இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப்பெற்ற சேசுவின் திவ்விய இருதயம்!

நன்மைத்தனம் என்பது மற்றவர்களை சநதோஷப்படுத்த வேண்டும் என்கிற உறுதியான தீர்மானம் ஆகும். நல்ல மனிதன் தன்னலத்தைத் தேடாதவனாக இருக்கிறான். மாறாக அவன் தன்னையே மற்றவர்களுக்காகக் கையளிக்கிறான். நன்மைத்தனமும், உண்மையான நேசமும் மற்ற எல்லாப் புண்ணியங்களையும் போஷிப்பது அவசியமானதாக இருக்கிறது. உண்மையாயிருத்தல், நேர்மை, தேவபக்தி, சாந்தம், கற்பு, தரித்திரம், தாழ்ச்சி, விவேகம், மட்டுமிதம், உதாரம், இரக்கம் உலகப் பற்றின்மை, பொறுமை, பரிசுத்ததனம், அடக்கவொடுக்கம், பிரமாணிக்கம் மற்றும் நிலைமை வரம் - நன்மைத்தனமும், நேசமும் இருக்கும்போது, இந்த எல்லா அழகிய புண்ணியங்களும் தாங்கள் வளர்வதற்குரிய வளமான நிலத்தைக் கண்டுகொள்ளும். நம் இரட்சகரின் திவ்ய இருதயம் நன்மைத்தனமும், நேசமும் நிறைந்ததாக இருப்பதால், அது சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப்பெற்ற பாதாளமாக இருக்கிறது.

ஆனால் நாம் இந்தக் காரியங்களை நமக்கே பொருத்திப் பார்ப்போம். நாம் எல்லோரும் புண்ணிய சீலர்களாக இருக்கவே விரும்புகிறோம். உண்மையில் நாம் நரகத்திலிருந்து தப்ப விரும்பினால், புண்ணியசீலர்களாக இருக்கக் கண்டிப்பான கடமை நமக்கு உள்ளது. ஆனாலும் ஒருவன் புண்ணியங்களின் தாயாகிய “நேசமுள்ள நன்மைத்தனத்தை” - கடவுளின் மகிமைக்காகவும், நம் அயலாரின் ஞான நன்மைக்காகவும் செலவிடப்பட வேண்டுமென்ற ஏக்கத்தைக் கொண்டிராவிடில், அவனால் எந்த ஒரு புண்ணியத்தையும், உத்தமமான அளவில் சம்பாதித்துக் கொள்ள முடியாது. அந்தப் புண்ணியம் இல்லாமல், எந்தப் புண்ணியத்தையும் ஒரு உத்தமமான அளவில் சம்பாதித்துக் கொள்ள யாராலும் இயலாது. அந்தப் புண்ணியத்தைக் கொண்டு, எல்லாப் புண்ணியங்களையும் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். 

