நமது வேதம் மனித மற்றும் தெய்வீகத் தன்மையுள்ளது

ஆனால் சேசுநாதர் நம்மோடு கொண்டுள்ள எல்லா வகையான உறவுகளிலும் அவர் தமது சித்தப்படி செயல்பட முடியும் என்று சொல்ல முடியும் என்றால், பாவசங்கீர்த் தனம் இல்லாமலே நம் பாவங்களை மன்னிக்க சேசுவால் முடியும் என்பதும், எந்த ஒரு மனிதத் தலையீடும் இன்றி இதை அவரால் செய்ய முடியும் என்பதும் மட்டும் ஏன் இவ்வளவு வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

நாம் ஏன் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்?! நம் தேவைகள் அனைத்தும் அவருக்குத் தெரியாதா? நாம் எதை விரும்புகிறோம், எதைப் பெற்றுக் கொள்ள நம்பியிருக் கிறோம் என்பதையெல்லாம் அவர் அறியாதிருக்கிறாரா? அப்படியிருக்க, நாம் நமக்குத் தேவையானவற்றைக் கேட்க வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்பதை அவர் ஏன் நமக்குக் கடமையாக்குகிறார்?

மேலும், ஒரே வார்த்தையால் ஜென்மப் பாவத்தில் இருந்து நம்மைக் குணமாக்க அவரால் முடியாதா? பிறகு ஏன் நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும், நம் தலைகளில் ஞானஸ்நானத் தீர்த்தம் ஊற்றப்பட வேண்டும், இந்தச் சடங்கின்போது, சில குறிப்பிட்ட வார்த்தைகள் உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் ஏன் சொல்கிறார்? இந்தச் சடங்கு நிறைவேற்றப்படாவிட்டால், நாம் மோட்சத்தில் பிரவேசிக்க முடியாது என்று அவர் ஏன் கூறுகிறார்?

மரிக்கிற ஒரு மனிதன் ஏன் எண்ணெயால் பூசப்பட வேண்டும்? தேவ நற்கருணையாகிய தேவத்திரவிய அனுமானத்தில் அப்பமும், இரசமும் ஏன் பயன்படுத்தப் பட வேண்டும்? மனிதத் தலையீடு இல்லாமலும், எந்த விதமான உலகப் பொருட்களைப் பயன்படுத்தாமலும் எதையும் செய்ய கடவுளால் முடியுமே! பிறகு ஏன் சேசுநாதர் குருடனைக் குணமாக்கிய போது, களிமண்ணையும், தம் எச்சிலையும் பயன்படுத்தினார்?

நமது கத்தோலிக்க வேதம் தெய்வீகமானதாகவும், மனிதத் தன்மையுள்ளதாகவும் இருக்கிறது. அது தனது பிறப்பிலும், தான் ஆன்மாக்களின் மீது பொழிகிற வரப்பிர சாதங்களிலும், தான் தருகிற ஒளிகளிலும், சமாதானத்திலும், ஆறுதலிலும் தெய்வீகமானதாக இருக்கிறது. அது நம் மனித சுபாவத்திற்கு ஒத்த விதமாக இருக்க வேண்டும், எல்லா விதத்திலும் நம் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதால் அது மனிதத் தன்மையுள்ளதாக இருக் கிறது. சர்வேசுரன் தமது கைவேலைகள் அனைத்திலும் இணக்கமுள்ளவராக செயல்படுகிறார் - ஓம்னியா திஸ்போனித் சுவாவித்தெர் (“அவர் எல்லாவற்றையும் இன்பமான விதத்தில் ஒழுங்குபடுத்துகிறார்'') - ஆனாலும் நமக்காக ஒரு மகா உத்தமமான, முழுமையான பரிசுத்த வேதத்தை உருவாக்குவதில்தான் இந்த அவருடைய இணக்கமும், ஒழுங்கும் முழுமையாக வெளிப்படுகின்றன.

