இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துவே எங்கள்பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

“எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்” என்று கிறீஸ்துநாதரை மன்றாடினோம். இப்பொழுது நம் மன்றாட்டு ஒரு சிறிது மாற்றமடைந்துள்ளது; “எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.” 

இம்மன்றாட்டை கேட்கும்போது இரு கேள்விகள் நமது மனதில் எழலாம். 1. சற்று முன் உச்சரித்த கிறீஸ்துவின் திருநாமத்தைத் திரும்பவும் உச்சரிக்க வேண்டியதின் அவசியமென்ன! 2. “நன்றாகக் கேட்டருளும்”என்று ஏன் மன்றாட வேண்டும்?

சேசுவின் நாமம் இனிமை மிக்க நாமம்; இன்பம் பொழியும் நாமம்; ஈடேற்றம் தரும் நாமம்; ஆறுதலளிக்கும் நாமம்; சாந்தி நல்கும் நாமம். இத்தகைய நாமத்தை ஒரு முறையல்ல, இருமுறையல்ல, ஆயிரம் முறையல்ல, ஆயிரமாயிர முறை உச்சரித்தால் தானென்ன? தெவிட்டாத தீஞ்சுவை அமுதன்றோ அந்நாமம்? அது தெவிட்டுதல் எங்ஙனம்? திரும்பத் திரும்பச் சொல்லுவதால் அதன் இனிமை குறைந்துவிடுமென்ற பயம் எழுகின்றதா? அர்த்தமற்ற பயம் அது. 

“அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறுமோ?” எவ்வளவுக்கு எவ்வளவு அவ்வினிய நாமத்தை உச்சரிக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு இனிமையன்றோ காண்போம்; அன்றியும் நமது நிலைமையைச் சற்று கவனித்தால் சேசுவின் நாமத்தை அடிக்கடி உச்சரிக்க வேண்டுவதன் அவசியம் தெற்றென விளங்கும். 

நாம் எல்லோரும் பரதேசிகள்; இவ்வுலகம் நமக்குச் சதமல்ல; மோட்சமே நமது சொந்த வீடு; அங்குபோய்ச் சேரத்தான் இப்பொழுது பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம்; வழிப் பிரயாணமோ அவ்வளவு சுலபமானதல்ல; ஆபத்துக்கள் நம்மை எப்பக்கத்திலும் சூழ்ந்திருக்கின்றன. உலகம், பசாசு, சரீரமாகிய நமது ஜென்ம விரோதிகள் நம்மைத் தங்கள் வலையில் விழத்தாட்டக் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றன. அசிரத்தையாய் இருந்தால் ஆபத்து நிச்சயம். 

கவே நாம் எப்பொழுதும் மிக விழிப்பாய் இருக்க வேண்டும். நம் எதிரிகளோடு சலியாது போர் புரிந்து அவர்களைப் புறங்காண வேண்டும். இப்போராட்டத்தில் வெற்றி காண்பது நமது சொந்தப் பலத்தினால் மாத்திரம் சாத்தியமாகாது. அப்படியானால் அது கை கூடுவது எங்ஙனம்? இவ்விஷயமாக நாம் செய்ய வேண்டியது ஏதாவது உளதா? ஆம்; இது சாத்தியமாவதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று உளது; அது என்ன? 

ஆபத்திலிருப்பவன் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்வான்? தனக்கு உதவியாக வரும்படி பிறரைக் கூவியழைப்பான். அவ்வாறே நாமும் நமது ஞான யுத்தத்தில் நமக்கு உதவியருளும்படி சேசுவின் வல்லமை மிக்க நாமத்தை உச்சரித்து எப்போதும் அவரது உதவியை இரந்து மன்றாட வேண்டும். “ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழ் வேறே நாமம் மனிதர்களுக்குக் கொடுக்கப்படவில்லை” (அப். நட. 4:12).

இன்னும் வாழ்க்கையின் துன்ப துரிதங்களை அமைந்த மனதோடு அனுபவிப்பதற்கு நமக்குப் பலமும் தைரியமும் தருவது சேசுவின் திருநாமம். துயர மிகுதியால் ஆறுதலற்று அவதியுறும் உள்ளத்திற்கு ஆறுதலளிக்க வல்லது சேசுவின் இனிய நாமம். மன வறட்சி, வீண் சந்தேகங்கள், வீண் பயம் முதலியவற்றால் அலைக்கழிக்கப்படும் ஆன்மாவுக்கு மனச் சாந்தியருளும் ஒளியென வருவது சேசுவின் ஒப்பற்ற நாமம். பாவச் சேற்றில் புரளுவோரைக் கைதூக்கி விடுவது சேசுவின் நாமம். சாங்கோபாங்கத்தின் கொடுமுடி அடைய நமக்கு உறுதுணை புரிவதும் சேசுவின் நாமம். இத்தகைய பெருமை வாய்ந்த நாமத்தை நாம் அடிக்கடி உச்சரித்து அரும் பயனடைய வேண்டாமா?

“ஓ சேசுவே, எங்கள் அன்புக்குரிய இரட்சகரே, உமது நாமம் என்றும் புகழப்படுவதாக; ஆராதனைக்குரிய உமது திரு நாமத்தை எப்பொழுதும் பக்தி ஆசாரத்துடன் உச்சரிக்கும் நற்பழக்கத்தை நாங்கள் கைக்கொள்ள வரம் தாரும். எங்கள் சிந்தையும் நாவும் உமது பரிசுத்த நாமத்தால் புனிதமடைவதாக! எங்கள் சத்துருக்களோடு நாங்கள் செய்யும் ஞான யுத்தத்தில் உமது வல்லமையினால் வெற்றி காணக் கிருபை புரிந்தருளும். 

இறுதியில், உமது திருநாமத்தின் வல்லமையினால் நாங்கள் ஈடேற்றமடைந்து, மோட்ச இராச்சியத்தில் உமது நேச மாதாவோடும், சகல சம்மனசுகளோடும், அர்ச்சியசிஷ்டவர்களோடும் உமது புனித நாமத்தை சதாகாலமும் போற்றிப் புகழும் பெரும் பேற்றை எங்களுக்கு இரங்கியளித்தருளும். “கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.” 

இனி, இரண்டாவது கேள்வியைச் சற்றுக் கவனிப்போம். “எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.” என்று சொல்வானேன்? “எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்” என்று சொன்னால் போதாதா?

போதாது என்றுதான் பதில் சொல்ல வேண்டும்: ஏனென்றால், சில சமயங்களில் நமது மன்றாட்டுக்கள் உடனடியாகக் கேட்கப்படுவதில்லை; நமது மன்றாட்டைக் கேட்டும் கேளாதவர் போலிருக்கிறார் சேசு; நமது தாழ்ச்சியையும், விசுவாசத்தையும் அதிகரிக்கவும் நமது மன்றாட்டை அதிக பலனுள்ளதாக்கவுமே சேசு நமது மன்றாட்டுக்குச் செவிசாய்க்கத் தாமதிக்கிறார். 

இவ்வித சமயங்களில் நாம் மனமுடைந்து போவது நியாயமா? நமது விசுவாசத்தை தளரவிடுவது பொருந்துமா? இல்லை. அதற்கு மாறாக, நமது விசுவாசத்தையும், தாழ்ச்சியையும் இரட்டித்துக் கொண்டு விடாப்பிடியுடன் மீண்டும் மீண்டும் மன்றாட வேண்டும். “கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்” என்ற மன்றாட்டும் இத்தகைய ஜெபம்தான்.

தாழ்ச்சியோடும் விசுவாசத்தோடும் மனந்தளராமல் திரும்பத் திரும்பச் செய்யப்படும் ஜெபம் சர்வேசுரன் சமூகத்தில் அதிக வல்லமையுள்ளது; அப்படிப்பட்ட ஜெபத்தை அவர் ஒருபோதும் நிராகரிக்க மாட்டார். சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள கனானேய நாட்டு ஸ்திரீ (மத். 15) இதற்கோர் எடுத்துக்காட்டு. 

இப்பெண் பசாசினால் அலைக்கழிக்கப்படும் தன் மகளைக் குணப்படுத்த வேண்டுமென்று ஆண்டவரைக் கெஞ்சுகிறாள். ஆண்டவரோ அவளைப் பரிசோதிக்க அவள் விண்ணப்பத்தைக் கேட்டும் கேளாதவர் போல மேலே நடந்து செல்லுகிறார். அவளோ சேசுவைப் பின்தொடர்ந்து போகிறாள். இதைக் கண்ட சீஷர்கள்: “ஆண்டவரே, இந்த ஸ்திரீ ஏன் இவ்வாறு கதறிக் கொண்டு எங்கள் பின்னால் வருகிறாள்? அவளைத் தேவரீர் அனுப்பிவிடும்” என்றார்கள். 

இரக்கமே உருவான இரட்சகர் அவளைச் சோதிப்பதற்காக, “இஸ்ராயேல் கோத்திரத்தினின்று சிதறிப்போன ஆடுகளிடம் அனுப்பப்பட்டேனேயொழிய மற்றப்படியல்ல”வென்கிறார். அப்பெண்ணோ இதைக் கேட்டு மனந்தளரவில்லை; தலையைக் கவிழ்ந்துகொண்டு வந்த வழியே திரும்பிப் போய் விடவுமில்லை. ஆனால் தைரியத்தோடும் முழு நம்பிக்கையோடும் ஆண்டவரின் அடிகளில் விழுந்து, “ஆண்டவரே, என்மேலிரங்கும்; என் மகளைக் குணமாக்கும்” என்று உருக்கமாக வேண்டுகிறாள். 

ஆண்டவரோ, மேலும் அவளை சோதிக்க விரும்பி, “பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல” என்கிறார். அவளோ, “ஆண்டவரே! மெய்தான்; ஆனால் நாய்க் குட்டிகளும் தங்கள் எஜமானரின் மேஜையிலிருந்து விழும் ரொட்டித் துண்டுகளை தின்னுமே” என்று பதிலுரைக்கிறாள். எத்துணை விசுவாசம்! ஆண்டவரின் இரக்கப் பெருக்கம் இனித் தடைப்பட முடியாது! “ஸ்திரீயே, உனது விசுவாசம் பெரிது! நீ விரும்பியபடியே உனக்கு ஆகக் கடவது” எனக் கடைசியாக அவளது மன்றாட்டுக்கு செவிசாய்க்கிறார். 

சகோதரர்களே! இச்சம்பவத்தை நாம் அடிக்கடி சிந்திப்போம். இப்பெண்பிள்ளையை நாமும் கண்டு பாவிக்க முயலுவோம்.

“கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப் படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்று திருவுளம் பற்றிய என் நேச சேசுவே! இதோ உமது திருச்சமூகத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கும் அடியோரைக் கிருபைக் கண்ணோக்கியருளும். தேவரீருடைய வாக்குத்தத்தங்களிலும், அன்பிலும் இரக்கத்திலும் முழு நம்பிக்கை கொண்டு, உமது கிருபை சிம்மாசனத்தின் முன் எமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கிறோம். அவைகள் உம் திருச்சித்தத்திற்கு ஒத்திருக்குமாயின் அவைகளைக் கேட்டருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

தேவரீர் அவைகளுக்குச் செவிசாய்க்கத் தாமதித்தால் அதனால் நாங்கள் மனம் சோர்ந்து போகாது, மீண்டும் மீண்டும் தேவரீரை மன்றாட எமக்கு மன உறுதியை அளித்தருளும். அவநம்பிக்கையையும், அதைரியத்தையும் எங்கள் உள்ளத்தை விட்டு ஓட்டியருளும்; மனத் தாழ்ச்சியையும், விசுவாசத்தையும் எங்களிடத்தில் அதிகரித்தருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்!