காட்டுத்தனமான எருதுகளும், திவ்விய நற்கருணையும்!

இதோ! எங்களுக்கு முன் ஒரு புதிய காட்சி! நாங்கள் எங்கள் கண்களை தெற்குத் திசை நோக்கித் திருப்பியபோது, எங்கள் குழம்பிய கண்கள் பரிசுத்த பரம திவ்விய நற்கருணையைச் சந்தித்தன அந்த வயல் மறைந்து விட்டது. 

நாங்கள் ஒரு மிகப் பெரியதும், கலை நுணுக்கத்தோடு அலங்கரிக்கப்பட்டதுமான கோவிலில் இருந்தோம். அதன் பீடம் முழுவதும் எரியும் மெழுகுவர்த்திகளோடு உயிரோடு இருந்தது. திவ்விய நற்கருணைக்கு முன்பாக நாங்கள் ஆழ்ந்த ஆராதனையில் மூழ்கியிருந்தபோது, பல காட்டுமிராண்டித் தனமான எருதுகள், பயங்கரமான கொம்புகளோடு காட்சியில் தோன்றி, எங்கள் மீது பாய வீணாக முயன்றன. ஆனால் அவற்றால் எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியவில்லை. எனெனில் நாங்கள் திவ்விய நற்கருணைக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் உடனடியாக சேசுவின் திரு இருதய ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்கினோம். சற்று நேரத்திற்குப் பிறகு நாங்கள் திரும்பிப் பார்த்த போது, அந்த எருதுகள் அங்கிருந்து போய் விட்டிருந்ததை மட்டும் கண்டோம். நாங்கள் மீண்டும் பீடம் இருந்த திசையை நோக்கித் திரும்பினோம். இதோ! மெழுகுவர்த்திகள் மறைந்து போயிருந்தன. திவ்விய சற்பிரசாதமும் இப்போது ஸ்தாபித்து வைக்கப்பட்டிருக்கவில்லை; அந்த தேவாலயமும் கூட மறைந்து போயிருந்தது. “ஆனால் நாம் இப்போது எங்கிருக்கிறோம்?” என்று நாங்கள் ஒருவரையொருவர் விசாரித்தோம்.

நாங்கள் மீண்டும் அந்தப் பழைய வயலில் இருந்தோம்.

இப்போது அந்த எருது, நம் ஆத்துமத்தின் எதிரியும், நம்மை வெகுவாக வெறுப்பவனும், தொடர்ந்து நமக்குத் தீமை செய்ய முயன்றுகொண்டிருப்பவனுமாகிய பசாசுதான் என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். அந்த ஏழு கொம்புகள் ஏழு தலையான பாவங்களாகும். இந்த மிருகத்தின் கொம்புகளிலிருந்து, அதாவது பசாசின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி, எல்லாப் புண்ணியங்களுக்கும் அஸ்திவாரமாகிய தாழ்ச்சியை அனுசரிப் பதும், பலமுள்ளவர்களின் அப்பமாகிய திவ்விய நற்கருணையும் தான்.