இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உலகத்தை மீட்டிரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலக மாந்தரைப் பேயின் அடிமைத்தனத்தினின்று மீட்க மனுவுருவெடுத்தார் சுதனாகிய சர்வேசுரன். அவர் தம்மை முழுமையும் நமக்காக பரமபிதாவுக்கு ஒப்புக்கொடுத்த கல்வாரி மலையின் புனிதப் பலியை நமக்கு நினைவுறுத்துகிறது இவ்வேண்டுதல். “மனிதர்கள் தேவர்களாகும் பொருட்டு தேவன் மனிதனானார்.” (அர்ச். அகுஸ்தீன்.) இவ்வுண்மையை மனிதனுடைய சிற்றறிவால் சரியாய்க் கண்டுபிடிக்க முடியாதெனினும் அத்தியந்த விசுவாசத்துடன் அதனை இங்கு சற்றே ஆராய்வோம். 

அன்பே உருவான சர்வேசுரன் ஆதியில் ஆதாம், ஏவாளை உண்டாக்கி, தமது அருட் கொடைகளால் அவர்களது ஆத்துமங்களை அலங்கரித்தார். பூலோக மோட்சமாகிய சிங்காரத் தோப்பில் யாதொரு குறையு மின்றி நமது ஆதித்தாய் தந்தையர் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், அந்தோ பரிதாபம்! ஒருநாள் பசாசின் துர்ப்புத்திக்குச் செவிசாய்த்து, அவர்கள் சர்வேசுரன் தங்களுக்குக் கொடுத்திருந்த சிறு கட்டளையை மீறத் துணிந்தனர்; ஆங்காரம் அவர்களை ஆட்கொள்ள, பரமனுக்கு விரோதமாய் பாவம் கட்டிக் கொண்டார்கள். 

அதன் பலாபலன்களைத்தான் அன்று முதல் இன்று வரை உலகம் அனுபவித்து வருகிறது. அன்று அவர்கள் மட்டும் இறைவனது கட்டளையை மீறி நடவாதிருப்பார் களானால், இன்று நமது மண்ணுலக ஜீவியமே வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் என்று நமது ஆதித்தாய் தந்தையர் சர்வேசுரனது ஆணையை மீறி பாவம் செய்த னரோ, அன்றே அவர்களைக் கேடு சூழ்ந்தது. நிழல்போலத் துன்பம் அவர்கள் மக்களையும் தொடர்ந்தது. 

அன்றுவரை சகல பாக்கியங்களும் நிறைந்திருந்த சிங்காரவனம், துன்ப துயரம் நிறைந்த கண்ணீர்க் கணவாயாக மாறியது. அது மட்டுமா! சர்வேசுரன் தங்களுக்களித்திருந்த அருட் கொடைகளோடு, விசேஷ அறிவு, ஆசாபாசமின்மை, சாகாமை, பாடுபடாமை, வியாதியின்மை போன்ற அரும் பெரும் வரங்களையும் இழந்தனர்; இவ்விதம் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் அவர்களே அழிவை தேடிக் கொண்டனர், என்ன மதியீனம்! 

இவ்விதம் பாவத்தால் தேவ அன்பை இழந்து வீழ்ச்சியுற்ற அவர்களுக்கு, பாவப்பரிகாரம் செய்ய வழிவகைகள் இல்லாமற் போயிற்றோ? இழந்துபோன தேவசிநேகத்தை மீண்டும் திருப்பியடைய அவர்களுக்கு வழிவகைகள் எவைகளேனும் இருந்தனவோ? மேலெழுந்த வாரியாக நோக்கின், கடவுள் ஒரு போதும் அவர்களுக்குப் பாவமன்னிப்பு அருளமாட்டார் என்று தான் நினைக்க இடமுண்டு. 

உதாரணமாக வாழ்வில் நம்மில் சரியொத்த ஒருவருக்கு நாம் தீங்கிழைத்தால், அவர் மனமிரங்கி எளிதில் நாம் செய்த குற்றத்தை மன்னித்துவிடலாம். அதே குற்றத்தை நமது பகைவன் ஒருவனுக்கு விரோதமாக நாம் செய்தாலோ, அவன் அவ்வளவு எளிதாக நமக்குப் பொறுத்தல் அளிக்க மாட்டான். 

ஆனால் நம்மை அரசாளும் மன்னருக்கு விரோதமாய் அதே அற்பக் குற்றத்தைச் செய்வோமாயின், மக்கள் அதை மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்றே மதிப்பர். மனமிரங்கி அக்குற்றத்தை மன்னிக்குமாறு இளவரசனோ அல்லது பிரதான மந்திரியோ அரசனிடம் மன்றாடினால்தான், அரசன், பரிந்து பேசுபவருடைய முகத்துக்காகவாவது குற்றவாளியை மன்னிப்பான்.

