இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. எனினும் மண்ணில் தோன்றிய மாந்தருள் இச்சிறந்த செல்வத்தை அடைந்தோர் யார்? ஆதாம், ஏவை செய்த பாவத்தின் விளைவாக மனிதனோடு பிறக்கும் தேவ சாபங்களுள் வியாதியும் ஒன்றாகும். 

குழந்தையாக மண்ணில் தோன்றும் மனிதனை நிழல் போலத் தொடரும் வியாதியும், வருத்தமும், பசியும், பிணியும் அவன் கல்லறை சேரும்பொழுதுதான் அவனை விட்டு மறைகின்றன. நோயற்ற ஒரு சிலரும் ஒருநாளின்றி ஒருநாள் நோயை ருசிபார்த்தே தீருகின்றனர். நாகரீகமும் விஞ்ஞானமும் வளர வளர புற்றீசல்கள் போல் புதுப்புது நோய்களும் தோன்றுகின்றன. நூதன சிகிச்சை முறைகளும், மருந்து வகைகளும் கையில் இருக்கும் இக்காலத்தில் கூட, கொடிய நோய்வாய்ப்பட்டு மரிப்பவர் அநேகர்.

இந்நிலையில் உண்மைக் கடவுளை வழிபட்டு மரணத்துக்குப் பின் நித்திய ஜீவியத்தை எதிர்பார்ப்பவனுக் கும், உலகமே சதமென்று எண்ணி தனக்கு ஓர் அழியா ஆத்துமம் உண்டென்பதை மறந்து வாழ்பவனுக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. துன்பமும், வியாதியும் கடவுளின் அன்புக் கரங்களிலிருந்து வரும் சிறந்த அன்புக் கொடைகளென்று கருதி அவற்றைப் பொறுமையுடன் சகித்து அழியாப் புண்ணியங்களைச் சம்பாதிக்கிறான் முன்னவன். இவ்விரகசியத்தை அறியாதவனோ கடவுளைச் சபித்தும், தேவ தூஷணம் கக்கியும் தனது வாழ்நாளையே பாழாக்குகிறான். 

முன்னவன் வியாதியிலும், துன்பத்திலும் இன்பத்தைக் காண, பின்னவன் துன்பத்தையும் துயரத்தையுமே காண்கிறான். தீராத நோயிலும் கொடூர வியாதியிலும் மறுவுலக ஜீவியத்தில் ஆத்துமத்தை அலங்கரிக்கும் திரவியங்களைத் திரட்டும் வழியை, மண்ணைப் பொன்னாக்கும் இரசவாத வித்தையை அறிந்த நமது பாக்கியமே பாக்கியம்.

நோயைத் தீர்ப்பது மருந்து; என்ன வியாதியென்று கண்டு அதற்கேற்ற சிகிச்சை செய்பவன் வைத்தியன். ஒரு சில வியாதிகள் வைத்தியனின் உதவியின்றிக் குணப் படினும், பெரும்பாலானவை கைதேர்ந்த வைத்தியரின் சிகிச்சையால் மட்டுமே குணப்படுகின்றன. வைத்தியரி லெல்லாம் கைதேர்ந்த வைத்தியர் கடவுள். அவர் அறியாத வியாதியும், அவரால் குணப்படாத நோயும் இல்லை என்பது திண்ணம். கணக்கனுக்கு மிஞ்சின கணக்குமுண்டோ? 

