ஆகாய் ஆகமம்

அதிகாரம் 01

1 தாரியுஸ் மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டில் ஆறாம் மாதத்தின் முதல் நாளன்று, யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனாகிய சொரொபாபெலுக்கும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவுக்கும் இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:

2 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவருடைய இல்லத்தை மீண்டும் எழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்ந மக்கள் சொல்லுகிறார்கள்."

3 அப்போது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாய் ஆண்டவருடைய வாக்கு அருளப்பட்டது:

4 இந்த இல்லம் பாழாய்க் கிடக்கும் போது, நீங்கள் மட்டும் மாடமாளிகைகளில் குடியிருப்பதற்குரிய காலம் வந்து விட்டதோ?

5 ஆதலால் இப்பொழுது சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

6 நீங்கள் விதைத்ததோ மிகுதி, அறுத்ததோ கொஞ்சந்தான்; நீங்கள் உண்ணுகிறீர்கள், ஆனால் வயிறு நிரம்புகிறதில்லை; நீங்கள் நீர் அருந்துகிறீர்கள், ஆயினும் தாகம் தணிவதில்லை; நீங்கள் உடுத்திக் கொள்ளுகிறீர்கள், ஆயினும் குளிர் விட்டபாடில்லை; கூலி வாங்குகிறவனும் வாங்கிய கூலியைப் பொத்தலான பையிலேயே போட்டு வைக்கிறான்.

7 உங்களுக்கு நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

8 மலைகளுக்குப் போய், மரங்கள் கொண்டுவாருங்கள், கோயில் கட்டுங்கள்; அங்கே நாம் மகிழ்ச்சியுடன் குடி கொள்வோம், மகிமை பெறுவோம், என்கிறார் ஆண்டவர்.

9 மிகுதியாய்க் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள், ஆனால் கொஞ்சந்தான் கிடைத்தது; நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த போது, அதையும் நாம் ஊதிவிட்டோம். ஏன் தெரியுமா? ஏனெனில் நமது இல்லம் பாழாகிக் கிடக்கும் போது, உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் வீட்டின் மேல் கருத்தாய் இருக்கிறான்.

10 ஆதலால் தான் வானமும் உங்கள் மேல் மழை பெய்யாமல் நிறுத்திவிட்டது: நிலமும் தன் விளைவைக் கொடுக்க மறுத்தது.

11 மேலும், நாட்டின் மீதும் மலைகள் மீதும் கோதுமை மீதும் புதிய திராட்சை இரசத்தின் மீதும் எண்ணெய் மீதும், நிலம் விளைவிப்பது அனைத்தின் மீதும், மனிதர் மீதும் கால்நடைகள் மீதும், உழைப்பின் பலன் எல்லாவற்றின் மேலும் வறட்சியை வரச்செய்திருக்கின்றோம்."

12 அப்பொழுது, சலாத்தியேலின் மகன் சொரொபாபெலும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தவர் யாவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் வார்த்தைகளுக்கும் செவிமடுத்தனர்; மக்களோ ஆண்டவரின் திருமுன் அஞ்சினர்.

13 அப்போது ஆண்டவரின் தூதுவரான ஆகாய் மக்களிடத்தில் பேசி, " நாம் உங்களோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்" என்னும் ஆண்டவருடைய தூதுரையை அவர்களுக்கு அறிவித்தார்.

14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகனான சொரொபாபெலின் உள்ளத்தையும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் உள்ளத்தையும், மக்களுள் எஞ்சியிருந்தவர்கள் அனைவருடையவும் உள்ளத்தையும் கிளர்ந்தெழும்படி செய்தார்; அவர்களும் கிளம்பித் தங்கள் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அன்று ஆறாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாள்.

அதிகாரம் 02

1 மன்னன் தாரியுசின் இரண்டாம் ஆட்சியாண்டில்,

2 ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளில் ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது.

3 யூதாவின் ஆளுநன் சலாத்தியேலின் மகன் சொரொபாபெலிடமும், தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய்ச் சொல்ல வேண்டியது:

4 'இந்தக் கோயிலின் முன்னைய மகிமையைக் கண்டவன் எவனாகிலும் உங்கள் நடுவில் இருக்கிறானா? இப்போது இது உங்களுக்கு எத்தன்மைத்தாய்த் தோன்றுகிறது? உங்கள் கண்களுக்கு இது ஒன்றுமில்லாதது போலத் தோன்றுகிறதல்லவா?

5 ஆயினும் சொரொபாபெலே, தைரியமாயிரு, என்கிறார் ஆண்டவர்; தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகனான யோசுவாவே, தைரியமாயிரு; நாட்டு மக்களே, நீங்கள் அனைவரும் தைரியமாயிருங்கள், என்கிறார் ஆண்டவர். தொடர்ந்து வேலை நடத்துங்கள்; நாம் உங்களோடு இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.

