடன் இருபக்கமும் படிகின்றது.  சிவந்த அவர்களின் காதுகளை அது மறைக்கின்றது.  அது பொன்போல் மின்னி தலையில் இட்டிருக்கிற முக்காட்டினடியில் மறைகிறது.  அவர்களின் மேல் வஸ்திரம் தலையை மூடியிருக்கிறது.  பட்டுப்போல் இருக்கிறது ஆடை.  மேலாடை ஒரு முக்காட்டைப்போல், அதே பட்டுத்துகிலில் இருண்ட  நிறத்தில் மெல்லியதாக செய்யப்பட்டுள்ளது.  இன்னும் நான் கூற முடியும்:  அவர்களின் ஆடை கழுத்தைச் சுற்றி உள்மடித்துத் தைக்கப்பட்டு நூற்கயிற்றால் இறுக்கப்பட்டுள்ளது.  கழுத்தின் அடியில் அது முடிச்சாக கட்டப்பட்டிருக்கிறது.  இடையிலும் ஒரு வெண்பட்டுக் கச்சையைக் கட்டியுள்ளார்கள்.  அதிலிருந்து இரண்டு தொங்கல்கள் தொங்குகின்றன.  பரிசுத்தமே பரிமளிப்பதாக, அவர்களின் தோற்றமே சம்மனசுக்குரியதாகக் காணப்படுகிறது.

எவ்வளவுக்கு அவர்களை  நான் பார்க்கிறேனோ அவ்வளவுக்கு அவர்களை எப்படிக் கஷ்டப்படுத்தினார்கள் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.   இவ்வளவு சாந்தமும் கருணையும் உள்ள மாதாமேல், இப்படி சரீரத்திலும் கூட மென்மையாகக் காணப்படுகிறவர்கள் மேல் எப்படித்தான் இரக்கமற்றுப் போனார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன்.  அவர்களைப் பார்க்கும்போது கல்வாரியில் கேட்ட அவர்களுக்கெதிரான எல்லா கூச்சல்களையும் நான் மீண்டும் கேட்கிறேன்.  எல்லா கேலி வசைகளையும் நிந்தைகளையும் சாபங்களையும் - கல்வாரிக் கைதியின் தாயாயிருந்த காரணத்திற்காகச் சொல்லப்பட்ட அவையெல்லாம் மறுபடியும் எனக்குக் கேட்கின்றன.  இங்கே அவர்களை அமைதியாயும் அழகாயும் காண்கிறேன்.  ஆயினும் அந்த அவஸ்தையான நேரங்களில் காணப்பட்ட துயரம் நிறைந்த முகத்தின் ஞாபகத்தை இந்த வதனத்தின் நினைவு அகற்றி விடவில்லை.  சேசுவின் மரணத்திற்குப் பிறகு ஜெருசலேமிலிருந்த இல்லத்தில் கைவிடப்பட்டதாயிருந்த அம்முகத்தின் நினைவையும் மாற்றிவிடவில்லை.  நான் ஞாபகம் கொள்வது போலவே அவர்களும் நினைக்கத்தான் செய்வார்கள்.  அந்தத் துயரமான கண்ணீர்களின் நினைவை மாற்றுவதற்காக அவர்களை முத்தமிட ஆசிக்கிறேன்.

மாதாவை என் அருகில் கொண்டிருப்பது எனக்கு எவ்வளவு சமாதானத்தைக் கொண்டு வருகிறதென்பதை உங்களால் (ஆன்ம குரு) நம்ப முடியாது.  அவர்களைப் பார்த்துக் கொண்டே இறப்பது வாழ்நாளின் மிக இனிய நேரத்தைப் போல், ஏன் அதைவிட கூடுதல் இனிமையாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.  எனக்கென மட்டுமே நான் அவர்களை இப்படிக் காணாதபோது, அவர்கள் இல்லாதிருப்பது எனக்குப் பெரும் துயரமாயிருந்தது - ஒரு தாய் இல்லாதிருப்பதைப் போல.  டிசம்பரிலும் ஜனவரி தொடக்க நாட்களிலும் இருந்தது போன்ற பெரும் மகிழ்ச்சியை மறுபடியும் நான் உணருகிறேன்.  என் எல்லா மகிழ்வுகளையும் மூடுகிற பாடுகளின் காட்சியின் துயரத் திரை இருந்தபோதிலும், நான் இப்போது மகிழ்வாயிருக்கிறேன்.

பெப்ருவரி 11 மாலையில் சேசு பாடுகளால் வேதனைப் படுவதைக் கண்டதிலிருந்து நான் எப்படி உணருகிறேன்  என்றும் என்ன நடந்துள்ளது என்றும் உங்களைக் கண்டுபிடிக்க வைக்கவும் விளக்கிச் சொல்லவும் கஷ்டமாயிருக்கிறது.  அந்தக் காட்சி என்னை முற்றிலுமாக மாற்றியுள்ளது.  நான் இப்பொழுது இறந்தாலும் நூறு ஆண்டு கழித்து இறந்தாலும் அந்தக் காட்சியின் கூர்மையும் விளைவுகளும் அப்படியேதான் இருக்கும்.  முன்பெல்லாம் நான் கிறீஸ்துநாதருடைய துயரங்களை நினைப்பேன். இப்பொழுது அவற்றில்  நான் வாழ்கிறேன்.  ஏனென்றால் அந்த மாலையில் நான் பட்ட வேதனைகளை மீண்டும் எனக்குக் கொண்டுவர ஒரு வார்த்தை அல்லது ஒரு உருவத்தின் ஒரு பார்வை போதுமாயிருக்கிறது.  அந்தக் கொடூரங்களினால் பயங்கர அதிர்ச்சியடையச் செய்ய அவை போதுமாயிருக்கின்றன.  அவர் தனியே விடப்பட்டு அனுபவித்த வேதனைகளைப் பற்றி  நான் வேதனைத் துயரமடைகிறேன்.  எதுவும் அவைகளை எனக்கு நினைப்பூட்டாவிடினும் அவற்றின் நினைவே என் இருதயத்தைக் கிழியச் செய்கிறது.

மாதா பேசத் தொடங்குகிறார்கள்.  நான் மவுனமாகிறேன்.


மாதா கூறுகிறார்கள்: 

என் மகள் பாவம்!  நீ அதிக களைப்புற்றிருப்பதால் நான் அதிகம் கூறவில்லை.  உன்னுடையவும் இதை வாசிப்பவர் களுடையவும் கவனத்திற்கு இதைக் கொண்டு வரவே விரும்புகிறேன்.  அதாவது, இடைறொமல் ஜெபிக்கிற பழக்கம் சூசையப்பரிடமும் என்னிடமும் இருந்ததைத்தான்.  ஜெபத்திற்கே நாங்கள் முதலிடம் கொடுத்து வந்தோம்.  களைப்பும் அவசரமும் கவலைகளும் அலுவல்களும் ஒருபோதும் எங்கள் ஜெபத்தைத் தடை செய்யவில்லை.  மாறாக அவை ஜெபத்திற்கு உதவின.  ஜெபம் எங்கள் அலுவல்களின் அரசியாகவும் எங்கள் விடுதலையாகவும் ஒளியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இருந்தது.  துயரமான நேரங்களில் அது எங்கள் ஆறுதலாயிருந்தது.  மகிழ்வான நேரங்களில் அது எங்கள் பாடலாக அமைந்தது.  எப்படியும் எங்கள் ஆன்மாக்களின் நிரந்தர தோழனாகவே ஜெபம் இருந்தது.  ஜெபம்  உலகத்திலிருந்து, நம் பரதேச வாசத்திலிருந்து எங்களைப் பற்றறச் செய்தது.  நம் தாய்நாடாகிய மோட்சத்தை நோக்கி எங்களை எழுப்பியது.

இப்பொழுது கடவுளை நான் என்னுடன் கொண்டிருந்த படியால் பரிசுத்தரின் பரிசுத்தரை ஆராதிக்க நான் என் நெஞ்சகத்திற்குள் நோக்குவதே போதுமாயிருந்தது.  ஆனால் இந்நிலையிலிருந்த நான் மட்டுமல்ல, சூசையப்பரும் தாம் ஜெபிக்கும்போது கடவுளுடன் ஐக்கியமானதை உணர்ந்தார்.  ஏனென்றால், எங்கள் ஜெபம், எங்களை முழுவதையும் கொண்டு கடவுளை ஆராதிப்பதாயிருந்தது.  கடவுளை ஆராதித்ததாலும் அவரால் அரவணைக்கப்பட்டதாலும் நாங்கள் அவருடன் இளகி உருகிப் போனோம்.

மேலும் நீ இதைக் கவனி:  நித்திய கடவுளை என்னிடத்தில் கொண்டிருந்த நாள் முதலாய், அதற்காக தேவாலயத்திற்குரிய மரியாதையின் சங்கையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உணரவில்லை.  கடவுளின் முன்பாக தான் ஒன்றுமேயில்லை என்று உணர்வதி லிருந்தும், அந்த ஒன்றுமில்லாமையை கடவுளின் மகிமைக்கென முடிவில்லாத ஓசான்னாவாக மாற்றுவதிலிருந்தும், யாரையும், அவர்கள் மிக ஆழ்ந்த அர்ச்சிஷ்டதனத்தில் இருந்தாலும்கூட, அது அவர்களை விடுவிப்பதில்லை.  ஏனெனில் ஆண்டவர் அப்படிச் செய்ய        நம்மை அனுமதிக்கிறார்.