மனிதாவதாரமெடுத்த சேசுநாதரோ, கடவுளும் மனிதனுமாம். தமது தெய்வீக வல்லமையைக் கொண்டு அவர் குணப்படுத்தின நோய்களும், சுகப்படுத்தின வியாதிகளும் எண்ணற்றன. பிறவிக் குருடருக்குப் பார்வையும், செவிடருக்குக் கேள்வியும், ஊமைகளுக்குப் பேச்சும், குஷ்டரோகிகளுக்குப் பூரண சுகமும் அளித்தவர் அவர். சுவிசேஷத்தில் இதற்குப் பல சான்றுகள் காண்கிறோம். அவர் செல்லும் பாதைகளில் நின்று, “தாவீதின் குமாரரே! எங்கள் மீது கருணை கூர்ந் தருளும்” என்று கூவி அழைத்தோரும் அவருடைய இரக்கத்தால் குணமடைந்தனரன்றோ? இன்றும் “சேசுவே” என்று அழைத்து அற்புத குணமடைவோர் ஒரு சிலரோ?

சேசுநாதரின் வழியைப் பின்பற்றி வியாதிகளை அற்புதமாகக் குணப்படுத்துபவர்கள் நம் மாதா. கடவுளிடமிருந்து மனிதருக்குக் கொடுக்கப்படும் தேவ வரங்களும், கொடைகளும் தேவதாய் வழியாகவே கொடுக்கப்படுகின்றன என்று மேலே கூறியுள்ளோம் “தேவ வரப்பிரசாதத்தின் மாதா” என்ற அடைமொழியே இதைத் தெளிவாகக் காட்டுகிறது. 

ஆத்தும நோயை அகற்றவும், ஆத்துமத்தை அலங்கரிக்கவும் அவசியமான தேவ வரங்களைப் பொழியும் அன்னையால் சரீர நோய்களைத் தீர்த்து தேக சுகமளிப்பது இயலாததோ? குழந்தைக்கு உற்ற நோயைத் தனக்கு உற்ற நோயாகப் பாவித்து, பசி நோக்காது, கண் துஞ்சாது, பட்டினியிருந்து, பத்தியம் பிடித்துத் தன்னையே மறந்து தன் குழந்தையின் நோயைத் தீர்க்கத் தேடும் தாயினும் மிக்க அன்புடைய தாயன்றோ நமது தேவ அன்னை? வியாதியின் வருத்தங்களும், நோயின் கொடுமைகளும் இத்தன்மையன என்றறிந்த அன்னை, வியாதிக்காரரின் கூக்குரலைக் கேளாதிருத்தல் எங்ஙனம்?

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமளிப்பவர்கள் தேவமாதா. தான் தீர்த்த நோய்களின் காரணமாகவே இச் சிறப்புப் பெயரை அவர்கள் அடைந்துள்ளார்கள். கைதேர்ந்த வைத்திய நிபுணர்களாலும் கைவிடப்பட்ட கொடிய வியாதிகளையும் யாதொரு மூலிகையின் உதவி யின்றி அற்புதமாகச் குணப்படுத்துபவர்கள் அவர்கள். இதன் காரணமாகவே “ஆரோக்கிய மாதா” என்னும் பெயரால் அவர்கள்தம் மைந்தர் அவர்களை அழைக்கின்றனர். மனிதரால் கைவிடப்பட்டு, வருடக்கணக்காக பாயும் படுக்கையுமாகக் கிடந்த தனவந்தர் பலர் கடைசியில் ஆரோக்கிய மாதாவைச் சரணடைந்து சுகமடைய, அவர்கள் அன்னைக்குத் தங்கள் நன்றியைக் காட்ட அன்னையின் பெயரால் ஆலயங்கள் எழுப்பியுள்ளனர். 

ஆரோக்கிய மாதாவின் பெயர் கொண்ட ஆலயங்கள் அவனியெங்கும் பரந்து கிடக்கின்றன. நமது நாட்டில் தென்னிந்தியாவில் வேளாங்கண்ணியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தை நம்மில் அநேகர் தரிசித்துள்ளோம். அன்னையின் ஆதரவையண்டி, இவ்வாலயங்களுக்கு யாத்திரை செல்லும் நோயாளிகள், நம்மைக் கண்டுபாவித்து, நம் அன்னையின் சலுகையைத் தேடும் பிற மத நோயாளிகளின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது நாமறிந்ததே. சரீர நோயைப் போக்குவதின் வழியாக ஆத்தும இருளை அகற்றி அனைவரையும் ஆண்டவர் பாதம் சேர்க்கவே மாதா அவர் பிணிகளையும் அகற்றுகிறார்கள். மேலும் தேவதாய் நமக்கு மட்டுமன்றி உலகோரனைவருக்கும் தாயன்றோ?

