இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் வேதசாட்சியத்தின் உயர்வு!

மாமரியின் வேதசாட்சியம் மற்ற அனைவரின் வேதசாட்சியங் களையும் விட அதிக நீண்டதாக இருந்ததால் மட்டுமல்ல, மாறாக, அது எல்லா வேதசாட்சியங்களையும் விட மிகப் பெரியதாக இருந்ததாலும், மாமரி வேதசாட்சிகளின் இராக்கினியாக இருக்கிறார்கள். ஆயினும் அவர்களது வேதசாட்சியத்தின் பிரமாண்டத்தை யாரால் அளவிட முடியும்? வியாகுல மாதா தனது திருமகனின் மரணத்தின் போது அனுபவித்த மாபெரும் துன்பங்களை எரேமியாஸ் தீர்க்கதரிசியானவர் சிந்தித்தபோது, அவர்களது வியாகுலங்களை வேறு யாருடைய வியாகுலத்தோடும் ஒப்பிட அவரால் இயலவில்லை. ""ஜெருசலேம் குமாரத்தியே, உன்னை யாருக்கு ஒப்பிடுவேன்? உன்னை யாருக்கு சமமென்பேன் . . உன் துயரம் கடலைப் போல் அபாரமாயிருக்கிறதே . . . உன்னைக் குணப்படுத்துபவர் யார்?'' (புலம்பல்.2:13). இதனாலேயே, கர்தினால் ஹ்யூகோ, இந்த வார்த்தைகளை விவரிக்கும்போது, ""ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே, கசப்பில் கடலானது மற்ற எல்லாக் கசப்பையும் விஞ்சுவது போலவே, உமது துயரம் மற்ற எல்லாத் துயரத்தையும் விஞ்சுகிறது'' என்கிறார். இதனாலேயே அர்ச். ஆன்செல்மும், மாமரியின் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், கடவுள் ஒரு விசேஷ அற்புதத்தால் அவர்களது உயிரைக் காப்பாற்றி யிருக்காவிட்டால், அதுவே அவர்களது மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கும் என்று வலியுறுத்திச் சொல்கிறார். அர்ச். சியென்னா பெர்னார்தீன் இதற்கும் அப்பால் சென்று, ""மாமரியின் துயரம் எல்லா மனிதர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் என்றால், அவர்கள் உடனே இறக்க அது போதுமானதாக இருந்திருக்கும் என்னும் அளவுக்கு மாமரியின் துயரம் பெரிதாயிருந்தது'' என்கிறார்.

ஆனால் மாமரியின் வேதசாட்சியம் ஏன் மற்ற எல்லா வேதசாட்சியங்களையும் விட மேலானதாக இருந்தது என்பதற்கான காரணங்களை நாம் சிந்திப்போம்.

முதலாவதாக, வேதசாட்சிகள் தங்கள் சரீரங்களில் நெருப்பு மற்றும் வேறு பருப்பொருட்களின் விளைவாயிருந்த தங்கள் வாதைகளை அனுபவித்தார்கள்; ஆனால் மாமரியோ, ""உமது ஆத்துமத்தையும் ஒரு வாள் ஊடுருவும்'' (லூக். 2:35) என்று அர்ச். சிமியோன் கூறியது போல, தனது ஆத்துமத்தில் தனது வேதசாட்சியத்தை அனுபவித்தார்கள்; ""ஓ மகா பரிசுத்த கன்னிகை¼, மற்ற வேதசாட்சிகளின் உடல்கள் இரும்புக் கருவிகளைக் கொண்டு கிழிக்கப்பட்டன. ஆனால் நீரோ, உமது சொந்தத் திருமகனின் திருப்பாடுகளால், உமது ஆத்துமத்தில் குத்தி ஊடுருவப்பட்டு, கொல்லப்படுவீர்'' என்று அந்தப் பரிசுத்த முதியவர் கூறியது போலாயிற்று. இனி, ஆத்துமம் சரீரத்தை விட அதிக மேன்மையானதாக இருப்பதால், மாமரியின் துன்பங்களும், மற்ற எல்லா வேதசாட்சிகளின் துன்பங்களையும் விட மேலானவையாக இருந்தன. சேசுநாதர் தாமே அர்ச். சியென்னா கத்தரீனம்மாளிடம் இதுபற்றி, ""ஆத்துமத்தின் துன்பங்களோடு சரீரத் துன்பங்கள் ஒப்பிடவும் தகுதியற்றவை'' என்று அறிக்கையிட்டார். இந்த அடிப்படையிலேயே பரிசுத்த மடாதிபதியான ஷார்த்ரேயின் ஆர்னால்ட் என்பவர், ""மாசற்ற செம்மறிப் புருவையானவரின் மாபெரும் பலியைக் காணுமாறு கல்வாரி மலையின் மீது இருந்தவர்கள் அனைவரும், அங்கே இரண்டு மாபெரும் பலிபீடங்களைக் கண்டார்கள். ஒன்று, சேசுவின் திருச் சரீரத்த்தின் பீடம்; மற்றொன்று மரியாயின் மாசற்ற இருதயத்தின் பீடம். ஏனெனில் அந்தக் குன்றின்மீது, திருமகன் மரணத்தால் தமது சரீரத்தைப் பலியாக ஒப்புக்கொடுத்த அதே நேரததில், மாமரி தயவிரக்கத்தால் தன் ஆத்துமத்தைப் பலியாக ஒப்புக் கொடுத்தார்கள்'' என்று கூறுகிறார்.

