இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானத்துக்கு இருப்பிடமே!

ஞானமே உருவான தேவனை பத்துமாதம் தன் திரு உதரத்தில் தாங்கியவர்கள் மாமரியன்னை. ஞானத் துக்கு ஊற்றும் ஊறணியுமான தேவன் அவர்களிடமாய்ப் பிறக்கச் சித்தமானார். இதன் காரணமாகத்தான் திருச்சபை அவர்களை “ஞானத்துக்கு இருப்பிடமே” என்று வாழ்த்துகிறது.

இவ்வுலகக் காரியங்களை நமது மனது அறவே வெறுத்துத் தள்ளி, பரலோகத்துக்கடுத்த காரியங்களை ஆர்வமுடன் நாடிச் சுகிக்க நமக்கு அருளப்படும் தேவ வரமே ஞானமாகும். நமது அன்னையின் அழகிய ஆத்து மத்தை அலங்கரித்த தேவ வரங்களில் இதுவும் ஒன்று. ஞானம் அவர்களிடத்தில் ஒப்பற்ற விதமாய்ப் பொலிந்து விளங்கியது. படைக்கப்பட்ட சிருஷ்டிகளுக்குள்ளே மாமரியன்னையைப் போல் ஞானத்தில் மிக உயர்ந்த வேறொரு சிருஷ்டியைக் கடவுள் படைக்கவில்லை.

சொல்லற்கரிய சிறப்பு வாய்ந்த இவ்வரத்தின் உதவியால் மாதா சர்வேசுரனுக்கு உகந்தவை எவை எனவும் பிரியமில்லாதவை எவை எனவும் தெளிவுற அறிந்து, தனது மனம், வாக்கு, கிரியைகள் யாவற்றையும் கடவுளின்பால் செலுத்தலானார்கள். வானத்தை எட்டித் தொட்டாற்போல் ஆகாய வெளியில் பறக்கும் பருந்தை ஒப்ப மாதாவின் உள்ளமும் என்றும் எவ்விடத்தும் பரலோகத்திலேயே சஞ்சரித்தது. 

அவர்கள் வாயிலிருந்து வெளி வந்த ஒவ்வொரு சொல்லும் தேவசிநேகத்தில் தோய்ந்திருந்தது; மன நிறைவினால் வாய் பேசுவது இயல்புதானே! மேலும் அவர்கள் தான் செய்த ஒவ்வொரு கிரிகையையும், சர்வேசுரனுக்காக, அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செய்தார்கள்.

பரலோக ஞானம் ஏழுவித குணங்களைக் கொண்டிருக்கிறதென்று அப்போஸ்தலரான அர்ச். இயாகப்பர் கூறுகிறார்: “உன்னதத்தில் நின்று வருகிற ஞானமோவெனில் முந்த முந்த கற்புள்ளதும், பின்பு சமாதானமுள்ளதும், மரியாதையுள்ளதும், கீழ்ப்படிதலுள்ளதும், நல்லவைகளுக்கு இணக்கமுள்ளதும், இரக்கத்தாலும் நற்கனிகளினாலும் நிறைந்ததும், எதையும் தீர்ப்பிடாததும், கபடமற்றதுமாயிருக்கிறது” (யாக. 3:17). மாதாவின் ஞானமும் இவ்வேழு குணங்களைக் கொண் டிருந்தது. அன்றியும் பரலோக ஞானம் படாடோப மற்றது; மாதாவின் ஆடம்பரமற்ற, எளிய, மறைந்த ஜீவியம் இவ்வுண்மையை வலியுறுத்தி நின்றது.

பரலோக ஞானத்திற்கு எதிரிடையானது இவ்வுலக ஞானம். அர்ச். இயாகப்பர் சொல்வதுபோல், இவ்வுலக ஞானம் பொய்களுக்கடுத்த ஞானம் (யாக.. 3:15) பேயின் வழிகளைப் படிப்பிக்கிற ஞானம். இவ்வித ஞானம் கொண்டவன் பரலோகத்துக்கடுத்த காரியங்களைச் சிறிதும் சட்டை பண்ணாது, இவ்வுலக மாய்கையில் மதிமயங்கி, கேட்டின் பாதையில் நடக்கிறான். 

தன்னைப் போன்ற ஞானி அகில உலகிலும் இல்லையென்றெண்ணி இறுமாப்புக் கொள்கிறான். கோவிலுக்குப் போவது, ஜெபிப்பது, தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுவது --இவைகளெல்லாம் நாகரீகத்திற்கு ஒத்ததல்ல என்று பிதற்றுகிறான். தான் இவ்விழிநிலைக்கு வந்ததும் பற்றா தென்று, மற்றவர்களுக்கும் தனது (அஞ்)ஞானத்தை உபதேசிக்கிறான். 

பலன்? எங்கும் சர்வ குழப்பம்; உள்ளத்தில் குழப்பம்; உலகம் முழுவதிலும் குழப்பம். அவன் எண்ணத்தில், சென்ட், பவுடர், ஸ்னோ, நகைநட்டுகள் முதலியவற்றால் மேனியை மினுக்குதல், கெட்ட பத்திரி கைகளையும், புத்தகங்களையும் வாசித்தல், அசுசியான சினிமாப் படங்களைப் பார்த்தல், வீட்டில் அல்லது ரெஜிஸ்த்ரார் முன் கலியாணம் முடித்தல், கர்ப்பத் தடை செய்தல், திருச்சபை அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாதிருத்தல், பொதுவுடமைக் கட்சியில் சேருதல் இவை முதலியவைதான் நாகரீகத்திற்கு ஒத்தவை.

இவர்களைப் போல் நாமும் மதிமயங்கி கெட்டுப் போக வேண்டாம். ஒருவன் உலக ஞானத்தில் எவ்வளவுதான் உயர்ந்திருந்த போதிலும், பரலோக ஞானம் அவனிடம் இல்லையென்கில், அதனால் அவனுக்கு ஏற்படும் பலன் யாது? நம்மை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பரலோக ஞானத்தை அவனுக்குப் படிப்பிக்குமாறு ஞானத்துக்கு இருப்பிடமான தேவ மாதாவை மன்றாடுவோம்.

“ஓ மரியாயே! ஞானத்துக்கு இருப்பிடமே! பரலோக ஞானம் உம்மிடத்தில் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அப்பெரும் கொடையில் நாங்கள் ஒரு பங்காவது கொண்டிருநதால் எவ்வளவோ பாக்கியவான்களா யிருப்போம். ஆனால் அந்தோ! இவ்வுலக ஞானம் எங்கள் இருதயங்களை இறுகப் பிடித் திருக்கிறது. மறுமை பற்றிய எண்ணம் ஒரு சிறிதுமில்லாது இவ்வுலக காரியங்களை மட்டும் நாடி, விலங்கினங்கள்போல் வாழ்ககை நடத்துகிறோம். 

மாதாவே! இதுவரை குருடராயிருந்தோம். இதோ எங்கள் கண்கள் திறந்து கொண்டன. இனி நாங்கள் இவ்வுலக ஞானத்தை இகழ்ந்து அகற்றி, என்றும் பரலோக ஞானமுடையோராய் வாழ முயலுவோம். எங்கள் நேசத் தாயே! உமது திருக்குமாரனிடம் எங்களுக் காக மனுப்பேசி, எங்களுக்கு இப்பெரும் பேற்றைப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.” 


ஞானத்துக்கு இருப்பிடமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!