இது இப்படியிருக்க, இராஜாதி இராஜனும் அகில உலகங்களையும் ஒரே வார்த்தையால் உண்டாக்கி சர்வேசுரனும், தங்கள் எஜமானனுமாகிய தேவனுக்கு விரோதமாய் ஆதாம் ஏவாள், அவர் விடுத்திருந்த சிறிய தோர் கட்டளையை அசட்டை செய்தனர்; பாவத்தைக் கட்டிக்கொண்டனர். சிருஷ்டிகருக்கு விரோதமாய் இழைக்கப்பட்ட குற்றத்திற்குச் சிருஷ்டிகளே பரிகாரம் செய்ய முடியுமா? முடியாது. ஏனெனில் இத்துரோகம் செய்யப்பட்டது அளவற்ற நன்மைத்தனம் நிறைந்த ஆண்டவருக்கன்றி வேறொருவருக்கல்ல. எனவே நீச மனிதனின் இத்தீச்செயல் சர்வ வல்லபமுள்ள இறைவனது நன்மைத்தனத்தை ஏளனம் செய்வதற்கு சமமாயிருந்தது. 

ஆதித்தாய் தந்தையரின் பாவத்தால் அவர்களும், நாமும் மோட்ச பாக்கியத்தை இழந்தோம்; சாவு, நரகம் முதலிய ஆக்கினைகளுக்கு அடிமைகளானோம். இந்நிர்ப் பாக்கிய நிலையிலிருந்து மனிதரை மீட்கும் பொருட்டு கருணை நிறைந்த தேவன் தயை கூர்ந்தருளினார். தேவனின் அணை கடந்த அன்பின் விளைவாக, தேவபிதாவின் ஏகக்குமாரன் மனுவுருவெடுத்து மாட்டுத்தொழுவில் பிறந்தார்; நசரேத்தூரில் முப்பது வருடம் தேவமாதா வுக்கும் சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து மறைந்த ஜீவியம் ஜீவித்தார்.

தமது வாழ்நாட்களில் கடைசி மூன்றாண்டுகளில் தமது பன்னிரு சீஷர்களுடன் யூதேயா நாடெங்கும் சுற்றித் திரிந்து அன்பின் வேதத்தைப் போதித்தார். மோட்ச பாதையைக் காட்டினார் மோட்சத்துக்குச் செல்லும் கரடு முரடான பாதையில், நாம் செல்ல வேண்டிய விதத்தை தமது போதனையாலும் சாதனையாலும் காண்பித்தார். 

கடைசியாக, ஆதாம் ஏவாள் செய்த பாவத்தினால் மனுக்குலத்துக்கு விதிக்கப்பட்ட தேவசாபத்தை தீர்க்கவும், தேவகோபத்தை அமர்த்தவும், அடைபட்ட மோட்ச வாசலைத் திறக்கவும் தமது உயிரையே கல்வாரி மலையில் தேவ பிதாவுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார். பிதா தமது திருக்குமாரனின் பலியை ஏற்று நமது பாவங்களை மன்னித்தார்; நம்மைத் தமது பிள்ளைகளாக மீண்டும் ஏற்றுக்கொண்டார். 

எனவே நமது இரட்சகர், இரண்டாமாளாகிய சுதனாகிய சர்வேசுரன் சேசுக் கிறீஸ்துவே; உலகத்துக்கு இரட்சணியம் கொண்டு வந்தவர் அவரே. என்னே நமது இரட்சகரின் கருணை! நமக்கும் உலகத்துக்கும் தமது பிறப்பாலும், சிலுவை மரணத்தாலும் இரட்சணியம் கொண்டு வந்த இனிய இயேசுவுக்கு, நமது இரட்சகருக்கு நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோமன்றோ?

“ஓ! திவ்விய சேசுவே! உலக இரட்சகரே! உமது அணை கடந்த அன்பின் பெருக்கிற்கு ஓர் எல்லை காண எங்களால் முடியுமோ? உமது எல்லையற்ற அன்புக்கு பிரதியன்பு காட்டுவது எங்களால் இயலாத காரியமாகையால், இதோ உமது பரிசுத்த மாதா உம்மீது கொண்டுள்ள அன்பை எமது காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். 

தேவரீர் உமது திருப்பாடுகளால் எமக்கு அடைந்து கொடுத்த அரும் பெரும் கொடைகளை வீணிலே விரயம் செய்யாது, ஜீவனுள்ள மட்டும் எங்கள் ஆத்துமங்களில் காத்து ஓர் நாள் நாங்கள் எல்லோரும் தேவரீர் வாசம் செய்யும் மோட்ச வீட்டிற்கு வந்து சேரக் கிருபை புரியும். மகா பரிசுத்த மரியாயே. தேவ குமாரனின் திருத்தாயே, பாவிகளாகிய எங்களுக்காக உமது திருக்குமாரனிடம் மன்றாடும்.” 

உலகத்தை மீட்டிரட்சித்த சுதனாகிய சர்வேசுரா!
எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி!