ஞானிகள் ஆண்டவரை ஆராதித்தல்.

28 பெப்ருவரி  1944.

என்னுடைய அந்தரங்கக் குரல் எனக்கு அறிவிக்கிறது:  “நீ இப்பொழுது பெற்றுக் கொள்ளவிருக்கிற காட்சித் தியானங்களையும், நான் உனக்குக் கூறப்போகிறவைகளையும் “விசுவாச சுவிசேஷங்கள்” என்று அழைப்பாயாக.  ஏனென்றால் அவை உனக்கும் மற்றவர்களுக்கும் விசுவாச வலிமையையும் அதன் கனிகளையும் தெளிவாக்கும்.  உன்னையும் கடவுளுடைய விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்.” 

பெத்லகேமை நான் காண்கிறேன்.  சிறியதாகவும் வெண்மையாகவும் உள்ளது - நட்சத்திரங்களுக்கடியில் கூடி யிருக்கும் கோழிக்குஞ்சு கூட்டம் போலிருக்கிறது.  குறுக்கும் நெடுக்குமாக இரண்டு தெருக்கள் ஊரைப் பிரிக்கின்றன.  ஒன்று வெளியிலிருந்து வருகிறது.  அதுவே பெரிய வீதி.  அது ஊரைக் கடந்து செல்கிறது.  மற்றொன்று அதற்குக் குறுக்காகப் போகிறது.  ஆனால் ஊர் எல்லைக்குள் நின்று விடுகிறது.  மற்ற அநேக தெருக்கள் ஊரைப் பல பகுதிகளாகப் பிரிக்கின்றன.  ஆனால் நாம் தெரு என்று சொல்கிற அமைப்பில் அவை இல்லை.  ஏறியும் இறங்கியும் காணப்படுகிற அந்த நில அமைப்புக்குப் பொருத்தமாக அவை உள்ளன.  இங்கொன்றும் அங்கொன்றுமாக அந்த நிலத்துக்கேற்ப கட்டியவர்களின் வினோத விருப்பத்திற்கேற்ப அமைந்துள்ள வீடுகளுக்கும் அவை பொருந்துகின்றன.  சில வலது பக்கமாக சில இடது பக்கமாக, சில வளைந்து போகிற தெருவோரமாக இருக்கின்றன.  இதனால் அந்தத் தெரு, சிக்கலோடு அவிழ்ந்து கிடக்கிற நாடாவைப்போல, ஒரு நேராகப் போகாமல் தடைப் பட்டுக் கிடக்கிறது.  இடைக்கிடையே ஒரு சதுக்கம் காணப் படுகிறது.  அது சந்தை கூடுமிடமாகவோ அல்லது தண்ணீர்ச் சுனை யாகவோ பயன்படுகிறது.  அல்லது திட்டமிடப்பட்டுக் கட்டப் படாததால் சரிவான நிலையில் எதற்கும் பயன்படாமல் இருக்கிறது.

நான் இருக்கிறதாகக் காணப்படுகிற இடம் இப்படிப்பட்ட நூதன சதுக்கங்களில் ஒன்றாகத் தெரிகிறது.  அது சதுர அல்லது நீண்ட சதுர நிலமாக இருக்க வேண்டும்.  ஆனால் அது வினோதமான வியகை உருவத்தில் தலைதட்டிய விரிகோணமுடைய ஒரு முக்கோணம் போலிருக்கிறது.  அந்த இடத்தின் நீண்ட பக்கமாக, முக்கோணத்தின் அடியில், ஒரு அகன்ற தாழ்ந்த கட்டிடம் உள்ளது.  ஊரிலேயே  அதுதான் அகன்றது.  அதற்கு வெளியே ஒரு உயர்ந்த வெற்றுச் சுவர் உள்ளது.  அதில் இரண்டு கதவுகள்.  அவை மூடிக் கிடக்கின்றன.  உள்ளேயுள்ள பெரிய முற்றத்தில் முதல் மாடியில் பல ஜன்னல்கள் உள்ளன.  கீழே பல முற்றங்கள், வளைந்த கூரைக்கட்டுகளுக்கடியில் தெரிகின்றன.  அங்கே குதிரைகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் தண்ணீர்த் தொட்டிகள் இருக்கின்றன.  வைக்கோல் புற்களும் இடிபாடுகளும் சிதறிக் கிடக்கின்றன.  குதிரைகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் நீர்த்தொட்டிகள் உள்ளன.  கரடான தூண்களில் மிருகங்களைக் கட்டிப்போடும் வளையங்கள் காணப்படுகின்றன.  மற்றொரு பக்கத்தில் ஒரு பெரிய கூரை வாகன மிருகங்கள் தங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.  அது பெத்லகேமின் சத்திர விடுதியெனக் கண்டுபிடிக்கிறேன்.

