இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் பிறர்சிநேகம்

தேவசிநேகமும், பிறர்சிநேகமும் ஒரே திருச்சட்டத்தால் நமக்குக் கட்டளையாகத் தரப்பட்டுள்ளன. "சர்வேசுரனைச் சிநேகிக்கிறவன் தன் சகோதரனையும் சிநேகிக்கக்கடவான் என்கிற இந்தக் கற்பனையைச் சர்வேசுரனிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம்'' (1 அரு.4:21). கடவுளை நேசிக்கிறவன் அவர் நேசிக்கும் அனைத்தையும் நேசிக்கிறான் என்பதுதான் இதன் காரணம் என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார். அர்ச். ஜெனோவா கத்தரீனம்மாள் ஒரு நாள், ""ஆண்டவரே, நான் என் அயலானை நேசிக்க வேண்டும் என்று நீர் சித்தங்கொள்கிறீர். ஆனால் உம்மைத் தவிர வேறு யாரையும் என்னால் நேசிக்க முடியாது'' என, "என்னை நேசிப்பவர்கள் நான் நேசிக்கும் காரியத்தையும் நேசிக்கிறார்கள்'' என்று கடவுள் பதில் கூறினார். ஆனால் மாமரி கடவுளை நேசித்த அளவுக்கு அவரை நேசித்தவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதில்லை என்பது போலவே, மாமரி தன் அயலானை நேசித்ததை விட அதிகமாக அவனை நேசித்தவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை. "சலொமோன் இராஜா தமக்கு லீபான் மலையில் விளைந்த (கேதுரு) மரத்தினால் ஒரு பல்லக்கை உண்டுபண்ணினார். . . எருசலேம் பெண்களினிமித்தம் நேசமென்னும் சமுக்காளத்தை உட்புறத்தில் போட்டுச் சோடித்தார்'' (உந்.சங்.3:9,10) என்னும் உந்நத சங்கீத வார்த்தைகளுக்கு சுவாமி கொர்னேலியஸ் ஆ லாப்பிதே விளக்கம் கூறுகையில், ""இந்தப் பல்லக்கு அவதரித்த வார்த்தையானவர் தங்கியிருந்த மாமரியின் திருவுதரம் ஆகும். அவர் எருசலேமின் பெண்களுக்காக நேசத்தால் அதை நிரப்பினார்; ஏனெனில், மாமரி தன்னிடம் தஞ்சமடையும் அனைவருக்கும் அவர்கள் உதவும்படியாக, நேசமாகவே இருக்கும் கிறீஸ்துநாதர் திவ்விய கன்னிகையை உச்சபட்ச பிறர்சிநேகத்தால் ஏவித் தூண்டினார்'' என்கிறார்.

மாமரியின் சிநேகம் எவ்வளவு மேலானது என்றால், இவ்வுலகில் இருந்தபோது, ஏழைகள் தன்னிடம் கேட்காமலே மாமரி அவர்களுக்கு உதவி புரிந்தார்கள். இதற்குக் கானாவூர்த் திருமணம் ஓர் உதாரணம். அங்கே, திருமண வீட்டாரின் இக்கட்டான சூழ்நிலையைப் பற்றி மாமரி தன் திருமகனிடம் ""அவர்களுக்கு இரசமில்லை'' (அரு.2:3) என்று கூறி, ஒரு புதுமையைச் செய்யும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். ஓ, தன் அயலானின் துன்பத்தைத் தீர்க்கும் அலுவலில் அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயல்பட்டார்கள்! பிறர்சிநேகத்தின் அலுவல் ஒன்றை நிறைவேற்றும்படி எலிசபெத்தின் வீட்டிற்கு மாமரி சென்றபோது, அவர்கள் ""மலைநாட்டுக்கு விரைந்து போனார்கள்'' (லூக்.1:39). ஆயினும் நம் இரட்சணியத்திற்காகத் தன் திருமகனை மரணத்திற்குக் கையளித்தபோது அவர்கள் வெளிப்படுத்திய பிறர்சிநேகத்தின் மேன்மையை எலிசபெத்தின் வீட்டில் அதிக முழுமையாக அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தக் காரியத்தைப் பற்றி அர்ச். பொனவெந்தூர் கூறுகையில்:""மாமரி தன் ஒரே பேறான திருமகனைக் கையளிக்கும் அளவுக்கு உலகின் மீது அன்பு கூர்ந்தார்கள்'' என்கிறார். இதனாலேயே அர்ச். ஆன்செல்ம், ""ஓ, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்கள் மாசற்றதனம் தேவதூதர்களின் மாசற்றதனத்தையும், உங்கள் தயவு புனிதர்களின் தயவையும் விஞ்சியதாக இருக்கிறது'' என்கிறார்! ""மாமரி இப்போது மோட்சத்தில் இருப்பதால், அவர்களுடைய இந்த நேசம் குறைந்து விடவில்லை, மாறாக, இப்போது மனிதர்களின் துன்பங்களை அவர்கள் அதிகத் தெளிவாகக் காண்பதால், அவர்களுடைய நேசம் இப்போது அதிகரித்திருக்கிறது'' என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். புனிதரே தொடர்ந்து, ""தான் இவ்வுலகில் இருந்தபோதே பரிதாபத்திற்குரிய மனிதர்களின் மீது மாமரி கொண்டிருந்த இரக்கம் பெரிதாக இருந்தது; இப்போது மோட்சத்தில் ஆட்சி செலுத்துகையில் அவர்களது இரக்கம் இன்னும் பல மடங்கு பெரியதாக இருக்கிறது'' என்று கூறுகிறார்.

