இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - தோமையார் மீண்டும் சிறையில்

அப்போஸ்தலரைச் சிறைக்கூடம் கொண்டு போகையில் அவரைப் பின்பற்றி விஜயனும், பாவுல் சீத்தாராமனும் போனார்கள். அவரோடு அங்கேயே தங்கினர். அவரது திருவடிக்கு அருகில் உட்கார்ந்து அவரது போதனைகளைக் கேட்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். அவர் போதனைகளைக் கேட்டு தோமையாரை அரசன் விரைவில் கொன்றுவிடக் கூடுமென்னும் எண்ணம் அவரை விட்டுப் பிரியாதிருக்க இவ்விருவரையும் தூண்டிற்று. அவரும் இவர்களுக்கும் அங்கு வந்துற்ற பிறருக்கும் ஏனோபதேசம் சலியாது தெளிவாக உரைத்து வந்தார்.

ஒரு நாள் பெருந்திரளான கிறிஸ்தவர்கள், காவற்காரர்களை வசப்படுத்திக் கொண்டு சிறைச்சாலையின் உள்ளே அப்போஸ்தலரிடம் வந்தார்கள். அவர்களை மனம் உவந்து ஆசீர்வதித்து, "மக்களே! நான் போதிக்கும் கடவுளையே 'விசுவாசியுங்கள். நான் உங்களுக்குத் தெரியப்படுத்திய இயேசுவையே நம்பியிருங்கள். அண்டினோரை ஆதரிப்பவரும், சேவிப்போரைக் காப்பவரும், கவலைப்படுவோருக்கு ஆறுதலும், துன்பப்படுவோருக்குத் தேறுதலும் அவரே. அவரையன்றி எவரும் மீட்பு அளிக்க முடியாது. அவரே உண்மை, அவரே வானக வீட்டின் வழி. அவரே அனைவருக்கும் ஒரே அடைக்கலம். ஆதலால் அவரையே விசுவசித்து நம்பி வழிபடுங்கள் ஆராதியுங்கள். நான் அவரை அக்களிப்புடன் வணங்குகிறேன். ஏனெனில் அவரிடம் போக எனக்கு மட்டற்ற ஆவல். நான் போகும் காலமும் நெருங்கி வருகிறது" என்று உரைத்தார்.

அதற்குப்பின் தம் கண்களை வானத்திற்கு உயர்த்தி ' "என் தேவனே! என் ஆண்டவரே! என் ஏக நம்பிக்கையே! உமது திருவுளப்படி ஆகக்கடவது. என் கடைசிக் காலம் வரையில் என்னுடன் இருப்பீராக இந்நாட்டில் திராட்சைக் கொடியை நாட்டினேன். அது ஆழ்ந்து வேரூன்றி, கிளைகள் பல பக்கமும் விட்டு ஓங்கி வளர்ந்து, ஏராளமான கனிகள் கொடுப்பதாக! இந்த மக்கள் உம்மிடம் வரத் தகுதியுள்ளவர்களாகட்டும். கிறிஸ்துவான தேவனே! நான் தேடிய இவர்களுடைய ஆத்துமங்கள் தேவரீருக்கு விருப்பம் உடையவையாய் இருக்கட்டும் உம் கற்பனைகளை நிறைவேற்றினேன். உமது திருவுளப்படி இதுவரை நான் பின் வாங்கவில்லை. ஆகையால் வெற்றியின் முடியைத் தேவரீர் எனக்கு அளித்தருள் வீராக!" என்று உருக்கத்துடன் செபித்தார்.

அப்போஸ்தலரது முடிவு நெருங்கிவிட்டது என்று அரசகுமாரன் விஜயன் அறிந்ததும், அவரைப் பார்த்து, "சுவாமி! கிறிஸ்துவின் அப்போஸ்தலரே! நான் மெய்யான சர்வேசுரனின் பிள்ளையாகும்படி எனக்கு ஞானஸ்நானம் கொடுத் தருளும். எனக்கு இன்று இருபத்தோராவது வயது நிறைவாயிற்று. நான் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளாகின்றன. இதுவரையில் குழந்தைகளில்லை. என் மனைவி மீனாட்சி நோயாளி; திமிர்வாதத்தால் வாதனைப்படுகிறாள். அவளுக்கு நடக்க முடிந்தால் தேவரீரைக் கண்டு உம் வார்த்தைகளைக் கேட்டு விசுவசிப்பாள். இங்கு உமது திருவடியிலே விழுந்து கிடப்பாள். உண்மையாகவே இரட்சணிய வழியைப் பின்பற்றுவாள், ஆனால் அவள் இங்கு வர முடியாத நிலையில் இருக்கிறாள். ஆகையால், தயவுகூர்ந்து எனது இல்லத்திற்கு எழுந்தருள்வீராக! என் நிர்ப்பாக்கிய மனைவியின் பேரில் இரங்கி அவளுக்கு ஆறுதல் அளியும். அவள் சரீர குணம் அடையா விடினும் ஆத்தும் நலமாவது அடைவாள் என்பது திண்ணம். ஆகவே, எனது இல்லத்திற்கு எழுந்தருளும் சுவாமி!" என்று கெஞ்சி மன்றாடினான். 

"என் மகனே! உன்னிடம் உயிருள்ள விசுவாசம் இருப்பின், கடவுளின் அற்புதச் செயல்களைக் கண்கூடாகப் பார்ப்பாய். தம் அடியார்களை அவர் கைவிடார். அவர்கள் மேல் இரங்குவார்" என்றுரைத்தார் தோமையார். - இவர் கள் பேசிக் கொண்டு இருக்கையில் சிறைக்கூட வாசலுக்குச் சிலர் வந்தனர். திருப்பதி, மகு தானி நாரி ஆகிய மூவருமே அவர்கள். காவற்காரருக்குக் கைக்கூலி கொடுக்கவே வாசற்கதவுகள் திறக்கப்பட்டன. உட்சென்று, விஜயன், பாவுல் சீத்தாராமன், அவன் மனைவி, மகளோடு சேர்ந்து அப்போஸ்தலரின் போதனைகளைச் செவிமடுத்துக் கேட்டனர். 

