பயணிகளும் பல வசதிகளும்

அடியவர் ஆயிரர் ஆயிரர் வந்தார், 
அன்னை நின் பொன்னடி நீழலில் நின்றார்! 
இடையற நன்றியின் கீதமும் இசைத்தார்;
எய்தினார் வாழ்வில் இணையிலா அமைதி! 

வேளாங்கண்ணிக்கு வழி :

கல் கண்ட இடமெல்லாம் கலை பேச வைத்த சோழநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரி பாயும் தீரத்தில், வங்கக் கடலில் வரலாற்றுப் பெருமையும் வாணிபச் சிறப்புமுடைய துறைமுகப் பட்டினமாக விளங்குகிறது நாகப்பட்டினம், இதற்கு அருகில் விளங்குகிறது ஏழு கடல்களுக்கும் ஏக அடைக்கலமான ஆரோக்கிய அன்னையின் திருத்தலம்.

நாகப்பட்டினம், தென்னக இரயில்வேயில் முக்கியமான ஒரு நிலையம். இங்கு வந்து சேரவும், திரும்பிப் போகவும் புகைவண்டி இணைப்புகள் ஒவ்வொரு நாளும் உண்டு. திருவிழாக் காலங்களில் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன, அச்சமயத்தே சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து தனிப் புகைவண்டிகள் நாகப்பட்டினம் வரை விடப்படுகின்றன. வடக்கில் இருந்து வருவோர்க்கெல்லாம் இது வசதியாக இருக்கும்.

நாள்தோறும் நாகை வழியாகச் செல்லும் சென்னை - நாகூர் பயணிகள் இரயில் உண்டு. இராமேசுவரம் துரித வண்டியிலும் இரு தனிப் பெட்டிகள் நாகூருக்கு என இணைக்கப் படுகின்றன. இந்தப் புகைவண்டி திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும். அவ்விரு நாட்களில் இவ்வண்டி கங்கை - காவேரி துரித வண்டி எனப் பெயர் பெறுகிறது. ஏனைய நாட்களில் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படுகிறது.

அவ்வாறே தஞ்சையிலிருந்தும் நாகூர் வரை நாள்தோறும் பல இரயில்கள் வந்து போகின்றன. மக்களின் வசதியை முன்னிட்டு அண்மையில் தஞ்சைக்கும் நாகூருக்கும் இடையே ஒரு விரைவு வண்டியும் விடப்பட்டுள்ளது. நாகூருக்கும் வேளாங்கண்ணிக்குமிடையே இரயில் பாதை அமைக்கப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அம்முயற்சி வெற்றிபெற்றால் இலட்சோபலட்சம் திருப்பயணிகள் பயனடைவர், பயணிகளின் எண்ணிக்கையும் பெருகும்.

தஞ்சை இருப்புப் பாதைச் சந்திப்பிலிருந்து தனிப் புகை வண்டிகள் விடப்படுவதைப்போல காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாகவும், வேதாரணியத்திலிருந்தும் திருத்துறைப்பூண்டிக்கு இரயில் வண்டிகள் வருகின்றன. திருத்துறைப்பூண்டியிலிருந்து பேருந்துகளில் வேளாங்கண்ணி வந்து சேரலாம். கேரளா, கர் நாடகம், முதலிய மா நிலங்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்குப் பேருந்துகள் வருகின்றன

நாகப்பட்டினத்திற்கு எல்லாத் திசைகளிலிருந்தும் நல்ல பேருந்து வசதிகள் உண்டு. சென்னையிலிருந்து வரும் அரசு விரைவுப் பேருந்துகள், பாண்டிச்சேரி, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் முதலிய பல நகரங்களோடு நாகையை இணைத்துக் கொண்டுள்ளன. நாகப்பட்டினத்திலிருந்து. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதாரணியம் போன்ற ஊர்களுக்குப் போகும் பேருந்துகள் அனைத்தும் ஆரோக்கியமாதா ஆலயத்தின் முகப்பு வரை சென்றே திரும்புகின்றன.

நாகப்பட்டினம் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது. வேளாங்கண்ணிக்கு நகரப் பேருந்துகளும் தொலைப் பேருந்துகளும் சென்றவண்ணம் உள்ளன. வாடகை வாகனங்களும் உண்டு,

திருநாட்காலங்களில் போதுமான முறையில் போக்குவரத்து ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்தளிக்கப்படுகின் றன. நாகப்பட்டினம் இரயில் நிலையத்திலிருந்து கடற்கரையோரமாகவே தென் திசை வழியே கால்நடையாக நடந்து வேளாங்கண்ணியை அடையலாம். கொடி வழி போன்று இக்கடற்கரைப் பாதைவழியே நெய்தல் நிலத்துக் காட்சிகளையெல்லாம் கண்டு மகிழ்ந்தவண்ணம் கருணாகர அன்னையின் கருணைத் தலத்தை வந்து அடையலாம்.

