இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

முதல் சங்கேதக் குறிப்பு.

மரியா வால்டோர்ட்டா பெற்றுக் கொண்ட முதல் உரையிலேயே இறுதிக் காலங்கள் முதன்முறையாக சங்கேத முறையில் குறித்துக் காட்டப்பட்டன. ''கடைசி நேரத்தில்தான் நான் வருவேன்'' என்று சேசுநாதர் சொல்கிறபோது, அவர் உலக முடிவுக்கு முன்பே பூமிக்கு மீண்டும் வந்து, சரீரபூர்வமாக ஆயிரம் ஆண்டு காலம் அரசாள்வார் என்று தவறான முறையில் நம்புகிற ஆயிரமாண்டுவாதிகளின் கருத்தை அவர் ஏற்கெனவே மறுக்கிறார்.

ஏப்ரல் 23, 1943          முழுமையான உரை எ.பு. 43:83

சேசு கூறுகிறார்:

முதல் தடவை இப்பூமியைச் சுத்திகரிக்க என் பிதா தண்ணீராலான ஒரு சுத்திகரத்தை அனுப்பினார். இரண்டாவது தடவை, அவர் இரத்தத்தாலான ஓர் சுத்திகரத்தை அனுப்பினார். அதுவும் எந்த இரத்தத்தினால்! முதல் சுத்திகரிப்பும் சரி, இரண்டாம் சுத்திகரிப்பும் சரி, மனிதர்களை சர்வேசுரனுடைய பிள்ளைகளாக மாற்றுவதில் பயன்படவில்லை. இப்போது பிதா சலிப்படைந்திருக்கிறார். மனுக்குலம் அழிந்து போகச் செய்யும்படி, நரகத்தின் தண்டனைகள் கட்டுக்கடங்காமல் போக அவர் அனுமதிக்கிறார். ஏனென்றால் மனிதப் பிறவிகள் மோட்சத்திற்குப் பதில் நரகத்தைத் தெரிந்து கொண்டார்கள். அவர்களை ஆட்சி செய்கிற லூஸிபர், மனிதர்களை முற்றிலும் தன் பிள்ளைகளாக்கும்படி எங்களை அவர்கள் தூஷணிக்கும்படி தூண்டுவதற்காக அவர்களை வதைக்கிறான்.

அவர்களை இன்னும் அதிகக் கொடிய மரணத்திலிருந்து இரட்சிக்கும்படி மரிப்பதற்காக இரண்டாவது தடவையும் வர நான் விரும்பியிருப்பேன். ஆனால் என் பிதா அதை அனுமதிக்க மாட்டார். என் நேசம் அதை அனுமதிக்கும். ஆனால் என் நீதி அதை அனுமதிக்காது. அது பயன் தராது என்பது அவருக்குத் தெரியும். ஆதலால், கடைசி நேரத்தில்தான் நான் வருவேன். ஆனால் லூஸிபரைத் தங்கள் எஜமானனாகத் தெரிந்து கொண்டபின், அந்தக் கடைசி நேரத்தில் என்னைக் காண்பவர்களுக்கு ஐயோ கேடு! அந்திக்கிறீஸ்துக்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற என் சம்மனசுக்களின் கரங்களில் ஆயுதங்கள் தேவையில்லை. என் பார்வையே போதுமானது.

ஓ! இரட்சணியமாயிருக்கிற என்னிடம் மக்கள் இப்போதும் கூட திரும்பி வர முடிந்தால்! அதை மட்டுமே நான் ஆசிக்கிறேன். நான் அவர்களை நோக்கி என் தலைகளை விரித்திருக்கிற மோட்சத்தை நோக்கி அவர்கள் தங்கள் சிரங்களை உயர்த்தச் செய்யக் கூடிய எதையும் என்னால் காண இயலாததால் நான் அழுகிறேன்.

துன்பப்படு, மரியா. நான் உட்பட வேண்டும் என்று பிதா விரும்பாத இரண்டாவது வேதசாட்சிய மரணத்திற்கு ஈடுசெய்யும் அளவிற்கு துன்பப்படும்படி நல்லவர்களிடம் கூறு. தங்களையே பலியாக்குகிறவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில ஆத்துமங்களை இரட்சிக்க அவர்களுக்கு அருளப்படும். ஒரு சில ஆத்துமங்களைத் தான். கல்வாரியின் மீது, என் பலியின் வேளையில், என் மரணத்தின் போது அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களுள் கள்ளனையும், லோஞ்ஜினுஸையும், மிகக் கொஞ்சமான வேறு சிலரையும் மட்டும்தான் தெய்வீக இரட்சகராகிய என்னாலேயே இரட்சிக்க முடிந்தது என்பதை ஒருவன் சிந்திப்பானென்றால், ஒவ்வொரு சிறிய இரட்சகனுக்கும் ஒரு சில ஆத்துமங்கள் மட்டுமே அருளப்படுவது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாது.