இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவமாதாவின் பிரார்த்தனை விளக்கம் - நூல் அறிமுகம்

தாயின் புகழைத் தேடுகிறவன் கருந்தனத்தைத் தேடுகின்றான் என்பது சத்தியவாக்கு. அவன் இம்மைக்கும் மறுமைக்கும் ஏராளமான நன்மைகளைச் சேகரித்துக் கொள்ளுகிறான் என்பது உறுதி. தாய்களுக்கெல்லாம் உத்தம தாயாகிய மரியன்னையின் புகழ் மாலையைத் தொடுத்த கண்டி குருமடத்து மரியன்னையின் தமிழ்க் கழகம் எல்லா விதமான செல்வங்களையும் அளவின்றி அடையும் என்பதில் என்ன சந்தேகம்?

மரியன்னையின் புகழ்மாலை என்னும் இச்சிறந்த நூலைத் தமிழ் கத்தோலிக்கு உலகிற்கு அளித்திருக்கும் கண்டி பாப்பு குருமடத்துத் தமிழ்க் கழகம் அம்மடத்தினுள்ளும், வெளியிலும் சென்ற ஐம்பது ஆண்டுகளாக அரும் பணி ஆற்றியுள்ளது. அக்கழகத்தின் மேன்மையையும் திறமையும், அதன் அங்கத்தில் சேர்ந்திருந்த பல பேராசிரியரான குருக்கள் தமிழ் இலக்கியத்திற்கும், கிறீஸ்துவ தமிழ் மக்களுக்கும் பேறுபகாரமாக இயற்றியுள்ள சிறந்த நூல்களிலிருந்து தெற்றெனப் புலப்படும். இச்சங்கத்தின் உதவியால் எத்தனையோ குருக்கள் பெரும் பிரசங்கிகளாகவும் அரும் சொற்பொழிவாளர்களாகவும் துலங்குகிறார்கள்.

தேவதாய் கன்னிமாமரியின் புகழ்ச்சிகளும் மகிமைப் பிரதாபங்களும் எடுத்துரைக்கும் தரமன்று, எனினும் “மரியன்னையின் புகழ்மாலை” அல்லது “தேவமாதாவின் பிரார்த்தனை” என்ற இந்நூல் அத்தாயின் புண்ணியங்களின் பெருமைகளையும் சிறப்பலங்காரங்களையும் மிகவும் நேர்த்தியாய் எடுத்துக் கூறியுள்ளது என்றால் அது மிகைபடக் கூறியதாகாது.

தேவனுக்கடுத்தபடி கன்னிமரி சகல சிருஷ்டிகளுக்கும் மேலான சிறப்புற்றவர்கள். சகல மனிதருக்கும் சம்மனசுக்களுக்கும் மேலான பதவியும் பரிசுத்தத்தனமும் படைத்தவர்கள். சர்வேசுரனுடைய தாயென்னும் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள். மாசும் மறுவுமற்ற உத்தம கன்னிகை; தேவ வரப்பிரசாதங்களின் சம்பூரணம்; பரிசுத்த தனத்தின் வானோங்கிய குன்று, தேவ சிநேகம், பிறர் சிநேகத்தில் சொர்ணமயமான ஆலயம்; முப்பொழுதும் கன்னிசுத்தங் கெடாத புனித பூவை; முட்கள் நடுவே இலங்கும் லீலி; இத்துணை சிறப்புகள் வாய்ந்த கன்னிமரி தேவனுடைய தாயாயிருப்பது போலவே, மனுமக்களுடைய மாதாவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் திவ்விய சேசுவுடன் ஒத்துழைத்த மனுக்குல இணை இரட்சகி; வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தி; கிறீஸ்துவர்களுடைய நிகரற்ற சகாயி; மதுரமும் சாந்தமும் நிறைந்த சுந்தரத்தாய்; பாவிகளின் தஞ்சம்; வியாதிக்காரருக்கு ஆறுதல்; துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவு; தம்மை அண்டி வந்தவர்களுக்குத் தவறாத ஆதரவு; பரலோக பூலோக இராக்கினி; மோட்ச அலங்காரி; ஒரே சொல்லில் மானுடப் பிறவியின் அதிசயம் என்றே சொல்லலாம்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மரியன்னையின் புகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி, தாயைக் கூவியழைத்து, வாயார வாழ்த்திப் போற்றிப் புகழ்ந்து, அவர்களுடைய உதவியை மன்றாடுவதே தேவ மாதாவின் பிராத்தனையாகும். இவ்வுன்னதமான செபத்தின் கருத்துக்களைத் தெளிவாக யாவரும் கண்டுணர, இந்தப் புத்தகம் பேருதவியாயிருக்கிறதென்பதில் ஐயமில்லை.

