இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயம்!

ஒரு நல்ல இருதயம் இல்லாமல் மனிதன் என்னவாக இருக்கிறான்? அவன் ஒரு சிறந்த ஓவியனாகவோ, ஒரு பெரும் கவிஞனாகவோ, ஒரு பெரும் சிற்பியாகவோ, ஒரு செல்வந்தனாகவோ, ஏதாவது ஒரு துறையில் பெரும் அறிவாளியாகவோ அவன் இருக்கலாம். ஆனால் அவன் ஒரு குளிர்ந்து போன, இரக்கமற்ற இருதயத்தைக் கொணடிருந்தால், அவன் நம் நேசத்திற்கு உரியவன் அல்ல. நாம் அவனுடைய புகழைப் பாடலாம், ஆனால் நாம் அவனில் நம்பிக்கை வைக்க விரும்ப மாட்டோம். மாமிசம் வெட்டுகிறவன் ஒரு ஆட்டு இருதயத்தைக் கையாள்வது போல, அவன் நம் காயப்பட்ட இருதயங்களைக் கையாளக் கூடும். ஒரு நண்பனிடம் நான் தேடுகிற அந்தக் கதகதப்பான, நட்புள்ள மென்மை அவனிடம் குறைவுபடுகிறது.

ஆனால், கடவுளுக்கு நன்றி, எந்த ஒரு நேசிக்கிறவனின் இருதயத்தையும் விட அதிக நேச கதகதப்புள்ளதும், ஒரு கவிஞனுடைய கற்பனாசக்தியுள்ள மனம் விளக்கக் கூடியதை விட அதிக நட்புள்ளதும், அனைவரிலும் இனிய ஒரு தாயின் இருதயத்தை விட மிக அதிகக் கனிவுள்ளதுமாகிய ஒரு இருதயம் தமக்குள் துடித்துக் கொண்டிருக்கிற ஒரு நண்பர் நமக்கு இருக்கிறார். நம் நண்பராகிய சேசுநாதர் வார்த்தைகளின் விளக்கத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்கிறார். சேசுவின் விவரிக்கப்பட முடியாத இருதயத்தை விளக்குவதற்கு வீணாக வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்த ஒரு இலத்தின் கவிஞன், வார்த்தைகளுக்கான தன் முயற்சியைக் கைவிட்டு விட்டு, “எக்ஸ்பெர்த்துஸ் பொத்தெஸ்த் க்ரேதெரே குயித் சித் யேசும் திலிஜெரே” - “அனுபவத்தினால் சேசுவை அறிந்திருக்கிறவன் மட்டுமே அவர் எவ்வளவு அற்புதமானவர், அவரை நேசிப்பது எவ்வளவு இனிமையானது என்பதை நம்ப முடியும்” என்றான்.

இருந்தாலும், அவருடைய இருதயம் வாக்குக்கெட்டாத அளவுக்கு மிகவும் நேசிக்கப்படத் தக்கதாகவும், கனிவுள்ளதாகவும் இருப்பதாகக் காண்பது பற்றி நாம் ஆச்சரியப்படக் கூடாது. அது கடவுளின் இருதயம், கடவுள் நேசமாகவே இருக்கிறார். கடவுளின் சாராம்சமே நேசமும், இரக்கமும்தான். தெய்வீகத்தின் முழுமை சேசுவின் இந்தச் சின்ன இருதயத்தில் தங்கியிருக்கிறது. கடவுளின் இரக்கம் மற்றும் நேசத்தின் எல்லா வளங்களும் இந்த நேசத்தின சூளையில் வாசம் செய்கின்றன. இந்த நேசத்தின் சூளையில் எத்தகைய ஒரு வலிமையுள்ள நேசம் நமக்காக எரிந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு கணமாவது நாம் அனுபவிக்கத் தக்கதாக, இந்த நேசச் சூளைக்கு நம்மை இட்டுச் செல்லும் இரகசிய வழியைக் கடவுளில்தான் நாம் காண முடியும். ஆனாலும் நேசம் மட்டுமல்ல, மாறாக ஒரு இரக்கமுள்ள நேசம், நம் பாவங்களையும், குறைபாடுகளையும் இந்தத் தீச்சூளைக்குள் நாம் வீசியெறிந்து விடுவோமானால், அவை எல்லாவற்றையும் சுட்டெரித்து விடுகிற ஒரு நேசம் அந்த இருதயத்தில் இருக்கிறது.

தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்கிற சேசுவின் திரு இருதயம்! அழகாகவும், நல்லதாகவும் இருக்கிற சகலமும், மனித மனம் சிந்திக்கக் கூடுமான சகலமும் இந்த நேச இருதயத்தில் இருக்கின்றது. மனிதரை இவ்வளவு அதிகமாக நேசித்திருக்கிற நம் சர்வேசுரனுடைய திரு இருதயத்தில் அடங்கியுள்ள அழகு மற்றும் நன்மைத்தனத்தின் சகல பொக்கிஷங்களையும் சிந்திப்பது எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. என் சர்வேசுரா, இங்கே இந்தத் தெய்வீகச் சூளையில், உமது சிருஷ்டிகளில் எல்லாம் மிகவும் அற்பனாயிருக்கிற எனக்காகவே, நேசத்தினுடைய, தெய்வீக நேசத்தினுடைய, அளவற்ற நேசத்தினுடைய கர்ச்சிக்கிற நெருப்பு சுடர் வீசிப் பிரகாசித்து எரியும் போது, நீர் என் மீது அக்கறை கொள்வதில்லை என்ற எண்ணம் எவ்வளவு பெரும் தேவ நிந்தையாயிருக்கிறது! நீர் என்னை நேசிக்கவில்லை என்னும் அந்த சபிக்கப்பட்ட எண்ணம் இனி ஒருபோதும் என் மனத்திற்குள் மறுபடியும் நுழையாதிருப்பதாக! நீர் என்னை நேசிக்கிறீர்! நேசத்தின், இரக்கமுள்ள நேசத்தின் ஓர் அளவற்ற நெருப்பைக் கொண்டு நீர் என்னை நேசிக்கிறீர். உமது அளவற்ற நேசத்திற்கும், இரக்கத்திற்கும் பிரதியாக எவ்வளவு குறைவான நேசத்தை நீர் பெற்றுக் கொள்கிறீர்!

நாம் அதைரியப்படுவதாக உணரும்போது, சேசுவில் நாம் அவநம்பிக்கை கொள்ளாதிருக்கும்படி, சேசுவின் திரு இருதயத்தின் இந்த தெய்வீக நேசத்தை ஆராய்ந்து பார்ப்பது நம் கடமையாக இருக்கிறது. இரக்கத்தின் அழகை நாம் அறிந்தோமென்றால் - தேவ இரக்கத்தைப் புரிந்து கொள்ள மட்டும் நம்மால் முடிந்ததென்றால், நாம் மகிழ்ச்சியுள்ள சிருஷ்டிகளாக இருப்போம். நம் இரட்சகரின் நேசத்தில் நாம் ஒரு பலவீனமான நம்பிக்கைளைக் கொண்டுள்ளோம், ஏனென்றால் அது இரக்கமுள்ள நேசம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். இரக்கம் என்பதற்கு கடந்த காலக் குற்றங்களை மன்னித்துவிடும் விருப்பம் என்பது மட்டும் பொருள் அல்ல, மாறாக, அது பரிதாபத்திற்குரிய பாவியின் மீது கொள்ளும் தயவுள்ள இரக்கம் என்றும் பொருள்படுகிறது. இந்தத் தயவுள்ள இரக்கமானது, அதியற்புதமான கொடைகளைக் கொண்டு மனந்திரும்பிய பாவியை வளப்படுத்தும்படி சேசுவின் நேச இருதயத்தை வற்புறுத்துகிறது. இந்தக் கொடைகளில் எல்லாம் பெரிய கொடை, ஒரு நட்பின் நெருக்கமான பந்தனத்தின் புதுப்பித்தல் ஆகும். இந்த நட்பு மணவாளனுக்கும், மணவாளிக்கும் இடையில் நிலவும் அன்பின் அளவுக்கு ஆசைப் பற்றுதல் உள்ளதாக இருக்கிறது. இப்போது, சேசுநாதரில் உள்ள இத்தகைய நன்மைத்தனத்தைப் பற்றிய அறிவு நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று உன்னால் காண முடிகிறது. அவரை அறிவதும், அவரை நேசிப்பதும், அவரில் நம்பிக்கை வைப்பதும் நம் கடமையாக இருக்கிறது.


தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!