மற்ற இரு சம அளவான பக்கங்களில் பல வீடுகள் உள்ளன.  சில சிறியவை, சில பெரியவை.  சில வீடுகளுடன் கனிமரத் தோட்டம் உள்ளது.  சிலவற்றில் அது இல்லை.  எப்படியென்றால் சில வீடுகளின் முன்கட்டு சதுக்கத்தை நோக்கி உள்ளது.  சில வீடுகளின் பின்கட்டு சதுக்கத்தின் நேர் உள்ளது.  வணிகர் தங்கும் விடுதியின் முன்பாக இருக்கிற ஒடுங்கின பக்கத்தில் ஒரே ஒரு வீடு காணப்படுகிறது.  அவ்வீட்டின் படிக்கட்டு வெளிப்புறமாய் அமைந்துள்ளது.  அது முதல் மாடி வரையிலும் சென்று அறைகளுக்கு இட்டுச் செல்கிறது.  இரவானதால் எல்லா அறைகளும் மூடப்பட்டிருக்கின்றன.  நேரம் பிந்திவிட்டதால் தெருவில் யாரும் காணப்படவில்லை.

இவ்விரவின் ஒளி அதிகமாவதை நான் கவனிக்கிறேன்.  நட்சத்திரங்களால் நிறைந்துள்ள வானத்திலிருந்து அந்த ஒளி இறங்குகிறது.  கீழ்த்திசை வானில் நட்சத்திரங்கள் மிக அழகாயிருக்கின்றன. அவை எவ்வளவு பிரகாசமாயிருக்கின்றன!  எவ்வளவு பெரிதாக உள்ளன!  வான விதானத்தின் வெல்வெட் பட்டில் ஒளிவிடுகிற அம்மலர்களை அடைந்துவிடலாம் தொட்டுவிடலாம் போல் அவ்வளவு பக்கத்தில் அவை உள்ளன.  அதிகரித்து வருகிற வெளிச்சத்தின் மூலம் எங்கே என்று பார்க்க என் கண்களை உயர்த்துகிறேன்.  அது ஒரு அசாதாரண பெரிய உருவ நட்சத்திரம்.  சந்திரனுடன் ஒப்பிட்டால் அதிலும் பெரிதாக இருக்கிறது!  அது பெத்லகேமுக்கு மேல் ஆகாயத்தில் நகர்ந்து முன்னால் வந்து கொண்டிருக்கிறது.  மற்றெல்லா நட்சத்திரங்களும், அரசி வரும்போது வழிவிடும் பணிப்பெண்களைப்போல் அதற்கு வழிவிடும்படி மங்கிப்போக, அதன் பிரகாசம் அவற்றையெல்லாம் விட அதிகமாயிருக்கிறது.  அது, பெரிய இள நீல இரத்தினக்கல் உள்ளுக்குள் ஒரு சூரினொல் ஒளியூட்டப்படுவது போலிருக்கிறது.  அதிலிருந்து ஒரு வால் புறப்படுகிறது.  அதன் கதிர்கள் இளம் பொன் புட்பராக ஒளிபோலும், மரகதத்தின் இளம் பச்சைபோலும், வான வில்லின் பல நிறங்களோடும் பல் நிற மணியின் ஒளிபோலும், இரத்தச் சிவப்பான மாணிக்கச் சுடர்போலும் செவ்வந்திக் கல்லின் மின்னுதல்போலும், அந்த இள நீலக் கதிர்களுடன் கலந்து ஒளி வீசுகின்றன.  அந்த நட்சத்திரத்தின் வால் ஆகாயத்தை வாரிக்கொண்டு வருவது போலிருக்கிறது.  உயிருள்ளதுபோல் வேகமாக அசைந்து கொண்டு, பூமியின் எல்லா இரத்தினக் கற்களையும் கூட்டி வருவது போலிருக்கிறது.  ஆயினும் எல்லா நிறங்களிலும் துலங்கிக் காணப்படுவது அந்த ஒளிப்பந்தின் விண்ணிற்குரிய இள நீலம்தான்.  அது கீழே படிந்து வீடுகளையும் வீதிகளையும் பெத்லகேம் தரையையும் இரட்சகரின் தொட்டிலையும் நீல வெள்ளிபோல் காட்சியளிக்கச் செய்கிறது.  நம்முடைய பார்வையில் ஒரு சாதாரண ஊரைவிடச் சிறிய பட்டணமாக இப்பொழுது இல்லை.  அது வெள்ளிமயமான கந்தர்வ கதைகளில் வரும் அற்புத நகரமாயிருக்கிறது.  அதன் சுனை நீர்களும் பாத்திரங்களில் இருக்கிற தண்ணீரும் திரவ வைரம் போலிருக்கின்றன.

