இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துவே எங்கள்பிரார்த்தனையைக் கேட்டருளும்.

நித்திய பிதாவை அவர் தம் திருக்குமாரன் சேசு கிறீஸ்துநாதரின் நாமத்தினால் மன்றாடினோம். இப்பொழுது கிறீஸ்துநாதரையே மன்றாடுகிறோம். நமது விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரைக் கெஞ்சுகிறோம். “கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.” 

கிறீஸ்துநாதரில் நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இவ்வார்த்தைகளில் எதிரொலிக்கின்றது. “கிறீஸ்துநாதர் புதிய ஏற்பாட்டின் மத்தியஸ்தர். தமது பிதாவிடம் நமக்காக மனுப்பேசி நமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொடுக்க வல்லவர். அவ்விதம் பெற்றுத்தர அவர் எப்பொழுதும் காத்திருக்கின்றார்.” என்ற சத்தியத்தை உள்ளூர உணர்ந்து விசுவசிக்கும் ஆத்துமத்தின் வார்த்தைகள் இவைகள்! 

இருதயத்தின் அடித்தளத்திலிருந்து எழும் வார்த்தைகள்! தன் மழலையின் குரலைக் கேட்க, அன்புடன் குனிந்து நிற்கும் தந்தையைப் போல, சேசுநாதரும் எளியோர் நம் பாரிசமாய்த் திரும்பி நம் மன்றாட்டை ஏற்றருள வேண்டுமென மன்றாடுகிறோம். உணவு கேட்டழும் குழந்தையை மார்போடணைத்து உணவூட்டும் அன்னையைப் போல, அன்னையிலும் பதின்மடங்கு அன்பு மிக்க சேசுவும் நம்மை தமது இருதயத்தில் ஏற்று, நமது இருதய ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

இவ்விதம் வேண்டும் ஆத்துமம் எத்துணை பாக்கியம் பெற்றது! சேசுவை அது நம்புகிறது. வாயளவில் மாத்திரமல்ல; செயலிலும்தான். அவரது வாய்மொழிகளைத் தத்தளிக்காமல் விசுவசிக்கிறது. இருபது நூற்றாண்டுகளுக்கு முன் சேசுநாதர் உரைத்த வார்த்தைகள் அதன் காதுகளில் சதா ஒலிக்கின்றன. 

“கேளுங்கள் கொடுக்கப்படும்; (என் இருதயத்தை) தட்டுங்கள் திறக்கப்படும்; (என் இருதயத்தில்) தேடுங்கள், கண்டடைவீர்கள்” (லூக். 11:9,10). 

“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றையும் கேட்கவில்லை. (இப்பொழுதோ) கேளுங்கள், உங்கள் சந்தோஷம் பூரணமாகும் பொருட்டுப் பெற்றுக் கொள்வீர்கள்” (அரு.16:24). 

“நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை ஏதேது கேட்பீர்களோ, சுதனிடத்தில் பிதா மகிமைப்படும் பொருட்டு, நான் அதைச் செய்தருளுவேன். என் நாமத்தினாலே நீங்கள் ஏதேனும் என்னைக் கேட்பீர்களாகில், நான் அதைச் செய்தருளுவேன்” (அரு. 14:13,14).

இருபது நூற்றாண்டுகளுக்கு முன் நமதாண்டவர் பேசிய வார்த்தைகள் தான். ஆயினும் காலப் போக்கில் அவைகள் பழமையாகி விடவில்லை; தங்கள் அர்த்தத்தை இழந்து விடவில்லை. அன்றும், இன்றும், என்றும் கிறீஸ்துநாதர் ஒரே நிலையினர். அவ்வாறே அவரது வாய்மொழிகளும். “வானமும் பூமியும் அழிந்தாலும் அவரது வார்த்தைகள் அழியா.” நம்மைப் போல் கொடுத்த வாக்கை மறப்பவருமல்ல சேசுநாதர்; அன்றி அதை நிறைவேற்ற மறுப்பவருமல்ல. 

சேசுவை நம்பும் ஆத்துமம் இவ்வுண்மைகளை அறிகிறது; அறிந்து விசுவசிக்கிறது; விசுவசித்து நம்பிக்கை கொள்ளுகிறது. இவ்விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் உந்தப்பட்டு, சேசுவிடம் ஓடுகிறது. தன் இருதய ஆசைகளை வெளியிடுகிறது. “கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்” என்று ஓலமிடுகிறது. நம்பிக்கை நிறைந்த அவ்வபயக் குரல் கூரிய அம்பென கிறீஸ்துவின் அன்பு நிறைந்த இருதயத்தை ஊடுருவிப் பாய்கிறது. அன்புச் சுனையிலிருந்து வரப்பிரசாத வெள்ளம் பீரிடுகிறது; தனது தளரா நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை ஆத்துமம் உணருகிறது.

ஆனால் எத்தனை விசை நமது நம்பிக்கை வாயளவோடு நின்றிருக்கின்றது! எத்தனை விசை நமது திடனற்ற நம்பிக்கைக்காக நம்மை நாமே கடிந்து கொள்ளப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம்! நமது பெற்றோரை நாம் முழுமனதுடன் நம்புகிறோம்; ஆனால் எத்தனை விசை நமது பெற்றோரை நம்பும் அளவுகூட கிறீஸ்துநாதரை நாம் நம்புகிறதில்லை; ஏன்-நமது உற்ற நண்பர்களை நம்பும் அளவு கூட கிறீஸ்துநாதரை நாம் நம்புகிறதில்லை. 

அந்தோ! நம்மைப் படைத்துப் பாதுகாத்து வரும் தேவன் நமது பெற்றோரிலும் தாழ்ந்தவராகி விட்டாரா? நமது நண்பர்களைவிட கீழாகப் போய்விட்டாரா? நமது நம்பிக்கை முழுமைக்கும் உரித்தான தேவன்மீது ஒரு கடுகளவு நம்பிக்கையாவது இல்லையா? நமது நம்பிக்கையை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கும் இருதயத்தின் தணியாத் தாகத்தைத் தணிப்பார் யாருமில்லையா? ஓ எத்தனை விசை நம்பிக்கையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கின்றது அவ்வன்பின் இருதயம்.

“ஓ! அன்பு நிறைந்த திரு இருதயமே! தேவரீர் என்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை விசுவசிக்கிறேன்; அன்புக்குப் பிரதியன்பை இந்த நீசனிடத்தில் என்றும் எதிர்பார்க்கும் தயாள அன்பரே! உமது ஆவலை நான் பூர்த்தி செய்யவில்லை என்பது உண்மைதான். இதுகாறும் நான் உம்மிடத்தில் முழு நம்பிக்கை வைக்கவில்லை என்பதும் மெய்தான். சில சமயங்களில் அவநம்பிக்கையென்னும் மாதுரோகத்தால் உம்மை மனநோகப் பண்ணினேன் என்பதும் உண்மை. 

இனிய சேசுவே! அவைகளுக்கெல்லாம் இப்போது தேவரீரிடத்தில் மன்னிப்புக் கேட்கிறேன்; அத்துடன் இனிமேலாக என் நம்பிக்கை யாவையும் உமது பேரில் வைக்கவும், அந்நம்பிக்கையிலிருந்து ஒருபோதும் வழுவாதிருக்கவும் வரம் தந்தருள வேண்டுமென்றும் தேவரீரை என் முழுமனதோடு கெஞ்சி மன்றாடுகிறேன்; எனது மன்றாட்டைக் கேட்டருளும்.” 

கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!