இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பூமியின் மீது சேசுநாதர் வாழ்ந்த தரித்திர வாழ்வு!

செல்வங்கள், இன்பங்கள் மற்றும் உலக மகிமைகளைச் சொந்தமாகக் கொண்டிருப்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று உலகம் தன்னைப் பின்செல்வோருக்குக் கற்பிக்கிறது. ஆனால் கடவுளின் திருச்சுதன் மனிதனாக அவதரித்தபோது அவரால் இந்த வஞ்சக உலகம் தண்டனைத் தீர்ப்பிடப்பட்டது. ""இப்பொழுதே இவ்வுலகம் தீர்ப்புக்குள்ளாகிறது'' (அரு.12:31). இந்தத் தண்டனைத் தீர்ப்பு பெத்லகேமின் மாட்டுத் தொழுவத்தில் தொடங்கியது. சேசுநாதர் அங்கேதான் தரித்திரத்தில் பிறக்க விரும்பினார். தமது தரித்திரத்தின் வழியாக நம்மைச் செல்வந்தர்களாக்கவும், தமது தெய்வீக மாதிரிகையால் உலக உடைமைகளின் மீது நம் சகல பற்றுதல்களைப் பிடுங்கியெடுக்கவும் அவர் விரும்பினார்.

கடவுளின் திருச்சுதன் உலகில் பிறந்த நேரத்தில் பேரரசனின் ஆணை அமல் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் நியமமாக இருந்தது. அந்த ஆணையின்படி ஒவ்வொருவரும் தான் பிறந்த இடத்திற்குப் போய் அங்கே பெயரைப் பதிவு செய்ய வேண்டி யிருந்தது. இதன் காரணமாக, சூசையப்பர் தமது மனைவி மரியாயோடு செசாரின் கட்டளைப்படி தமது பெயரைப் பதிவு செய்வதற்காகப் பெத்லகேமுக்குச் சென்றார். இப்போது, மாமரியின் பிரசவ காலம் நெருங்கி வருகிறது. மாமரி, மற்ற வீடுகளிலிருந்தும், ஏழைகளுக்குரிய பொதுச் சத்திரத்திலிருந்தும் கூட, இடமில்லை என்று துரத்தப்பட்டு, அன்றிரவை ஒரு குகையில் கழிக்கவும், அன்றிரவு அந்தக் குகையில் பரலோக அரசர் பிறக்கவும் தேவ சித்தமாயிற்று. சேசுநாதர் நாசரேத்தில் பிறந்திருந்தாலும் இதே போன்ற ஒரு தரித்திர நிலையில்தான் பிறந்திருப்பார் என்பது உண்மைதான்; என்றாலும் நாசரேத்தில் அவருக்குக் குறைந்த பட்சம் ஈரமின்றிக் காய்ந்த ஓர் அறையும், கொஞ்சம் நெருப்பும், கதகதப்பான உடைகளும், அதிக வசதியான ஒரு தொட்டிலுமாவது இருந்திருக்கும். ஆனால் அவரோ இந்தக் குளிர் மிகுந்த குகையைத் தேர்ந்து கொண்டார். அங்கே அவருக்கு உஷ்ணம் தர நெருப்பு இல்லை; தொட்டிலுக்குப் பதிலாக ஒரு முன்னிட்டியைத் தம் முதல் உறக்கத்திற்கென அவர் தேர்ந்துகொண்டார், உடலில் குத்துகிற ஒரு சிறு வைக்கோல் படுக்கையும் அவருக்கு இருந்தது. அவர் இன்னும் அதிகம் துன்பப்பட அது உதவியாக இருந்தது!

நாம் பெத்லகேம் குகைக்குள் நுழைந்து பார்ப்போம்; ஆயினும் விசுவாசத்தோடு அங்கே நுழைவோமாக. விசுவாசமின்றி அதற்குள் நுழைவோமானால், நம்மில் பரிதாப உணர்வைத் தூண்டும் ஒரு பச்சிளம் குழந்தையை மட்டும்தான் நாம் பார்ப்போம். மிக அழகான ர், ஆனால் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிற, தாம் படுத்திருக்கிற படுக்கையின் வைக்கோல் குத்துவதால் அழுது கொண்டிருக்கிற ஒரு குழந்தை. ஆனால் நாம் விசுவாசத்தோடு அதனுள் நுழைந்து, இந்தக் குழந்தை கடவுளின் திருச்சுதன் என்பதையும், அவர் நம்மீது கொண்ட அன்பிற்காக பூமிக்கு இறங்கி வந்தவர் என்பதையும், நம் பாவங்களுக்குரிய பரிகாரக் கடனைச் செலுத்துவதற்காக மிக அதிகமாகத் துன்பப்பட்டவர் என்பதையும் நாம் சிந்திப்போம் என்றால், அவருக்கு நாம் நன்றி கூறாமலும், அவரை நேசிக்காமலும் இருப்பது நமக்கு எப்படி சாத்தியமாகும்?

