25 நவம்பர் 1944.
ஆண்டவரிடமிருந்து ஒரு வாக்குறுதி பெற்றிருக்கிறேன். “சேசு, உங்கள் சுயபொறுப்பு வயதின் சடங்குகளை நான் காண வேண்டும்” என்று கூறியிருந்தேன். “நமக்கு அவகாசம் கிடைத்த உடனே, முதல் காரியமாக அதன் பரம இரகசியத்தைக் கலைக்காதபடி அதை உனக்குக் காண்பிப்பேன். அதை சமீபத்தில் (29 அக்டோபர்) உனக்குக் காட்டப்பட்ட: மாதா எனக்கும் யூதாவுக்கும் யாகப்பனுக்கும் ஆசிரியையாயிருந்த காட்சிக்கு அடுத்ததாக சேர்த்துக் கொள். இதற்கும் தேவாலயத்தில் தர்க்கவாதத்திற்கும் நடுவே அது இருக்கட்டும்” என்று அவர் கூறினார்.
19 டிசம்பர் 1944.
நாசரேத்தில் மாமரி அன்னை மண்பானை போன்ற ஒரு பாத்திரத்தில் எதையோ கலக்குகிறார்கள். அது கொதிக்கிறது. அந்த ஆவி சமையல் தோட்டத்தின் குளிர்ந்த ஆகாயத்தை நிரப்புகிறது. அது குளிர்கால மத்திபமாயிருக்க வேண்டும். ஏனென்றால் ஒலிவ மரங்களைத் தவிர எல்லாச் செடிகளும் மரங்களும் வெறுமையாக எலும்புக்கூடுகள்போல் காட்சியளிக்கின்றன. மேலே உயரத்தில் ஆகாயம் மிகத் தெளிவாயிருக்கிறது. அழகாக சூரிய ஒளி படருகிறது. ஆனால் அது ஒலிவ மரங்களின் பசும் பழுப்பு நிறக் கிளைகளையும் வெற்றுக் கிளைகளையும் அசையச் செய்கிற கடும் குளிர் காற்றின் குளிர்ச்சியைத் தணிக்கவில்லை.
மாதா ஒரு இருண்ட பழுப்பு நிற ஆடையணிந்திருக் கிறார்கள் - ஏறக்குறைய கறுப்புத்தான். அதைப் பாதுகாக்க முன்னால் ஒரு முரட்டுத் துணியை முன்றானையாகக் கட்டியிருக்கிறார்கள். அந்தப் பாத்திரத்தைக் கிளறிக் கொடுத்த கம்பை அவர்கள் வெளியே எடுக்கிறார்கள். அதிலிருந்து அழகிய மாணிக்கச் சிவப்புத் துளிகள் விழுகின்றன. மாதா அதைப் பார்க்கிறார்கள். தன் விரலை அதில் நனைக்கிறார்கள். தன் முன்றானையில் அதன் நிறத்தை சரிபார்க்கிறார்கள், திருப்தியடைகிறார்கள்.
பின் வீட்டிற்குட் சென்று நிறைய வெள்ளைக் கம்பளி நூற்கொத்துகளைக் கொண்டு வந்து, ஒவ்வொன்றாக பொறுமை யுடன் கவனத்துடன் பாத்திரத்தினுள் அமிழ்த்துகிறார்கள். அப்போது அவர்கள் மைத்துனி அல்பேயுஸின் மேரி, சூசையப்பரின் தச்சுப் பட்டரையிலிருந்து வருகிறாள். அவர்கள் முகமன் கூறிப் பேசத் தொடங்குகிறார்கள்.
“நன்றாக வருகிறதா?”
“ஆம்.”
“அந்த அஞ்ஞான மார்க்கத்தாளான மாது உறுதியாகச் சொன்னாள். இதுதான் அந்த நிறமாம். இப்படித்தான் அவர்கள் உரோமையில் செய்வார்களாம். உங்களுக்காகவே, நீங்கள் அவளுக்குச் செய்து கொடுத்த தையல் பூவேலைக்காகவே இதை என்னிடம் அவள் கொடுத்தாள். இவ்வளவு சிறந்த பூ தையல் வேலை உரோமையில் கூட செய்ய மாட்டார்களாம். அதைச் செய்வதில் உங்கள் கண் குருடாகியிருக்குமாம்...”
