இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - சமீப கால வரலாறு!

சகோதர அன்பின் பரிசு சமாதானம் என்று எடுத்துரைப்பதே இப்புத்தகத்தின சாரம். பகையும், அநீதியும் போர்களை விளைவிக்கின்றன.

இந்த உரை, நடைமுறையில் எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராயந்து பார்க்க சமீப கால வரலாற்றைச் சற்று பார்ப்போம்.

கண்டும் தொட்டும் உணர்ந்தால்தான் உண்மை என ஏற்கும் காலம் அது. ஆகவே மக்கள் நாம் கூறும் கிறீஸ்தவ உண்மைகள் மனுக் குலத்தின் நலனுக்காக நடைமுறையில் சரியாக வரும் என்று உறுதியுடன் ஏற்றுக் கொள்வது அரிதாயிருக்கின்றது; சரியான நிரூபணம் கொடுக்க வேண்டியுள்ளது.

1919-ம் ஆண்டு நடந்த சமாதான மாநாட்டிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வது இந்த நூற்றாண்டில் உலகம் எவ்வளவு சமாதான கேட்டுக்குள் உட்பட்டுத் தவிக்கிறது என்பதைப் புலனாக்கக் கூடும்.

வெர்செய்ல்ஸ் நகர ஒப்பந்தமும், குறிப்பாக அதன் ஷரத்துகளை இரக்கமற்ற தன்மையுடன் அமல்படுத்திய படைகளும்தான் (இந்தப் படைகள் அப்போது ஜெர்மனியை ஆக்கிரமித்திருந்தன.) ஹிட்லர் அவ்வாறு ஜெர்மனியின் எதிரிகளுக்கு விரோதமாக அத்தனை மூர்க்க மாய் எழும்பக் காரணம் என்று அநேக தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பிரெஞ்ச் பிரதமர் கிளமென்சோ என்பவர் நாஸ்திகர். ஜெர்மனியை ஈவு இரக்கமின்றி நசுக்கி அழித்து விடத் தீர்மானித்திருந் தார். 

“யுத்தத்தில் தோற்றவர்களே உங்களுக்கு ஐயோ கேடு!” என்று இவர் முழங்கிய கடும் முழக்கம் வெர்செய்ல்ஸ் நகர “கண்ணாடி மண்டபம்” முழுவதும் எதிரொலித்தது.

1914. அப்போது சீனா பின்தங்கி, பிளவுற்று, 20-ம் நூற்றாண் டின் முன்னேற்றத்துள் எப்படியும் புகுந்துகொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த காலம். இதற்காக முதல் உலக மகா யுத்தத்தில் மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு கெய்சரின் ஜெர்மனிக்கு எதிராக சண்டை செய்தது. ஜெர்மனியையும், ஆஸ்திரியாவையும் தோற்கடிக்க சீனா இவ்வாறு உதவி செய்வதற்குப் பதில் உதவியாக, பற்பல ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் செய்துகொண்ட தராதரமற்ற உடன்படிக்கையிலிருந்து விடுதலை கொடுப்பதாக சீனாவுக்கு உறுதி கூறப்பட்டது.

சீனா உதவியது. போர் முடிந்தது. ஆனால் அதற்குக் கொடுக் கப்பட்ட வாக்குறுதிகள் ஐரோப்பாவில் மறக்கப்பட்டு விட்டன. மேலை நாடுகள் சீனாவுக்குத் துரோகம் புரிந்து விட்டன. 

லோவ் செங்கியாங் என்ற சீன வெளிநாட்டு மந்திரி ஒரு நல்ல கத்தோலிக்கர். இவ்விதமாய்த் தங்கள் நாடு துரோகம் இழைக்கப் பட்டதனால் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட அவர் மறுத்து விட்டார். பிந்திய காலத்தில் இவர் தம் மந்திரி பதவியைத் துறந்து குருப்பட்டம் பெற்று சீனாவின் முதல் ஆசீர்வாதப்பர் மடத்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது சீனாவில் கல்லூரி மாணவர்களாயிருந்தவர்கள்-- பின்தங்கிய சீனாவின் வருங்காலத் தலைவர்கள்--தங்கள் நாடு இப்படித் துரோகம் இழைக்கப்பட்டதை மறக்கவில்லை. மேலை நாடுகளை அவர்கள் முழு மூச்சுடன் பகைத்தார்கள். இந்தப் பகைமை உணர்வைத் தான் மாசேதுங் தனக்குத் தேவையான நெருப்புப் பொறியாய் உபயோகித்து சீனப் புரட்சியை ஆரம்பித்தார்.

