இறந்தவர்களும், காயம்பட்டவர்களும் - விளக்கம்

பிற்பாடு விளக்கப்பட்ட சில காரணங்களுக்காக டொன் போஸ்கோ மே 6, இயேசுவின் விண்ணேற்றத் திருநாளன்று இந்தக் கனவு பற்றிய விளக்கத்தைத் தந்தார். அவர் மாணவர்களையும், ஊழியர்களையும் இரவு ஜெபங்களுக்காக ஒன்றுகூடச் செய்து, அதன்பின், பின்வருமாறு பேசினார்:

அன்றிரவு விருந்தாளிகள் வந்திருந்ததால், என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியவில்லை. இந்தக் காரியங்கள் நமக்குள் இரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும். இவற்றைப் பற்றி யாரும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ எழுதக் கூடாது. நான் எல்லாவற்றையும், என் பாவங்களையும் கூட உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்.

அந்தப் பள்ளத்தாக்கு, அந்த துன்ப சோதனையின் நாடு, இந்த உலகம்தான். அந்த அரையிருள், அழிவின் இடமாகும்; அந்த இரண்டு குன்றுகள் கடவுளின் கட்டளைகளும், திருச்சபைக் கட்டளைகளும் ஆகும்; பாம்புகள் பசாசுக்கள்; இராட்சத மிருகங்கள், தீய சோதனைகள்; அந்தக் குதிரை, எலியோதோரஸைத் தாக்கிய அதே குதிரைதான் (2 மக்கபே. 3) என்று நான் நினைக்கிறேன், அது நம் தேவ நம்பிக்கையைக் குறிக்கிறது. ரோஜாக்களின் மீது நடந்து சென்று இறந்து விழுந்த சிறுவர்கள், ஆத்துமத்திற்கு மரணத்தை விளைவிக்கிற இவ்வுலக இன்பங்களுக்குத் தங்களைக் கையளித்தவர்கள். தங்கள் பாதங்களின்கீழ் ரோஜாக்களை மிதித்தபடி சென்றவர்கள், உலக இன்பங்களை நிந்தித்து வெறுத்து, அதனால் வெற்றி பெற்றவர்கள். தேவ அன்னையின் மேற்போர்வையினுள் பறந்து சென்ற சிறுவர்கள் தங்கள் ஞானஸ்நான மாசற்றதனத்தைக் காத்துக் கொண்டவர்கள்.

அறிய விரும்புகிறவர்களுக்காக, நான் சம்பந்தப்பட்டவர்களிடம், அவர்கள் எந்த விதமான ஆயுதத்தை வைத்திருந்தார்கள் என்றும், அவர்கள் வெற்றிபெற்றார்களா, இல்லையா, இறந்து போனார்களா, அல்லது காயம்பட்டார்களா என்று படிப்படியாக நான் சொல்வேன். எனக்கு எல்லாச் சிறுவர்களயுைம் தெரியவில்லை. ஆனாலும் ஆரட்டரியைச் சேர்ந்தவர்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன். மற்றவர்கள் எப்போதாவது இங்கே வர நேர்ந்தால், நான் அவர்களைக் கண்ட வினாடியே அடையாளம் கண்டு கொள்வேன். 

கேள்விகள்

இந்தக் கனவை எழுதி வைத்த டொன் போஸ்கோவின் செயலாளரான சுவாமி பெர்ட்டோ , டொன் போஸ்கோ விவரித்தவையும், நீண்ட நேரம் விளக்கியவையுமான பல விவரங்கள் தமக்கு நினைவில் இல்லை என்று எழுதி வைத்திருக்கிறார். மறுநாள் காலை, மே 7 அன்று, அவர் டொன் போஸ்கோவுடன் இருந்த போது, “உங்கள் கனவில் கண்ட எல்லாச் சிறுவர்களையும் நினைவில் வைத் திருப்பதும், அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்று சொல்வதும், அவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டார். “ஓ, ஓட்டிஸ் போட்டிஸ் பியா டூட்டிஸ் வழியாக” என்று டொன் போஸ்கோ பதிலளித்தார். தர்மசங்கடமான கேள்விகளைத் தவிர்ப்பதற்காக டொன்போஸ்கோ அடிக்கடி பயன்படுத்திய அர்த்தமில்லாத ஒரு சொற்றொடர் இது.

சுவாமி பார்பெரிஸும் இதே கேள்வியை அவரிடம் எழுப்பினார். டொன் போஸ்கோ ஆழ்ந்த விதமாக, “அது கனவு என்பதை விட மிகவும் மேலானது” என்று சொல்லி விட்டு, அத்துடன் அதுபற்றிய பேச்சை முடித்துக் கொண்டு, வேறு காரியங் களுக்குக் கடந்து சென்று விட்டார்.

சுவாமி பெர்ட்டோ தமது அறிக்கையைப் பின்வரும் வார்த்தைகளில் முடிக்கிறார்: “இந்த அறிக்கையை எழுதி வைத்த நானும், இந்தக் கனவில் என் பங்கு பற்றி அவரிடம் கேட்டேன். அவருடைய பதில் எந்த அளவுக்கு என்னைத் துல்லியமாக எடை போடுவதாக இருந்தது என்றால், நான் கதறி அழுதபடி, “மோட்சத் திலிருந்து வந்த ஒரு தேவதூதரும் கூட உண்மையை இதை விட நன்றாகச் சொல்லியிருக்க முடியாது” என்றேன்.”