இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆத்துமத்தின் கதி!

எவனாயினும் சரி, ஒரு நோக்கத்தைக் குறித்து வேலை செய்வான். குடியானவன் தானியப் பலனை நினைத்து உழுகிறான், வேலைக்காரன் கூலிக்காக உழைக்கிறான், நோயாளி ஆரோக்கியத்தை விரும்பி வியாதியைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுகிறான். அவனவன் தான் நினைத்த குறிக்கோளை அடைய வேண்டும் என்று சகல துன்பம், வாதை அநுபவித்துப் பிரயாசைப் படுகிறானே. அப்படியிருக்கையில் நீ பூலோகத்திற்கு வந்த காரணம் ஏது, போகிற போக்கு ஏது, அடைகிற கதி எது என்று நினைக்க வேண்டாமோ? சர்வேசுரன் உன்னை எதற்காக உண்டாக்கினார்? தம்மை அறியவும், சிநேகிக்கவும், மோட்சம் அடையவும் உண்டாக்கினாரே யொழிய மற்றபடியல்ல. அந்த மோட்ச பாக்கியமே உன் ஆத்துமத்துக்குக் கதியல்லாமல் வேறில்லை.

பூலோகத்திலே மனுஷனுக்கு எத்தனை பாக்கிய செல்வங்கள் கிடைத்தாலும், அதனாலே அவனுடைய ஆசைக்குத் திருப்தியாகாது, இன்னமும் வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பான். இதோ பார். அலெக்சாந்தர் என்னும் அரசன் இவ்வுலகத்தில் எட்டுத் திக்குகளிலுள்ள நாடுகளைத் தனக்குக் கீழ்ப்படுத்தி அநேக இராச்சியங்களுக்கு ஏக தலைவனான பிறகு, சாகிற வேளையிலே இன்னமும் தேசங்கள் உண்டென்று ஒரு கல்விமான் சொன்னதைக் கேட்டு, ஐயையோ அந்த தேசங்களையும் பிடித்து ஆள எனக்கு அதிர்ஷ்டமில்லாமல் போயிற்றே என்று அழுதானாம்.

அத்தனை நாடுகளை எல்லாம் ஏக சக்கரவர்த்தியாய் ஆண்டாலும், அவன் ஆசை அடங்காமல் போயிற்றே. தாகமாயிருக்கிறவனுக்கு ஈரச்சீலையை நாவிலே தடவினாலும், ஆறு குளங்களைக் காண்பித்தாலும் தாகம் தீருமோ? தண்ணீர் குடியாத்தினாலே தாகம் தீராது. அப்படியே ஆத்துமத்துக்கு உலக பாக்கிய செல்வங்களும், சரீர சுக அலங்காரங்களும். நல்ல போசனமாகச் சாப்பிட்டதினால் ஆத்துமங் கொழுக்கவும் மாட்டாது, ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்துக் கொள்ளவும் மாட்டாது. ஆத்துமத்திற்கு சர்வேசுரனுடைய ஞான நன்மைகள் மாத்திரமே சம்பூரண திருப்தி உண்டாக்கும் என்றும், அப்படிப்பட்ட பரலோக பாக்கியம் மாத்திரமே மனுஷனுடைய கதி என்றும் அறிந்து அதைத் தானே விரும்பி நடக்கக்கடவான்.

பாதகா, உன்னுடைய நினைவு பரலோகத்தின் மேலேயா, பூலோகத்தின் பேரிலேயா? உனக்குக் கதி சர்வேசுரன் என்றால், பசாசின் பின்னே ஓடுவதேன்? உன்னுடைய தேசம் பரலோகம் என்றால், பூலோகத்திலேயே நீடித்திருக்க விரும்புவதேன்? அழியாத நன்மை உனது பிழைப்பென்றால், அழிந்து போகிற சுகத்திலே முழுகிப் போய்த் தலையெடுக்க மாட்டாமல் இருப்பது ஏன்? இப்படிச் செய்வார்களோ? கடலில் எடுபட்ட தண்ணீர் மேகத்திலே இருந்தாலும், மறுபடியும் தனக்கு உரிமையாகிய கடலிலேதான் வந்து விழ இருக்கிறது. பூமியில் எடுத்த கல்லை ஆகாயத்தில் எறிந்தாலும், மறுபடியும் தனக்கு உரிமையாகிய பூமியிலேதானே வந்து விழுகின்றது. உன் மனது மாத்திரம் உன்னைப் படைத்து உனக்குக் கதியாகிய சர்வேசுரனிடத்தில் திரும்பாமல் போகிறது ஏன்?

