இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அரிய புதுமைகள் பல நடந்தன!

அன்று முதல் ஒரு நவநாட் செபம் முஞ்ஞானோ கோவிலில் சொல்லப்பட்டது. 9-ம் நாளில் ஒரு விதவை, முடவனான தன் 10 வயதுச் சிறுவனை அர்ச். பிலோமினம் மாள் குணப்படுத்தும்படி பூசைத் தொடக்கத்திலிருந்தே உருகி மன்றாடினாள். நடுப் பூசையில் எழுந்தேற்ற நேரத்தில் அந்தச் சிறுவன் குதித்தெழுந்து நடந்து அர்ச். பிலோமினம் மாள் சுரூபம் இருந்த பீடத்தை நோக்கி ஓடி, அங்கே முழங்காலிட்டு நன்றி வணக்கம் செலுத்தினான். இவனை ஊரில் எல்லாரும் அறிவார்களாதலால் அவனிமித்தம் அனைவருடையவும் மகிழ்ச்சி கரை புரண்டோட, ஜனக் கூட்டம் அவனைத் தெருவில் நடக்கவிட்டு மணிகளையும் மத்தளங்களையும் ஒலித்து நன்றி விழாக் கொண்டாடியது.

இந்த புதுமையின் செய்தி, அன்று மாலைச் செபத் திற்கு மேலும் அதிக ஜனங்களைக் கவர்ந்து இழுத்தது. அதில் ஒரு தாய் கண் குருடான தன் 2 வது மகளை மடியில் ஏந்தியபடி அர்ச். பிலோமினம்மாளின் விளக்கு ஒன்றிலிருந்த எண்ணெயைத் தன் விரலில் தொட்டு அதைக் கொண்டு தன் மகளின் கண்களில் பூசினாள். வைசூரியால் பார்வை இழந்து இனி சுகப்படுத்த முடியாதென டாக்டர்கள் கூறிய கண்கள் அந்த எண்ணெய் பூசவும் ஒளியுடன் பிரகாசித்தன!

இந்த அற்புதத்தைக் கண்டு அங்கே நின்ற கடவுள் நம்பிக்கையிழந்த ஒரு மனிதன், மனந்திரும்பி, அந்த இடத் திலேயே பகிரங்கமாய், கடவுளை தான் விசுவசிப்பதாக அறிக்கையிட்டான். அதுமட்டுமல்ல, அர்ச். பிலோமினம் மாள் பெயரால் கோவில் கட்டுவதற்கென ஒரு பெரும் தொகையையும் கொடுத்தான். 

சில நாள் கழித்து ஒரு தாய் நடக்க இயலாத தன் மகளை பிலோமினம்மாளின் சேத்திரத்திற்குக் கொண்டு வந்து அப்பிள்ளையின் முடியைக் கொத்தாக வெட்டி அதை அருளிக்கப் பேழைப் பக்கத்தில் தொங்க விட்டாள். அதன்பின் அவள் மிகவும் நம்பிக்கையுருக்கத்துடன் மன்றாடி னாள். ஒரு மாறுதலும் தெரியவில்லை. ஆனால் அவள் தன் பிள்ளையை வண்டியில் ஏற்றிக்கொண்டு திரும்பிச் சென்ற போது, வீட்டருகில் வந்ததும் அச்சிறுமி வண்டியிலிருந்து குதித்துக் கீழே இறங்கி, வீட்டிற்குள் ஓடினாள்!

கண் தெரியாத ஒரு மனிதன் பிலோமினம்மாளின் சேத்திரத்துக்கு வந்து ஒரு நல்ல விலைமதிப்புள்ள மோதிரத் தைக் காணிக்கையாக வைத்து வேண்டிக் கொண்டான். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அவன் வீட்டிற்குத் திரும் பிச் சென்றதும் ஒரு வினாடியில் அற்புதமாகத் தன் கண் பார்வையைப் பெற்றுக் கொண்டான்.

இருபது வயது பார்வையற்ற பெண் ஒருத்தி இழந்த தன் பார்வையைப் பெற எத்தனையோ டாக்டர்களிடம் போயும் எல்லோரும் அவள் திரும்பப் பார்வையடைய முடியாது என்றே கூறிவிட்டனர். அவள் ஒரு நாள் பிலோமி னம்மாளின் சேத்திரத்திற்கு வந்தாள். அர்ச். பிலோமினம் மாளிடம் மன்றாடினாள். தான் பார்வையடையாமல் அந்தச் சேத்திரத்தை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி வைராக்கியமாய் இருந்தாள். அவளுக்கு எந்தப் புதுமையும் நடக்கவில்லை. அவளோ உணவை மறுத்து, அங்கேயே இருந்து மன்றாடினாள். இரவு வரவும் எங்காவது சென்று இராத்தங்க அவள் வெளியேற வேண்டியதாயிற்று. அப்படியே அவள் வெளியே வரும்போது அவள் கண்கள் மங்கலான பார்வையைப் பெற்றன. மறுநாள் திரும்பி வந்து, நாள் முழுவதும் ஜெபத்தில் ஈடுபட்டாள், அன்றிரவு வெளியே செல்லும்போது அவளின் கண்பார்வை முன்னை விடத் தெளிவாகியது. 3-ம் நாள் மத்தியான வேளையில் அவள் பார்வை மேலும் தெளிவாக அன்று மாலையில் முழுப் பார்வையையும் பெற்றாள்.