திருக்குடும்பத்தின் நாசரேத்து ஊர் பரிசுத்த இல்லத்தைக் கொண்டிலங்கும் லோரெற்றோ என்னும் திருத்தலத்தில் இந்தப் பிரார்த்தனை முதன்முதலாக சொல்ல ஆரம்பிக்கப்பட்ட வரலாறும், ஒவ்வொரு மன்றாட்டின் அர்த்தமும், அதிலடங்கியிருக்கும் விரிவான பொருளும், பக்தியுருக்கத்தைத் தூண்டி எழுப்பும் ஞானமும், நன்னடத்தைக்குப் பயனுள்ள போதனைகளும் மிகத் தெளிவாகவும் விஸ்தாரமாகவும் எடுத்தாளப்படுகின்றன. மரியாயின் ஒப்பற்ற பரிசுத்தத்தனத்தையும், அவர்களது கன்னிமையின் மாட்சிமையையும், தேவனுக்குத் தாயாயிருக்கும் நிகரற்ற வரத்தினையும் வருணிக்கின்றது இப்புத்தகம். அவர்களது புண்ணியங்கள் ஒவ்வொன்றையும் நமக்கு வற்புறுத்திப் போதிக்கின்றது. அவர்களுக்கு அறிகுறி அடையாளங்களாகவோ, ரூபகங்களாகவோ, பழைய ஏற்பாட்டில் காணப்படும் தாவீதின் உப்பரிகை, சொர்ண மயமான ஆலயம், வாக்குத்தத்தத்தின் பெட்டகம் முதலிய சிறப்புப் பட்டங்களை ஒவ்வொன்றையும் எடுத்து, அதன் பொருத்தத்தையும் அதில் பொதிந்துள்ள ஞானக் கருத்துக்களையும் விவரித்து உரைக்கின்றது. யுத்த சபை, ஒட்டலோக சபைகளைச் சேர்ந்த சகல விசுவாசிகளுக்கும் அவர்கள் எவ்விதம் இராக்கினியாக விளங்குகிறார்கள் என்பதையும் கிறீஸ்துவர்களுக்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் எங்ஙனம் பெரும் உபகார சகாயியாக விளங்குகிறார்கள் என்பதையும், எப்படிச் சமாதானத்துக்கு உத்தம மாதிரிகையாகவும், ஒத்தாசையாகவும் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறுகின்றது.

இவ்விதமாக நமது அருமைத் தாயின் புகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இன்பமான, தெளிவான, சுத்தமான தமிழ் நடையில் பக்திரசம் ததும்ப எழுதிய கண்டி குருமடத்து மாணவர்களின் பெரும் முயற்சியையும், தமிழ் வசன நடையில் அவர்கள் அடைந்துள்ள அரும் தேர்ச்சியையும் நாம் புகழ்ந்து பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இந்நூல் புதிய முறையில் மிக்க இன்பந்தரும் வாக்கியங்கள் கொண்டு அமைந்துள்ளது. அதனது தேனையொத்த இன்ப மொழிகளும் மடைதிறந்தோடும் வெள்ளம்போல் தட்டுத் தடையின்றி செல்லும் வசனங்களும் செவிக்கு இன்பத்தையும் மனதுக்கு பக்தி உருக்கத்தையும் கொடுக்கின்றன. இவ்வரிய நூலை இயற்றியவர் பலரெனினும், ஒருவரே ஆக்கியதுபோல சிறிதேனும் விகற்பமும் வேறுபாடுமில்லாது திகழ்கின்றது.