இது ஞான வாழ்வில் ஒரு மிக முக்கியமான விவரத்திற்கு நம்மைக் கொண்டு வருகிறது: அதாவது, இது மிக அதிக எளிதான காரியமாக இருக்கிறது. அதாவது, நாம் ஓராயிரம் காரியங்களைப் பற்றிக் கவலையாயிருக்கத் தேவையில்லை. மாறாக ஒரேயொரு காரியத்தில்தான் நாம் கவனமாயிருக்க வேண்டியுள்ளது. “தேவையானது ஒன்றே” என்று நம் ஆண்டவர் மார்த்தாளிடம் கூறினார். நீ புத்தகங்களை வாசிக்கிற போது, இந்தப் புண்ணியத்தை, அல்லது அந்தப் புண்ணியத்தை, அல்லது மூன்றாவதான ஒரு புண்ணியத்தை, ஆம், ஒரு டஜன் புண்ணியங்களை அல்லது அதற்கு அதிகமான புண்ணியங்களை சம்பாதிக்க வேண்டியுள்ளது என்று காண்கிறாய். அதன்பின் வேரறுக்கப்பட வேண்டிய தீமைகளும் டஜன் கணக்கில் இருக்கின்றன என்று காண்கிறாய். இதன் விளைவு என்னவெனில், நீ அவநம்பிக்கைப்பட்டு உன் கரங்களை விரிக்கிறாய், ஏனென்றால் எங்கே தொடங்குவது என்று உனக்குத் தெரியவில்லை. பசாசு விரும்புவதும் இதேதான். உன் முழு ஆற்றலையும் ஒரேயொரு காரியத்தின் மீது குவிப்பதற்குப் பதிலாக, வெறும் இரண்டு அல்லது மூன்று காரியங்களில் உன் முயற்சிகளைப் பிரிக்கும்படி செய்து விட பசாசால் முடிந்தால், அவன் மிக முக்கியமான ஒரு போரில் உன் மீது வெற்றிகொண்டு விடுகிறான். ஒரு காரியம், ஒரேயொரு காரியம்தான் அவசியமானது. அது எல்லாப் புண்ணியங்களுடையவும் தாயாகவும், எல்லாத் தீமைகளுடையவும் எதிரியாகவும் இருக்கிறது. அது எல்லாத் தீமைகளையும் விரட்டியடிக்கிறது. அந்த அவசியமான, ஒரேயொரு காரியம் கடவுளின் மீதான உண்மையான சிநேகமே. எல்லா சுய தேடல்களின் மீதும் வெறுப்பு, கடவுளின் மகிமைக்காகவும், மனிதனின் இரட்சணியத்திற்காகவும் ஒருவன் தன்னையே கையளித்துவிட நேசமும், ஆர்வமுமுள்ள தீர்மானம் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்துகிறது. எனவே, உண்மையான, நம்பகமான தேவ சிநேகம் கடவுளின் மகிமை மற்றும் மனிதனின் இரட்சணியம் ஆகியவற்றின் மீதுள்ள தாகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் சுய பாணியிலான பக்தியோ தன் சொந்தத் தேவைகளில் ஒரு பெரிய ஆர்வத்தைக் கொண்டோ, அல்லது உலகக் காரியங்களில் ஒரு பொதுவான ஆர்வத்தைக் கொண்டோ தன்னை வெளிப்படுத்துகிறது. பண விவகாரங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன, உலக மதிப்பு அல்லது மேன்மை பெருமளவு கவனத்தைப் பெறுகிறது, அழகிய தோற்றத்திற்கும் கூட கவனம் செலுத்தப்படுகிறது, விசேஷ நண்பர்களின் தேவைகள் கவனிக்கப்படுகின்றன. மேலதிகாரிகள் உன் சுதந்திரத்தைத் தடுப்பதாகச் சொல்லப்படுவதால், முடிந்த போதெல்லாம் அவர்கள் தடைசெய்யப்படுகிறார்கள்; வேலை மாற்றம் அல்லது இட மாற்றம் ஏக்கத்தோடு தேடப்படுகிறது, ஒரு பெரிய விடுதலையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு பெரிய புகழ்ச்சி பெரிய அளவில் சந்தோஷமாக அனுபவிக்கப்படுகிறது. ஒரு பெரிய அவதூறான வார்த்தையின் நிமித்தம் அதீதமான வருத்தம் விளைகிறது, கடின உழைப்பும், பாரமுள்ள கடமைகளும் வெறுக்கப்படுகின்றன. சுலபமான கடமைகள் உள்ள ஒரு பதவி ஏக்கத்தோடு தேடப்படுகிறது. இந்த ஞான நோய்களும், மற்ற பல ஆன்ம நோய்களும், நம் இருதயங்களுக்குள் பாய வேண்டியதும், சுய தேடல் இல்லாதிருக்கும்போது, அவற்றிற்குள் பாய்கிறதுமாகிய கடவுளின் பரிசுத்த சிநேகமாகிய உயிரளிக்கும் உயிர்ச்சாற்றிலிருந்து வெட்டிவிடப்படுகிற பரிதாபத்திற்குரிய அந்தரங்க நிலையை வெளிப்படுத்துகின்றன. ஒரேயொரு காரியம் மட்டுமே அவசியமானது - உன் அயலானின் அர்ச்சிப்பிற்காக உன்னையே செலவழிப்பதன் மூலமாக கடவுளை நேசித்து அவரை மகிமைப் படுத்துவாயாக.


சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப்பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!