மற்ற வேதசாட்சிகள் தஙக்ள் சொந்த உயிர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்க, மாசற்ற கன்னகையோ, தனது தேவ மகனின் உயிரை - தன் சொந்த உயிரை விட எவ்வளவோ அதிகமாக நேசித்த அந்த உயிரை - பலியிடுவதன் மூலம் துன்பப்பட்டார்கள். இதன் காரணமாக, அவர்களது திருமகன் தமது திருச்சரீரத்தில் பட்ட அனைத்து துன்பங்களையும், மாமரி தன் ஆத்துமத்தில் அனுபவித்தது மட்டுமல்ல, மாறாக, தன் சொந்த சரீரத்தில் அவை அனைத்தையும் அனுபவித்திருந்தால், அவர்கள் எவ்வளவு துயரப் பட்டிருப்பார்களோ, அதை விட அதிகமான வேதனையையும் துயரத்தையும் அவர்களுடைய திருமகனின் வாதைகளின் காட்சி அவர்களுடைய இருதயத்திற்குக் கொண்டு வந்தது. தனது நேசத்திற்குரிய திருமகன மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எல்லா வாதைகளையும், அவமானங்களையும் மாமரி தன் இருதயத்தில் அனுபவித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட முடியாது. குழந்தைகளின் துன்பங்கள் அவற்றைக் காணும் அவர்களுடைய தாய்மாரின் துன்பங்களாகவும் இருக்கின்றன என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். மக்கபேயுஸ் ஆகமத்தின் ஏழு மகன்களின் தாயார் தனது மகன்கள் அனுபவித்த வாதைகளைக் கண்டபோது அனுபவித வேதனையைப் பற்றி அர்ச். அகுஸ்தீனார் கூறும்போது, ""அவள் அவர்களுடைய துன்பங்களைக் கண்டு, அவை ஒவ்வொன்றிலும் துன்பப்பட்டாள்; ஏனெனில் அவர்கள் அனைவரையும் அவள் நேசித்தாள். அவர்கள் தங்கள் சரீரத்தில் அனுபவித்ததை அவள் தன் ஆத்துமத்தில் அனுபவித்தாள்'' என்கிறார். இதே விதமாக, மாமரியும் சேசுநாதருடைய மாசற்ற சரீரத்தை வாதித்த எல்லாச் சித்திரவதைகளையும், கசைகளையும், முட்களையும், ஆணிகளையும், சிலுவைçயும் அனுபவித்தார்கள். அவை அனைத்தும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையின் மாசற்ற இருதயத்திற்குள் நுழைந்து, அவர்களுடைய வேதசாட்சியத்தை முழுமை பெறச் செய்தன. ""அவர் தமது சரீரத்திலும், அவர்கள் தன் இருதயத்திலும் துன்பப்பட்டார்கள்'' என்று எழுதுகிறார் முத்.அமதேயுஸ் என்பவர். ""மாமரியின் இருதயம் திருச்சுதனின் திருப்பாடுகளின் ஒரு கண்ணாடி போலாயிற்று. அதில் சேசுநாதர் அனுபவித்த துப்பப்படுதலும், அடிகளும், காயங்களும், எல்லாமும் பிரமாணிக்கமான விதத்தில் பிரதிபலித்தன'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார்.