இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - தீர்க்கத்தரிசன வசனங்களை அலட்சியம் செய்ய வேண்டாம்!

தீர்க்கத்தரிசன வசனங்களை அலட்சியம் செய்ய வேண்டாம் (1 தெச. 5;20)

நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம் இன்று மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டதைப் பார்க்கும்போது, தீர்க்கதரிசிகளும், திருச்சபையின் அர்ச்சியசிஷ்டவர்களும் இதைப் பற்றி நிச்சயம் அறிவித் திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கத் தூண்டப்படுகிறோம்.

உண்மைதான். உலகெங்கிலும் பரவியுள்ள சில ஆன்மீகத் தடுமாற்றங்கள், பல தீர்க்கதரிசிகளாலும் தனிப்பட்ட வெளிப் படுத்துதல்களாலும் முன்னறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தீர்க்க தரிசனங்கள் சிலவற்றில் அந்திக் கிறீஸ்துவின் (எதிர்க் கிறீஸ்து) பயங்கர உருவம் காட்டப்படுகிறது.

நாம் வாழும் காலமோ மிகவும் அசாதாரணமான காலம். இக்காலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ள மூன்று முக்கியமான தீர்க்க தரிசனங்களை ஒன்றுக்கொன்று உறவுப்படுத்தி இங்கே கூற முயற் சிப்போம். இம்மூன்று முன்னறிவிப்புகளும் உண்மையானவை; ஒன்றையொன்று பூர்த்தி செய்பவை.

அர்ச். சின்னப்பர் தெசலேனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தில், அவர் கூறும் தீர்க்கதரிசனம் முதலாவது முன்னறிவிப்பு.

அர்ச்சியசிஷ்ட லூயிஸ் தே மோன்போர்ட் எழுதியுள்ள தீர்க்க வசனம் இரண்டாம் முன்னறிவிப்பு.

நம் நூற்றாண்டில் பாத்திமா நகரில் கூறப்பட்ட தீர்க்க தரிசனங்கள் மூன்றாம் முன்னறிவிப்பு.

தெசலோனிக்கேயருக்கு அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் எழுதிய இரண்டாம் நிருபத்தில், வரவிருக்கும் ஒரு காலத்தைப் பற்றிய குறிப்பான ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார்.

இந்த முன்னறிவிப்பு சுவிசேஷமாகவும் இருப்பதால் இந்தத் தீர்க்கதரிசனம் தனிச்சிறந்த முக்கியத்துவம் பெறுகிறது. “கேட்டின் புத்திரன்,” “பாவ மனிதன்,” “தேவன் எனப்படுகிறதும், ஆராதிக்கப்படுகிறது மாகிய சகலத்துக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி,” “எதிரியாய் நிற்பான்” (2 தெச. 2:3) என்று ஒருவனைக் குறிப்பிடுகிறார் அர்ச். சின்னப்பர். அந்தப் பாவியினுடைய வருகை சாத்தானுடைய செய்கையின்படி வல்லபத்தோடும், அடையாளங்களோடும், கெட்டுப் போகிறவர்களை அக்கிரமத்துக்குள்ளாக்கும் மாய்கையோடும் இருக்கும் என்கிறார். இங்கு கூறப்படும் “அக்கிரமத்துக்குள்ளாக்கும் மாய்கை என்பது இக்காலத்தில் நாம் காணும் நவீன உலகத்தில் இருக் கின்றது. மாமிச இச்சையான சுகபோகத்திலும், பால் கவர்ச்சியிலும், மட்டுக்கு மீறி இவ்வுலகம் ஈடுபட்டு வருகிறது. எவ்வளவு தூரத்திற் கென்றால் கடவுளை வேண்டாமென்று நிராகரிக்கும் அளவிற்கும் இது வந்துள்ளது. அந்திக் கிறீஸ்துவின் காலம் எது என்று காட்ட அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் வேறு ஒரு அடையாளத்தையும் கொடுக் கிறார். அதாவது, கடவுள் மனிதர்களுக்குத் தண்டனையாக, “பொய்யை விசுவசிக்கும்படி தப்பறையின் செய்கைகளை அவர்களுக்கு அனுப்புவார்” என்றும், இது எதற்கென்றால், “சத்தியத்தை விசுவசியாமல் அக்கிரமத்துக்கு அவர்கள் சம்மதித்ததற்காக” என்றும் அர்ச். சின்னப்பர் உரைக்கிறார் (2 தெச. 2:11).

கம்யூனிஸ்ட்களின் பொய்ப் பிரச்சாரம் உலகமெங்கும் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை நினைத்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட வாக்கியங்கள் நிறைவேறுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் இந்தப் பிரச்சாரம் அறிவுக்கு மிகவும் முரணாயிருக்கிறது.