ஓ இரக்கத்தின் மாதாவே, நீங்கள் தேவசிநேகத்தால் முழுவதுமாக நிரம்பியிருந்தீர்களே, அவருடைய மாசற்றதும், பரிசுத்தமானதுமான அன்பை எனக்குப் பெற்றுத் தாருங்கள். நீங்கள் உங்கள் அயலாரிடம் முழுவதும் அன்பாகவே இருந்தீர்களே, என் அயலானை நேசிக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள். மரியாயே, என்னை ஒரு புனிதனாக்குங்கள்.

"ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையிடம் ஜெபித்தவர்கள் யாரும் அவர்களுடைய பிறர்சிநேகத்தின் வழியாக வரப்பிரசாதங்களை அடையாமல் போனதில்லை'' என்று அர்ச். ஆக்னஸ் அர்ச். பிரிஜித்தமாளுக்கு உறுதி கூறினாள். மாமரி நமக்காகப் பரிந்து பேசவில்லை என்றால், நாம் உண்மையாகவே பரிதாபத்திற்கு உரியவர்களாகத்தான் இருப்போம்! சேசுநாதர்தாமே இந்தப் புனிதையிடம் பேசும்போது, ""என் திருமாதாவின் ஜெபங்கள் இல்லாவிடில், இரக்கத்திற்கான எந்த நம்பிக்கையும் இருக்காது'' என்றார். என் போதனைகளைக் கேட்டு, என் நேசத்திற்குச் செவிசாய்த்து, என்னைக் கண்டுபாவிப்பவன், மற்றவர்களிடம் பிறர்சிநேகத்தைச் செயல்படுத்துகிறான் என்று தேவமாதாவே கூறுகிறார்கள்: ""நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாசலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பாக்கியவான்'' (பழ.8:34). ""நம் அயலான் மீது நாம் கொள்ளும் பிறர்சிநேகத்தால் அன்றி, மரியாயின் தயவுள்ள அன்பைப் பெற அதிக நிச்சயமான வேறு எந்த வழியும் நமக்கு இல்லை'' என்று அர்ச். கிரகோரி நாசியான்சென் நமக்கு உறுதியாகக் கூறுகிறார். ஆகவே, ""உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்'' (லூக்.6:36) என்று கடவுள் நமக்கு அறிவுறுத்துவது போல மாமரியும் தன் எல்லாக் குழந்தைகளிடமும், ""உங்கள் தாய் இரக்கமுள்ளவளாக இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்'' என்று சொல்வதாகத் தோன்றுகிறது. கடவுளின் மாமரியும் நமக்குக் காட்டும் நேசத்தின் அளவைத் தீர்மானிப்பது நாம் நம் அயலானுக்குக் காட்டும் சிநேகமே என்பது நிச்சயம்: ""கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்.6:38). ""ஏழைகளுக்குக் கொடுத்து, மோட்சத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று அர்ச். மெத்தோடியஸ் சொல்வது வழக்கம். ஏனெனில் பிறர்சிநேகம் நம்மை இவ்வுலகத்திலும், மறுவுலகத்திலும் மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகிறது என்று அப்போஸ்தலர் எழுதுகிறார்: ""தேவபக்தி இந்த ஜீவியத்துக்கும், இதற்குப் பின்வரும் ஜீவியத்துக்கும் வாக்குத்தத் தமுள்ளதாகையால், எல்லாவற்றிற்கும் பயனுள்ளது'' (1 திமோ.4:8). ""ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்'' என்ற பழமொழி ஆகம வாக்கியத்துக்கு (13:17) விளக்கம் தருகையில் அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பரும் இதே விதமான கருத்தைக் கூறுகிறார்: ""தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்கிறவன் கடவுளைக் கடனாளியாக்குகிறான்.''  ஓ, இரக்கத்தின் மாதாவே, நீங்கள் அனைவர் மீதும் இரக்கத்தால் நிறைந்திருக்கிறீர்கள்; என் துயரங்களை மறந்து விடாதீர்கள்; அவற்றை முற்றிலும் நன்றாக நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எதையும் மறுக்காதவராகிய கடவுளிடம் எனக்காகப் பரிந்து பேசுங்கள். தேவசிநேகத்திலும், பிறர்சிநேகத்திலும் உங்களை நான் கண்டுபாவிக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்.