சதுக்கத்தின் ஒடுக்கமான பாகத்திலிருக்கிற வீட்டின் மேல் கூடுதலான ஒளியைப் பாயவிட்டபடி அந்த நட்சத்திரம் நின்று விடுகிறது.  அவ்வீட்டில் வசிக்கிறவர்களும் பெத்லகேமில் உள்ளவர்களும் அதைக் காணவில்லை.  ஏனென்றால் எல்லாரும் பூட்டிய கதவுகளுக்குள் உறங்குகின்றனர்.  ஆனால் அந்நட்சத்திரம் தன் ஒளி வீச்சுத் துடிப்புகளை அதிகரிக்கிறது.  ஆகாயத்தில் அரை வட்டமான கோடிட்டது போல் வேகமாக அதிர்கிறது.  அதன் வாலில் நட்சத்திர வலை நிரம்ப இரத்தினக் கற்கள் ஒளி வீசுவதால் ஆகாயம் பிரகாசமடைகிறது.  மற்றெல்லா நட்சத்திரங்களுக்கும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதுபோல் மிக அழகிய நிறங்களால் அவற்றை ஒளிபெறச் செய்கிறது.

அச்சிறிய வீடு இரத்தினங்களின் திரவ நெருப்பால் மறு உருவமடைகிறது.  சிறிய மேல் மெத்தையின் கூரை இருண்ட கல்படிக்கட்டு, கதவு எல்லாமே வைர முத்துப் பொடிகளால் தூவப்பட்ட வெள்ளிக்கட்டி போல் காணப்படுகின்றன.  சம்மனசுக்களாலும் கடவுளின் அன்னையாயிருக்கிற ஒரு தாயாலும் பயன்படுத்தக் கட்டப்பட்ட இந்தப் படிக்கட்டைப் போல் வேறொன்றை பூமியில் எந்த அரச மாளிகையும் கொண்டிருந்த தில்லை, இனி கொண்டிருக்கப் போவதுமில்லை.  கடவுளின் அரியாசனத்தில் அமர குறிக்கப்பட்ட அமலோற்பவ கன்னியின் சிறிய பாதங்கள் அந்த அழகிய வெள்ளிப் படிகளில் வந்திறங்கலாம்.

ஆனால் அக்கன்னிகை இதை அறிய மாட்டார்கள்.  அவர்கள் தன் குமாரனின் தொட்டிலருகே ஜெபித்தபடி விழித்திருக்கிறார்கள்.  அந்த நட்சத்திரம் சடப்பொருள்களை அழகுபடுத்திக் கொண் டிருக்கிற ஒளியழகைவிட கூடுதலான அழகொளி அவர்கள் ஆன்மாவில் இருக்கின்றது.

பெரிய சாலையிலிருந்து ஒரு குதிரை வரிசை வருகிறது.  சேணமிடப்பட்ட குதிரைகள் கையால் நடத்தப்பட்டு வருகின்றன.  ஒட்டக வரிசையும் அவற்றில் ஏறியிருப்போருடன் அல்லது சுமை ஏற்றிய ஒட்டகங்களுடன் வருகின்றது.  அவற்றின் குளம்புச் சத்தம் ஒரு நீரோடையில் கற்களில் மோதி ஓடும் நீரின் ஓசையைப் போலிருக்கிறது.  சதுக்கத்தை அடைந்ததும் அவை எல்லாம் நிற்கின்றன.  அந்த நட்சத்திர ஒளியில் குதிரைகளின் வரிசை அழகு வினோத அற்புதமாயிருக்கிறது.  சிறந்த அம்மிருகங்களின் சேணங்களும் அவற்றில் ஏறியிருப்போரின் உடைகளும் அவர்களின் முகங்களும் அவர்களுடைய மூட்டைகளும் எல்லாமே பிரகாசிக்கின்றன.  உலோக சாமான்கள், தோல் சாமான்கள், பட்டுகள், இரத்தினக் கற்கள், மேலுடைகள் யாவும் அந்த நட்சத்திர ஒளியால் ஒளியழகு அதிகரிக்கப்பெறுகின்றன.  கண்கள் ஜொலிக்கின்றன.  வாய்கள் சிரிக்கின்றன.   ஏனென்றால் இன்னொரு ஜோதி அவர்களின் உள்ளத்தில் பிரகாசிக்கிறது - அதுதான் பரலோக ஜோதியின் மகிழ்ச்சி!

