இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் மீது உண்மைப் பக்தியைத் தெரிவு செய்தல்

90. இவ்வைந்து உண்மைகளும் கூறப்பட்டபின் இனி மாதா மீது உண்மையான பக்தியை சரியாகத் தெரிவு செய்ய வேண்டியது மிக அவசியமாகின்றது. 

ஏனென்றால் மாதா மீது முன்பெல்லாம் இருந்ததை விட இப்போது தவறான பக்திகள் அதிகம் உள்ளன. அவற்றை உண்மைப் பக்தி என்று கருதி நாம் எளிதில் தவறிப் போக முடியும். 

ஒரு ஏமாற்று வித்தைக்காரன் போலும், திறமையும் அனுபவமுள்ள தந்திர சாலியைப் போலும் பசாசு எத்தனையோ பல ஆன்மாக்களை மாதா மீது தவறான பக்தியின் மூலம் ஏமாற்றி தண்டனைத் தீர்ப்படையச் செய்துள்ளது. 

இதனால் தூண்டப்பட்டு, இப்பசாசு தன் சாத்தானுக்குரிய அனுபவத்தைத் தினமும் உபயோகித்து இன்னும் பல ஆன்மாக்களை ஏமாற்றி, அவர்கள் மோசமாகச் சொல்லும் சில செபங்கள், பசாசால் தூண்டப்பட்டு சில வெளிப் பக்தி முயற்சிகள் இவற்றின் சாக்கில் அவர்களை உறங்கப் போட்டு, அவர்கள் தீர்ப்படையுமாறு செய்து விடுகிறது. 

கள்ள நாணயம் அடிப்பவன் பொதுவாக தங்க வெள்ளி நாணயங்களைத்தான் தயாரிப்பான். மிக அபூர்வமாகவே மற்ற உலோகங்களை எடுப்பான். ஏனென்றால் அவை அந்த சிரமத்துக்கு ஈடாகா. அதுபோலவே பசாசு மற்றப் பக்தி முயற்சிகளை விட சேசு மரியாயி மீதுள்ள பக்தி முயற்சிகளையே கள்ளப் பக்தியாக்குகிறது- நற்கருணைப் பக்தியையும் மாதா மீதுள்ள பக்தியையும். 

இதன் காரணம் என்னவென்றால், தங்கமும் வெள்ளியும் மற்ற உலோகங்களை விட எப்படி மேலாக உள்ளனவோ அதுபோல் இவை மற்றப் பக்தி முயற்சிகளை விட மேலானவையாக இருக்கின்றன.

91. எனவே, முதன் முதலில் தவறான பக்தி முயற்சிகளை விலக்குவதற்கு, அவைகள் எவை என நாம் அறிந்திருப்பது மிக முக்கியம். சரியான பக்தியைக் கைக்கொள்வதற்கும், அது எது என அறிந்திருப்பது மிக முக்கியமாகும். 

இரண்டாவதாக மாதா மீது உண்மைப் பக்தியின் பலப்பல முயற்சிகளுள் உத்தமமானதும், மாதாவுக்கு மிக விருப்பமுள்ளதும். கடவுளுக்கு அதிக மகிமையளிப்பதும், நம்மை அதிகம் அர்ச்சிப்பதும் எது என அறிதல் முக்கியமாகும். அதை நாம் பற்றிக் கொள்ளும்படியாக அதை அறிந்திருப்பது அவசியமாகிறது.