திருப்பயணிகளும், குறிப்புகளும்

1. திருத்தலத்தில் தங்கியிருக்கும் திருப்பயணிகள் காலத் தைப் புனிதமாக செலவழிக்க வேண்டும். குறிப்பாக திருப்பலி, செபமாலை, நவநாள் செபங்கள், திருமணி, ஆராதனை முதலிய பொது பக்தி முயற்சிகளில் கோவிலுக்குச் சென்று பங்கு கொள்வதோடு மட்டுமல்லாது, மாதா குளத்திற்குச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் வைக்கப்பட்டுள்ள சிலுவைப் பாதை நிலைகளையும், தேவ இரகசியங்கள் நிலைகளையும் தரிசித்து இறை இயேசுவின் மீட்புச் செயல்களைப்பற்றி தியானித்தல் சாலச்சிறந்தது. கோவிலுக்கு வெளியே இருக்கும்போது காலத்தை வீணாக்காது செபங்களிலும் நல்ல நூல்களை வாசிப்பதிலும் கருத்தாய் இருக்கவேண்டும். செபம் ஒலிபரப்பப்படும்போது தாம் இருக்கும் இடத்திலிருந்தே சேர்ந்து செபிப்பது நல்லதாகும். முக்கியமாக அந்த நேரங்களில் அமைதி காத்தல் அவசியமாகும்.

2. புனித அன்னையின் தலத்தில் இருக்கும் அனைவரும் புனித வாழ்வு நடத்தும்படி - எதிர்பார்க்கப்படுகிறார்கள். எனவே கத்தோலிக்க இறை மக்கள் ஒப்பரவு அருட்சாதனத்தை அண்டிச் செய்வதன் மூலம் தங்கள் பாவக் கறைகளைக் கழுவி, உள்ளத் தூய்மையுடன் திருப்பலியில் பங்கு கொண்டு நற்கருணை உட்கொள்ளுதல் அவசியம்.

3. திருத்தலத்தில் இருக்கும்போது புனிதத்தைப் பங்கப் படுத்தும் எந்த செயலிலும் ஈடுபடுதல் தகாது. குறிப்பாக மதுப் பொருட்களைப் பயன்படுத்துதல் நல்லதல்ல.

4. காணிக்கை செலுத்த வரும்போது குளித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இவ்வாறு செய்வதால் கடலில் குளிக்கும் போது, உயிருக்கு ஆபத்து நேரிடலாம். அதுமட்டுமல்லாது, அது கோவிலின் உட்புறங்களை அசுத்தப் படுத்துவதோடு அதிமிக அவசியமான மன சுத்தத்தைப் புறக்கணித்து உடல் சுத்தத்தை மட்டும் பேணுதல் என்னும் தவறான கருத்தை உருவாக்கக்கூடும்.

5. ஏழைகளுக்கு உதவுதலும் தர்மம் இடுதலும் நல்ல பிறர் அன்புச் செயல்கள். ஆனால் பாத்திரம் அறிந்து தர்மம் இடுதல் அவசியம். தகுதியுள்ள ஏழைகளுக்கு பங்கு குரு தர்மம் செய்து வருகிறார். அவரிடம் கொடுத்து தர்மம் செய்வதே முறையாகும். முதியோர் இல்லம், ஏழைச் சிறார் இல்லம், பிணியாளர்களுக்கு மருத்துவமனை முதலிய நிறுவனங்கள் வழியாகவும் தனிப்பட்ட முறையிலும் பங்கு குரு ஆவன செய்து வருகிறார்.

6. ஆலய காணிக்கைகளையும், மந்திரித்த எண்ணெயையும் பெறுமிடம் குருக்கள் இல்லத்திற்கு முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. திருநாட்காலங்களில் காலை 6 மணியிலிருந்து மாலை 8 மணி வரையிலும், பிற நாட்களில் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரையிலும் இது திறந்திருக்கும். விசுவாசிகள் அவ்விடத்தில் தங்களுக்கு வெள்ளி மற்றைய காணிக்கைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காணிக்கை நிலையம் மூடி இருக்கும்போது மந்திரித்த எண்ணெய் குருக்கள் இல்லத்திற்கு முன் உள்ள தகவல் நிலையத்தில் கிடைக்கும்.

7. பூசை எழுதி வைப்பவர்களும் அதே காணிக்கை நிலையத் தில்தான் மேலே குறிப்பிட்ட நேரத்தில் எழுதிவைக்க வேண்டும். பிற நேரங்களில் தாங்களே நேரில் வந்து பங்கு குருவிடம் தருதல் வேண்டும்.