ஐயோ நெறிகெட்டவனே, நீ பிறந்த ஊர் வீடு வாசல் விட்டு வந்தால், மறுபடி போக வேண்டுமென்று ஆசை வராதோ? உன் உற்றார், உறவின் முறையாரை விட்டுப் பிரிந்து வந்தால், திரும்ப எப்போது போய்க் காண்பேனோ என்கிற ஆவல் இல்லையா? நீ ஊருக்குப் போக வேண்டுமென்று புறப்பட்டு வருகிற போது, வழியிலே தோட்டம் துரவு, வீடு வாசல்களைக் கண்டால் உன் வழியே போகாமல் அவைகள் மீது ஆசைப்பட்டு, அவைகளைத் தானே வீடு வாசல், தோட்டம் துரவு, காணி பூமியாய் ஆக்கிக் கொள்ளு வோமென்று நினைப்பாயோ? அதில்லையே.

அது போல் உன்னுடைய சொந்த ஊரும், சொந்த நிலபுலனுமாகிய மோட்ச இராச்சியத்திலே வாசம் செய்யவும், உன்னைப் படைத்த சுவாமியைக் காணவும் சற்றாகிலும் நினையாமல், கடந்து போகும் வழியாய் இருக் கிற பூலோகத்திலே நிலைகொள்ளவும், அதை பலப்படுத் தவும் கவலை வைத்து திரிவது ஏன்? ஒரு இராச்சியத்தை ஆளப்போகிறவன் சிறு பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டு பாராமுகமாய்த் திரிகிறதைக் கண்டால், அவனை நகைத்துப் பரிகாசம் செய்யாதிருப்பார்களோ?

ஒரு இராஜ குமாரத்தியைக் கலியாணம் செய்யக் குறித்து அழைக்கப்பட்டவன், ஒரு வைப்பாட்டி பேரிலே மோகித்து, அந்த இராஜ குமாரத்தி கலியாணத்தைச் சட்டை செய்யாதிருந்தால், அவனை நிந்தியாதிருப்பவர்கள் உண்டோ ? யாதொருவன் அலங்காரமான தன் மாளிகையில் ஏறிப் போகிறதற்குச் சோம்பல்பட்டு பழைய கூரை வீட்டில் கிடக்கிறதுண்டோ ? நல்ல ஆடை ஆபரணம், பட்டாடைகள் இருக்க, கந்தையை உடுத்தித் திரிகிறவர்கள் உண்டோ? தலையிலே பொன் முடி தரிக்கிறது பாரமென்று தோளிலே காவடி கட்டிச் சுமக்கிறவர்கள் உண்டோ ? அமிர்தங்களை உண்ணாமல் எச்சில்களைப் பொறுக்கித் தின்பார் உண்டோ ? இப்படிப்பட்டவர்களை மூடர் என்றும் பைத்தியக்காரர் என்றுமே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மோட்ச இராச்சியத்திலே அலங்காரமான முடிகளும், தேவ சிநேகத்தின் கலியாணமும், திவ்விய பிரகாசம் பொருந்திய அலங்கார உடுப்பும், தெய்வீக அமிர்தங்களால் விருந்தும் சமைத்து, மாணிக்கங்களாலே மாளிகையும் உண்டாக்கி, இதெல்லாம் அனுபவித்து வாசமாய்ச் சுகித்திரு என்று கர்த்தர் அழைத்திருக்க நீ போகாமல், அற்ப விளையாட்டுக்கும், பசாசின் எச்சில்களைப் பொறுக்கித் தின்னுகிறதற்கும் சந்தோஷப்படுகிறாய்.

ஐயையோ, நன்மையற்ற மூடா! நீ போகவேண்டி யிருக்கிற மோட்சவழியிலே நடவாத்தினால், ஒரு பாராங்கல்லை உயர ஏற்றுகிறதற்குச் செய்ய வேண்டிய பெரும் முயற்சி எல்லாம் செய்கிறது போல் குருக்கள், பெரியவர்கள், உபதேசிகளை உன் அருகில் சர்வேசுரன் அனுப்பி உனக்கு வழிகாட்டவும், துணை செய்யவும் சம்மனசுக்களை முதலாய் அனுப்பினார். உன்னுடைய பலவீனத்திலே நின்று கைதூக்கி விடத் தம்முடைய வரப்பிரசாதங்களையும், நித்திய சீவியம் தருகிற போசனத்தையும் கொடுத்து, இனி இல்லை எனப்பட்ட உபகாரங்களை எல்லாம் செய்தாலும் நீ தலையெடுக்க மாட்டேன் என்கிறாய்.