1917-ம் ஆண்டிலிருந்து கம்யூனிஸம் செய்துள்ள கொலை களுக்கும், அக்கிரமங்களுக்கும் அளவே இல்லை. சரித்திரத்தில் இதற்கு ஒரு சிறு ஈடு இணையும் இல்லை. அப்படியிருந்தும் மனிதர்கள் கம்யூனிஸத்தால் ஏமாற்றப்பட்டு, அதற்குச் சார்புடையவர்களாக இருக்கிறார்கள்.

அர்ச். சின்னப்பரின் தீர்க்கவசனம் உண்மையிலேயே நிறைவேறி வருகிறது. “பொய்யை விசுவசிக்கும்படி தப்பறையின் செய்கைகளை” ஆண்டவர் அனுப்பியுள்ளார். காரணம், அவர்கள் தங்கள் இருதயத்தில் உண்மை மீது விருப்பம் கொள்ளவில்லை.

இதுவரை இல்லாத முறையில் புதிதாக இருக்கும் தற்காலத் தைப் பற்றி அர்ச். சின்னப்பர் பின்வரும் நிகழ்ச்சி வரிசைகளைக் கூறு கிறார்:

1. சிலுவைக்கு (பரித்தியாகம்) எதிர்ப்பு பரந்த அளவில் காணப்படுதல்.

2. “எதிரியாய் நின்று தேவன் எனப்படுகிறதும், ஆராதிக்கப் படுகிறதுமாகிய சகலத்துக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி, தன்னைத் தானே தெய்வம் போல் காட்டி, சர்வேசுரனுடைய ஆலயத்தில் உட்காருபவனாகிய” (2 தெச. 2:4) அந்திக் கிறீஸ்துவின் தோற்றம்.

3. “ஆண்டவராகிய சேசுநாதர் தமது வாயின் சுவாசத்தால் அவனை அழித்து தமது வருகையின் பிரதாபத்தால் அவனை நிர்மூல மாக்குவார்” (2 தெச. 2:8).

இந்த தீர்க்கதரிசன உரை வேறு எந்த தீர்க்க வசனத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது தேவ வெளிப் படுத்தலின் ஒரு பாகம்; பரிசுத்த வேதாகமத்தில் இது அடங்கியுள்ளது; இஸ்பிரீத்துசாந்துவானவரின் நேரடியான ஏவுதலினால் எழுதப் பட்டது.

ஆயினும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய தீர்க்கதரிசன வாக்கியங் களும், தனியார்களுக்குக் கடவுளால் அறிவிக்கப்பட்டு திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படுத்தல்களும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவைகளேயாகும். ஏனென்றால் அவை அர்ச். சின்னப்பரின் இந்த தீர்க்கதரிசன உரைக்கு ஒத்திருப்பதாலும், இதை அதிகத் தெளிவாக விளக்கம் செய்வதாலும் இந்த முக்கியத்துவத்தைப் பெறு கின்றன. நாம் பின்னால் விளக்க இருப்பதுபோல் அர்ச். லூயிஸ் மோன்போர்ட் என்பவருடைய தீர்க்கதரிசன வசனங்கள் தற்காலத்தைப் பற்றியதாக இருக்கின்றன. மிகவும் தெளிவான அடையாளங்களாக ஒளிவீசி நிற்கின்றன. ஏறக்குறைய 1711-ம் ஆண்டில் அவைகள் எழுதப் பட்டன. “மரியாயின் மீது உண்மை பக்தி” என்ற தம் நூலில் அர்ச். லூயிஸ் பின்வரும் நிகழ்ச்சி வரிசையைக் கூறுகிறார்:

1. அர்ச். லூயிஸ் காலத்திலேயே ஆரம்பமாகி விட்ட திருச்சபையின் நெருக்கிடைகள் வளர்ந்து விரிவடைந்து அந்திக் கிறீஸ்துவின் அடியில் எல்லா இடங்களிலும் பரவும்.

2. அந்திக் கிறீஸ்துவின் கொடிய ஆட்சியின் உச்சக்கட்டம் வரும்போது, மரியாயின் வல்லபம் சாத்தானுக்கெதிராக வெளிப்பட்டு வரும். இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையைக் கொண்டு மாமரி சாத்தான் என்ற சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்கள். அர்ச். லூயிஸின் கருத்துப்படி ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள “ஒரு பெண் உன் தலையை நசுக்குவாள்” என்ற சர்வேசுரனுடைய வாக்கின் முழு நிறைவேற்றமாக அது இருக்கும்.

3. பெரும் கும்பல்களாக மக்கள் சத்திய கத்தோலிக்கத் திருச்சபைக்குத் திரும்புவார்கள்.

4. திருச்சிலுவைக்கு மிகப் பெரும் வெற்றி கிடைத்து, அந்நாளில் மானிட இருதயங்களில் கிறீஸ்து அரசாள்வார்.