மனிதர்களுக்கான ஒரு மதம் குளிர்ந்ததாகவோ அல்லது வெறும் ஏட்டளவிலோ, உறுதியற்றதாகவோ இருக்கக் கூடாது. அது கடுமையானதாகவோ, மனதிற்கு ஒவ்வாததாவோ இருக்கக் கூடாது. அவ்வாறே அது நம் உணர்வுகளுக்கு முரண்பட்டதாகவோ, அதிர்ச்சியூட்டுவ தாகவோ இருக்க் கூடாது. அது நம் கருத்துக்களிலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் மாறுபட்டதாகவும் இருக்கக் கூடாது. அது நம் இருத்தலின் பொது விதிகளுக்குப் பொருத்தமானதாகவும், நம் புலன்களால் உணரக்கூடிய தாகவும், காணக் கூடியதாகவும், புத்தியால் தெளிவாக அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் நம் பார்வை, கேட்டல், உணர்தல் ஆகியவற்றின் வழியாக, நம் கற்பனை, நினைவு, சித்தம் ஆகியவற்றின் உதவியோடு நம் அறிவைப் பெற்றுக் கொள்கிறோம், அதைச் செயல்படுத்துகிறோம். எல்லா வழிகளிலும் நமக்கு எவ்வளவோ முக்கியத்துவ முள்ளதாக இருக்கிற நம் பரிசுத்த வேதமும் நம் சத்துவங்களால் அறியப்படும் அளவிற்குள் வர வேண்டும். அது மனிதர்களுக்கான ஒரு வேதமேயன்றி, சம்மனசுக் களுக்கான ஒன்று அல்ல; அது பரலோக அர்ச்சியசிஷ்டவர் களுக்கானது அல்லது, மாறாக ஆறுதலும், பலமும், இரக்கமும், தயவும் தேவைப்படுகிற பலவீனர்களும், வழிதவறுபவர்களுமான பாவிகளுக்கானது.

நமதாண்டவர் போதிக்கும்போது மேன்மையுள்ள, ஆனால் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவர் தம் வார்த்தைகளைக் கேட்பவர்களுக்குப் பொருத்தமான, எளிய உதாரணங்களையும், உவமை களையும் பயன்படுத்தினார். அந்த உதாரணங்களும், உவமைகளும் அவர்கள் வாழ்ந்த, அவர்களுக்கு மிகவும் பழக்கமான சூழ்நிலைகளிலிருந்தே எடுக்கப்பட்டன. தமது ஒப்புவமைகளில் அவர் மலர்களையும், வயல்களையும், கடலையும் பற்றிப் பேசினார். பரலோக இராச்சியத்தை அதன் முழு மகிமையோடும் அவர் ஒரு கடுகு விதைக்கும், கடலில் வீசப்பட்டு, பலவகையான மீன்களை வாரி வருகிற வலைக்கும் ஒப்பிட்டார். தம்மையே கூட அவர், தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளின் அடியில் ஒன்றுகூட்டுகிற ஒரு கோழிக்கு ஒப்பிட்டார்.

மக்களோடு உறவாடும்போது, அவர் தாழ்மையும், துயரமும் உள்ள மக்களின் தேவைகளை நோக்கித் தம்மையே தாழ்த்தினார். நயிம் பட்டணத்து விதவையின் மகனை உயிரோடு எழுப்பியபோது எத்தகைய தெய்வீக ஆறுதலையும், மகிழ்ச்சியையும் கொண்டு, அவர் அந்தப் பரிதாபத்திற்குரியவளைத் தேற்றினார்! லாசரின் மரணத் தைப் பற்றி அவர் எவ்வளவு பாசத்தோடு அழுதார்! பரிசேயனின் வீட்டில் பாவியாயிருந்த மரிய மதலேனம்மாள் தம் பாதங்களின் அருகில் முழந்தாளிட்டபோது, எவ்வளவு நேசத்தோடு அவர் அவளை ஆதரித்துப் பாதுகாத்தார்! பாவத்தில் பிடிபட்ட பெண்ணை எவ்வளவு கருணையோடு அவர் மன்னித்தார்! எவ்வளவு இனிமையோடு சிறு குழந்தை களைத் தம்மிடம் வர விடும்படி அவர் கட்டளையிட்டார்! எவ்வளவு தயவோடும் நேசத்தோடும் தமது தெய்வீக மார்பில் தலைசாய்க்க தமது பிரிய சீடனாகிய அருளப்பரை அவர் அனுமதித்தார்!

மெய்யாகவே, மெய்யாகவே அவர் மனிதனானார், நம் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், நம் துயரங் களையும் பகிர்ந்து கொண்டார், நாம் அனுபவிக்கும் அதே வேதனைகளுக்கு அவர் தம்மை உட்படுத்திக் கொண்டார். அதே பசி, தாகத்திற்கும், குளிருக்கும், களைப்பிற்கும் அவர் உள்ளானார். அதிக எளிதாக அவரைப் போல் ஆக நம்மால் முடியும்படியாக, அவர் எல்லா விதத்திலும் நம்மைப் போலாக விரும்பினார்.

இதே காரணத்திற்காக, எல்லா விதத்திலும் நமக்குப் பொருத்தமான ஒரு பரிசுத்த வேதத்தை நமக்குத் தர அவர் விரும்பினார். அது எளியதாகவும், இயல்பானதாகவும், சமாதானமும், ஆறுதலும் நிரம்பப் பெற்றதாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். இந்தக் கோட்பாட்டை அடுத்து வரும் அத்தியாயத்தில் நாம் பாவசங்கீர்த்தனத் திற்குப் பொருத்திக் கூறுவோம்.