மாதா அது ஒரு சிறு விஷயம் என்பதுபோல் சிரித்தபடி தலையசைக்கிறார்கள்.
மேரி கடைசியாக நூற்கழிகளை மாதாவிடம் கொடுப்பதற்கு முன் அவற்றை உற்றுப் பார்த்து: “என்ன அழகாக நூற்றிருக்கிறீர்கள்! முடிபோல் அவ்வளவு மிருதுவாகவும் ஒல்லியாகவும் இருக்கிறதே! எல்லாவற்றையும் நீங்கள் நன்றாகவே செய்கிறீர்கள். அதுவும் துரிதமாகச் செய்கிறீர்கள். கடைசியாக இருக்கிற இவை வெளிறிய நிறமாயிருக்குமோ?”
“ஆம். அவை அங்கி நெய்வதற்கு. கட்டி நிறமாயிருப்பவை மேல் வஸ்திரத்திற்கு.”
இரண்டு ஸ்திரீகளும் அந்தப் பாத்திரத்தில் வேலை செய்கிறார்கள். அதனுள்ளிருந்து அழகான ஊதா வண்ணம் படிந்த இழைக்கண்டுகளை வெளியே எடுக்கிறார்கள். உடனே சுனைக்கு ஓடிச் சென்று அதன் பனிபோல் குளிரும் நீரில் அமிழ்த்துகிறார்கள். பின் அவற்றை மேலும் மேலும் பிழிகிறார்கள். அதன்பின் குச்சிகளை மரக்கிளைகளில் கட்டி அந்தக் குச்சிகளில் இழைக்கண்டுகளை உலர விடுகிறார்கள்.
“இந்தக் காற்றில் சீக்கிரம் நன்றாய் உலர்ந்துவிடும்” என்கிறாள் அல்பேயுஸ் மேரி.
“நாம் சூசையப்பரின் அறைக்குப் போவோம். அங்கே கனலடுப்பு இருக்கிறது. நீ மிகக் குளிரில் உறைந்து போவாய். நீ எனக்கு உதவியது நல்லதாயிற்று. சீக்கிரம் வேலையை அதிக உழைப்பில்லாமலே முடித்துவிட்டேன். உனக்கு நன்றி” என்கிறார்கள் மாதா.
“ஓ மரியா! உங்களுக்காக நான் என்னதான் செய்ய மாட்டேன்! உங்களருகில் இருப்பதே பெரிய மகிழ்ச்சியா யிருக்கிறது. மேலும் இந்த வேலைகள் எல்லாம் சேசுவுக்குத் தானே! எப்படிப்பட்ட மகன் உங்கள் பிள்ளை...! சேசுவுக்குப் பிரமாண வயது விழாவிற்கு நான் உதவி செய்வதால் அவன் எனக்கும் மகன்தான் என்று நான் உணர்ந்து கொள்வேன்” என்கிறாள் மேரி.
அவர்கள் இருவரும் தச்சுப் பட்டரைக்குள் போகிறார்கள். தச்சுக் கூடங்களில் வழக்கமாக இருப்பதுபோலவே செதுக்கிய மர வாசனையால் அது நிரம்பியிருக்கிறது.
இப்பொழுது காட்சி நின்றுவிடுகிறது... பின் பன்னிரண்டு வயதான சேசு ஜெருசலேமுக்குப் புறப்படுகிறதோடு மீண்டும் தொடருகிறது.
சேசு பார்க்க மிக வடிவமாயிருக்கிறார். எவ்வளவு நன்றாக வளர்ந்திருக்கிறாரென்றால் அவருடைய இளம் தாயின் தம்பி போலிருக்கிறார். அவர் ஏற்கெனவே தன் தாயின் தோள்மட்டாக வளர்ந்துள்ளார். இளம் பொன் சுருள் தலை. தலைமுடி முதல் ஆண்டுகளில் இருந்ததுபோல் குட்டையாக இல்லை. இப்பொழுது அது காதுவரையிலும் வளர்ந்து பிரகாசமான சுருள் முடிகளால் ஆக்கப்பட்ட தலைச்சீரா மாதிரி காணப்படுகிறது.
