இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மேலும் மூன்றாண்டு மறைவு - முஞ்ஞானோ பங்குக் குரு

மேற்கூறியவாறு தன் கல்லறையில் பொறிக்கப்பட்ட சின்னங்களாலும், எழுத்துக்களாலும், தன் இரத்தத்தில் நவ ரத்தினங்களின் ஒளி துலங்கப்பெற்ற மகிமையாலும் அர்ச். பிலோமினம்மாள் நன்கு அறியப்பட்டிருந்தாள். ஆயினும் உடனே அவளை விசுவாசிகளின் வணக்கத்திற்குத் திருச்சபை விடவில்லை. மேலும் மூன்று ஆண்டுகள் அவள் மறைந்தே வாழ்ந்தாள். கத்தோலிக்கத் திருச்சபை தன் தெய்வீக விவேகத்தினாலேயே செயல்படுகிறது. எல்லா வகை ஐயங்களும் தீர்க்கப்பட வேண்டும். அதற்குக் காலம் தேவைப்படும். ஆகவே உரோமையில் அடையாளம் காணப்பெறாத வேதசாட்சிகளின் அருளிக்கங்களைப் பத்திரப்படுத்துகிற இடத்தில் அர்ச். பிலோமினம்மாள் 1805 வரை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டாள். 

1805-ல் இத்தாலி நாட்டின் முஞ்ஞானோ ஊரின் பங்குக்குரு பக்தியுள்ள சங். லூஸியாவின் பிரான்சிஸ்கோ என்பவர் தன் தனிச் சிற்றாலயத்திற்கு, பெயர் தெரிந்த ஒரு கன்னி வேதசாட்சியின் எலும்புகள் வேண்டும் என மிகவும் விரும்பினார். அதற்குக் காரணம் இருந்தது. அவரது பங்கு இத்தாலிய கிராமம் முஞ்ஞானோ. அந்தப் பங்கின் இளைஞர்கள் விசுவாசமற்றவர்களாய் வாழ்வதைக் கண்ட அவர் மிகவும் வருந்தினார். அவர்களுக்கு வீரமுள்ள விசுவாசத்தை ஊட்ட ஆசித்தார். பிரான்ஸ் நாட்டின் புரட்சிகரமான கருத்துக்கள் விரைவில் தன் பங்கின் இளைஞர்களைத் தாக்கும் என அஞ்சினார். அதற்கு மாற்றாக ஒரு வேதசாட்சி அவ்வூரில் இருக்க வேண்டுமென விரும்பினார். 

மேலும் சங். பிரான்ஸிஸ்கோ சுவாமியார், ஒரு பெயர் தெரிந்த கன்னி வேதசாட்சி தனக்குக் கிடைக்க வேண்டு மென விரும்பிய காரணம், தன் பங்கிலுள்ள இளம் வயதுப் பெண்களுக்கு அந்த அர்ச்சியசிஷ்டவள் பெரிய முன் மாதிரிகையாயிருப்பாள் என அவர் நம்பியதுதான். அதன் வழியாக பெண்கள் நல்ல கற்பொழுக்கமாயிருந்தால் எல்லாக் குடும்பங்களுமே நல்லவையாக ஆகும் என அவர் நம்பினார். அவரது மேற்றிராணியார் வந். பர்தலோமேயு ஆண்டகை அவருடைய இவ்விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இருவரும் உரோமைக்கு வந்தார்கள். இனம் தெரியாத அர்ச்சியசிஷ்டவர்களின் சரீரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சங். பிரான்ஸிஸ்கோ அழைத்துச் செல்லப்பட்டார். ஒவ்வொரு சரீரமாக அவர் கடந்து செல்லும்போது, அர்ச். பிலோமினம்மாளின் எலும்புகள் அடங்கிய பெட்டியருகே வரவும் ஒரு விவரிக்க முடியாத வேகமான ஆர்வ உணர்வு அவரைப் பற்றிக் கொண்டது. அவர் நின்று அந்த வேதசாட்சியே தனக்கு வேண்டும் எனத் தீர்மானித்தார். அர்ச்சியசிஷ்டவர்களின் சரீரங்கள் இருந்த சாலைக் காப்பாளரும் இவரது ஆர்வ மிகுதியைக் கண்டு அந்த சரீரத்தை அவருக்குக் கொடுப்பதாகக் கூறினார். பேரானந்தம் கொண்டார் பிரான்ஸிஸ்கோ சுவாமி. ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கடந்தன. அர்ச்சியசிஷ்டவர்களின் சரீரங்களுக்குப் பொறுப்பாளராயிருந்த வந். பொன்ஸாட்டி ஆண்டகை சங். பிரான் சிஸிஸ்கோவிடம் பெயர் அறியப்பட்ட அர்ச். பிலோமினம்மாளின் எலும்புகளை அவர் போன்ற தனிக் குருக்களுக்குக் கொடுக்க முடியாது. அதற்குப் பதிலாக அங்கேயிருந்த பெயர் அறியப்படாத 12 வேதசாட்சிகளில் யாரையாவது ஒருவரை அவர் விருப்பப்படி கொண்டு செல்லலாம் என்று கூறிவிட்டார். இந்த மறுப்பு சங். பிரான்சிஸ்கோவை மிகவும் பாதித்தது. இதுபற்றிப் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கவே அவர் கடின வியாதியில் விழுந்தார். அவரால் எதுவும் உண்ணவோ பருகவோ கூடவில்லை. கடுங்காய்ச்சல் கண்டு அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அவருடைய மேற்றிராணியார் இதனால் பெருங் கவலையடைந்தார். யாருக்கும் என்ன செய்வதென்று தோன்றவில்லை. குருவானவரின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. 

