அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - மரண தூதன்

1862 மார்ச் 21 அன்று, டொன் போனெட்டியில் காலக்கிரமப் பதிவேடுகளில் காணப்படுகிறபடி, டொன்போஸ்கோ தமது சிறு மேடையில் ஏறி தமது “நல்லிரவு” உரையை வழங்கத் தொடங்கினார். தம்மை ஒருநிலைப்படுத்திக் கொள்பவர் போல, ஒரு சில கணங்கள் மௌனமாயிருந்தபின், அவர் பேசத் தொடங்கினார்:

நான் உங்களுக்கு ஒரு கனவைப் பற்றிச் சொல்ல வேண்டும். மனதிற்குள் பொழுதுபோக்கு நேரத்தில் நம் ஆரட்டரி இருக்கும் நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது அது மகிழ்ச்சியும், கூச்சல் கும்மாளமும் உள்ள சிறுவர்களின் சத்தத்தால் நிறைந்திருக்கும். 

நான் என் அறையின் ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து நின்றபடி, சிறுவர்கள் மகிழ்ச்சியோடு விளையாடுவதையும், மைதானத்தில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டும், சாடிக் கொண்டும் இருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

திடீரென முக்கிய நுழைவாயிலில் ஒரு பலத்த, குழப்பமான சத்தத்தை நான் கேட்டேன். அது என்னவென்று பார்த்தபோது, ஒரு உயரமான வயோதிபரை நான் கண்டேன். அவர் பரந்த நெற்றியையும், குழிவிழுந்த கண்களையும், ஒரு நீண்ட வெண் தாடியும், தமது தோள்களைச் சுற்றி விழும் மென்மையான, வெண் கேசச் சுருள்களையும் கொண்டிருந்தார். சுற்றிக் கட்டும் துகிலால் அவர் போர்த்தப்பட்டிருந்தார், அதை அவர் தமது இடக்கரத்தில் இறுக்கமாகப் பிடித்திருந்தார். 

அதே நேரம் தமது வலக்கரத்தில் ஓர் இருண்ட நீலத் தீச்சுடரைக் கொண்டிருந்த ஒரு தீப்பந்தத்தைப் பிடித்திருந்தார். அவர் மெதுவாகவும், ஆழ்ந்த விதமாகவும் முன்னேறி வந்தார். அவ்வப்போது நின்று, ஏதோ தொலைந்து போன ஒரு பொருளைத் தேடுபவரைப் போல, குனிந்து நின்றார். காணப் படாதவராக அவர் முழு மைதானத்தையும் பல தடவைகள் அவர் சுற்றி வந்தார். சிறுவர்களோ தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

வாயடைத்துப் போனவனாகவும், திகைப்புற்றவனாகவும் நான் தொடர்ந்து அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தச்சுப் பட்டறை வரை சென்று, பார்ரா ரோட்டா (ஒரு வகையான திருடன் போலீஸ் விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் முன்பாக நின்றார். நீண்டு மெலிந்த தமது கரத்தை நீட்டி, சிறுவனின் முகத்திற்கு முன்பாக தமது தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்துப் பார்த்தார். 

“இவன்தான், நிச்சயமாக!'' என்று முணுமுணுத்தபடி தம் தலையை இரண்டு மூன்று தடவைகள் ஆட்டினார். அதன்பின் அவர் திடீரென சிறுவனை நகர முடியாதபடி மறித்து, தமது உடலைச் சுற்றியிருந்த துகிலின் மடிப்புகளில் ஒன்றிலிருந்து ஒரு குறிப்புத்தாளை எடுத்து அவனிடம் கொடுத்தார். அதை வாங்கிய சிறுவன் அதைப் பிரித்து வாசித்தபோது, வெளிறிப் போனதைக் காண முடிந்தது.

“எப்போது? சீக்கிரமாகவா?” என்று அவன் கேட்டான்.

“இப்போதே” என்று பேய்த்தனமான பதில் வந்தது.

“இந்த விளையாட்டை நான் முடிக்க முடியாதா?”

“விளையாடிக் கொண்டிருக்கும்போது நீ பிடிபடலாம்.”