அவர் இள மாணிக்கச் சிவப்பு உடையணிந்திருக்கிறார். அங்கி கால்களை மறைக்கிறது. காலணிகள் மட்டும் வெளியே காணப்படுகின்றன. அங்கி தளதள என்றும் அகன்ற கைகளுடனும் உள்ளது. கழுத்தைச் சுற்றியும் சட்டைக் கையின் ஓரங்களிலும் உடுப்பின் விளிம்புகளிலும் கிரேக்க பாணியில் நிறத்திற்கு மேல்நிறமாக பூ வேலை நெய்யப்பட்டிருக்கிறது. அது மிக அழகாயிருக்கிறது...
(இதன் மீதிப் பாகம் புதிய நோட்டில் உள்ளது. மறுபிரதி எழுதும்போது அதைக் கவனிக்கவும்.)
20 டிசம்பர் 1944.
சேசு தம் தாயுடன் நாசரேத்திலுள்ள அவர்களுடைய உணவறைக்குள் (அப்படி அதை நாம் அழைப்போம்.) செல்லுகிறார்.
சேசு பார்ப்பதற்கு வடிவமைப்பான பன்னிரு வயதுடைய இளைஞராகக் காணப்படுகிறார். வளர்ந்து கட்டமைப்பாக, வலுவுள்ளவராக, தடிப்பில்லாமல் இருக்கிறார். தம் வயதைவிட மூப்பாக தெரிகிறார் - இது அவருடைய நிறத்தினால். அவர் தம் தாயின் தோள் உயரம் வளர்ந்திருக்கிறார். அவருடைய குழந்தை முகம் ரோஜா நிறத்தில் வட்டமாக இருக்கிறது. பிந்தி அவருடைய இளைஞ பருவத்திலும் முழு மனித பருவத்திலும் அது ஒடுங்கியும் நிறமற்றும் மஞ்சள் ரோஸ் கலந்த வெண் சலவைக்கல் போன்றும் இருக்கும்.
அவருடைய கண்களும் இன்னும் ஒரு குழந்தையின் கண்களாகவே இருக்கின்றன. அவர் நோக்கும்போது முழுவதும் திறந்திருக்கும் பெரிய கண்கள். ஒரு மகிழ்ச்சி அதன் ஆழ்ந்த தன்மையில் மறைந்து கொண்டிருக்கும். பின்னாட்களில் அவை அப்படி முழுவதும் திறந்திருப்பதில்லை. அவருடைய கண் இமைகள், புனித பரிசுத்தரிடமிருந்து உலகத்திலிருக்கும் மிகுதியான தீமைகளை மறைக்கும்படியாக அவர் கண்ணில் பாதியை மறைத்துவிடும். புதுமைகள் செய்யும்போதும் பசாசுக்களையும் மரணத்தையும் அவர் விரட்டும்போதும் வியாதிகளையும் பாவங்களையும் குணப்படுத்தும் போதும் அவை திறந்து பிரகாசமாயிருக்கும் - இப்பொழுது இருப்பதைவிட அதிகம் பிரகாசிக்கும். ஆழ்ந்த தன்மையுடன் கலந்திருக்கும் மகிழ்ச்சியும் காணப்படாது... மரணமும் பாவமும் மேலும் மேலும் அவருடன் நெருங்கி வரும். அதோடு மனிதர்கள் மனமற்று வெறுப்பைக் காட்டுவார்களாதலால் அவருடைய பலி பயனற்றதாயிருக்கும் என்ற மனித அறிவும் அவரிடம் இருக்கும். மிக அபூர்வமான மகிழ்ச்சிகளின் வேளைகளில், அதாவது அவர் பிரமாணிக்கமுள்ள விசுவாசிகளிடையே, விசேஷமாய் பரிசுத்ததனமுள்ளவர்களின் நடுவில், முக்கியமாக குழந்தைகளின் மத்தியில் இருக்கும்போது மாத்திரம் அவருடைய புனித சாந்தமுள்ள கருணைக் கண்கள் சந்தோஷத்தினால் மறுபடியும் பிரகாசிக்கும்.