ஊழியர்கள் வாகன மிருகங்களுடன் வணிக விடுதியை நோக்கிச் செல்லத் தொடங்குகிறார்கள்.  அப்பயண வாகன அணியிலிருந்து மூன்று பேர் கீழே இறங்குகிறார்கள்.    அவர்கள் இறங்கியதும் ஊழியன் ஒருவன் அந்த வாகன மிருகங்களை நடத்திச் செல்கிறான்.  அம்மூவரும் அவ்வீட்டை நோக்கி வருகின்றனர்.  வந்து தரையில் தாழப் பணிந்து தங்கள் நெற்றி மண்ணில் பட அதை முத்தமிடுகின்றனர்.  அவர்கள் உடுத்தியிருக்கும் விலையுயர்ந்த ஆடைகளிலிருந்தே அம்மூவரும் முக்கியமான மனிதர்கள் என்பது தெரிகிறது.  அவர்களில் ஒருவர், ஒட்டகத்திலிருந்து இறங்கியவர், கறுப்பு நிறத்தவராயிருக்கிறார்.  எத்தியோப்பிய உடையில் காணப்படுகிறார்.  அது பிரகாசமான சுத்தமான பட்டால் ஆனது.  ஒரு விலையுயர்ந்த இடைவாரினால் அது இடுப்பில் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது.  அதிலிருந்து ஓர் உடைவாள் இரத்தினங்கள் பதித்த கைப்பிடியில் தொங்குகிறது.  இரண்டு சிறந்த குதிரை களிலிருந்து இறங்கிய மற்ற இருவரில்  ஒருவர் அழகிய கோடுகளிட்ட ஆடையணிந்திருக்கிறார்.  அதில் முக்கியமாக தெரிகிறது மஞ்சள் நிறம்.  அவ்வாடை முகமூடியும் தலைமூடியும் பொருத்திய நீண்ட அங்கி போலிருக்கிறது.  அது தங்கச் சரிகைகளால் செறிவாக அலங்கரிக்கப்பட்டு சித்திரப் பூ வேலை செய்யப்பட்டுள்ளது.  மூன்றாமவர் நீண்ட கால்சட்டையணிந் திருக்கிறார்.  அது கரண்டைப் பக்கத்தில் ஒடுங்கி காணப்படுகிறது.  கால்சட்டைக்குள்ளிருந்து வெளியே தளதளவென்று தொங்கும் பட்டுச் சட்டையணிந் திருக்கிறார்.  அவர் தன்னைச் சுற்றி மூடியுள்ள மேலாடையின் பூ வேலை, ஒரு பூந்தோட்டக் காட்சியாக உள்ளது.  அவ்வளவு பிரகாசமான பூக்கள் அதில் நெய்யப்பட்டுள்ளன.  அவர் தலையில் வைரங்கள் பதித்த ஒரு சங்கிலியால் கட்டப்பட்ட தலைப்பாகை இருக்கிறது.

இரட்சகர் இருக்கிற இல்லத்துக்கு வணக்கம் செலுத்தியபின் அவர்கள் எழுந்து வர்த்தகர்களின் விடுதிக்குப் போகிறார்கள்.  ஊழியர்கள், ஏற்கெனவே அதன் கதவைத் தட்டி அது திறந்திருக்கிறது.

இவ்விடத்தில் காட்சி மறைகிறது.  பின் மூன்று மணி நேர இடைவெளிக்குப் பின் ஞானிகள் சேசுவை ஆராதிக்கிற காட்சியிலிருந்து தொடருகிறது.

இப்பொழுது பகல் வேளையாயிருக்கிறது.  மத்தியானத் திற்குப் பின் சூரியன் பிரகாசிக்கிறது.  மூன்று ஞானிகளின் ஊழியன் ஒருவன் சதுக்கத்தைக் கடந்து அந்த இல்லத்தின் படிக்கட்டுகளில் ஏறி உள்ளே செல்கிறான்.  பின் வெளியே வந்து விடுதிக்குப் போகிறான்.

மூன்று ஞானிகளும், தங்கள் ஊழியரில் ஒருவன் தங்களைப் பின்தொடர, வெளியே வருகிறார்கள்.  சதுக்கத்தைத் தாண்டு கிறார்கள்.  மெல்ல, கம்பீரமாக நடக்கிற உயர்வுடைய இந்த ஞானிகளை வழிப்போக்கர்கள் திரும்பி நின்று பார்க்கிறார்கள்.  அந்த ஊழியன் வெளியே சென்று கால்மணி நேரம் ஆகிறது.  ஆகவே இல்லத்தின் உள்ளே இருக்கிறவர்கள் இந்த விருந்தினரைச் சந்திக்க தங்களைத் தயாரித்துக் கொள்ள நேரம் இருந்தது.

நேற்றிரவு உடையணிந்திருந்ததைவிட அதிக சிறப்பாக ஞானிகள் உடையணிந்திருக்கிறார்கள்.  அவர்களின் பட்டு மினுங்குகிறது.  இரத்தினங்கள் மின்னுகின்றன.  தலைப்பாகை அணிந்திருக்கிறவருடைய தலைமேல் அரிய இறகுகளின் கொத்து அதிலும் அரிய சிம்புகளால் இறுக்கப்பட்டு அசைந்து ஆடிப் பிரகாசிக்கிறது.

