இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - சின்னமலை

சென்னைக்குத் தென்மேற்கில் ஆறு கல் தொலைவுக்கு அப்பால் ஒரு குன்றும், அதற்கு மேற்கே இரண்டு கல் தூரத்தில் மற்றொரு குன்றும் உள்ளன. முன்னையது சிறியதாதலால் சின்னமலை என்றும், பின்னையது பெரியதாதலால் பெரியமலை அல்லது பரங்கிமலை என்றும் அழைக்கப்படுகின்றன. 

சின்ன மலையானது செந்தோமுக்கும் பெரிய மலைக்கும் இடையேயிருக்கிறது போர்த்துக்கீசியர் வந்த பின் அம் மலையின் மேல் இரண்டு சிறு கோவில்கள் கட்டியிருந்தனர். ஒன்று தேவமாதா பேராலும், மற்றொன்று உயிர்த்த இயேசுவின் பேராலும் வழங்கப்பட்டு வந்தன. இவற்றைத் தாமே பார்த்ததாக 1911 ஆம் ஆண்டு இயேசு தாஸார்டு சுவாமியார் தாம் எழுதிய நிருபத்தில் சொல்லுகிறார். 

நாளா வட்டத்தில் பின்னது கண்காணிப்பில்லாமையால் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. இக்காலமும், அது இருந்ததற்கு அடையாளமாகக் கடைக்கால் குறிகள் இருக்கின்றன. தேவ மாதா பேரால் கட்டப்பட்ட கோயிலோ இது வரையில் இருந்து வருகின்றது. இவ்வாலயம் மேற்சொன்ன படி போர்த்துக்கீசியரால் 1551 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 

புனித ஆரோக்கியமாதா பீடத்தின் மீது கோயில் கொண்டிருக்கின்றாள். புனித தோமையாரின் காலடிச்சுவடுகள் பட்ட இடமாகையால் இங்குப் பண்டையக் காலந்தொட்டு, தொண்டர்கள் பலர் யாத்திரையாக வந்து காணிக்கை செலுத்திப் போவது வழக்கம். இதுவரையில் அவ்வாறே நடக்கின்றது. இயேசு உயிர்த்த திரு நாளுக்குப் பின் வரும் 4ஆம் ஞாயிறன்றுதான் திரு விழா. அப்போது கூடுகின்ற மக்கள் திரள் அளவிடற்கரியது. மற்றக் காலங்களில் சின்னமலை ஒரு குக்கிராமம் போல் இருந்தாலும், ஆண்டுத் திருவிழாக் காலத்தில் மக்கள் கூட்டத்தின் பொருட்டும் கடைகள், உணவு விடுதிகள், வேடிக்கைசாலைகளின் பொருட்டும் அது ஒரு பெரிய பட்டணம் போலிருக்கும்.

இவைகளுக்கெல்லாம் திலகமெனத் திருத்தலம் மலைமீது விளங்கும். அதில் நடக்கும் இறை வழிபாடுகளில், கிறிஸ்தவர்கள் பக்தியுடன் பங்கு கொண்டு தேவ ஆசீர்வாதம் கேட்பார்கள். இதர மதத்தினரும் கூட்டங் கூட்டமாக வந்து, திருக்கோயிலை நாள் முழுதும் தரிசித்த வண்ணமாய் இருப்பார்கள். இவர்களும், மெழுகுவர்த்திகள், மலர் மாலைகள், நாணயங்கள் ஆகியவற்றை மிக்க பயபக்தியுடன் காணிக்கையாகச் செலுத்துவார்கள்.