நடந்துள்ள நிகழ்ச்சிகள் உறுதியான சாட்சியங்களாக இருக்கின்றன

முதல் உலகப் போர் தொடங்கியபோது, பிரிட்டிஷ் படையில் 33 கத்தோலிக்க பரிபாலக குருக்கள் இருந் தார்கள். அந்த நேரத்தின் தேவைகளுக்கு இவர்கள் முற்றிலும் போதுமானவர்களாக இருந்தார்கள். ஏனெனில் அந்தப் படையினரில் பெரும்பகுதியினர் ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினராக, அல்லது குறைந்த பட்சம் கத்தோலிக்கர் அல்லாதவராக இருந்தார்கள்.

மேலும், கத்தோலிக்க வீரர்கள், இந்த 33 அதிகார பூர்வ பரிபாலக குருக்களின் உதவியை அனுபவித்து மகிழ்ந்தது மட்டுமின்றி, தாங்கள் முகாமிட்ட துறைமுகங் களிலும், நகரங்களிலும் இருந்த கத்தோலிக்கக் கோவில் களுக்கு அடிக்கடி செல்லவும் முழு சுதந்திரம் பெற்றிருந் தார்கள். போர்க் கப்பல்களில் வழக்கமாக இருந்தது போல, அந்தந்த மாகாணங்களின் குருக்கள் போர்வீரர் குடியிருப்பு களுக்கு சுதந்திரமாகச் செல்லவும் அனுமதி பெற்றிருந் தார்கள்.

போர் பிரகடனம் செய்யப்பட்டு, படைவீரர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தபோது, முழுக்க முழுக்க ப்ரொட்டஸ்டாண்ட் சபையினரை மட்டுமே உறுப் பினர்களாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இராணுவத்திலிருந்த கத்தோலிக்க பரிபாலகக் குருக்களின் எண்ணிக்கையை 600-ஆக உயர்த்தியது! இந்த குருக்கள் போர்வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். கேப்டன் என்னும் இராணுவப் பதவி, அதற்குரிய முழு சம்பளத்தோடு அவர் களுக்குத் தரப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களுடைய செலவுகளுக்கென்று கூடுதலான நிதியும் ஒதுக்கப் பட்டிருந்தது! உரிய காலத்திலும், அவரவர் தகுதியைப் பொறுத்தும் அவர்கள் மேஜர்களாகவும், கர்னல்களாகவும், ஏன் படைத் தளபதிகளாகவும் கூட பதவி உயர்வும், அதற்கேற்ற சம்பளமும், வசதிகளும் பெற்றார்கள். கத்தோலிக்க வழிபாட்டிற்குத் தேவையான பலிபீடங்கள், திரு உடுப்புகள், பரிசுத்த பாத்திரங்கள் போன்றவையும் மிக தாராளமாக அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நாம் அறிந்த வரையில் வேறு எந்தப் போர்ப்படையிலும் பரிபாலக குருக்களுக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் தரப்பட்டதேயில்லை.

இதன் மூலம் தனது பிரிவினைவாதத்திற்குப் பிரமாணிக்கமாக இருந்த ஓர் அரசாங்கம், பாவசங்கீர்த்தனத் தையும், மற்ற தேவத்திரவிய அனுமானங்களையும் மதித்துப் போற்றியதற்கான மிகத் தெளிவான சாட்சியத்தை நாம் கொண்டிருக்கிறோம்.

இந்த 600 பரிபாலக குருக்களும் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால், அவர்களுடைய பக்தியார்வத் தையும், திறமையான செயல்பாட்டையும் கண்டு பிரமித்துப் போன ஆயிரக்கணக்கான ப்ரொட்டஸ்டாண்ட் வீரர்கள், போர் முடிவடைந்தபோது, அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பல பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்கள்.

லண்டன் மாநகரத்தின் பெரும் பிரசித்தி பெற்ற செய்தித்தாள்கள், ப்ரொட்டஸ்டாண்ட் சபைக்குச் சொந்தமானவையாக இருந்தாலும், “கத்தோலிக்க வீரர்கள் தங்கள் பாத்ரேக்களின் (அதாவது குருக்களின்) பிரசன்னத்தாலும், ஊழியங்களாலும் உற்சாகப்படுத்தப்பட்டவர்களாக, மனித னுக்கோ, பசாசுக்கோ சிறிதும் பயப்படாததோடு எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருந் தார்கள்'' என்று அறிக்கையிட சற்றும் தயங்கவில்லை. 

