இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - சுனை (சின்னமலை)

மேற் சொல்லிய கற்சிலுவையின் அருகே தென் புறத்தில் ஒரு பாறை இருக்கின்றது. அதன் மத்தியில் ஒரு வெடிப்பு உள்ளது. அதன் ஆழம் ஏழடியிருக்கும். இவ் வெடிப்பில் எப்போதும் தண்ணீர் நிற்கின்றது. வேனிற் காலத்தில் தண்ணீர் குறைந்துவிடுகிறது. இந்தச் சுனை அற்புதமாகத் தோன்றிய தெனச் சொல்லப்படுகிறது.

அப்போஸ்தலர் மலையின் மீது மக்களை அழைத்து வந்து அங்கு அவர்களுக்குப் போதிப்பது வழக்கம். ஒரு நாள் அங்குக் குழுமியிருந்து போதகங் கேட்டிருந்தவர்கள் தாகத்தால் தவிப்பதைக் கண்ட புனித தோமையார், தண்ணீர் பக்கத்தில் இல்லாததால் மனம் வருந்தி, ஆதி காலத்தில் மோசஸ் செய்த அற்புதத்தை நினைத்து, கடவுள் மேல் நம்பிக்கை வைத்துத் தமது கரத்திலிருந்த தடியால் பாறையைத் தட்ட, உடனே பாறை பிளவுபட்டு அதினின்றும் தண்ணீர் சுரந்தது. 

அன்று தொட்டு இது வரையில் நீர் அதினுள் கிடக்கின்றது. இவ்வற்புத வரலாற்றினால்தான் யாத்திரீகர், - கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதாரும் - அச்சுனையிடம் சென்று, தண்ணீர் மொண் டு பக்தியுடன் பருகி வருகிறார்கள். ஏராளமானோர் அதைக் குப்பிகளில் நிரப்பி இல்லங்கொண்டுபோய் நோயாளிகளை அருந்தச் செய்வதும் வழக்கமாய் இருக்கிறது.

இச்சுனைக்கு மேற்கே ஒரு பெரும் பாறையின் மேல் சிகரம் போன்ற சின்னம் ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். அந்தப் பாறையின் உச்சியானது அகன்று பெரிய மேசை போல் இருக்கின்றது. அதன் மேல் நின்று தான் அப்போஸ்தலர் போதித்தார். அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடவே மேற்சொன்ன சிகரம் கட்டப்பட்டுள தென்று சொல்லப்படுகிறது.