அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - புனித பிரான்சிஸ் சலேசியார் தேவாலயத்தின் எதிர்காலம்

கஷ்டங்கள் டொன் போஸ்கோவை அவருடைய தீர்மானத் திலிருந்து ஒருபோதும் விலகச் செய்தது கிடையாது; இது அவருடைய வாழ்நாள் குணமாக இருந்தது. நீண்ட சிந்தனைக்கும், தமது மடங்களின் அதிபர்கள், விவேகமுள்ள மற்ற மனிதர்களோடு ஆலோசனைக்கும் பிறகு அவர் ஒரு முடிவு எடுத்து விட்டாரென்றால், அதன்பின் தமது வேலையை முடிக்கும் வரை, அவர் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. 

ஆனால் வெறும் மனிதக் காரணங்களுக்காக அவர் எதையும் தொடங்கியதில்லை. உறங்கும்போது, ஞான வெளிச்சம் தந்த காட்சிகளால் அவர் ஆதரிக்கப்பட்டார். இவற்றை அவர் சுவாமி மிக்கேல் ருவா என்பவரிடமும், மற்றவர்களிடமும், தமது பணியின் துவக்க ஆண்டுகளில் விவரித்தார்.

சில சமயங்களில் தாமே ஏதாவது சில கட்டடங்களையும், ஒரு கோவிலையும் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் காண்பார். இவற்றை உள்ளடக்கிய வளாகம் அப்படியே தற்போதைய புனித பிரான்சிஸ் சலேசியார் ஆரட்டரிக்கு' (சலேசிய சபையின் தாய் மடம்) ஒப்பானதாக இருந்தது. 

இனி வரும் பக்கங்களில் “ஆரட்டரி" என்னும் வார்த்தை ட்யூரினின் வால்டோக்கோ மாகாணத்திலுள்ள டொன்போஸ்கோவின் முதல் மாணவர் தங்கும் விடுதியோடு கூடிய பள்ளியைக் குறிக்கும். அது ஒரு ஜெப இல்லமாகத்தான் தொடங்கியது. ஆனால் அதன்பின் இந்தப் பெயர் இந்த ஜெப இல்லத்தோடு இணைக்கப்பட்ட தங்கும் விடுதிக்கும் அதே அளவுக்கு பயன்படுத்தப்பட்டது. அது "தாய் மடம்” என்றும் அழைக்கப்பட்டது.' 

ஆலயத்தின் முகப்பில் அந்தப் பிரசித்தி பெற்ற வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது: “ஹேக் எஸ்த் தோமுஸ் மேயா; இந்தே க்ளோரியா மேயா” “இது என் வீடு; இங்கிருந்தே என் மகிமை புறப்படும்.” அதன் வாசல்கள் வழியாக சிறுவர்களும், குரு மாணவர்களும், குருக்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

இந்தக் காட்சி சில சமயங்களில் வேறொரு காட்சியாக மாறியது. அதே இடத்தில் அந்தச் சிறிய பினார்டி இல்லம் தோன்றும், அதைச் சுற்றி ஒரு கோவிலோடு சேர்ந்த முகப்பு மண்டபங்களும், பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும், துறவறத்தாரும், குருக்களும் தோன்றுவார்கள். “ஆனால் இது இப்படி இருக்க முடியாது” என்று டொன்போஸ்கோ தமக்குள் சொல்லிக் கொள்வார். “இது நிஜமாக இருக்க முடியாத அளவுக்கு மிகவும் நல்லதாக இருக்கிறது. 

இது ஒரு பேய்த்தனமுள்ள கற்பனைத் தோற்றமாக இருக்குமா?” என்று அவர் தம்மையே கேட்டுக் கொள்வார். அப்போது அவர் ஒரு மிகத் தெளிவான குரலைக் கேட்டார். அது அவரிடம்: “எகிப்தியருடைய கொள்ளைப் பொருட்களைக் கொண்டு தம் மக்களை வளப்படுத்த ஆண்டவர் வல்லவர் என்பதை நீ அறியாயோ?” என்று சொன்னது.