ஓர் ஊழியன் பொன் தகடு பதித்துச் செய்யப்பட்ட ஒரு பேழையை ஏந்தி வருகிறான்.  இன்னொருவன் அழகுற பொன் மூடியிடப்பட்ட ஓர் அழகிய பாத்திரத்தை வைத்திருக்கிறான்.  மூன்றாம் ஊழியன் ஓர் அகன்ற குட்டையான பொன் ஜாடியைக் கொண்டு வருகிறான்.  அதன் மூடி கூர்ங்கோபுர வடிவமா யிருக்கிறது.  அதன் உச்சியில் ஒரு வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் பரிசுகள் பாரமாயிருப்பதாகத் தெரிகிறது.  ஏனென்றால் ஊழியர்கள் அவற்றை சற்று சிரமத்துடன் சுமந்து வருகிறார்கள்.  முதலில் குறிப்பிட்ட பேழை அதிக பளுவாயிருக்க வேண்டும்.

ஞானிகள் படிகளில் ஏறி உள்ளே போகிறார்கள்.  தெருவிலிருந்து வீட்டின் பின்புறம் வரை நீண்டு போகிறது அந்த அறை.  வீட்டின் பின்புறமுள்ள சமையல் தோட்டம் சூரிய ஒளிபடும் ஒரு ஜன்னல் வழியாகத் தெரிகிறது.  மற்ற இரு சுவர்களிலும் கதவுகள் இருக்கின்றன.  அவற்றின் வழியாக அவ்வீட்டு சொந்தக்காரர்கள், ஒரு மனிதன், ஒரு ஸ்திரீ, சில பையன்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாதா தன் மடிமேல் சேசு பாலனை அமர வைத்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.    சூசையப்பர் அருகில் நிற்கிறார்.   ஞானிகள் உள்ளே வரவும் மாதாவும் எழுந்து தலைபணிகிறார்கள்.  மாதா முழுவதும் வெண்ணுடை அணிந்திருக்கிறார்கள்.  கழுத்து முதல் பாதம் வரையிலும், தோள் முதல் மணிக்கட்டு வரையிலும் அது உள்ளது.  இளம் பொன் முடிச்சுருள்களுடனும், நிகழ்வதைக் கண்டு சிவக்கும் வதனத்துடனும், இனிதாய் முறுவலிக்கும் கண்களுடனும், மிக்க அழகுடன் விளங்குகிறார்கள்.  “கடவுள் உங்களுடன் இருப்பாராக!” என்று மாதா வாழ்த்துகிறார்கள்.  மூன்று ஞானிகளும் ஒருகணம் ஆச்சரிய வசப்பட்டு நிற்கிறார்கள்.  அதன்பின் அவர்கள் முன்சென்று மாதாவின் பாதங்களில் தீர்க்க தெண்டனாய் விழுந்து பணிகிறார்கள்.  மாதாவை அமரும்படி அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

மாதா அவர்களை அமரும்படி கூறியும் அவர்கள் உட்காரவில்லை.  அவர்கள் முழங்காலிட்டபடியே தங்கள் குதிங்காலில் சாய்ந்து கொள்கிறார்கள்.  அவர்களுக்குப் பின்னால் ஊழியர்கள் மூவரும் முழங்காலிட்டிருக்கிறார்கள்.  அவர்கள் வாசல் பக்கமாக இருக்கிறார்கள்.  காணிக்கைப் பொருட்களை ஞானிகளின் முன்பாக வைத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

ஞானிகள் மூவரும் தேவபாலனை உற்றுப் பார்த்துத் தியானிக்கிறார்கள்.  சேசுவுக்கு ஒன்பது மாதம் அல்லது ஒரு வயது இருக்கும்.  அவர் ஜீவ களையுடனும் பலத்துடனும் இருக்கிறார்.  மாதாவின் மடிமீது அமர்ந்தபடி புன்னகை புரிந்து ஒரு சிறு பறவைபோல் தொனிக்கும் குரலில் மழலை மொழி பேசுகிறார்.  அவர் தன் தாயைப்போலவே முழுதும் வெண் உடையணியப்பட்டு சின்னக் காலணிகளுடன் இருக்கிறார்.  துருதுருவென வரும் கால்கள் அவருடைய எளிய சட்டைக்குக் கீழ் நீண்டு தெரிகின்றன.  கண்டதையும் பற்றும் திரண்ட கரங்கள்.  மிக்க அழகிய சிறு முகம்.  இருண்ட நீல விழிகளின் பிரகாசம்.  வடிவழகான வாய். குழியும் கன்னங்கள்.  அவர் சிரிக்கும்போது முதல் சிறு பற்கள் தெரிகின்றன. அவர் தலைமுடி எவ்வளவு பிரகாசமாயும் மிருதுவாயுமுள்ளன வென்றால் அவை தங்கத் துகள்கள் போல் காணப்படுகின்றன.