உயிரோடிருந்த, அல்லது இறந்து கொண்டிருந்த அல்லது இறந்து விட்ட தங்களுடைய மக்களுக்கு ஊழியம் செய்வதில் இந்த வீரத்துவமுள்ள குருக்கள் எந்த சிரமத் தையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவர் களுடைய இந்த ஊழியத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது. தேவத்திரவிய அனுமானங்களால் திடமடைந்த போர் வீரர்கள் எதற்கும், தங்கள் உயிருக்கும் கூட, பயப்படாமல், நம்ப முடியாத வீர தீர, சாகசச் செயல்களில் ஈடுபட்டார்கள். கத்தோலிக்கரல்லாத ஒரு அதிகாரி, அவர்களுடைய அச்சமற்றதும், மோசமான சூழ்நிலைகளிலும் அமைதி நிறைந்திருந்ததுமான செயல் வீரத்தைக் கண்டு பிரமித்துப் போனவராக: “இவர்கள் எப்படி மரணத்தைப் புன்னகை யோடு எதிர்கொள்கிறார்கள்?'' என்று மிகவும் ஆச்சரியப் பட்டார்.

பிரெஞ்ச் படையில் இருந்த வீரத்துவமுள்ள குருக் களும் கூட மிகச் சிறந்த வீரர்கள் என்று அதிகாரிகளாலும், வீரர்களாலும் மதிக்கப்பட்டார்கள். போர் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது. அதன் கடுமையால் முற்றிலுமாக சோர்ந்து போயிருந்த வீரர்களுக்குள் புத்துயிரும் ஆற்றலும் பெருக்கெடுக்க இந்த குருக்களின் அசாத்தியமான தைரியம் பெரிதும் துணைபுரிந்தது.

பயங்கரத்துக்குரிய அந்தக் காலகட்டத்தில் பாவ சங்கீர்த்தனம் எப்பேர்ப்பட்ட பலமாகவும், வல்லமை யாகவும் இருந்தது என்பதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளப் பின்வரும் சில சம்பவங்கள் உதவுகின்றன.

பிரெஞ்ச் எல்லைகளின் அருகில், இறந்து கொண் டிருந்த ஒரு ஆங்கிலப் போர்வீரன், தனது மொழிபெயர்ப் பாளராக செயல்படும்படி தனது கர்னலைக் கேட்டுக் கொண்டான். ஏனெனில் அவனுடைய இறுதி நேரத்தில் அவனுக்குக் கிடைத்தவர் ஒரு பிரெஞ்ச் குரு மட்டுமே. சைகைகளைக் கொண்டு அவன் பாவசங்கீர்த்தனம் செய்ய லாம் என்று குரு அவனுக்கு தைரியம் சொன்ன போதிலும், தன்னுடைய எல்லாப் பாவங்களையும் சொல்ல வேண்டும் என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தான். இந்தப் பரிதாபத்திற்குரிய வீரனின் தீவிரமான ஆர்வத்தைக் கண்ட அந்த நல்ல, ப்ரொட்டஸ்டாண்ட் அதிகாரி அந்த மனிதனின் பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டு, அந்த பிரெஞ்ச் குருவிடம் அதை மொழிபெயர்த்துக் கூற, அவர் அந்த வீரனுக்குப் பாவ மன்னிப்பளித்தார். அந்த வீரன் அந்த அதிகாரிக்குக் காட்டிய நன்றியறிதலுக்கு அளவே இருக்கவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு, ஒரு குழந்தை யைப் போல, அவன் மகிழ்ச்சியோடு இறந்தான்.

இந்த சம்பவம் அந்தக் கர்னலை ஆழமாக பாதித்தது. அவர் அந்த குருவிடம் கத்தோலிக்கத் திருச்சபை பற்றியும், குறிப்பாக பாவசங்கீர்த்தனத்தைப் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்டு, ஞானத் தெளிவடைந்து, அந்தப் போர் முடிவடைவதற்கு முன்பாகவே ஞானஸ்நானம் பெற்று, சத்திய வேதத்தில் இணைந்தார். அவருடைய சக அதிகாரிகள் பலரும் இவ்வாறே தங்கள் பதிதத்தை விட்டு மனந்திரும்பி, கத்தோலிக்க வேதத்தில் இணைந்தார்கள்.

ஏமியன்ஸ் நகர மேற்றிராணியார், ஒரு முறை 5000 காயப்பட்ட அதிகாரிகளையும், வீரர்களையும் சந்தித்துப் பேச நேர்ந்தபோது, அவர்களில் வெறும் 10 பேர் மட்டுமே இன்னும் பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளாமல் இருந்தார்கள் என்பதை அறிந்து கொண் டார்! இந்த 5000 வீரர்களும் வெவ்வேறு படைப்பிரிவு களைச் சேர்ந்தவர்கள், பிரான்ஸின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்தவர்கள். பிரெஞ்ச் படை முழுவதும் போர் நிகழ்ந்த காலத்தில் எத்தகைய அற்புதமான தேவபக்தியால் நிரம்பியிருந்தது என்பதற்கு இது சிறந்த சான்றாக இருக் கிறது.