''அரசன் மறியலில் வைத்திருந்த அறையினின்று உங்களை வெளிப்படுத்தினது யார்? பின்னும் இங்கு வரக் கதவைத் திறந்தது யார்.'' என்று வினவினார் தோமையார். ''சுவாமி! தேவரீர் தாமே எங்களை வெளிப்படுத்தி, உம்மோடு கூட வரக் கற்பித்தீர். உம்மைப் பின்பற்றினோம். சிறைச்சாலைக்கு வந்ததும் எங்களை விட்டுவிட்டு உள்ளே புகுந்து விட்டீர். அதற்குப்பின் காவற்காரருக்குப் பணம் கொடுத்து நாங்கள் உள்ளே வந்தோம். இதோ உம் முன் நிற்கின்றோம். சுவாமி! ஒரு வேண்டுகோள். அரசனின் கோபம் தணியும்வரை தேவரீரை வேறிடத்தில் ஒளித்துவைக்க எண்ணியிருக்கின்றோம். தேவரீர் அதற்கு இணங்கவேண்டும்'' என்று திருப்பதி எல்லார் பேராலும் கேட்டாள். 

அதற்குத் தோமையார், ''மகளே! அதைப்பற்றிப் பிறகு பார்க்கலாம். இப்போது நீ அடைபட்ட விவரத்தைக் கூறு" என்றார். அரசி பின்வருமாறு விவரித்தாள். ''சுவாமி! தேவரீர் எங்களை விட்டுப்போய் ஒரு மணி நேரத்திற்குப்பின் அரசர் நான் இருக்குமிடம் வந்தார். சினந்தார்; சீறி விழுந்தார். 'காதலி! அம் மாந்திரீகன் உன்னை மருந்திட்டுப் பிடிக்கவில்லையென்று எண்ணுகிறேன். ஏனெனில், நான் கேள்விப்படுகிறது உண்மையாயின், ஏதோ தண்ணீரும் எண்ணெயும் அப்பமும் இரசமும் கொடுத்து மயக்குகிறானாம். ஆனால் உனக்கு இதுவரை அவன் அப்படிச் செய்யவில்லை என்றும், நீ இன்னும் அவன் மாயவலையில் சிக்கவில்லை என்றும் நம்புகிறேன். ஆதலால் வெள்ளம் வருமுன் அணை கட்டுவது அவசியம். உன் பேதமையை விட்டுவிடு. நான் உன்னை வாதிக்கமாட்டேன். முன்போலவே நேசிப்பேன்' என்றார். 

நான் அதற்கு, "அரசே! என் சரீரத்திற்குத் தீங்கிழைக்க உம்மால் முடியும். ஆனால் என் ஆத்துமத்தை அபகரிப்பதோ இயலாத காரியம். உமக்காக அந்த விலைமதிக்கப்படாத மாணிக்கத்தை இழக்கமாட்டேன்'' என்றேன். இதைக் கேட்ட மன்னன் மனங்கலங்கிக் கோபாவேசத்துடன் மறு வார்த்தை பேசாது, என்னை இருட்டறையில் பூட்டிவைத்தார். என் தமையன் கிருஷ்ணனின் மனைவி மகுதானியையும், நாரியையும் அங்குக் கொண்டு வந்துவிட்டார். எங்கள் ஒவ்வொருவர் இருதயமும் துடித்தது. ஆனால் நாங்கள் பயப்படவில்லை. தேவ ஒளி ஒளிர்ந்து கொண்டே இருந்தது. தேவரீரும் எங்களை மறக்கவில்லை. எங்கள் மத்தியில் தோன்றினீர். எங்களை இங்கு அழைத்துவந்தீர். சுவாமி! இதோ உமது சமூகத்துக்கு வந்து விட்டோம்'' என்பதே. தோமையார் சற்றே மெளனமாயிருந்து, "இயேசுவே! உமக்கு என்றென்றும் துதியும் தோத்திரமும் உண்டாவதாக" என்று கடவுளைப் போற்றினார்,

அவர் பேசிக்கொண்டிருக்கையில் காவற்காரன் உள்ளே வந்து, "இங்கிருக்கும் விளக்கை அவித்து விடப்போகிறோம். இல்லையேல் உங்களை யாராகிலும் பார்த்து நாங்களே விட்டோமென்று அரசனுக்கு அறிவித்துவிடுவார்கள். அது எங்களுக்குக் கேடாய் முடியும்" என்று விளக்கை அவித்து விட்டுச் சென்றனன். தோமையார் அவர்கள் போன பின், "ஆண்டவரே! எங்களுக்கு வெளிச்சம் கொடும். இருளின் மக்கள் எங்களை அந்தகாரத்தில் விட்டு அகன்றனர். உம் அடியார்களுக்கு நித்திய ஒளியைக் கொடும். அதை எவரும் அவிக்கவும் முடியாது. எடுத்துப் போகவும் இயலாது!" என்று வேண்டினார். உடனே பகலைப்போல் சிறைக் கூடத்தில் ஒளி உண்டாயிற்று. அவர்கள் எல்லாரும் ஏகோபித்து இறைவனுக்குத் தோத்திரம் செய்தார்கள். காவற்காரரோ கிடுகிடுத்து அயர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.