இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - சாவுக்குத் தீர்ப்பு

காவற்காரர் மஹாதேவனிடம் வந்து, “அரசே, இந்த மாந்திரிகனைக் காவல் செய்ய எங்களால் இயலாது. வேறு எந்த இடத்திற்காகிலும் அனுப்பிவிடும். தன் மந்திர பலத்தினால் தான் நினைக்கிறது போல் வெளியே போகிறதும், உள்ளே வருகிறதுமாய் இருக்கின்றான் நாங்கள் பூட்டி வைத்த கதவுகள் தாமாகவே திறக்கின்றன. எங்களை அறியாமலே பலர் உள்ளே நுழைகின்றனர். அரசியும் மகு தானியும் கூட அங்கே போகிறார்கள். எங்களால் இனி காவல் செய்ய முடியாது" என்று முறையிட்டார்கள். 

அரசன் திவானை அழைத்து, "அவர்கள் சொல்வதைக் கேட்டனையா மந்திரி!'' என்றான். அதற்கு மந்திரி, " அண்ணலே! அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை. ஏனெனில், இவர்கள் சொல்வதைப்பற்றி ஒரு தரம் கேள்விப்பட்டதும், நானே சென்று, கதவுகளை அடைத்து முத்திரையிட்டு வந்தேன். அவை சற்றேனும் உடைபடாது அப்படியே இருக்கின்றன!'' என்று பதிலுரைத்தான். 

மந்திரியை நம்பிய அரசன், காவற்காரர்களைக் கோபித்து, “நீங்கள் சொல்வது சுத்தப் பொய். தைரியமற்ற கோழைகள் நீங்கள்'' என்றான். ஆனால் தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்று காவற்காரர்கள் அறிந்திருந்தபோதிலும் அரசனை எதிர்த்துப் பேசுவது எப்படி என்று அஞ்சி வாளா இருந்து விட்டார்கள். அடுத்த நாள் அரசன் கொலு மண்டபம் அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். மந்திரி பிரதானிகள் முதலிய பரிவாரங்கள் தத்தம் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அப்போஸ்தலர் கொண்டுவரப்பட்டார்.

அரசன் : நீ என் நாட்டிற்கு வந்த காரணமென்ன?

தோமை : மானிடருக்கு மீட்பின் வழியைக் காட்டவே இங்கு வந்தேன். மெய்யான கடவுளை எல்லாருக்கும் கற்பிக்கவே உமது நாட்டிற்கு வந்துள்ளேன்.

அர: நீ சொல்லும் மெய்யான கட வுள் யார்?

தோமை : பரலோக பூலோகங்களைப் படைத்தவரே உண்மையான கடவுள். அவரே என் தேவன்; அவரே உம் தேவனுமாம்.

இதைக் கேட்டுக் கண்டுபிடியாதவன் போல் இருந்தான். அவரைக் கொன்று விட அவன் முடிவு செய்துவிட்டான். ஆனால் அவர் மட்டில் இரக்கமுள்ள மக்கள் பெரும்பாலோர் இருந்தமையால் சற்று அஞ்சினான். அவ்விடத்தில் தீர்ப்பு சொல்லத் தயங்கினான். அவரை ஊருக்கு வெளியே கொண்டுபோகும் படி ஆணையிட்டான். எனவே அவரை அழைத்துப்போனார்கள். அரசனும் தனது பரிவாரத்துடன் பின் சென்றான். மக்கள் இல்லாத ஓர் இடத்தில் அவரை நிறுத்தி, மரணத் தீர்வையிட்டான். மலையின் உச்சியில் கொண்டுபோய் ஈட்டியால் குத்தி உயிரை மாய்த்துவிடக் கட்டளையிட்டான்.