இது ஒரு திடீர் மரணத்தைக் குறித்தது. நடுங்கியபடி சிறுவன் கெஞ்சும் விதமாக ஏதோ சொல்ல முயன்றான், ஆனால் ஏனோ அவனால் இயலவில்லை. தம் ஆடையைப் பிடித்திருந்த பிடியை விட்டு விட்டு அந்த அந்நியர் தமது இடக்கரத்தால் முகப்பு மண்டபத்தைச் சுட்டிக் காட்டினார். “கவனி, அந்த சவப்பெட்டி யைப் பார்த்தாயா? அது உனக்காகத்தான்! சீக்கிரம், நாம் போவோம்!'' என்றார் அவர். பழத்தோட்டத்திற்குப் போகும் நடைபாதையின் நடுவில் ஒரு சவப் பெட்டி இருந்தது.

“நான் தயாராக இல்லை..... இறக்கக் கூடாத அளவுக்கு நான் வயதில் மிக இளையவனாக இருக்கிறேன்!” என்று அந்தச் சிறுவன் அலறினான். மௌனமாக அந்த அந்நியர் விரைவாக நடந்து போய் விட்டார்.

அவர் யாரென்று அறிய முயல்கையில், என் உறக்கம் கலைந்து விட்டது. நான் சொன்ன காரியத்திலிருந்து உங்களில் ஒருவன் தன்னை ஆயத்தம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகப் புரிந் திருக்கும். ஏனெனில் ஆண்டவர் விரைவில் அவனை நித்தியத்திற்குள் அழைத்துக் கொள்வார். 

அவன் யாரென்று எனக்குத் தெரியும். ஏனெனில் அந்த முழுக் காரியத்தையும் நான் பார்த்தேன். அந்த அந்நியரிடமிருந்து அந்தக் குறிப்பை வாங்கிய சிறுவனை எனக்குத் தெரியும். அவன் இப்போது இங்கே இருந்து நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனாலும் அவனுடைய மரணம் நிகழும் வரை நான் யாரிடமும் அவன் யாரென்று சொல்ல மாட்டேன். 

ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான மரணத்திற்காக அவனைத் தயாரிக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன். உங்களில் ஒவ்வொருவனும் தன்னையே நன்றாக கவனித்துக் கொள்வானாக. ஏனெனில் அது யாரென்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அது அவனாகவே இருக்கக் கூடும். 

இதை நான் சொல்லத் தவறினால், ஆண்டவர் என்னிடம், “சரியான நேரத்தில் நீ ஏன் பேசவில்லை ?” என்று கேட்பார் என்பதால்தான் நான் இதை உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே, சிறப்பாக, மங்கள வார்த்தை திருநாளுக்கு முந்திய நவநாளின் இந்தக் கடைசி மூன்று நாட்களின் போது, உங்களில் ஒவ்வொருவனும் தன்னையே திருத்திக் கொள்வானாக. 

விசேஷமாக இந்தக் கருத்துக்காக ஜெபியுங்கள். இந்த மூன்று நாட்களின் போது, இறக்க இருக்கும் சிறுவனுக்காக திவ்விய கன்னிகையை நோக்கி ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஒரு “கிருபை தயாபத்து மந்திரம்” சொல்லுங்கள். அவன் இந்த வாழ்வை விட்டுப் புறப்படும்போது, நம்முடைய பல நூறு ஜெபங்கள் அவனுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

போனெட்டி காலக் கிரமப் பதிவேடு இப்படித் தொடர்கிறது:

டொன்போஸ்கோ மேடையை விட்டு இறங்கியபோது, சிலர் தனிப்பட்ட முறையில் அவரை அணுகி, அந்தச் சிறுவன் விரைவில் இறந்து விடுவானா என்பதை மட்டுமாவது தங்களுக்குச் சொல்லும்படி அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் “P” என்ற எழுத்தில் தொடங்கும் இரண்டு திருநாட்களுக்கு முன் இது தவறாமல் நிகழும் என்றும், இவற்றில் முதல் திருநாள் வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் இருக்கலாம் என்றும் பதிலளித்தார்.

இந்தக் கனவு பெரும் அதிர்வுகளை விளைவித்தது. அந்தச் சிறுவன் தான்தான் என்று ஒவ்வொருவனும் பயந்தான். இதுபோன்ற முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே, இது சிறுவர்களுக்கு மிகுந்த நன்மையை விளைவித்தது. ஒவ்வொருவனும் தன் ஆன்ம நலனில் மிகுந்த அக்கறை காட்டினான். மறுநாள் வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் சிறுவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள்.

பல நாட்களாக, பல சிறுவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்னவென்று தங்களுக்குக் கூறும்படி டொன்போஸ்கோவை வற்புறுத்தினர். அவர்கள் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தாலும், அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை . 