ஓ என் இனிய குழந்தாய், நீர் எனக்காக எவ்வளவு அதிகமாகத் துன்பப்பட்டீர் என்பதை அறிந்தும், நான் உமக்கு மிக நன்றியற்றவனாகவும், மிக அடிக்கடி உம்மை நோகச் செய்யவும் என்னால் முடிந்திருக்கிறது என்பது எப்படி சாத்திம்? ஆனால் நீர் சிந்துகிற இந்தக் கண்ணீர்த் துளிகளும், என் மீதுள்ள அன்பிற்காக நீர் தேர்ந்து கொண்ட தரித்திரமும், உமக்கு எதிராக நான் செய்த பாவங்கள் அனைத்திற்கும் மன்னிப்புப் பெறுவேன் என்னும் நம்பிக்கையை எனக்குத் தருகின்றன. என் சேசுவே, உமக்கெதிராக மிக அடிக்கடி என் முதுகைத் திருப்பிக் கொண்டதற்காக நான் மனஸ்தாபப்படுகிறேன்; என் சர்வேசுரனும், என் சர்வமுமான உம்மை அனைத்திற்கும் மேலாக நான் நேசிக்கிறேன்! என் தேவனே, இன்று முதல், நீரே என் ஒரே பொக்கிஷமாகவும், என் ஒரே நன்மையாகவும் இருப்பீர். அர்ச். லொயோலா இஞ்ஞாசியாரோடு சேர்ந்து, ""உமது அன்பை எனக்குத் தாரும், உமது வரப்பிரசாதத்தை எனக்குத் தாரும், அப்போது நான் போதுமான அளவுக்கு செல்வமுள்ளவனாக இருப்பேன்'' என்று நான் உம்மிடம் சொல்வேன். நான் உம்மைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், உம்மைத் தவிர வேறொன்றையும் நான் ஆசிக்கவில்லை. என் சேசுவே, என் வாழ்வே, என் நேசரே, நீர் மட்டுமே எனக்குப் போதுமானவராக இருப்பீர்.ணூணூ

நம் இரட்சகரின் முன்மாதிரிகைப் பின்பற்றி, புனிதர்கள் அனைத்திலிருந்தும் தங்களை விலக்கிக் கொள்ளத் தேடினார்கள். தாமே ஏழையாயிருந்த சேசுநாதரைப் பின்செல்லும்படி தரித்திரத்தை நேசித்தார்கள். ""கிறீஸ்துநாதரின் தரித்திரம் உலகின் அனைத்துப் பொக்கிஷங்களையும் விட அதிக செல்வமிக்கது'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். நாம் பரலோக செல்வங்களை சம்பாதிப்பதிலும், உலக செல்வங்களைப் புறக்கணிப்பதிலும் அது நம்மை ஏவித் தூண்டுகிறது. ""என் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவை அறிகிற உன்னதமான அறிவைப்பற்றி நான் எல்லாவற்றையும் நஷ்டமென்று மதிக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் இழந்து விட்டு, அவைகளைக் குப்பையென்றும் எண்ணுகிறேன்'' (பிலி.3:8) என்று அர்ச். சின்னப்பர் எழுதினார். சேசுநாதரின் வரப்பிரசாதத்தோடு ஒப்பிடுகையில் மற்ற அனைத்தையும் அவர் வெறும் நஷ்டமென்றும், குப்பையென்றும் மதித்தார். அர்ச். பிரான்சிஸ் போர்ஜியா சேசு சபையில் ஒரு தரித்திர வாழ்வைத் தழுவிக்கொள்வதற்காகத் தமது சொத்து சுகங்களையெல்லாம் துறந்தார். அர்ச். பிரான்சிஸ் அசிசியார் ஓர் ஏழைப் பிச்சைக்காரனைப் போலத் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்காக, தாம் அணிந்திருந்த சட்டையைக் கூடக் ழற்றித் தன் தந்தையிடம் திருப்பிக் கொடுத்தார். உடைமைகளின் மீது இச்சை கொள்பவன் ஒருபோதும் புனிதனாக மாட்டான் என்று அர்ச். பிலிப் நேரியார் கூறுகிறார். அது உண்மையில் அப்படித்தான் இருக்கிறது; ஏனெனில் இவ்வுலகத்தால் நிரம்பியிருக்கும் இருதயத்தில் தேவசிநேகத்திற்கு இடமில்லை. ""நீ வெறுமையான இருதயத்தோடு வருகிறாயா?'' என்பதுதான் பண்டைய காலத்தில், மடங்களில் சேர வருபவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தது. நீ ஒரு வெறுமையான இருதயத்தோடு வரவில்லை என்றால், கடவுளுக்கு முழுவதும் சொந்தமாயிருக்க உன்னால் ஒருபோதும் முடியாது. ""ஏனெனில் எங்கே உன் பொக்கிஷம் உள்ளதோ, அங்கே உன் இருதயமும் இருக்கும்'' (மத்.6 :21). ஒருவன் எதை அதிகமாக நேசித்து, அதிகமாக மதிக்கிறானோ, அதுதான் அவனுடைய பொக்கிஷமாக இருக்கிறது. ஒரு முறை, ஒரு செல்வந்தன் இறந்த போது, அர்ச். பதுவை அந்தோனியார் போதக மேடையிலிருந்து அந்த மனிதன் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டான் என்று அறிவித்தார். தாம் கூறியதை எண்பிக்கும்படி அவன் தன் பணத்தையெல்லாம் வைத்திருந்த இடத்திற்குச் சென்று பார்க்கும்படி மக்களிடம் அவர் கூறினார். அவர்களும் சென்று பார்த்தபோது, உண்மையில் அவனுடைய இருதயம் இன்னும் உஷ்ணத்தோடு அவனது பணத்துக்கு நடுவில் இருந்ததை அவர்கள் கண்டார்கள்.

