இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் வழியாக நம்மை அர்ச்சித்துக் கொள்வதன் அவசியம்

நம் அர்ச்சிப்பில் மரியாயின் பங்கு

நாம் அர்ச்சிப்படைய வேண்டும், இது கடவுளின் சித்தம் 

3. முன் குறிக்கப்பட்ட ஆன்மாவே! கடவுளின் உயிருள்ள சாயலே! சேசு கிறீஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தால் மீட்கப்பட்ட நீ, இவ்வுலக வாழ்வில் கடவுளைப் போல் பரிசுத்தமாயும், மறுவுலக வாழ்வில் அவரைப்போல் மகிமையாயும் இருக்க வேண்டுமென்பதே அவர் சித்தமாகும். கடவுளின் பரிசுத்ததனத்தை அடைதலே உன் நிச்சயமான அழைத்தலாகும். 

உன் எல்லா நினைவுகளும், சொல், செயல்களும், உன் எல்லாத் துன்பங்களும், உன் வாழ்வின் சகல அசைவுகளும் இக்குறிக்கோளை நோக்கியே இல்லாவிட்டால், கடவுள் உன்னை எதற்காக உண்டாக்கி இப்போது காப்பாற்றி வருகிறாரோ அதைச் செய்யாதவனாய் நீ அவரை எதிர்த்து நிற்கிறாய். தூசியை ஒளியாகவும், அசுத்தத்தைப் பரிசுத்தமாகவும், பாவத் தன்மையைப் புனிதத் தன்மையாகவும், சிருஷ்டியை சிருஷ்டிகராகவும், மனிதனைக் கடவுளாகவும் ஆக்கும் இச்செயல் எத்தகைய வியப்புக்குரியது! 

மீண்டும் சொல்கிறேன், இது வியப்புக்குரிய செயல்! இது தன்னிலே கடினமானது, வெறும் இயல்பால் சாத்தியமாகாதது. கடவுள் மட்டுமே தம்முடைய வரப்பிரசாதத்தால், ஏராளமான, அசாதாரணமான தம் வரப்பிரசாதத்தால் இதைச் செய்யக் கூடும். உலக முழுவதையும் சிருஷ்டித்தது கூட இவ்வளவு பெரிய தலைசிறந்த வேலைப்பாடாகாது. 

அர்ச்சிப்படைய நாம் புண்ணியப் பயிற்சி செய்யவேண்டும்

4. முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே, நீ உன்னையே எப்படி அர்ச்சித்துக் கொள்வாய்? கடவுள் உன்னை அழைக்கிற அவ்வுயர்வை நீ அடைய எந்த வழியைக் கைக்கொள்வாய்? இரட்சண்யத்திற்கும் அர்ச்சிப்புக்குமான சாதனங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே. சுவிசேஷத்தில் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. ஞான வாழ்வின் ஆசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளன. அர்ச்சிஷ்டவர் களால் அனுசரிக்கப்பட்டுள்ளன. இரட்சணியமடையவும், உத்தமதனம் அடையவும் விரும்புகிற எல்லோருக்கும் அவசியமாயிருக்கின்றன. அவை : இருதயத் தாழ்ச்சி, இடைவிடா செபம், எல்லாவற்றிலும் பரித்தியாகம், தேவ பராமரிப்புக்குக் கையளித்தல், கடவுள் சித்தத்திற்கு ஒத்திருத்தல்.

புண்ணியப் பயிற்சிக்குக் கடவுளின் வரப்பிரசாதம் தேவை. 

5. இரட்சிப்புக்கும், அர்ச்சிப்புக்கும் தேவையான இச்சாதனங்களைக் கடைப்பிடிக்க கடவுளின் வரப்பிரசாதம் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. கடவுள் தம் வரப்பிரசாதங்களை கூடக்குறைய, நிரம்ப எல்லோருக்கும் அளிக்கிறார் என்பதை யாரும் சந்தேகிக்கக் கூடாது. கூடக் குறைய, நிரம்ப என்கிறேன், ஏனென்றால் கடவுள் அளவற்ற நன்மையுள்ளவராயிருந்தாலும், எல்லாருக்கும் சம அளவான அருளைக் கொடுப்பதில்லை. 

ஆயினும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் போதிய அருள் வழங்குகிறார். பிரமாணிக்கமுள்ள ஒரு ஆன்மா, பெரிய அருளைக் கொண்டு பெரிய செயலையும் குறைந்த அருளைக் கொண்டு குறைந்த செயலையும் ஆற்றும். கடவுளால் அளிக்கப்பட்டு, ஆன்மாவால் ஒத்துழைக்கப்படுகின்ற தேவ வரப்பிரசாதத்தின் மதிப்பும், உயர்வும்தான் நம் கிரியைகளுக்கு மதிப்பையும் உயர்வையும் அளிக்கின்றன. இந்த உண்மைகள் நிச்சயமானவை.

கடவுளின் அருளைக் கண்டடைய நாம் மரியாயைக் கண்டடைய வேண்டும்., 

6. எல்லாவற்றையும் சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம்: புனிதமடைவதற்கு அவசியமான வரப்பிரசாதத்தைக் கடவுளிடமிருந்து அடைய நீ ஒரு எளிதான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். இந்த வழியை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நான் கூறுவது இதுவே: கடவுளின் அருளைக் கண்டடைய நாம் மரியாயைக் கண்டடைய வேண்டும்.