இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆன்மாக்களைக் கவர்ந்திழுக்கும் காந்த விளக்கு!

“இப்புனித வேதசாட்சிக்கு சர்வேசுரன் அளித்துள்ள விசேஷ வரம் ஆன்மாக்களைக் கவர்ந்திழுக்கும் அவளுடைய ஆற்றலே” என்று அர்ச். பிலோமினம்மாளை முஞ்ஞானோவுக்குக் கொணர்ந்தவரும் அவள் வரலாற்றை எழுதியுள்ளவருமான சங். லூஸியாவின் பிரான்சிஸ்கோ என்ற குருவானவர் கூறியிருக்கிறார்.

"Philomena" - ஃபிலோமினா என்ற அவளது பெயரே அநேகருக்கு ஈடுபாட்டைத் தருகிறது. பலருக்கு அவளது படங்கள், சுருபங்கள் பதக்கங்கள் அத்தகைய ஈடுபாட்டைக் கொடுக்கின்றன. அவற்றின் வழியாக அவளை நோக்கி அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் பலருக்கு இத்தனை சிறு வயதில் எத்தனை வீர வைராக்கியமாய் வேதசாட்சி முடியை அவள் பெற்றாள் என்பது ஆச்சரியமான கவர்ச்சியாக இருக்கிறது. அவளது எண்ணற்ற புதுமைகளும் அவள் தரும் செளக்கியங்களும், உதவிகளும் உலகமெங்கும் உள்ள மக்களை சக்தி வாய்ந்த காந்தம்போல் அவளிடம் இழுக்கின்றன.

“பிலோமினா'' என்ற மதுரமான பெயரைக் கேட்டவுடனேயே தன் உள்ளம் குளிர்ந்ததாகவும், மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் விசுவாசப் பரப்புதல் சபையைத் தோற்று வித்த முத்திபேறு பெற்ற பவுலின் மரிய ஜாரிக்கோ கூறினாள். அப்போது பவுலின் மரண ஆபத்திலிருந்தாள்; கடினமான இருதய நோய். பிலோமினம்மாளின் அருளிக்கம் முஞ்ஞானோ என்ற இத்தாலிய பட்டணத்தில் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. இந்தப் பெயரைக் கேட்டதிலேயே எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அப்படியானால் அவளைச் சென்று தரிசித்து வேண்டிக்கொண்டால் நிச்சயமாக அவள் என்னைக் குணப்படுத்துவாள் என்ற நம்பிக்கை பவுலினு டைய உள்ளத்தில் எழுந்தது. ஆகவே அவள் அர்ச். பிலோமினம்மாளின் சேத்திரத்திற்குச் சென்று ஜெபித்து, அவளுடைய நம்பிக்கைப்படியே பூரண குணமடைந்தாள்.

அர்ச். பிலோமினம்மாள், அபூர்வமாக சில சமயம், தன்னைப் பற்றி சிலர் போதிய தெளிவில்லாமலும் அதன் காரணமாக அவளைத் தேடாமலும் இருக்கும்போதே, அவளாகச் சென்று அவர்களைச் சந்தித்து தன்னையே அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஒளிவீசும் வழிகாட்டியாக ஆவதும் உண்டு. ஏனென்றால் இவர்கள் வழியாக ஆண்டவர் நிறைவேற்றச் சித்தங்கொண்ட காரியங்கள் இருக்கின்றன. பிலோமினம்மாள் நேரில் சென்று அவைகளை நிறைவேற்றி வைக்கிறாள். இது சர்வேசுரனின் மறைந்த திட்ட நிறை வேற்றமாகும்.

அர்ச். பிலோமினம்மாள் 3-ம் நூற்றாண்டில் வேதசாட்சியானாள், ஆனால் 19-ம் நூற்றாண்டில்தான் உலகம் அவளை அறிந்தது. அவள் அறியப்பட்ட நாள் முதல் சாத்தானின் சூழ்ச்சியால் அவள் புறக்கணிக்கப்பட்ட நாள் வரையிலும் அவளிடமிருந்து புறப்பட்ட அற்புத காந்த சக்தியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எங்கும் புதுமை - எல்லா வகையிலும் புதுமை - எல்லாருக்கும் புதுமை - எல்லா தேவைகளிலும் புதுமையாக உதவி செய்தாள். அவள் மேல் ஆண்டவருக்கு அத்தனை பிரியம்! அவள் கேட்ட எதுவும் அவளுக்கு மறுக்கப்படுவதில்லை. ஆண்டவரும் அவளிடம் திருச்சபையின் மகத்தான காரியங்களை ஒப்படைத்திருக்கிறார். 1986-ம் ஆண்டு முதல் அவள் மறுபடியும் தேவசித்தப்படி அறியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆண்டவரின் அற்புத திட்டங்களை நிறைவேற்றி வருகிறாள்.