1919-ம் ஆண்டு சீன மாணவர்களின் இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது. ஏன்? வெர்செய்ல்ஸ் நகரில் தங்கள் நாடு துரோகம் இழைக்கப் பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்டதன் நினைவுச் சின்னமாக!

கம்யூனிஸ்ட்கள் இத்தகைய சந்தர்ப்பங்களை எவ்வளவு எளிதாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்! கம்யூனிஸ்ட் ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு கம்யூனிஸ்ட் தூதுவர்கள் வந்தார்கள். கம்யூனிசத்தை விதைக்க என்னென்ன சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கண்டார்கள். 1920-ல் ஏழே ஏழு சீனர்கள், தங்களைக் கம்யூனிஸ்ட்கள் என்று அழைத்துக் கொண்டு யஷன் துஷ்யு என்ற ஓர் ஆசிரியரைத் தலைவராகத் தெரிந்து கொண்டு, “மக்கள் பத்திரிகை” ஒன்றை ஆரம்பித்து வர்த்தகர் சங்கங்களைத் துவக்கச் செய்தார்கள். இன்று மலைபோல் வளர்ந்து உலக சமாதானத்துக்கே உலை வைக்கும் அளவுக்குப் பெருகியுள்ள சீனக் கம்யூனிசம் இந்த ஏழு பேர் கொண்ட ஒரு சிறு குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது என்று நம்பவே நமக்குக் கடினமாயுள்ளது. இதைப் போலவே ஒரு சிறு குழுவினர் பாத்திமா அன்னையின் பெயரால் ஊக்கமுடன் செயல்படக்கூடுவார்களேயானால் அந்த நபர்கள் போதிய வைராக்கியமுடையவர்களாயிருப்பார்களானால் ஒரு பாத்திமா அணி உலகில் வளர்ந்து விரிவடைய முடியும். இந்த உண்மை நமக்கு ஆறுதல் தருவதாயிருக்கிறது.

ஓராண்டுக்குள் முதல் சீன மார்க்ஸிஸ்ட் மாநாடு நடைபெற்றது. ஜூலை மாதம் 1921-ல். மாசேதுங் அதற்கடுத்த அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

அப்போதெல்லாம் மாசேதுங் எப்படியிருந்தார்? தூரக்கிழக்கு அரசியல் அறிவில் நிபுணரான சங். ரெய்மண்ட் தி ஜேகர் என்ற குரு, (பீக்கிங் நகர தேசிய கல்லூரியில் ஆசிரியராயிருந்தவர்) கூறுவதன்படி: “மாசேதுங் உயிரோட்டமும் கூரிய அறிவும், தீவிர முற்போக்கும் உடைய இளைஞன்; முன்னேற்றத்திற்காகத் தன்னையே அர்ப் பணித்துக் கொண்டவன். சுத்தமான தேசபக்தி பற்றி எரியும் பந்தம் போலிருப்பான்” என்று டாக்டர் ஹூஷிப் என்பவர் நேரடி அனுபவமாக மாசேதுங்கைப் பார்த்திருப்பதாக அக்குரு கூறுகிறார்.

மனம் வாடியிருந்த சீன நாட்டை ஐரோப்பியர்கள் கொடுமை யாயும், நீதியற்ற முறையிலும் நடத்தியதுதான் அந்நாடு கம்யூனிஸத்தில் விழ முதல் படியாக இருந்தது.

ஜெர்மனியில் நடந்தது போலவே, சீனாவிலும் பகையும் அநீதியும் அவற்றின் தப்பாத விளைவுகளான இரத்தம் சிந்துதலையும் கொடுங்கோன்மையையும், நிர்ப்பாக்கியங்களையும் கொணர்ந்தன.

பகையும் அநீதியுமே எல்லாப் புரட்சிகளுக்கும் ஒழுங்குமீறல் களுக்கும், இரத்தக் களறிகளுக்கும் முதல் காரணமாயிருந்தன. இன்று இவைகளைத் தினசரி நாம் பத்திரிகைச் செய்திகளிலே பார்க்கிறோம்.