மூவரிலும் மூப்பரான ஞானி எல்லார் சார்பிலும் பேசுகிறார்.  கடந்த டிசம்பர் மாதத்தில் அசாதாரணமான ஒளி வீசிய ஒரு புதிய நட்சத்திரம் வானத்தில் தோன்றக் கண்டோம்.  வான சாஸ்திரப் படங்கள் அந்த நட்சத்திரத்தைப் பற்றி எந்தத் தகவலும் அடையாளமும் காட்டவில்லை.  அதற்குப் பெயரும் இல்லையாதலால் அது அறியப்படவில்லை.  கடவுளின் உள்ளத்திலிருந்து புறப்பட்ட அவ்விண்மீன் வளர்ந்து ஒளி வீசி கடவுளுடைய ஒரு பரிசுத்த உண்மையை, அவருடைய ஓர் இரகசியத்தை மனிதர்களுக்குக் கூறியது.  ஆனால் மனிதர்களின் மனம் சகதியுள் மூழ்கியிருந்ததால் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.  அவர்கள் தங்கள் கண்களை கடவுளை நோக்கி எழுப்பவுமில்லை.  வானவெளியில் கடவுள் எரியும் நட்சத்திரங்களைக் கொண்டு எழுதும் வார்த்தைகளை அவர்கள் வாசிக்கக் கூடவுமில்லை.  ஆண்டவர் என்றும் ஆசீர்வதிக்கப்படுவாராக!

நாங்கள் அதைக் கண்டு அதன் பொருளைக் கண்டுபிடிக்க முயன்றோம்.  எங்களுக்கு நாங்கள் வழக்கமாக அனுமதித்துக் கொண்ட சிறிதளவு உறக்கத்தையும் மகிழ்ச்சியுடன் விட்டுவிட்டோம்.  உணவையும் மறந்து கிரக ஓட்டத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டோம்.  நட்சத்திரங்களின் சங்கமம், நேரம், காலம், கடந்து செல்லும் மணித்தியாலங்கள், வான சாஸ்திர தகவல்கள் இவை யாவும் சேர்ந்து எங்களுக்கு அந்த நட்சத்திரத்தின் பெயரையும் அதன் இரகசியத்தையும் வெளிப்படுத்தின.  அந்த நட்சத்திரத்தின் பெயர்:  “மெசையா.” அதன் இரகசியம்: “மெசையா நம் உலகத்திற்கு வந்திருக்கிறார்” என்பது.

ஆகவே நாங்கள் அவரை ஆராதிக்கப் புறப்பட்டோம்.  நாங்கள் ஒருவர் மற்றவருக்கு அறிமுகமில்லாதவர்கள்.  மலைகளைத் தாண்டியும், பாலைவனங்கள் வழியாகவும், பள்ளத்தாக்குகளையும், நதிகளையும் கடந்தும், இராக்காலப் பயணஞ் செய்து நாங்கள் பாலஸ்தீனை நோக்கி வந்தோம்.  காரணம், அந்த நட்சத்திரம் அந்தத் திசையை நோக்கி நகர்ந்தது.  மூன்று வித்தியாசமான இடங்களிலிருந்து வந்த எங்களுக்கு அந்த நட்சத்திரம் அதே திசையைக் காட்டிச் சென்றது.  நாங்கள் சாக்கடலுக்கு அப்பால் சந்தித்தோம்.  சர்வேசுரனுடைய சித்தம் எங்களை அங்கே ஒன்று சேர்த்தது.  அதிலிருந்து நாங்கள் சேர்ந்து பயணம் செய்தோம்.  ஒவ்வொருவரும் தன் தன் மொழியைப் பேசினாலும் ஒருவரையயாருவர் புரிந்து கொண்டோம்.   நித்திய பிதாவின் புதுமையினால் ஒவ்வொரு நாட்டின் மொழியையும் நாங்கள் கண்டுபிடித்து அதில் பேசவும் செய்தோம்.

நாங்கள் சேர்ந்தே ஜெருசலேமுக்குச் சென்றோம்.  ஏனென்றால் மெசையாவானவர் ஜெருசலேமின் அரசனாக, யூதர்களின் இராஜாவாக இருக்க வேண்டியவர்.  ஆனால் அந்தப் பட்டணத்து வானத்தில் நட்சத்திரம் தன்னை மறைத்துக் கொண்டது.  அதனால் எங்கள் உள்ளம் உடைகிற அளவிற்கு நாங்கள் துயரப்பட்டு கடவுளுக்கு நாங்கள் தகுதியற்றுப் போனோமோ என்று எங்களையே பரிசோதித்தோம். ஆனால் எங்களின் மனச்சாட்சி எங்களுக்குத் திடமூட்டியது.  ஆகவே நாங்கள் ஏரோதரசனிடம் சென்று, எந்த அரச மாளிகையில் யூதர்களின் இராஜா பிறந்திருக்கிறார், நாங்கள் அவரை ஆராதிக்க வந்திருக்கிறோம் என்று கூறி விசாரித்தோம்.  அரசன் பெரிய குருக்களையும் வேதபாரகர்களையும் வரவழைத்து மெசையா எங்கே பிறந்திருக்கக் கூடும் என்று கேட்டான்.  “யூதேயாவில், பெத்லகேமில்” என்று அவர்கள் பதில் கூறினார்கள்.  