அமெரிக்க வீரர்களின் முதல் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தபோது, சில பிரிட்டிஷ் பரிபாலக குருக்கள், புதிதாக வந்தவர்களுக்கும் சேர்த்து ஊழியம் செய்ய ஆர்வத்தோடு முன்வந்தார்கள். இந்த அமெரிக்க வீரர்கள் அனைவருமே ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பாவசங்கீர்த்தனம் செய்திருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டபோது அவர்களுடைய மகிழ்ச்சி வெகுவாக அதிகரித்தது.

ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஒரு ப்ரொட்டஸ்டாண்ட் பத்திரிகையாளர் அரசின் அனுமதி பெற்று, நேசநாட்டுப் படைகள் மும்முரமான போரில் ஈடுபட்டிருந்த களங் களுக்குச் சென்றார். அங்கே போர்வீரர்களோடு பேச அவருக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

வீடு திரும்பியதும் அவர் படைகளின் பரிபாலகக் குருக்களைப் பற்றிய அழகிய விவரங்கள் அடங்கிய கட்டுரைகளை வெளியிட்டார். “இந்த அச்சத்திற்குரிய போரின் அதிசயங்களில் மிக அசாதாரணமான ஒன்று, ஒரு புதுவகையான வீரநாயகரை, குருத்துவ வீரநாயகரை நான் கண்டது ஆகும். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.. அவர் அனைவருக்கும் பிரமிப்பூட்டுபவராகவும், மனிதர் களுக்கு ஓர் அற்புதமான பேருதவியாகவும் இருந்தார்'' என்று அவர் எழுதினார்.

அநேக ப்ரொட்டஸ்டாண்ட் பரிபாலக போதகர் களின் நடத்தை இதற்கு நேர்மாறானதாக இருந்தது. இவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மிகச் சிறந்த சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், வீரமும் நிறைந்தவர்களாக இருந்தாலும், தேநீர், சர்க்கரை, புகையிலை, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் போன்ற, வீரர்களுக்குத் தேவையான உலகத்தன்மையான காரியங்களை அவர்களுக்குத் தருவ தோடு நிறுத்திக் கொண்டார்கள். அதற்கு மேல் எதுவும் செய்ய அவர்களால் முடியவில்லை. தேவத்திரவிய அனுமானங்களையோ, எந்த விதமான ஞான உதவியையோ அவர்களால் தங்கள் வீரர்களுக்குத் தர முடியவில்லை. கத்தோலிக்க குருக்களும் உலகரீதியான உதவிகளைத் தங்கள் வீரர்களுக்கு எல்லா விதத்திலும் செய்து வந்தார்கள், என்றாலும் பாவசங்கீர்த்தனம் கேட்பது, அவஸ்தைப் பூசுதலும், திவ்விய நன்மையும் வழங்குவது, பூசை வைப்பது, இதன் மூலம் வீரர்களுக்கு உயிரும், மகிழ்ச்சியும், ஆறுதலும் அளிப்பது என்று, எல்லா விதமான ஞான உதவிகளையும் அளிப்பதே அவர்களுடைய நிஜமான வேலையாக இருந்தது. இதன் காரணமாக, அந்த வீரர்கள் எந்த நிமிடமும் சாவை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருந்தார்கள். 

ஒரு நாள் உணவறையில், ப்ரொட்டஸ்டாண்ட் வீரர்களும், அதிகாரிகளும் கூடியிருந்தார்கள். அவர் களிடையே ஒரே ஒரு கத்தோலிக்க வீரன் மட்டும் இருந் தான். அப்போது, இந்தப் பதிதர்களில் ஒருவன் தனது படைப்பிரிவின் பரிபாலக கத்தோலிக்க குருவைப் பற்றிய ஓர் அழகான நிகழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண் டான். அதன்பின் அவன் தனது கத்தோலிக்க சக வீரனை நோக்கித் திரும்பி, அவனிடம்: “உங்கள் குருக்கள் அற்புத மானவர்கள். ஆனால் எங்கள் "குருக்கள்' என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது, நான் சபிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்'' என்றான்!

மற்றொருவன் தொடர்ந்து, “கத்தோலிக்கர்களாகிய உங்களால் வீரமுள்ளவர்களாக இருக்க முடிகிறது; நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறது, நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்திருக்கிறீர்கள். ஆனால் ஒருவேளை போரில் நான் அடிபட்டு விழுவேனாகில், எனக்கு என்ன நேரப் போகிறது என்பதை நான் அறிந்தால், அதுவே என்னைக் கொன்று விடும்!'' என்றான்.