6 நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களோடு நாம் செய்த உடன்படிக்கையின்படி, உங்கள் நடுவில் நமது ஆவி குடிகொண்டிருக்கிறது; நீங்கள் அஞ்சாதீர்கள்.

7 ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறார்; இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் மறுபடியும் விண்ணையும் மண்ணையும், நீரையும் நிலத்தையும் அசைப்போம்;

8 மக்களினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்வோம்; அப்போது எல்லா மக்களினங்களின் செல்வங்களும் இங்கே வந்து குவியும்; இந்த இல்லத்தை நாம் மகிமையால் நிரப்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

9 வெள்ளியும் நமக்குரியது, பொன்னும் நமக்குரியதே, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

10 இந்த இல்லத்தின் பின்னைய மகிமை முன்னைய மகிமையினும் மிகுதியாயிருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; இந்த இடத்தில் நாம் சமாதானத்தை அருளுவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."

11 மன்னன் தாரியுசின் இரண்டாம் ஆட்சியாண்டில் ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாள், இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

12 சேனைகளின் ஆண்டவர், பின்வரும் காரியங்களைப் பற்றித் தீர்மானத்தைச் சொல்லும்படி அர்ச்சகர்களிடம் போய்க் கேள்:

13 'ஒருவன் தன் மேலாடையின் முனையில் அர்ச்சிக்கப்பட்ட இறைச்சியை முடிந்து எடுத்துக் கொண்டு போய், அத்துணி நுனியால் அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப் பொருளையோ தொடுவானாகில், அவை அர்ச்சிக்கப்படுமோ?' என்று கேள்" என்றார். அவ்வாறே கேட்க, அர்ச்சகர்கள், "இல்லை" என விடை பகர்ந்தனர்.

14 அப்போது ஆகாய், "பிணத்தைத் தொட்டதனால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொடுவானாகில், அது தீட்டுப்பட்டதாகுமா?" என்று கேட்டார். அதற்கு அர்ச்சகர்கள், "ஆம், தீட்டுப்பட்டதாகும்" என்றனர்.

15 அப்போது ஆகாய் அவர்களிடம் சொன்னார்: "அதே போலத் தான் நம் திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும், என்கிறார் ஆண்டவர்; அவ்வாறே அவர்கள் உழைப்பின் பலன் ஒவ்வொன்றும், அவர்கள் ஒப்புக்கொடுக்கும் பொருளும் தீட்டுப்பட்டவை.

16 இன்றிலிருந்து என்ன நேரிடப் போகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். ஆண்டவருடைய திருக்கோயிலில் கல்லின் மேல் கல் வைக்கப்படுவதற்கு முன் நீங்கள் இருந்த நிலைமை என்ன?

17 நீங்கள் இருபது மரக்காலுக்கு மதிப்புப் போட்டு வந்து பார்க்கையில் பத்து தான் இருந்தது; பழம் பிழியும் ஆலைக்குள் வரும் போது ஐம்பது குடம் இரசத்துக்கு மதிப்புப் போட்ட போது, இருபது தான் இருந்தது.

18 உங்களையும், உங்கள் உழைப்பின் பலன்களையும் வெப்பக் காற்றாலும் நச்சுப் பனியாலும் கல் மழையாலும் நாம் அழித்தோம்; ஆயினும் நீங்கள் நம்மிடம் திரும்பி வரவில்லை, என்கிறார் ஆண்டவர்.

19 இன்றிலிருந்து- அதாவது, ஆண்டவரின் திருக்கோயிலுக்கு அடிப்படையிட்ட நாளான ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளிலிருந்து- என்ன நேரிடப்போகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.

20 இனியும் விதை களஞ்சியத்திலேயே இருந்து விடுமோ? திராட்சைக்கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவ மரமும் பலன் தராமல் போகுமோ, பாருங்கள். இன்று முதல் நம் ஆசீர் உங்கள் மேல் இருக்கும்."

21 மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறையாக ஆகாய்க்கு அருளப்பட்டது:

22 யூதாவின் ஆளுநனாகிய சொரொபாபெலுக்குக் கூறு: நாம் விண்ணையும் மண்ணையும் ஒருங்கே அசைக்கப் போகிறோம்;

23 அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப் போகிறோம். புறவினத்தாருடைய அரசுகளின் ஆற்றலை அழிக்கப்போகிறோம்; தேர்களையும், அவற்றில் ஏறிப்போகிறவர்களையும் வீழ்த்துவோம்; குதிரைகளும், அவற்றில் ஏறிச்செல்பவர்களும் ஒருவர் ஒருவரால் வெட்டி வீழ்த்தப்படுவர்.

24 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில், சலாத்தியேலின் மகனான நம் ஊழியன் சொரொபாபெலாகிய உன்னைத் தேர்ந்தெடுப்போம், என்கிறார் ஆண்டவர்; உன்னை அரச கணையாழியாய்ச் செய்வோம்; ஏனெனில் உன்னையே நாம் தேர்ந்துகொண்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."