8. பேராலயத்தின் முன் காணிக்கைகளின் காட்சிக்கூடம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கும். அங்குதான் ஒளி நிலையம் உண்டு.

8-A, சுருபங்கள், செபமாலை, படங்கள், செபப் புத்தகங்கள் மரியாயின் சேனைப் புத்தக நிலையத்தில் கிடைக்கும். இது குருக்கள் இல்லத்திற்குக் கீழே உள்ளது.

9. நேர்ச்சைக்காகக் காதுகுத்தலும், தலைமுடி எடுத்தலும் அவற்றிற்கெனப் பேராலய கண்காணிப்பாளரால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே செய்யப்படவேண்டும். கொடி மரத்திற்கு வடக்கேயும், வியாகுல மாதா கோவிலுக்கு அருகே வடக்கில் உள்ள கட்டடங்கள் தாம் பேராலய கண்காணிப்பில் உள்ளன. மற்ற இடங்களில் உள்ளவை தனியாரால் பேராலயத்துடன் ஒத்துழையாமல் நடைபெறுபவை.

10. பேராலயத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் ஒலிபெருக்கி அமைப்பதற்கு அனுமதி இல்லை. பயணிகள் தங்கியுள்ள அறைகளில் வானொலிப் பெட்டிகளைச் சத்தமாக வைத்துத் திருத்தலத்தின் புனிதத் தன்மையைக் குறைக்கக்கூடாது.

11. ஆற்றிலும் கடலிலும் குளிப்பதோ அவற்றின் ஓரத்தில் நடப்பதோ உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும். குருக்கள் இல்லத்திற்குப் பின்புறம் ஆற்றிற்கருகில் குளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

12. தீ விபத்தைத் தடுக்க பயணிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சமைப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் மட்டுமே சமையல் செய்யவேண்டும்.

13. பயணிகள் தங்கள் பணப்பை , அணிகலன், கைக்கடிகாரம் மற்றும் உடைமைப் பொருட்கள் அனைத்தையும் தக்க கவனமுடன் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கூட்டத்தில் மோசடித் திருடர்களும் நடமாடுவர் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். குழந்தைகளை எப்போதும் கவனமாகப் பேணிக்கொள்ளவேண்டும்.

14. கடிதம், பணம் செலுத்து தல், வாடகை அறைகள் மற்றும் வேறு விபரங்களை அறிய விரும்புகிறவர்கள், குருக்கள் இல்லத் திற்குக் கீழே முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ''தகவல் அறிவிப்பு'' நிலையத்தை அணுகவும். பேராலய அனுமதி பெறாத போலி வழிகாட்டிகளை நம்பி மோசம் போகாதீர்கள். ஆலய அனுமதி பெற்ற, காக்கிச் சீருடை அணிந்த பேராலய சேவையினரின் வழியமைப்பை மட்டுமே பெறவும்.

15. முன்கூட்டியே தங்கும் அறைகள் தனி ஒதுக்கீடு (Reservation) செய்யப்படமாட்டாது. முதலில் வருவோருக்கு முதலில் அளிக்கப்படும். பயணிகள் வந்தவுடன் அவர்களது பெயர்களைக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். அப் பதிவு வரிசையின்படியே அறைகள் கொடுக்கப்படும். ஒருமுறை வழங்கப் பெற்ற அறையிலேயே நீடித்த நாட்களுக்குத் (Extension) தங்க விரும்பினால், பங்கு குருவிடம் முன் இசைவு பெறவும்.

16. பாதுகாப்பு அலுவலர் (Security Officer) ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். தகவல் அறிவிப்பு நிலையத் தருகில் உள்ள அவரது அலுவலகத்தில், பயணிகள் தம் புகார்களைச் சொல்லலாம். அங்குள்ள புகார்ப் புத்தகத்தில் அவற்றைப் பதிவு செய்யவும்.

17. புனித ஆரோக்கிய அன்னையின் நன்மைகளையும் வரங்களையும் பாரெல்லாம் பறைசாற்றவும், வேளாங்கண்ணி திருத்தலத்தோடு எப்பொழுதும் தொடர்பு கொண்டிருக்கவும் இயேசுகிறிஸ்துவைப் பற்றியும் அவரது திருமறையைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ளவும் வேளாங்கண்ணிக் குரலொலி என்னும் திங்களிதழைப் பயன்படுத்துங்கள்.

வேளாங்கண்ணிக் குரலொலி, தொன் போஸ்கோ அச்சகம், தஞ்சாவூர் - 613 001