இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுநாதர் சிலுவையின் மீது மரிக்கிறார்.

நேச இரட்சகர் இப்போது எப்படித் தமது மரணத்தை நெருங்கி வருகிறார் என்று பார். ஓ என் ஆத்துமமே, இதோ அந்த அழகியண கண்கள் மங்குகின்றன, அந்த முகம் முழுவதும் வெளிறிப் போகிறது. அந்த இருதயம் ஏறக்குறைய துடிப்பதை நிறுத்தி விட்டது. அந்தத் திருச்சரீரம் இப்போது தன் உயிரைக் கடைசியாகப் பிதாவிடம் ஒப்புக்கொடுப்பதற்குத் தயாராகிறது. "எல்லாம் முடிந்தது'' என்று அவர் கூறினார். அதன்பின் வறுமை, நிந்தை அவமானம், வேதனை ஆகியவற்றின் வடிவில் தாம் தமது இவ்வுலக வாழ்வில் அனுபவித்திருந்த அநேக பயங்கரமான துன்பங்கள் தமது மனக்கண் முன் கடந்து போவதை அவர் காண்கிறார். அதன்பின் அவர் அவற்றையெல்லாம் தமது நித்தியப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார். அதன்பின் அவர் தமது பிதாவிடம் திரும்பி ""எல்லாம் முடிந்தது'' என்று சொல்கிறார். என் பிதாவே, என் வாழ்வின் பலியால், நீர் என் மீது சுமத்திய உலக இரட்சணிய அலுவல் இப்போது முடிந்து விட்டதைப் பாரும். அதன்பின் அவர் நம்மிடம் மீண்டும் திரும்பி, "எல்லாம் முடிந்தது'' என்கிறார். ஓ மனிதர்களே, ஓ மனிதர்களே, என்னை நேசியுங்கள், ஏனெனில் நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன்; உங்கள் அன்பை என்னுடையதாக்கிக் கொள்வதற்கு நான் செய்யக் கூடியது இனி வேறெதுவுமில்லை என்று அவர் சொல்வதாக இது இருக்கிறது.

இதோ, இறுதியாக சேசுநாதர் எப்படி மரிக்கிறார் என்று பார். பரலோகத் தூதர்களே வாருங்கள், வந்து உங்கள் அரசருடைய மரணத்தில் அவருக்கு உதவி செய்யுங்கள். ஓ வியாகுல மாதாவே, சிலுவையை இன்னும் நெருங்கி வந்து, உங்கள் கண்களை இன்னும் அதிக கவனத்தோடு உங்கள் திருமகனின் மீது பதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் இப்போது சாகும் தருவாயில் இருக்கிறார். தமது ஆத்துமத்தைத் தமது நித்திய பிதாவிடம் ஒப்புக் கொடுத்த பின், அவர் எப்படி மரணத்தை அழைக்கிறார், அது வந்து தன் உயிரை எடுத்துக் கொள்ள அவர் எப்படி அதை அனுமதிக்கிறார் என்று பார். "ஓ மரணமே வா,' என்கிறார் சேசுநாதர், "விரைவாக வந்து உன் அலுவலைச் செய்; என்னைக் கொல், என் மந்தையை விட்டு விடு.' இப்போது பூமி அதிர்கிறது, கல்லறைகள் திறக்கின்றன. தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிகிறது. மரிக்கும் இரட்சகரின் பலம், அவரது துன்பங்களின் வன்மை காரணமாக அவரைக் கைவிடுகிறது. அவருடைய திருச்சரீரத்தின் உஷ்ணம் படிப்படியாகக் குறைகிறது; அவர் மரணத்திற்குத் தம் சரீரத்தைக் கையளிக்கிறார்; தமது திருமார்பின்மீது தலைகவிழ்ந்து, தமது வாயைத் திறந்து மரணமடைகிறார்: ""தலைகுனிந்து பிராணனை (உயிரைக்) கொடுத்தார்'' (அரு.19:30).

சேசுநாதர் இறப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவரிடம் அசைவில்லை என்பதை கவனித்து, அவர் இறந்து விட்டார், அவர் இறந்து விட்டார் என்கிறார்கள். மாமரியின் குரல் அவர்களது குரலின் எதிரொலியாக ஒலிக்கிறது: ""ஆ, என் மகனே! நீர் இறந்து விட்டீரே!'' என்று கதறுகிறார்கள் அன்னை.

அவர் இறந்து விட்டார்! ஓ சர்வேசுரா, இறந்திருப்பவர் யார்? ஜீவிய கர்த்தர், கடவுளின் ஏக பேறான திருச்சுதன், உலகின் ஆண்டவர் - அவர்தான் இறந்திருக்கிறார்! ஓ மரணமே, நீ பரலோகம் மற்றும் இயற்கை முழுவதற்கும் அதிசயமானாய்! ஓ அளவற்ற நேசமே! தமது திரு இரத்தத்தையும், தமது வாழ்வையும் பலியாக்கிய ஒரு சர்வேசுரன்! யாருக்காக! நன்றியற்ற தமது சிருஷ்டிகளுக்காக! அவர்களுடைய பாவங்களுக்குரிய அபராதத்தைச் செலுத்தும்படி, துன்பங்கள் மற்றும் அவமானங்களின் ஒரு பெருங்கடலின் மத்தியில் அவர் மரிக்கிறார்! ஆ, அளவற்ற நன்மைத்தனமே! ஓ அளவற்ற நேசமே! ஓ என் சேசுவே, நீர் என் மீதுகொண்டுள்ள அன்பின் காரணமாக இறந்திருக்கிறீர்! ஓ, இனி ஒரு கணம் கூட உம்மை நேசிக்காமல் நான் வாழாதிருப்பேனாக! என் அரசரே, என் ஏக நன்மையே, உம்மை நான் நேசிக்கிறேன்; எனக்காக மரித்திருக்கிற என் சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்! ஓ, என் வியாகுலத் தாய் மரியாயே, சேசுவை நேசிக்க ஆசிக்கும் உம் ஊழியர்களில் ஒருவனாகிய எனக்கு உதவி செய்தருளும்.