அர்ச். லூயிஸின் கருத்துப்படி: எவ்வாறு கிறீஸ்து நம்மிடையே வந்த போது மாமரியின் வழியாக வந்தாரோ, அவ்வாறே வரப்பிரசாத முறையில் அவர் நம் மத்தியில் வருவதும், மாமரியின் வழியாகவே வருவார். மேற்குறித்த நிகழ்ச்சிகள் உலக முடிவில் அல்லது உலக முடிவின் காலத்தில் நடைபெறும் என்று அர்ச். லூயிஸ் அடிக்கடி கூறியுள்ளார். இந்நிகழ்ச்சிகள் யாவும் மானிட சரித்திரத்திலேயே சிகரம் போன்று இருக்கும்; உலகம் முழுவதையும் அசைக்கக் கூடியவையாக இருக்கும் என்று காட்டவே இவ்வாறு அடிக்கடி கூறியிருக்கிறார்.

அர்ச். லூயிஸின் தீர்க்கவசனங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இவற்றை இஸ்பிரீத்துசாந்துவானவரின் ஏவுதலின்படி தாம் எழுதியதாக அவரே கூறியுள்ளார். அவர் திருச்சபையின் அர்ச்சியசிஷ்டவர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டிருப்பதும் அவருடைய தீர்க்கவசனங்களின் அடிப்படையான அறிவிப்புகள் ஏற்கெனவே நிறைவேறி வருவதும், அவர் இஸ்பிரீத்துசாந்துவானவரால் ஏவப்பட்டார் என்பதை எண்பிக்கின்றன.

அர்ச். லூயிஸின் தீர்க்கதரிசனங்களுக்கு ஒரு தனிப்பட்ட தன்மை உள்ளது என்று நாம் கொள்ள வேண்டும். ஏனென்றால்:

1. அந்திக் கிறீஸ்து வரும் வரையிலும் சாத்தானின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வரும் என்ற ஒரு கருத்து அவருடைய தீர்க்க தரிசன உரைகளில் காணப்படுகிறது.

2. தேவ அன்னையின் இறுதி வெற்றியைப் பற்றி இவருடைய தீர்க்கதரிசன உரைகள் ஒரு புதிய பொருளையும், விரிவையும் நமக்குக் காட்டுகின்றன. தேவ அன்னையின் இவ்விறுதி வெற்றியானது ஆதிப் பெற்றோரை வீழ்த்திய சாத்தானுக்குக் கடவுளால் உரைக்கப்பட்ட சாபத்தின் நிறைவேற்றத்திலே அடங்கியுள்ளது: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்” (ஆதி. 3:15).

பாத்திமா பதியில் தேவ அன்னை கூறிய தீர்க்கதரிசனங்கள் அர்ச். சின்னப்பரும், அர்ச். லூயிஸும் கூறியுள்ளவற்றுடன் மிகவும் பொருத்தமுடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் முக்கியத் துவம் தனிச்சிறந்ததாகும். ஏனென்றால் இவை நம்முடைய இந்த நூற்றாண்டைப் பற்றியதாகவும் நாம் வசிக்கும் இந்தக் காலங்களுக்கு முற்றும் பொருந்துவதாகவும் உள்ளன.

பாத்திமாவில் நம் அன்னை கூறிய தீர்க்கதரிசனங்களில் பல நிறைவேறி விட்டன. சில இன்னும் நிறைவேற இருக்கின்றன.

பாத்திமா பதியில் 2-ம் காட்சியின்போது (ஜூன் 13, 1917) பிரான்சிஸும், ஜஸிந்தாவும் சீக்கிரம் மரணமடைவார்கள் என்றும், அவர்களுள் மூத்தவளான லூஸியா தேவதாயின் மாசற்ற இருதய பக்தியைப் பரப்பும்படியாக வாழ்ந்திருப்பாள் என்றும் அன்னை முன்னறிவித்தார்கள். 1967-ம் ஆண்டு பாத்திமா ஜூபிலி நிகழ்ச்சிகளில் லூஸியா, கார்மெல் சபைக் கன்னிகையாக, மரியாயின் மாசற்ற இருதயத்தின் லூஸியா என்ற பெயரோடு பரிசுத்த பாப்பரசர் ஆறாம் சின்னப்பருடன் நின்றாள். ஆனால் பாத்திமா இறுதிக் காட்சியிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குள் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் மரித் தார்கள்.