ஆகையால் நாங்கள் பெத்லகேம் நோக்கி வந்தோம்.  பரிசுத்த நகரத்தை விட்டு நாங்கள் வெளியேறிய உடனே நட்சத்திரம் மீண்டும் எங்களுக்குக் காணப்பட்டது.  நாங்கள் பெத்லகேமுக்கு வந்து சேருவதற்கு முந்திய இரவில் அதன் ஒளி அதிகரித்திருந்தது.  முழு வானமும் பற்றி எரிவது போலிருந்தது.  இந்த வீட்டின் மேல் அது நின்றது.  அதன் ஒளியில் மற்றெல்லா நட்சத்திரங்களின் ஒளியும் உள்ளடங்கிப் போயிற்று.  அதனால் புதிதாய்ப் பிறந்த தெய்வீகக் குழந்தை இங்குதான் உள்ளதென நாங்கள் அறிந்து கொண்டோம்.  இப்பொழுது நாங்கள் அவரை வழிபட்டு எங்கள் காணிக்கைகளைச் செலுத்துகிறோம்.  யாவற்றுக்கும் மேலாக எங்களுடைய இருதயங்களை, எங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வரப்பிரசாதத்திற்காக இடைவிடாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  அவருடைய திருக்குமாரனின் திருச் சரீரத்தை இப்பொழுது கண்டுள்ள நாங்கள் அவரை இனி ஒருபோதும் நேசியாதிருக்க மாட்டோம்.  பின்னர் நாங்கள் ஏரோதிடம் போக எண்ணியிருக்கிறோம்.  ஏனென்றால் ஏரோதும் ஆராதிக்க விரும்பினான்.  இவ்வாறு அவர் கூறி முடித்தார்.  மேலும்,

இதோ, ஓர் அரசன் கொண்டிருக்கத் தகுதியான பொன்.  இதோ இறைவனுக்குத் தகுதியான தூபம்.  இதோ தாயே, மீறை.  காரணம், உங்கள் குழந்தை கடவுளும் மனிதனுமாக இருக்கிறார்.  அவர் மாம்சத்தினுடையவும் மனித வாழ்க்கையினுடையவும் கசப்பையும் மாற்ற முடியாத மரண சட்டத்தையும் அனுபவிப்பார்.    அன்பினால் நிரம்பியிருக்கிற எங்கள் உள்ளங்கள் இதைக் கூறாதிருக்கவே விரும்புகின்றன.  அவருடைய ஆன்மாவைப் போல் அவருடைய சரீரமும் நித்தியமானது என்றே கருத விரும்புகிறோம்.  ஆனால் எங்கள் ஆகமங்களும் அதற்கெல்லாம் மேலாக எங்கள் ஆத்துமங்களும் சரியாக இருக்குமானால், இதோ இந்த உங்கள் குமாரன், இரட்சகர், கடவுளின் அபிஷேகம் பெற்றவர்.  ஆதலால் உலகத்தை இரட்சிக்கும்படியாக அதன் தீமைகளை அவர் தன்மேல் சுமந்து கொள்ள வேண்டியதாகும்.  அவற்றுள் ஒரு தண்டனை மரணமாகும்.  இந்த மீறை அந்த தருணத்திற்காகவே.  அவருடைய பரிசுத்த சரீரம் அழுகலின் கேட்டிற்கு உட்படாதிருக்கும்படியும் உயிர்ப்பு வரையிலும் அது தன் முழுமையைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவுமே.  இந்தக் காணிக்கையின் நிமித்தம் அவர் தம் ஊழியர்களாகிய எங்களை நினைவில் கொண்டிருந்து அவருடைய இராச்சியத்திற்கு வர எங்களை அனுமதிப்பாராக.  அதற்கு முன் நாங்கள் அர்ச்சிக்கப்படும்படியாக, அன்னையே, உங்கள் பிள்ளையை எங்கள் அன்பிற்கு விட்டுக் கொடுப்பீர்களா?  அவருடைய பரலோக ஆசீர்வாதம் எங்கள் மேல் இறங்கும்படியாக அவருடைய பாதங்களை முத்தமிடத் தாருங்கள் என்று ஞானிகள் கேட்டார்கள்.

மாதா அந்த ஞானியின் வார்த்தை உண்டாக்கிய பயத்தை மேற்கொண்டு, அவை சுட்டிக்காட்டிய விசனத்திற்குரிய காரியங்களினால் ஏற்பட்ட துயரத்தையும் ஒரு புன்னகையால் மறைத்துக்கொண்டு, திருப்பாலனை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.  அவர்களுள் அதிக மூப்பரான ஞானியின் கரங்களில் சேசுவை வைக்கிறார்கள்.  அவர் பாலனை முத்தமிட்டு பாலனுடைய அன்பு பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டு, மற்ற இருவரிடமும் பாலனைக் கொடுக்கிறார்.