இப்பொழுது சேசு தம் தாயுடன் தமது இல்லத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பாக அர்ச். சூசையப்பர் அன்புடன் சிரித்தபடி இருக்கிறார். அவரை வியந்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவருடைய அத்தை, அல்பேயுஸின் மேரி அவரைத் தட்டிக் கொடுக்கிறாள். சேசு சந்தோஷமாயிருக்கிறார். என் சேசு சந்தோஷமாயிருப்பதற்கு அவருக்கு அன்புதான் தேவைப்படுகிறது. அது இப்பொழுது அவருக்குக் கிடைக்கிறது.
இள மாணிக்கச் சிவப்பு நிறத்தில் தளதளவென்றிருக்கிற அங்கியை சேசு அணிந்திருக்கிறார். அது மிக மெல்லியதாக நெய்யப்பட்டுள்ளது. அங்கி, தரைவரை பாதம் மாத்திரம் தெரியும்படி தொங்குகிறது. அதன் கழுத்தைச் சுற்றியும் முன்பாகத்திலும் நீண்ட அகன்ற கைகளின் ஓரங்களிலும் அடிப்பாகத்தின் விளிம்பிலும் கிரேக்க, பூ வேலை செய்யாத ரேந்தைகள் தைக்கப்பட்டுள்ளன. அது இருண்ட நிறமாயிருக்கிறது. மிக நன்றாகச் செய்யப்பட்ட காலணிகளை அவர் அணிந்திருக்கிறார். வழக்கப்படி தோல் வார்களால் குதிங்காலைச் சுற்றிக் கட்டப்பட்டவையாக அவை இல்லை. அங்கியைச் செய்தது மாதாவாகவே இருக்க முடியும். ஏனென்றால் அல்பேயுஸ் மேரி அதை வியந்து பாராட்டுகிறாள்.
சேசுவின் இளம் பொன் முடி ஏற்கெனவே அவர் குழந்தையாயிருந்தபோது இருந்ததைவிட கருமை கொண்டிருக் கிறது. முடி செங்கோதுமை நிறத்தில் சுருள் சுருளாக காதுவரை தொங்குகிறது. அது அவருடைய பாலப்பருவ பஞ்சு போன்ற தன்மையாயில்லை. அவருடைய முதிர் மனித உருவத்தின் அலைபோன்று நீண்டு தோளில் பெரிய சுருளாய்ப் புரண்டு தொங்கவுமில்லை. ஆயினும் பிந்தியதை இது தன் நிறத்திலும் வடிவிலும் ஒத்திருக்கிறது.
மாதா சேசுவின் இடது கரத்தைத் தன் வலது கரத்தால் பிடித்துத் தூக்கியபடி: “இதோ எங்கள் மகன்!” என்கிறார்கள். இது அவர்கள் எல்லாருக்கும் சேசுவை அறிமுகப்படுத்துவதுபோலும், நீதிமானாகிய சூசையப்பரை சேசுவின் தந்தையென்று நிச்சயிப்பது போலும் உள்ளது. சூசையப்பர் புன்னகைத்தபடி நிற்கிறார். மேலும் மாதா சூசையப்பரைப் பார்த்து: “நாம் ஜெருசலேமுக்குப் போகுமுன் சேசுவை ஆசீர்வதியுங்கள். அவருடைய வாழ்வின் முதற்படியில் எந்த சடங்கு ரீதியான ஆசீரும் அளிக்கப்படவில்லை. ஏனென்றால் அவர் பாடசாலைக்குச் செல்லத் தேவையில்லாதிருந்தது. ஆனால் இப்பொழுது அவர் சுய பொறுப்பு வயது அடைந்துள்ளதை வெளியரங்கமாக்கும்படி தேவாலயத்திற்குப் போவதால் அவரை ஆசீர்வதித்தனுப்புங்கள். அவருடன் என்னையும் ஆசீர்வதியுங்கள். (பின் நா தளதளக்க) உங்கள் ஆசீர்வாதம் அவருக்குத் திடனையும், அவரிடமிருந்து கொஞ்சம் அதிகம் என்னைப் பிரித்துக் கொள்ள எனக்குப் பலத்தையும் கொடுக்கும்...” என்று சொல்கிறார்கள்.