பாத்திமாவில் நமதன்னை கூறிய முக்கியமான தீர்க்கவசனங்கள் ஜூலை 13-ம் நாள் காட்சியில் கூறப்பட்டன. அந்தக் காட்சியில் கிறீஸ்தவர்கள் தங்கள் இருதயப் பூர்வமாக மனந்திரும்பி மரியாயின் மாசற்ற இருதயத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபின், பின்வருமாறு கூறினார்கள்: “இந்த என் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டால், கம்யூனிஸ்ட் ரஷ்யா மனந்திரும்பும். சமாதானம் ஏற்படும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தவறான கொள்கைகளை உலகமெங்கும் பரப்பி, யுத்தங்களையும் திருச்சபையில் கலாபனைகளையும் விளைவிக்கும். நல்லவர்கள் வேதசாட்சிகளாய்க் கொல்லப்படுவார்கள். பாப்பரசர் அதிக வேதனைக்குள்ளாவார். சில நாடுகள் பூமியின் முகத்திலிருந்து அழிக்கப்படும்... ஆனால் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். ரஷ்யா மனந்திரும்பி மனித சமுதாயத்திற்கு ஒரு சமாதான யுகம் அருளப்படும்.” 

தேவ அன்னையின் இந்தத் தீர்க்கதரிசனங்களுக்கும், அர்ச். சின்னப்பரும், அர்ச். லூயிஸ் தே மோன்போர்ட் என்பவரும் கூறியுள்ள தீர்க்கவசனங்களுக்கும் ஒரு வரிசைக்கிரம பொருத்தம் உள்ளது. தேவதாய், அந்திக் கிறீஸ்து அதாவது எதிர்க்கிறீஸ்து தோன்றுவதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் மற்ற இரு அர்ச்சியசிஷ்டவர்களும் குறிப்பிடுகிறார்கள். மேலும் பாத்திமாவின் முழுச் செய்தியும் இன்னும் நமக்கு அறிவிக்கப்படவில்லை. “மூன்றாம் இரகசியம்” இன்னும் வத்திக்கானிலேயே மூடப்பட்டபடி உள்ளது. ஒருவேளை அதில் அந்திக் கிறீஸ்துவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

பாத்திமாவில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் இன்று நம் மத்தியில் நடைமுறையாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவு. அதன் முழு நிறைவேற்றமும் நம்முடைய வாழ்நாளிலேயே நடைபெறவும் கூடும். அதிவிரைவாக அவை நிறைவேறி விடவும் கூடுமாயிருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட தீர்க்கதரிசனங்களின் நிகழ்ச்சிகளை ஓரளவிலேனும் எடுத்துரைக்கும் இதர தீர்க்கதரிசனங்கள் பலப்பல இருக்கின்றன. சலேத் நகரில் நடைபெற்ற தேவதாயின் காட்சிகளில் அந்திக் கிறீஸ்து வரும் காலம் அடுத்துள்ளது. 20-ம் நூற்றாண்டிலேயே அது வரக்கூடும் என்று அவர்கள் அறிவித்ததாகக் கருதப்பட்டது.

ரோமை நகரில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அர்ச். அன்னா மரியா தாகி என்ற புனிதை, திருச்சபைக்கு ஒரு பெரிய இருண்ட ஆபத்தான காலத்தையும், அதையடுத்து கிறீஸ்தவம் மாபெரும் வெற்றி யடைவதையும் முன்னறிவித்துள்ளாள். அவளுடைய ஜீவிய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள், அவள் கூறிய இவ்வுண்மைகள் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த தந்தை லாமி என்பவர் மிகுந்த தேவ அருள் பெற்றவர். பல முறை தேவ தாயின் காட்சி பெற்றவர். அவரும் வரப் போகும் ஒரு பெரும் அழிவையும், அதன்பின் மாபெரும் கிறீஸ்தவ மறுமலர்ச்சியைப் பற்றியும் அறிவித்துள்ளார்.

பாவத்தின் காரணமாக பெருமளவில் நிகழப் போகும் பதிதத்தையும், அழிவையும் பற்றிய பல தீர்க்கதரிசன வசனங்கள் பல தரப்புகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்கு எழுதாமல், மிகவும் உறுதியானவைகளும் சந்தேகத்திற்கு இடமின்றிக் காணப்படும் தீர்க்கதரிசன உரைகளையும் பற்றி மட்டுமே நாம் நம் கவனத்தைச் செலுத்துவோம்.

தனிப்பட்டும் பொதுவிலும் கூறப்பட்டுள்ள இந்தத் தீர்க்க தரிசனங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை நம் காலத்தைச் சார்ந்தன வாகவே இருக்கக் கூடும் என்று தெரிகிறது. நமக்கு இவை நல்ல தயாரிப்பு நிலையைத் தரக் கூடும். கடவுளின் கரமே யாவற்றையும் நடத்துகிறது என்றும், நாம் இவ்வுலகத்தின் மாயக் கோலங்களிலல்ல, நித்திய மோட்ச பாக்கியத்திலேயே நம் மகிழ்ச்சியைத் தேட வேண்டும் என்றும் நமக்கு இவை அறிவிக்கின்றன.