அற்ப மனிதா, ஆகாயத்திலே பறக்கிற பறவையினங்கள் தங்களுடைய புத்தி ஈனத்தால் கூட்டிலே அகப்பட்டுச் சிறையாயிருந்தாலும், அதை மறந்து போய்ச் சந்தோஷமாய் ஆடிப்பாடிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்சிகளை விட உயர ஏற வல்லபமுள்ள ஆத்துமத்தைக் கொண்டிருக்கிற நீ, உனக்கு வரவிருக்கிற ஆக்கினைகளை நினையாமல், உலகத்தில் இச்சையின்படி பாவ வழியிலே திரிகிறதென்ன? மிருகங்களுக்கு மேற்கதியாகிய மோட்சம் இல்லாததினாலே, கவிழ்ந்த முகமாய்ப் பூமியைப் பார்த்து புல் முதலான இரைகளைத் தேடித் திரிகின்றன.

உனக்குப் பரலோகமே கதியாயிருக்க, அதை நீ பார்த்திருக்கிறதற்கு நிமிர்ந்த முகப் பார்வையாய்க் கர்த்தர் உண்டாக்கின இடத்திலே நீ மிருகத்திலும் கடை கெட்டதனமாய், இலெளகீக துர் ஆசைகளைப் பற்றிக் கவிழ்ந்த முகமாய் பூமியையே பார்த்துக் கொண்டு நரக அக்கினிக்கு இரையாய்ப் போக இருக்கிறதென்ன? இப்படியே பரலோக கதியை நினையாமல் திரிந்தவனுக்கு வந்த கேடுகளைப் பார்.

பிரான்ஸ் தேசத்திலே இருந்த ஒரு மனுஷன் உன்னைப் போல புத்தி ஈனமாய், ஆத்துமத்துக்கு இவ்வுலகத்திலேதான் நன்மை உண்டாயிருக்கிறதே தவிர, அவ்வுலகத்திலே நன்மை இல்லை என்றும், மறுவுலகம் என்பது கிடையாது என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அப்படியிருக்க அவன் அருகில் முகம் தெரியாத ஆளைப் போல் ஒருவன் வந்து ''நீ என்ன சொல்லுகிறாய்? மறுவுலகம் இல்லை என்கிறது மெய்தானோ?'' என்று கேட்டதற்கு அவன் "மெய்யாகவே சொல்லுகிறேன், இதை எண்பிக்கும்படிக்கு என்னுடைய ஆத்துமத்தை வாங்குபவர் உண்டானால் இப்போதே விற்றுப் போடுவேன்'' என்று சொல்ல, முகம் அறியாத ஆளாய் வந்தவன், மெத்த நல்லது, என்ன விலை சொல்லுகிறாய் என்று கேட்டு, அவன் சொன்னபடி உள்ள விலையைக் கையிலே கொடுத்து விட்டுப் போனான். அவன் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, கடையிலே போய் ரொட்டி முதலான உணவுப் பொருட்களை வாங்கி வயிறு நிறையச் சாப்பிட்டு, இராத்திரியிலே தூங்கச் சென்ற போது, ஆத்துமம் வாங்கினவன் வந்து ஒரு குதிரை வாங்கினவனுக்குக் கடிவாளம் சொந்தமல்லவா? என்று கேட்க, அது மெய்தான் என்று கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.

அதற்கு ஆத்துமம் வாங்கினவன் சொல்வான்: நான் பசாசு, இவன் எனக்குத் தன் ஆத்துமத்தை விற்றபடியினாலே, இவனைச் சரீரத்தோடே கொண்டு போக வேண்டுமென்பது சர்வேசுரன் கட்டளை என்று கூறி அவனை ஆகாயத்திலே தூக்கி எறிந்து கீழே விழத்தாட்டி, ஆத்தும சரீரத்தோடே நரக பாதாளத்திலே கொண்டு போனான். அப்படி அவன் நரகத்திலே விழுந்த மாத்திரத்தில் மறு உலகம் இல்லை என்றாயே, இப்போது இவ்வுலகத்தினுடைய நீரைக் குடித்துப்பார் என்று சொல்லி, பசாசு உருகின அக்கினியை அவன் வாயிலே ஊற்றின் பின்பு நரக மோட்சம் உண்டென்று அறிந்திருப்பான் அல்லவோ? நீ அதைக் கேட்டிருந்தும் பாவத்துக்கும், நித்திய தண்டனைக்கும் அஞ்சாமல் இருக்கிறதென்ன? நரகம், மோட்சம் உண்டென்று உறுதியாய் அறிந்து விசுவசித்திருக்கையிலே, அறியாதவனைப் போலத் திரிகிறதென்ன?

மோட்ச வழியை விட்டுக் கண்ணை மூடிக் கொண்டு நரக நெருப்பிலே விழப் போகிறாய். அந்தப் பாவ மயக்கத்தை விட்டுக் கண்விழித்து எழுந்திருந்து செய்த பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.