அவர்களுடைய மனங்களில் இரண்டு காரியங்கள் மிகத் தெளிவாக இருந்தன: மரணம் திடீரென நிகழும், அது “P” என்ற எழுத்தில் தொடங்கும் இரண்டு திருநாட்களுக்கு முன் நிகழும். இந்தத் திருநாட்கள் பாஸ்கா (Pasqua - உயிர்ப்பு விழா) மற்றும் பெந்தேகோஸ்தே (Pentecost) ஆகியவையே என்பது தெளிவாகப் புரிந்தது. இவற்றில் முதல் திருநாள் ஏப்ரல் 20 அன்று வர இருந்தது.

1862, ஏப்ரல் 16 அன்று, பொர்காரோ டொரினீஸின் லூஸிஸ் ஃபோர்னாஸியோ என்ற பன்னிரண்டு வயதுச் சிறுவன் தன் வீட்டில் வைத்து இறந்து போனபோது, ஆரட்டரியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவனைப் பற்றிப் பல காரியங்கள் சொல்லப்பட வேண்டியுள்ளது. 

சிறுவர்களில் ஒருவன் இறக்கப் போகிறான் என்று டொன்போஸ்கோ அறிவித்த போது, எந்த விதத்திலும் தீயவனாக இருந்திராத இந்தச் சிறுவன், நல்ல நடத்தையின் முன்மாதிரிகையாக இருக்கத் தொடங்கினான். டொன்போஸ்கோவின் அறிவிப்புக்குப் பின் வந்த முதல் நான்கு நாட்களில், ஒரு பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்யத் தனக்கு உதவும்படி அவன் டொன் போஸ்கோவை நச்சரித்துக் கொண்டேயிருந்தான். 

அவன் ஏற்கனவே சிறிது நாட்களுக்கு முன்தான் பொதுப்பாவசங்கீர்த்தனம் செய்திருந்தான் என்பதால் முதலில் அவர் தயங்கினாலும், இறுதியில் ஒரு விசேஷ உபகாரமாக அவனுக்கு இரங்கி, இரண்டு அல்லது மூன்று தடவைகளாக அவனுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார். மேலும் இந்த உதவியை அவன் அவரிடம் கேட்ட அதே நாளில், அல்லது அவன் தன் பாவசங்கீர்த்தனங்களைத் தொடங்கிய நாளனற்று, இந்தச் சிறுவன், தான் சற்றே நோய்வாய்ப்பட்டிருப்பதாக உணரத் தொடங் கினான். அடுத்த சில நாட்களுக்கு இந்த நிலை நீடித்தது. 

இந்நிலையில், அவனுடைய சகோதரர்களில் இருவர் அவனைச் சந்திக்க வந்தார்கள். அவன் வியாதியாயிருப்பதைக் கண்டு அவன் சிறிது காலம் வீட்டில் இருப்பதற்கு அவர்கள் டொன்போஸ்கோவின் அனுமதியைப் பெற்றார்கள். அதே நாளில் - அல்லது அதற்கு முந்திய நாளில் - ஃபோர்னாஸியோ தன் பொதுப் பாவசங்கீர்த்தனத்தை முடித்திருந்தான், திவ்விய நன்மையும் வாங்கியிருந்தான். 

அவன் அவர்களோடு வீட்டுக்குப் போனான். அடுத்த ஒரு சில நாட்களில் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்த அவன், அதன்பின் படுக்கையில் விழுந்தான். அவனுடைய நோய் விரைவில் மிக மோசமாகி, அவனுடைய மூளையைப் பாதித்து, அவனுடைய பேசும் சக்தியை இழக்கச் செய்ததுடன், அவ்வப்போது அவன் நினைவுதப்பிப் போகவும் செய்தது. 

உள்ளபடி, அவனால் பாவசங்கீர்த்தனம் செய்யவோ, நன்மை வாங்கவோ முடியவில்லை. ஒரு நல்ல தந்தையாகிய டொன் போஸ்கோ ஒரு முறை அவனை வந்து சந்தித்தபோது, ஃபோர்னாஸியோ அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஏதோ சொல்ல முயன்றான். ஆனால் வீணான முயற்சிகளுக்குப் பிறகு, அவன் கேவியழத் தொடங்கினான். அவனோடு அவனுடைய ஒட்டுமொத்தக் குடும்பமும் அழுதது. அடுத்த நாள் அவன் இறந்து போனான்.