மேல்நாட்டிலுள்ள லூர்து நகரைப் பற்றிக் கேள்விப்படாதார் யார்? லூர்தன்னை அங்கு அனுதினமும் செய்யும் புதுமைகளின் நறுமணம் உலகெங்கும் பரவியுள்ள தென்றால் மிகையாகாது. அமலோற்பவ மாதாவின் வல்லமையில் பூரண நம்பிக்கையுடன் அவ்விடம் செல் லும் நோயாளிகள், பிறவிப் பிணிகளும், தீராத நோய்களும் அற்புதமாகக் குணமாக்கப்பட்டே நாடு திரும்புகின்றனர். “உமது அடைக்கலமாக ஓடி வந்து உமது உதவியை நாடி னவர் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை” என்று அன்னையின் தாசராகிய அர்ச். பெர்நார்து உரைத்திருப்பது பொய்யன்று. 

“பரலோகத்திலும், பூலோகத்திலும் சகல வல்லமையும் சர்வேசுரன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். நம் ஜீவியமும், மரணமும் யாவும் அவர்களுடைய கரங்களில் இருக்கின்றன” என்று அதே மாதா பக்தர் பெர்நார்து கூறி யதை நினைத்து, தேவனிடம் நமக்காக மன்றாட மாமரி அன்னையை வேண்டுவோம். நமது சரீரப் பிணிகளை நீக்குவதோடு ஆத்தும நோய்களையும் நீக்குமாறு அன்னையைக் கெஞ்சிக் கேட்போம். 

நாம் விரும்பிக் கேட்கும் சரீர சுகம், ஆத்தும சுகத்திற்குத் தீங்கு விளைவிக்குமானால், மாதா நமக்கு சரீர சுகமளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமையாகும். குழந்தைக்கு நன்மையானது எது, தின்மை யானது எது என்று தாய் அறியாளோ? நமது நன்மையைக் கோரி ஒரு சமயம் நமது நோயைத் தீர்க்காவிடினும், அந்நோயை அமரிக்கையோடு ஏற்று, பொறுமையோடு சகித்து, நமது நித்திய சம்பாவனையை அதிகரிக்கும் வரத்தைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது உறுதி.

“அம்மா, ஆரோக்கிய மாதாவே! உம்மீது மிக்க நம்பிக்கை வைத்து, உம்மிடம் ஒடிவரும் உம் தாசரின் துயர் நீக்கத் தீவிரித்து வாரும். பாவிகள் எம் பிணி நீங்கிடப் பரமனை வேண்டுவீர். ஜெருசலேம் நகரத்து ஏரி சில சமயங்களில் மாத்திரமே வியாதியைப் போக்கிற்று; தேவதூதன் அவ்வேரித் தண்ணீரைக் கலக்கினவுடன் அதில் முதன்முதல் இறங்கினவனே சுகமடைந்தான். நீரோ, உம்மைச் சரணடைந்தோர் யாவர் பிணியையும் நீக்கிச் சுகமளிக்கும் வல்லமை கொண்டுள்ளீர். வியாதியும், வருத்தமும் நிறைந்த இவ்வுலகில் நோய்வாய்ப்பட்டுக் கண்ணீர் வடிக்கும் கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வரம் உமக்களித்த உமது திருக்குமாரனைப் புகழ்கிறோம்! அப்புவியோரின் பாக்கியமே! எம் உடற்பிணி, ஆன்மப் பிணி யாவையும் போக்கி எம்மை என்றும் ஆதரித்திடுவீர்.” 


வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!