நீ பலவீனமாய், வறியவளாய், குற்றங்குறை  உள்ளவளாய் இருக்கிறாயா?  ஆண்டவருடைய பரிசுத்தத்தைப் பார்த்து மன்றாடு. “பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்!”  உன் பரிதாப நிலையில் உனக்கு உதவும்படி ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தரிடம் மன்றாடிக் கேள்.  அவர் வந்து தம்முடைய புனிதத்தன்மையை உனக்குள் ஊட்டுவார்.  நீ கடவுளின் பார்வையில் தூயவளாய் பேறுபலனில் செல்வந்தமாக  இருக்கிறாயா?  அப்போதும் ஆண்டவருடைய பரிசுத்தத்தைப் பார்த்து  மன்றாடு.  கடவுளின் பரிசுத்தம் அளவில்லாதது.  அது உன் பரிசுத்தத்தை அதிகரிக்கும்.  மனிதர்களுடைய பலவீனங்களுக் கெல்லாம் மேலாயிருக்கிற சம்மனசுக்கள் தங்கள் “பரிசுத்தர்” என்னும் வாழ்த்தை ஒரு விநாடி இடையில்லாமல் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அதனால் அவர்களுடைய சுபாவத்திற்கு மேலான அழகு, நம் கடவுளின் பரிசுத்தத்தை அவர்கள் மன்றாடும்                              ஒவ்வொரு தடவையும் அதிகரிக்கிறது.  சம்மனசுக்களைப் போல் நீயும் செய்.

ஜெபத்தின் பாதுகாப்பை ஒருபோதும் இழக்காதே.  ஜெபமானது சாத்தானுடைய ஆயுதங்களையும் உலகத்தின் கபடத்தையும், மாமிசத்தின் தூண்டுதல்களையும் மனத்தின் அகங்காரத்தையும் மழுங்கச் செய்கிறது.  மோட்சத்தைத் திறக்கச் செய்து அதன் வரப்பிரசாதங்களையும் ஆசீர்வாதங்களையும் பொழியச் செய்கிற இந்த ஆயுதத்தை ஒருபோதும் கீழே வைத்துவிடாதே.

கடவுளின் தண்டனையைக் கொண்டு வருகிற பாவங் களிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு ஒரு ஜெப மழை உலகத்திற்குத் தேவைப்படுகிறது.  ஆனால் வெகு சிலரே ஜெபிக்கிறார்களாதலால், அந்த சிலர் அநேகராயிருப்பதுபோல் ஜெபிக்க வேண்டும்.  அவர்கள் தங்களுடைய உயிருள்ள ஜெபங்களை அதிகரித்து வரப்பிரசாதங்களை அடைவதற்குத் தேவையான அளவுக்கு ஈடு செய்து கொள்ள வேண்டும்.  ஜெபமானது உண்மையான அன்பினாலும் பரித்தியாகத்தினாலும் மணம் ஊட்டப்படும்போது அது  உயிருள்ள ஜெபமாகிறது.

அன்பான மகளே, நீ உன்னுடைய துன்பங்களோடு கூட, சேசுவுடையவும் என்னுடையவும் வேதனைகளைப் பற்றி வேதனைப் படுவது நல்ல காரியமே.  அது கடவுளுக்குப் பிரியமானது, அது பேறுபலன் தருவது.  அனுதாபமுள்ள உன் அன்பு எனக்கு மிக அருமையாயிருக்கிறது.  என்னை முத்தமிட நீ விரும்புகிறாயா?  என் குமாரனுடைய காயங்களை முத்தமிடு.  உன் அன்பென்னும் தைலத்தை அவற்றின் மேல் ஊற்றிக் கட்டு.  அவருடைய கசையடிகளின் அவஸ்தையையும், அவருடைய முள்முடியையும், ஆணிகள் சிலுவை இவைகளின் வேதனையையும் நான் என் உள்ளத்தில் அனுபவித்தேன்.  அதேபோல் சேசுவுக்குக் கொடுக்கப்படுகிற எல்லா அன்பின் அடையாளங்களையும் என் உள்ளத்தில் எனக்குக் கொடுக்கப்படும் முத்தங்களாக உணருகிறேன்.  வா, நான் மோட்சத்தின் இராக்கினி.  ஆயினும் எப்போதும் மாதாவாக இருக்கிறேன்...

நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.