தென் ஆப்ரிக்கப் போர். ஒரு கத்தோலிக்க வீரன் சாகும் தறுவாயில் கொண்டுவரப்பட்டான். ஒரு கத்தோலிக்க பரிபாலகக் குருவைக் காண அவன் விரும்பினான். ஆனால் அவனுக்கு மிக அருகில் இருந்த குரு, 200 மைல் தொலை விலிருந்த ஒரு முகாமில் இருந்தார். இந்த வி­யம் ராபர்ட்ஸ் என்னும் ஃபீல்ட் மார்­ல் ஒருவருக்குத் தெரிய வந்தது. அவர் உடனே அந்தக் குருவை அழைத்து வர ஒரு இரயிலையே ஏற்பாடு செய்து அனுப்பினார். ஆனால் திரும்பி வரும் வழியில் அவர்கள் போயர் இனத்தாரிடம் சிக்கிக் கொண்டார்கள்.

ஆனால், ஒரு குருவை அழைத்து வர ஒரு இரயிலை அவ்வளவு தொலைவிற்கு அனுப்பிய அந்த பிரிட்டிஷ் இராணுவ உயர் அதிகாரியின் செயலை அவர்கள் கேட்டறிந்து கொண்டபோது, அதிர்ந்து போனவர்களாக, அவர்கள் இராணுவ மரியாதையோடு, அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, விரைவாகச் செல்லும்படி வழியனுப்பி வைத்தார்கள்!

பிடிபட்ட ஓர் அடிமை வியாபாரக் கப்பல். சில வருடங்களுக்கு முன், ஆப்ரிக்கக் கடற்கரையில் தங்கள் காட்டுமிராண்டித்தனமான வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அடிமை வியாபாரக் கப்பல்களைக் கண்காணிக்கும்படி ஒரு பிரிட்டிஷ் போர்க் கப்பலுக்கு உத்தரவு தரப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு கப்பல் அடையாளம் காணப்பட்டது. ஆனால் போர்க் கப்பலிலிருந்து சரணடையும்படி சமிக்ஞைகள் வந்தும் அதை அலட்சியம் செய்து, அந்தக் கப்பல், கடலுக்குள் நீட்டிக் கொண்டிருந்த ஒரு நிலக்கூம்புப் பகுதிக்குள் நுழைந்து, போர்க்கப்பல் செல்ல முடியாத ஆழமற்ற கடற்பகுதிக்குள் சென்று விட்டது.

ஆயினும் அதைப் பின்பற்றிச் சென்று, முடிந்தால், அதைக் கைப்பற்றும்படி உத்தரவு தரப்பட்டது. ஓர் இளம் லெஃப்டினன்ட் அதிகாரியால் இந்த உத்தரவு தரப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகளின் மழைக்கு நடுவே அந்த அதிகாரி மிகுந்த துணிச்சலோடும், வீரத்தோடும் அந்த அடிமை வியாபாரக் கப்பலைப் பிடித்து அதில் தன் வீரர்களோடு ஏறினான். மோசமான கடற்கொள்ளையர்கள் அடங்கிய அந்தக் கப்பலோடு கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த இளம் அதிகாரியோ நம்ப முடியாத வீரத்தோடு போரிட்டு, மிகக் கடுமையான எதிர்ப்பையும் மீறி அந்தச் சண்டையில் வெற்றி பெற்றான்.

அவன் இங்கிலாந்திற்குத் திரும்பி வந்த போது, அவன் ஆற்றிய சேவைக்குக் கைம்மாறாக அவனுக்குக் கேப்டன் பதவி தரப்பட்டது. இந்தப் பாராட்டு விழாவில் தான் ஆற்றிய உரையின்போது அவன் பின்வருமாறு குறிப் பிட்டான்:

“அன்புள்ள நண்பர்களே, நீங்கள் என்மீது பொழிகிற இந்தப் பாராட்டுக்களுக்கு நான் தகுதியற்றவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நான் எத்தகைய ஆபத்திற்கு என்னை உட்படுத்தினேன் என்பதை நான் அறிந் திருந்தாலும், அதற்காக எந்த விதமான அச்சத்தையும் நான் உணர்ந்ததாகச் சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்தான் நான் பாவசங்கீர்த்தனம் செய்திருந்தேன். தேவ இஷ்டப்பிரசாத நிலையில் நான் இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆகவே என் ஆத்துமத்திற்கு எந்த ஆபத்துமில்லை என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன்!''

கத்தோலிக்கனாக இருப்பதும், ஓர் உண்மையான கத்தோலிக்கனாக வாழ்வதும், பாவசங்கீர்த்தனம், திவ்விய நற்கருணை ஆகிய போராயுதங்களைக் கொண்டு உலகம், சரீரம், பசாசு ஆகிய ஆன்ம எதிரிகளோடு போராடி வெல்வதும் எப்பேர்ப்பட்ட பாக்கியமாக இருக்கிறது!