இந்நூலைப் போல் மிக்க பயன்படக்கூடிய, அழியாப் புகழ் பெறக்கூடிய பல நூற்களை இக்கழகத்தவர் ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிப் பேறும் புகழும் பெற்று, மக்களுக்குப் பெரும் பயனையும் தேவனுக்கு மகிமையையும் கொடுக்க வேண்டுமென்பது எமது பேராவல். எழுதுவதோடு சொல் திறமையையும் பயின்று இவர்கள் தம் அன்புநிறை தாயாம் பாப்பு குருமடத்தின் பெயரையும் கீர்த்தியையும் பெருக்குவார்களாக. பல்வேறு துறைகளில் சிறப்புடன் இலங்கும் இம்மடத்தின் பெருமைக்குத் தமிழ் மாணவர் ஆற்றக்கூடிய தனிப்பட்ட வேறொரு சிறப்பாகும் இது.

இப்புத்தகத்தைத் தமிழ்க் கிறீஸ்துவர்கள் அனைவரும் ஆதரித்து, மரியன்னையும் நன்மைத்தனத்தையும் வல்லமையையும் கண்டுணர்ந்து, அவர்கள் மீது அதிகமதிகமான பக்தி நம்பிக்கையைக் கொள்ளுவார்களாக. அவர்களது புண்ணியங்களை நன்கு உணர்ந்து அவற்றைப் பின்பற்றி நடப்பார்களாக.

இறுதியாக இந்நூலை ஆக்கியவர்கள் உலக வழக்கைக் கவனித்தும், தம் கற்பனா சக்தியை உபயோகித்தும், நம் செந்தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் தேவைகளையும் அநுசரித்தும் இப்புத்தகத்தை வெளியிட்டு நம்மை மகிழ்வித்ததற்காகவும், இவ்வரிய நூலுக்கு நூன்முகம் வரையும் பாக்கியத்தை நமக்குக் கொடுத்ததற்காகவும் அவர்களுக்கு எமது நன்றி பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நம் மதுரத் தாயும் அவர்கள்மீது கருணைக்கண் பாவித்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டுகின்றோம்.

மேற்றிராசன இல்லம், கும்பகோணம்.
X பீட்டர் பிரான்சிஸ், கும்பகோணம் மேற்றிராணியார். 20-6-1951.

Nihil obstat: Fr. Josephat Maria. 15th Aug. 1951.
Reimprimatur: X T.R. Agniswami S.J. Bishop of Kottar.


அன்புடையீர், வணக்கம்.

தேவதாய்க்குத் தோத்திரமாகச் சொல்லப்படும் ஜெபங்களுக்குக் கணக்கில்லை. அவைகளில் நடுநாயகமாக விளங்குவது ஜெபமாலை என்பது நாமறிந்ததே. அதற்கு அடுத்தபடியாக வருவது “தேவமாதா பிரார்த்தனை” என்று சொல்லப்படும் “லொரெற்றோ” பிரார்த்தனை என்றால் மிகையாகாது. கோவில்களிலாயினும் சரி, இல்லங்களிலாயினும் சரி, நாடோறும் இரா ஜெபத்தின் போது இப்பிரார்த்தனையை நாம் சொல்லி வருகிறோம். நம்மில் அநேகருக்கு இப்பிரார்த்தனை மனப்பாடமாக முதலாய்த் தெரியும். 

ஆயினும் இப்பிரார்த்தனையில் கூறப்படும் புகழுரைகள் யாவற்றினுடையவும் முழு அர்த்தத்தையும் அறிந்து அதைச் சொல்லுகிறோமா? “ஆம்” என்று சொல்லக் கூடியவர்கள் வெகு சொற்பப் பேர்களே எனலாம். இப்பெரும் குறையை நீக்க வேண்டியே இச்சிறு நூல் வெளிவருகின்றது.