அதற்கு அர்ச். சூசையப்பர்: “மரியா, சேசு எப்போதும் உங்களுடையவராகவே இருப்பார். இந்த சடங்கு நம் ஒருவர்க் கொருவரின் உறவைப் பாதிக்காது. நமது இவ்வளவு அருமையான மகனை உங்களுடன் நான் பங்குபோட வரமாட்டேன். என் புனித பதியே! அவரை வாழ்வில் வழிநடத்த உங்களைப்போல் உரிமை பெற்றவர்கள் வேறு யாருமில்லை” என்கிறார்.
மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட திருமணவாளி யான மாமரி குனிந்து அர்ச். சூசையப்பரின் கரத்தை முத்தஞ் செய்கிறார்கள்.
தகைமையுடன் அதைப் பெற்றுக் கொண்ட சூசையப்பர் அந்தக் கரத்தை உயர்த்தி மாதா தலைமீது வைத்துச் சொல்கிறார்: “அப்படியே உங்களை ஆசீர்வதிக்கிறேன். ஓ! ஆசீர்வதிக்கப் பட்டவளே! உங்களுடன் சேர்ந்து நான் சேசுவை ஆசீர்வதிக் கிறேன். என் ஒரே மகிழ்ச்சியாயிருக்கிற நீங்கள் இருவரும் என்னிடம் வாருங்கள். நீங்களே என் மகிமையும் என் வாழ்வின் சாரமுமாயிருக்கிறீர்கள்” என்று கூறும் சூசையப்பர் மகத்வமுடன் விளங்குகிறார். அவர் தம் கரங்களை விரித்து, பணிந்திருக்கிற இருவரின் புனித தலைகள் மீதும் அவருடைய உள்ளங்கைகள் கவிழ்ந்தபடி இருக்க வைத்து, ஆசீர்வாதத்தை உச்சரிக்கிறார்: “ஆண்டவர் உங்கள்மீது தம் கண்களைத் திருப்பி உங்களை ஆசீர்வதிப்பாராக! அவர் உங்கள் மீதிரங்கி உங்களுக்கு சமாதானமருள்வாராக! ஆண்டவர் உங்களுக்குத் தம் ஆசீரை அளிப்பாராக!” அதன்பின்: “நாம் இப்பொழுது புறப்படுவோம். பயணத்திற்கு அனுகூலமான நேரம் இது” என்கிறார்.
மாதா ஒரு இருண்ட மர நிற மேல் வஸ்திரத்தை சேசு மீது மிக அன்புடன் போர்த்துகிறார்கள்.
பின் அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டுப் போகிறார்கள். மற்ற திருயாத்திரைக்காரரும் அதே திசையில் செல்கிறார்கள். ஊருக்கு வெளியே வந்ததும் பெண்கள் ஆண்களிடமிருந்து பிரிகிறார்கள். குழந்தைகள் விருப்பமுள்ள பக்கத்தில் சேர்ந்து கொள்கிறார்கள். சேசு தம் தாயுடன் இருக்கிறார்.
திருயாத்ரீகர்கள் அழகிய நாட்டுப்புறத்தின் வழியே அருமையான இளவேனிற் காலத்தில் புறப்பட்டுச் செல்கிறார்கள். பெரும்பான்மை நேரமும் சங்கீதங்களைப் பாடுகிறார்கள். மேட்டு நிலங்களும் பயிர்களும் மரங்களும் இலைகளும் புதிதாயிருக்கின்றன. மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. மனிதர்கள் வயல்களில் பாடுவதையும் பறவைகள் மரக்கிளைகளில் அன்புக் கீதம் இசைப்பதையும் சாலைகளில் கேட்க முடிகிறது. தெளிந்த நீரோடைகளில் கரையோர மலர்கள் பிரதிபலிக்கின்றன. சின்ன ஆட்டுக்குட்டிகள் தாய் ஆடுகளின்அருகே துள்ளுகின்றன. சமாதானமும் மகிழ்ச்சியும் அந்த அரிய ஏப்ரல் வானத்தின் கீழ் காணப்படுகிறது.
காட்சி முடிகிறது.