ஒரு நாள் மாலையில் சங். பிரான்ஸிஸ்கோ ஒரு தேவ ஏவுதல் பெற்றவராய் அர்ச். பிலோமினம்மாளிடமே இவ்வாறு கூறினார்: “அர்ச். பிலோமினம்மாளே, இத்துன்பமான நேரத்தில் நான் உமக்கு வாக்களித்துச் சொல்கிறேன். உம்மையே என் விசேஷ பாதுகாவலியாக நான் ஏற்றுக்கொள்கிறேன். உம் எலும்புகள் எனக்குக் கிடைக்குமானால் உம்மை என் பங்கு முஞ்ஞானோவிற்கு என்னுடன் அன்போடு கொண்டு சென்று, உம்மை அங்கு மகிமையுடன் ஸ்தாபிப்பேன் என்று கூறினார். இதை உருக்கப் பற்றுதலுடன் ஆர்வத்தோடு அவர் கூறி முடியவும் அந்நேரமே அவர் பூரண குணமடைந்தார். அவர் நலமடைந்ததைக் கண்ட மேற்றிராணியார், வந். பர்தலோமேயு அது அர்ச். பிலோமினம்மாளின் புதுமையே என்று நிச்சயித்தார். அதற்குப் பின் சூழ்நிலையில் முழு மாற்றம் ஏற்பட்டது. நீக்க முடியாத தடைகள் நீங்கின. அர்ச். பிலோமினம்மாளின் அருளிக்கங்களை முழுவதும் - எலும்புகள், இரத்தம் அனைத்துடனும் சங். பிரான்ஸிஸ்கோவுக்கே கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. புதுமையாகக் குணம் பெற்ற பிரான்ஸிஸ்கோ சுவாமி புதுமையாகவே அர்ச். பிலோனம்மாளின் அருளிக்கங்களையும் பெற்றார். அந்நேரமுதல் அர்ச். பிலோமினம்மாளின் புதுமைகள் எங்கும் நிகழத் தொடங்கின. நோயாளிகள் குணமடைந்தனர். மரண ஆபத்திலிருந்தவர்கள் மறுபடியும் உடல் நலம் பெற்றார்கள். பாவிகள் மனந்திரும்பினார்கள். தீய மனமுடையவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். 

தீய மனம் படைத்து இந்த அர்ச்சியசிஷ்டவள் தரும் வரப்பிரசாதங்களையும் புறக்கணித்து மனந்திரும்ப மறுக்கிறவர்களைத் தண்டிப்பதென்பதும் அர்ச். பிலோமினம்மாளின் புதுமைகளுள் ஒன்றாக விளங்குகிறது என்பது இது வரையிலும் நாம் அறிந்திராத ஆச்சரியமாயிருக்கிறது. இதில் அர்ச். பிலோமினம்மாள் சர்வேசுரனுடைய நேரடியான கருவியாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவளுடைய இரத்தத்தில் நிகழும் புதுமைகளுள் ஒன்றாக (நாம் பின்னால் காண்பது போல்) இது விளங்குகிறது.