இந்தச் செய்தி ஆரட்டரியை வந்தடைந்த போது, பல துறவிகள் டொன்போஸ்கோவிடம் ஃபோர்னாஸியோதான் கனவில் வந்த சிறுவனா என்று கேட்டார்கள். ஆனால் அது அவனல்ல என்று டொன் போஸ்கோ மறைமுகமாகத் தெரிவித்தார். ஆயினும் இந்தச் சிறுவனின் மரணம் டொன் போஸ்கோவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி விட்டது என்று பலர் நம்பினர். 

அதே நாள், ஏப்ரல் 16 “நல்லிரவு” உரையில், டொன்போஸ்கோ ஃபோர்னாஸியோவின் மரணத்தை அறிவித்தார். அது அனைவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்: “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள். மரண நேரத்தில் நம் மனச்சான்றை ஒழுங்கு படுத்திக்கொள்ளலாம் என்ற மாயக் கற்பனையைக் கொண்டு பசாசு நம்மை ஏமாற்ற அனுமதிக்காமல் இருப்போம்” என்றார் அவர். 

மரணத்திற்குக் குறிக்கப்பட்ட சிறுவன் ஃபோர்னாஸியோதானா என்று ஒருவர் வெளிப்படையாகவே கேட்ட போது, தற்சமயம் தாம் அதுபற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று அவர் சொல்லி விட்டார். ஆனாலும் அவர் மேலும் தொடர்ந்து, ஆரட்டரியில் சிறுவர்கள் இரட்டையாக சாவது வழக்கம்தான் என்றும், ஆகவே நாம் இன்னமும் கூட விழிப்பாயிருக்க வேண்டும், "ஆயத்தமாயிருங்கள், ஏனெனில் நீங்கள் நினையாத வேளையில் மனுமகன் வருவார்” என்ற நமதாண்டவரின் அறிவுரைக்குச் செவிகொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேடையை விட்டு இறங்கிய போது, சில குருக்களிடமும், துறவிகளிடமும் கனவில் வந்த சிறுவன் ஃபோர்னாஸியோ அல்ல என்று வெளிப்படையாகவே கூறி விட்டார்.

ஏப்ரல் 17 அன்று, இரவுணவுக்குப் பின் வரும் பொழுது போக்கு நேரத்தில், சிறுவர்கள் கூட்டமாக வந்து, டொன் போஸ்கோவிடம், “சாக இருக்கும் சிறுவனின் பெயரை எங்களுக்குக் கூறுங்கள்” என்று அவரை விடாமல் நச்சரித்துக் கொண்டேயிருந்தார்கள். 

டொன் போஸ்கோ ஒரு புன்னகையோடு தம் தலையை அசைத்துக் கொண்டு மட்டும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வற்புறுத்தலாக, “எங்களுக்கு இதைச் சொல்ல நீங்கள் விரும்பவில்லை என்றால், குறைந்த பட்சம் சுவாமி ருவாவிடமாவது சொல்லுங்கள்" என்றார்கள். டொன் போஸ்கோ அதற்கும் தொடர்ந்து தலையை அசைத்துக் கொண்டேயிருந்தார்.

“அப்படியானால், அவனுடைய முதல் எழுத்தை மட்டும் சொல்லுங்கள்” என்று பலர் வற்புறுத்தினார்கள்.

“சரி, சரி, இதில் நான் உங்களைத் திருப்திப்படுத்துவேன்” என்று பதில் கூறிய அவர், “அவனுடைய முதல் எழுத்தும், மாமரியின் பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான்” என்று அறிவித்தார்.

இந்த வெளிப்படுத்தல் காட்டுத்தீ போலப் பரவியது. ஆனால் அந்தச் சிறுவன் யாரென்று ஊகிப்பது இன்னும் கடினமானதாகத் தான் இருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுடைய குடும்பப் பெயர் “எம்” என்ற எழுத்தில் தொடங்கியது.

அங்கே பகுத்தறிவுவாதிகள் சிலரும் இருந்தார்கள். ஏனெனில் லூயிஸ் மார்ஷிஸியோ என்ற சிறுவன் அப்போது கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தான். அவன் இறந்து விடுவான் என்ற தீவிரமான எண்ணம் எல்லோரிடமும் இருந்தது. உண்மையில் மறுநாள் ஏப்ரல் 18 அன்று, அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான். 

மூன்று பகுத்தறிவுவாதிகள், டொன் போஸ்கோ மறைமுகமாக அவனைத் தான் குறிப்பிடுகிறார் என்று யூகம் செய்து, “சரி, 'எம்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டுள்ள ஒரு சிறுவன் சாகப் போகிறான் என்று எங்களாலும் முன்னுரைக்க முடியும்!'' என்றார்கள்.