வேறு சமயங்களில் கொட்டோலெங்கோ சாலையில் தாம் இருப்பது போல் அவருக்குத் தோன்றும். அவருடைய வலப் பக்கத்தில் பினார்டி இல்லம் வயல்களால் சூழப்பட்ட காய்கறித் தோட்டத்தின் மத்தியில் நின்றது; அவருடைய இடப்பக்கத்தில், ஏறக்குறைய பினார்டி இல்லத்திற்கு எதிரே, மொரெற்றா இல்லம், அடுத்திருந்த விளையாட்டு மைதானங்களோடும், வயல்களோடும் இருந்தது. அங்குதான் கிறீஸ்தவர்களின் சகாயமான மாமரியின் புதல்விகளின் மடம் பிற்காலத்தில் ஸ்தாபிக்கப்பட இருந்தது. 

அர்ச். பிரான்சிஸ் சலேசியார் எதிர்கால ஆரட்டரியின் முக்கிய நுழை வாயிலில் இரண்டு தூண்கள் நின்றன. அவற்றின்மீது “ஹிங்க் இந்தே க்ளோரியா மேயா - இங்கிருந்தும், அங்கிருந்தும் என் மகிமை புறப்படும்” என்ற வாசகத்தை டொன் போஸ்கோவால் வாசிக்க முடிந்தது. சலேசியர்களுக்கு அருகில் செழித்து வளரவிருந்த ஒரு சக துறவறக் கன்னியர் சபையைப் பற்றிய முதல் குறிப்பாக இது இருந்தது. 

சலேசிய சபை தோன்றுவதை அவர் தம் கனவில் கண்டார் என்றால், சலேசிய சகோதரிகள் சபையையும் அவர் கண்டிருக்க வேண்டும் அல்லவா? ஒருவேளை அது அப்படியே இருந்தாலும், இந்தக் காரியங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தாதபடி அவர் கவனமாக இருந்தார். ஆகவே அச்சமயத்தில் அவர் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை.

இதற்கிடையே, கொன்விட்டோவில் அவர் கண்டிருந்த முதல் கனவு பலிக்கும் நேரம் அண்மையில் இருந்தது. டொன் போஸ்கோ ஒரு நிரந்தரமான வசிப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் அவர் மூன்று இடங்களுக்கு மாற வேண்டியிருந்தது. இவற்றில் முதலாவது இடம் ரிஃபூஜியோவில் இருந்தது, 

“ரிஃபூஜியோ” அல்லது “பியா ஓப்பெரா தெல் ரிஃபூஜியோ” (“புகலிடத்தின் புனிதப் பணி”) என்பது பரோலோ கோமகளால் தொடங்கப்பட்டு, ஆதரிக்கப் பட்டு வந்த பல பிறர்சிநேக நிறுவனங்களில் ஒன்றாகும். அதில் புனித பிலோமினா மருத்துவமனையும் அடங்கும். டொன்போஸ்கோ ரிஃபூஜியோவின் துணை பரிபாலனக் குருவாக நியமிக்கப்பட்ட போது, அவர் தமது ஜெப இல்லத்திற்காக, இன்னும் திறக்கப்படாதிருந்த புனித பிலோமினா மருத்துவமனையின் சில அறைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார். 

இரண்டாவது, மோலினி டோராவில் இருந்தது. தனது “புல்வெளியுடன்” கூடிய மொரெற்றா இல்லம்' மூன்றாவதாக இருக்க வேண்டியிருந்தது. 

மொரெற்றா இல்லம் : இது வால்டோக்கோவில் உள்ள ஒரு வீடு. இங்கே டொன் போஸ்கோ, தாம் ரிஃபூஜியோவை விட்டுப் புறப்பட வேண்டி வந்தபோது, ஆரட்டரி சிறுவர்களின் மாலை மற்றும் ஞாயிறு வகுப்புகளுக்காக சில அறைகளை வாடகைக்கு அமர்த்தினார்.

கடவுள் வாழ்த்தப்பெறுவாராக.