சேசு புன்னகை புரிகிறார்.  மூன்று ஞானிகள் அணிந்துள்ள சின்ன சங்கிலிகளையும் அவர்களுடைய ஆடைத் தொங்கல்களையும் பிடித்து விளையாடுகிறார்.  திறந்திருக்கும் காணிக்கைப் பெட்டிகளை வினோதமுடன் பார்க்கிறார்.  அங்கே மஞ்சளாக பிரகாசிக்கிற பொருளையும், மீறைப் பேழையின் பளிச்சென்ற மூடியின்மேல் சூரிய ஒளிபட்டதால் தோன்றிய வானவில்லையும் பார்க்கிறார், சிரிக்கிறார்.

இதன்பின் ஞானிகள் சேசு பாலனை மாதாவிடம் திரும்பக் கொடுக்கிறார்கள்.  பின் எழுந்து நிற்கிறார்கள்.  மாதாவும் எழுகிறார்கள்.  ஒருவர்க்கொருவர் தலைவணங்குகிறார்கள்.  அவர்களுள் இளைய ஞானி ஓர் ஊழியனுக்குக் கட்டளையிட அவன் வெளியே செல்கிறான்.  மூவரும் மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அங்கிருந்து போவதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை.  கண்களில் நீர் மல்குகிறது.  கடைசியாக அவர்கள் வாசலுக்கு வருகிறார்கள்.  மாதாவும் சூசையப்பரும் உடன் தொடருகிறார்கள்.

சேசு பாலன் கீழே இறங்கி, மூத்த ஞானியிடம் தன் கரத்தைக் கொடுக்க விரும்புகிறார்.  அப்படியே மாதாவும் அந்த ஞானியும் அவருக்கு உதவியாக குனிந்து அவர் கரங்களைப் பிடித்திருக்க, அவர் நடக்கிறார்.  சேசு எல்லாக் குழந்தைகளையும் போல் சிரித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் சூரிய ஒளிபடும் தரையில் தத்தி நடக்கிறார்.

அந்த வீட்டளவு நீண்ட அந்த அறையின் வாசலுக்கு வந்ததும் ஞானிகள் மறுபடியும் முழங்காலிட்டு சேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார்கள்.  மாதா தேவ குழந்தை மீது குனிந்து நின்று, அவர் கரத்தைப் பிடித்து, ஒவ்வொரு ஞானியின் சிரசின் மீதும் ஆசீர்வதிக்கும் பாவனையாக அதை வைக்கிறார்கள்.  அது ஏற்கெனவே சேசுவின் சிறிய விரல்களாலும் மாதாவின் உதவும் கரத்தாலும் வரையப்பட்ட சிலுவை அடையாளமாயிருந்தது.

ஞானிகள் மூவரும் படிகளில் கீழே இறங்குகிறார்கள்.  பயண மிருகங்கள் எல்லாம் அவர்களுக்காகத் தயாராக நிற்கின்றன.  மாலைச் சூரிய ஒளியில் குதிரைகளின் அலங்காரப் பட்டைகள் மின்னுகின்றன.  சதுக்கத்தில் இந்த அசாதாரணமான காட்சியைக் காண ஜனங்கள் கூடி நிற்கிறார்கள்.

சேசு பாலன் கைகளைத் தட்டிச் சிரிக்கிறார்.  மாதா அவரை அகன்ற கைப்பிடிச் சுவரில் நிறுத்தி ஒரு கையால் அவர் விழுந்து விடாதபடி மார்போடணைத்துப் பிடித்திருக்கிறார்கள்.  சூசையப்பர் கீழே இறங்கிப் போய் ஞானிகள் குதிரைகளிலும் ஒட்டகத்திலும் ஏறும்போது சேணங்களிலுள்ள கால்மணைகளைப் பிடித்து உதவுகிறார்.

ஊழியர்களும் எஜமான்களும் எல்லாரும் குதிரைகளில் ஏறியாயிற்று.  புறப்பட கட்டளை கொடுக்கப்படுகிறது.  ஞானிகள் தாங்கள் ஏறியிருக்கும் மிருகங்களின் முதுகு வரையிலும் தாழ்ந்து இறுதி வணக்கம் செலுத்துகிறார்கள்.  சூசையப்பரும் தலை பணிகிறார். மாதாவும் தலை கவிழ்கிறார்கள்.  சேசுவின் கரத்தைப் பற்றி மீண்டும் வழியனுப்பும் பாவனையிலும் ஆசீர்வதிக்கிற பாவனையிலும் அசைக்கிறார்கள்.