இந்நூல் எம் அருமைத் தமிழ்க் கழகத்தின் பொன் விழா வைபவத்தின் (16.5.1951) நினைவு மலராகும். கடந்த ஆண்டுகளாக எம் கழகப் பாதுகாவலி மரியன்னை எம் கழகத்திற்குச் செய்து வந்துள்ள நன்மைகளுக்கு நாங்கள் காட்டும் நன்றியின் சின்னமாக இந்நூலை அத்தாய்க்கு அர்ப்பணம் செய்கிறோம்.

இச்சிறு நூலின் மூலம் தமிழ்க் கத்தோலிக்கர் யாவரும் அன்னையின் சிறப்பை மென்மேலும் அறிந்து அவர்களை அதிகம் அதிகமாய் பிள்ளைக்குரிய வாஞ்சையுடன் நேசிக்க வேண்டுமென்பதே எமது முக்கிய நோக்கமாகும். ஆதலின் யாவரும் எளிதில் வாசித்தறியுமாறு இந்நூலை எளிய தமிழில் எழுதியுள்ளோம். எனவே உயரிய இலக்கிய நடையையும் செந்தமிழையும் எதிர்பார்ப்பின் ஏமாற்றமடைவீர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும், இலத்தீன் மொழியிலும் தேவதாயைப் பற்றி எழுதப்பட்டுள்ள பல நூற்களின் உதவி கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல். எனினும் பிரார்த்தனையில் வரும் ஒவ்வொரு புகழுரையிலும் கூறப்பட்டுள்ள வியாக்கியானங்கள் முழு ஆராய்ச்சியின் வழி வந்த கட்டுரைகள் என்று நாங்கள் பெருமை கொள்ள முடியாது.

எமது வேண்டுகோளுக்கிணங்கி இந்நூலுக்கு அருமையானதோர் நூன்முகம் வரைந்துள்ள மிக வந். பீட்டர் பிரான்சிஸ் ஆண்டவரவர்களுக்கு எங்கள் தாழ்மையான நன்றி உரித்தாகுக. மிக வந். ஆண்டவரவர்கள் நம் செந்தமிழ் நாட்டில் சர்வேசுரனுடைய திராட்சைத் தோட்டத்தில் உழைக்கும் எம் கழகத்தின் பழைய அங்கத்தினரில் ஒருவர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூல் அச்சிலேறுவதற்கு தயவுடன் அனுமதி கொடுத்த (Imprimatur) மிக வந். ற்றி. ஆற். ஆஞ்ஞசாமி சே.ச. ஆண்டவரவர்களுக்கு எம் குன்றா நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்ளுகிறோம்.

அன்றியும் இந்நூலை எழுதுவதற்கு எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமளித்த குருமட அதிபர், மிக சங். ராபர்ட் பெல்லார்மின் கிரீம் சுவாமிகளுக்கும், சங். ஸ்டராச்சி சுவாமிகளுக்கும், புத்தகத்தை எழுதுங்கால் அறிவுநிறை ஆலோசனைகள் பல அளித்துதவிய ஏனைய ஆசிரிய குருக்களுக்கும், சிறப்பாக சங். டி. ஜிவ் சுவாமிகளுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இறுதியாக இந்நூலை சிறந்த முறையிலும் குறைந்த விலையிலும் அச்சிட்டு வெளியிட முன்வந்த சங். பெனடிக்ட் ஜே. ஆர். அலெக்ஸாண்டர் சுவாமிகளுக்கும், அதற்கு வேண்டிய பொருளுதவி அளித்த எம் கழகத்தின் பழைய அங்கத்தினர் அனைவருக்கும் ஏனைய உபகாரிகளுக்கும் கழகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

மோட்ச அன்னை நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பார்களாக! வணக்கம்.

இங்ஙனம்

மரியன்னையின் தமிழ் கழகத்தார்.