அர்ச். பவுலினுஸோடு சேர்ந்து, ""செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களையும், அரசர்கள் தங்கள் அரசுகளையும் அனுபவிக்கட்டும். கிறீஸ்துவே என் உடைமை, என் இராச்சியம், என் மகிமை'' என்று சொல்லக் கூடிய மனிதன் பேறுபெற்றவன். ""எனக்கு உமது வரப்பிரசாதத்தோடு, உமது அன்பையும் தாரும். அப்போது நான் பெரும் செல்வந்தனாயிருப்பேன்'' என்றார் அர்ச். இஞ்ஞாசியார். நாம் தேவ அன்னையாகிய கன்னிமாமரியிடம் தஞ்சமடையவும், கடவுளுக்குப் பின் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களை நேசிக்கவும் ஒருபோதும் தவறாதிருப்போமாக. தன்னை நேசிப்பவர்கள் அனைவரையும் அவர்கள் வரப்பிரசாதங்களால் வளப்படுத்துகிறார்கள். ""என்னை நேசிக்கின்றவர்களைச் செல்வந்தர் ஆக்கவும், அவர்களுடைய பொக்கிஷங்களை நிறைக்கும் படியாகவும் . . . ஆஸ்தியும், மகிமையும், மேலான செல்வமும், நீதியும் என்னோடிருக்கின்றன.'' (பழ.8:21, 18).

ஓ பாலகனாகிய என் தேவனே, நீர் வைக்கோலின் மீது குளிரால் நடுங்கிக் கொண்டும், என் பொருட்டு அழுது கொண்டும் இருப்பதை நான் காண்கிறேன். ஓ, உம்மை நேசிக்காமல் நான் எப்படி வாழ முடியும்? ஓ என் சர்வேசுரா, நீர் எனக்காக எவ்வளவு அதிகமாகத் துன்பப்பட்டிருக்கிறீர் என்பதை விசுவாசத்தால் நான் அறிந்திருந்தும், உம்மை இவ்வளவு அதிகமாக நோகச் செய்ய என்னால் எப்படி முடிந்தது! ஆனால் உம்மை வாதிக்கிற ந்த வைக்கோலும், நீர் படுத்திருக்கிற இந்தப் பரிதாபமான முன்னிட்டியும், நீர் சிந்துகிற நேசமுள்ள கண்ணீரும், உம்மிடமிருந்து வெளிப்படும் மென்மையான அந்த அழுகையும்--இவையெல்லாம், நான் மன்னிப்படைவேன் என்றும் என் எஞ்சிய வாழ்வு முழுவதும் உம்மை நேசிக்கத் தேவையான வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வேன் என்றும் நான் உறுதியாக நம்பச் செய்கின்றன. ஓ தேவ மகவே, நான் உம்மை நேசிக்கிறேன்! என்னை முழுவதும் உமக்குத் தருகிறேன். மரியாயே, இந்த மாபெரும் திருமகனின் மாபெரும் அன்னையே, அவரால் அனைவரிலும் அதிகமாக நேசிக்கப்பட்டவர்களே, அவரிடம் எனக்காக மன்றாடுங்கள்.