ஆனால் அமெரிக்கர்கள் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் ஜப்பானில் கடைப்பிடித்த மனிதத் தன்மையுள்ள கொள்கைகளையும் பார்ப்போம். 300 கோடிக்கதிகமான டாலர்களை, சிதைந்து போன ஜப்பானிய பொருளாதாரத்தை உயர்த்தும்படி, உதவியாக அனுப்பியது அமெரிக்கா. ஒரு வெற்றி பெற்ற நாடு தோல்வியுற்ற ஒரு நாட்டுடன் நடந்து கொள்ளும் முறை இப்படி இருக்காது. ஜெனரல் மக்கார்தரின் கிறீஸ்தவக் கொள்கை முறை, இச்செயலால் நலம் விளைந்து, இன்று ஜப்பானியர் தலைநிமிர்ந்து நிற்கவும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவும் ஆசியாவில் சமாதானத்திற்கும் நிலைத்த அரசியலுக்கும் வழி கோலுவதாகப் பலனளித்துள்ளது.

ஜெனரல் மக்கார்தர் இறந்த சமயம் அவருடைய வாழ்க்கைக் குறிப்பு வெளியிடப்பட்ட போது, மிசெளரி என்ற அமெரிக்கப் போர்க் கப்பலில் அவர் நிகழ்த்திய ஓர் உரை--ஜப்பான் சரணடைந்த போது அவர் கூறிய அந்த வார்த்தைகள்--பெருந்தொகையான பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அச்சொற்பொழிவின் ஒரு பாகத்தைக் கீழே தருகிறோம்: “காலத்தின் தொடக்கத்திலிருந்தே மனிதர்கள் சமாதானத்தையே தேடி வந்துள்ளார்கள். நாடுகளுக்கிடையே தகராறுகளைத் தடுக்கவும், தீர்க்கவும் சர்வதேச ரீதியில் பல வழிகள் எல்லாக் காலங்களிலும் கையாளப்பட்டு வந்துள்ளன. துவக்கத்திலிருந்தே தனிப் பட்ட நபர்களிடை இதைச் செய்வதற்கு ஏதாவது நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தேச தேச முறையில் இப்படிப் பட்ட முயற்சிகளும், முறைகளும் வெற்றியளிக்கவில்லை. இராணுவ ஒப்பந்தங்கள், அதிகார சமத்துவம், ஐக்கிய நாடு சபைகள் இவை யெல்லாம் தோல்வியுற்று யுத்தத்திற்கே வழிவகுத்தது போலாயிற்று. போர்களால் ஏற்படும் முழுமையான அழிவு இப்படிப் பல முறைகளைப் பரிசோதனை செய்வதை அர்த்தமற்றதாக்கி விட்டது. நமக்கு இனி வேறு ஏற்பாடுகள் இல்லை. இதுவரை நாம் செய்ததை விட பெரியதும், ஏற்புடையதுமான ஒரு முறையை நாம் கையாளாவிட்டால், ஆர்மகெதோனைத் (உலகத்தை அழித்துவிடக் கூடிய இறுதிப் போர்-- காட்சி:16:16) தான் காணப் போகிறோம். இந்த சர்வதேச சமாதானப் பிரச்சினை, அடிப்படையிலே ஒரு கடவுள் நம்பிக்கைப் பிரச்சினை யாகும். மனித குணத்தை உயர்த்தி, ஞான உணர்வை ஊட்டி, கடந்த 2000 ஆண்டுகளாக நாம் அடைந்துள்ள விஞ்ஞான, கலை, இலக்கியம் முதலிய லெளகீக வளர்ச்சிக்கு சரிதகைமை உடையவனாக மனிதனை ஆக்குவதே உண்மையான பிரச்சினையாகும். சரீரத்தைக் காப்பாற்ற விரும்பினால், மனிதனுடைய ஆன்மீகத் துறை வளர்க்கப்பட வேண்டும்.” 

இன்னொரு சந்தர்ப்பத்தில் மக்கார்தர் என்ற ஜெனரல் பின்வருமாறு நம் இன்றைய ஆபத்து நிலையை விவரித்து, நாம் காப்பாற்றப்படும்படி வேண்டுதலும் செய்தார்: “நம்மை சோஷலிசப் பாதை என்ற ஒன்றுக்கு இழுத்து நேரடியாக கம்யூனிஸத்திற்குள் விழச் செய்ய பலர் முயலுகிறார்கள். இம்முயற்சிக்கு ஒரு மாற்று என்ன வென்றால், நம் மக்களின் உள்ளங்களில் எரியும் ஆழ்ந்த ஆன்மீக உணர்வேயாகும். இந்த ஆன்மீக உணர்வு தீர்மானமான ஒரு பொது ஜன அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கவும் முடிவு காணவும் வலிமையுடைய தாயிருக்கின்றது. இதுவே அமெரிக்காவின் பாதுகாப்பும் வளமுமாகும். இது இருக்கும் வரை நாம் பாதுகாக்கப்படுவோம். ஏனென்றால் இது நம்மை அறிவின் பாதையில் நிலைநிறுத்தும். நம் நம்பிக்கையும் விசுவாசமும் இரண்டு முக்கிய அடையாளங்களில் ஊன்றி நிற்கின்றன என்று தப்பாமல் இது நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கும். ஒரு அடையாளம் நம் சிலுவை அடையாளம். மற்றொரு அடையாளம் நம் தேசியக் கொடி. முந்திய சிலுவை அடையாளம் அசைக்க முடியாத படிப்பினைகளில் ஊன்றப்பட்டது. நீதியும், நேர்மையுமான பாதைகளில் நமக்கு ஆன்மீக ஊக்கமளித்து நடத்திச் செல்வது. நம் கொடி, மனித உரிமைகள் மடிந்து போகா என்று நமக்குத் தப்பாத ஊக்கம் கொடுக்கும் சின்னமாக விளங்குகிறது. நாஸ்தீக அழிவுச் சக்திகள், மனித மனதின் ஞான உணர்வைச் சாகடித்து, மனித உடலை அடிமைப்படுத்தத் தேடுகின்றன. இச்சக்திகளுக்குச் சரியான தடுப்பு இவ்விரண்டு சின்னங்களுமே. நமது மூதாதையர்கள் நமக்குக் காட்டிய வழிகளைக் கடைப்பிடித்து நம் நாட்டைச் சுதந்திர நாடாக வைத்திருக்க ஏதுவாயுள்ள ஆன்மீக பலமும் உள்ளார்ந்த ஞானமும் நமக்கு அருளப் படும்படியாக நாம் சர்வேசுரனை மன்றாடுவோம். இப்போதிருக்கும் பரவலான குழப்ப நிலை மாறி உலகமெங்கும் அமைதி நிலவச் செய்ய நம் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க மன்றாடுவோம். எங்கே சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதோ, அங்கு அது திரும்பவும் நிலை நாட்டப்படவும், மனிதப் பண்பு எங்கே புதைக்கப்பட்டு விட்டதோ, அங்கு அது மீண்டும் புத்துயிர் பெற்று எழவும் மன்றாடுவோம்.” 

மக்கார்தரின் தார்மீக வலிமை, 1942-ம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது துலக்கமாக வெளிப்பட்டது. அவ்வாண்டின் தலைசிறந்த குடும்பத் தலைவன் என்ற பரிசை அவருக்கு வழங்கி னார்கள். அச்சமயம் அவர் கூறியது இதுதான்: “நான் இறந்தபின் என் மகன் யுத்தகளத்தில் இருந்து என்னை நினையாமல் தன் இல்லத்திலிருந்து என்னை நினைத்து, நானும் அவனுடன் சேர்ந்து, பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று ஜெபிக்கக் கூடிய நம்பிக்கை கொள்ள ஆசிக்கிறேன்” என்பதே.

“அவர்களுடைய கனிகளைக கொண்டே அவர்களை அறிந்து கொள்வீர்கள். முட்செடியிலிருந்து திராட்சைப் பழங்களையாவது, முட்புதரிலிருந்து அத்திப் பழங்களையாவது பறிப்பாருண்டோ? நல்ல மரங்களெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியைக் கொடுக்கும்” (மத். 7:16) என்று நமதாண்டவர் உரைத்தார்.

கிறீஸ்தவ அன்புக் கொள்கையின் பலன் சமாதானம் நாஸ்திக பகைமைக் கொள்கையின் பலன் யுத்தம், யுத்தம்,மேலும் மேலும் யுத்தங்களே.