திருவிழாக் காலங்களில் திருப்பயணிகள் பலர் இவ்வழியாக நடந்து வருவதை பெரிதும் விரும்புவர். கடற்காட்சிகளைக் கண்ட வண்ணம் சற்று தூரத்தில் வரும்போதே கோவில் முகப்பில் உயர்ந்து நிற்கும் 'கோத்திக்' கோபுரங்கள் தம்மை ''வருக! வருக" என அழைப்பதாக உணர்வர். கோவிலின் மையத்தில் எழுந்து நிற்கும் எட்டு மூலைத் தோம்பின் அழகையும் அதன்மேல் எடுப்பாக விளங்கும் மையத் தோம்பின் பெருமிதத்தையும் கண்டு வியப்பு அடைவர்.

இத் திருத்தலத்தை அடைய வேறு இரு வழிகளும் உள்ளன. ஆனால் வண்டி, வாகன வசதிகள் பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அவ்வளவாக இவ்வழிகளைப் பயன்படுத்துவது இல்லை. நாகப்பட்டினத்திற்கு அருகில் வேதாரணியம் கால்வாயில் படகேறித் தெற்குத் திசையில் சென்று கோவிலை அடையலாம். இக்கால்வாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாவிடில் பயணம் தடைபடும். மற்றொன்று வண்டிப் பாதை. நாகையின் தென் மேற்காய் பொய்யூர் சென்று அங்கிருந்து தெற்கே திரும்பி உத்தரிய மாதா தோப்பிற்கு அருகில் வேளாங்கண்ணி போய்ச் சேரலாம். நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் வேளாங்கண்ணி கிளைப் பாதையைக் காட்டும் “வழிகாட்டும் நுழைவாயில்” அமைந்துள்ளது.

அனைத்துச் சாலைகளும் உரோமாபுரியை நோக்கியே இட்டுச் செல்லும் (All roads lead to Rome) என்னும் பழமொழிக்கு ஒப்ப அனைத்து சாலைகளும் அன்னை மரித்தாயிடம் இட்டுச் செல்வதை வேளாங்கண்ணித் திருப்பயணிகள் எவரும் உணர்வர்.

தங்கிட அறைகள் (இல்லங்கள்)

நெடுந் தொலைவிலிருந்து வருகின்ற திருப்பயணிகளுக்குத் , தேவையான வசதிகள் யாவும் வேளாங்கண்ணி திருத்தலத்தில் அமைந்துள்ளன பேராலய முகப்பின் வலப்புறம் அமைந்துள்ள குருக்கள் இல்லத்தின் கீழ்த்தள அறைகள் திருப்பயணிகள் தங்குவதற்காக பயன்படுபவையாகும்.

சிறுமலர் இல்லம் :

திருப்பயணிகளுக்குப் போதிய வசதிகளுடன் கூடிய நல்ல அறைகள் தேவை என்று அறிந்த தஞ்சாவூர் மேதகு ஆயர் பேராலயத்தின் தென்புறம் ''சிறுமலர் " இல்லத்தைக்கட்டுவித்தார். 1965-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 2-ஆம் நாள் அவரே இந்த இல்லத்தைத் திறந்துவைத்தார். இருக்கைகள், படுக்கைகள், குளியலறை, கழிவிடம் ஆகிய யாவும் ஒவ்வொரு அறையிலும் உண்டு. மேல் தளத்துடன் கூடிய இவ்வில்லத்தில் 16 அறைகள் உள்ளன. அடுப்பு வைத்துச் சமையல் செய்ய விரும்புபவர்களுக்கு இதையடுத்து சமையல் கூடம் ஒன்று உள்ளது. இதன் பின்புறத்தே 15 அறைகள் கொண்ட புனித சின்னப்பர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது.

புனித வளனார் இல்லம் :

திருவிழாப் பேருந்து நிலையத்தையடுத்து 'புனித வளனார்' திருப்பயணிகளின் இல்லமும் பல வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

புனித தோமையார் இல்லம் :

பேராலய விரிவுச் சாலையின் வட தென் பகுதிகளில் மாடியுடன் கூடிய புனித தோமையார் பயணிகள் இல்லத்தில் 26 அறைகள் உள்ளன. காட்சிச் சாலையின் கீழ்ப்பகுதியில் 17 அறைகளும், அதற்கு இணையாக வடபுறமுள்ள கட்டிடத்தில் 12 அறைகளும் உள்ளன. குருக்கள் இல்லத்தின் பின்புறமாக 56 அறைகள் இருக்கின்றன. இவை புனித அந்தோணியார் இல்லம் எனப்படும்.

ஆண்டுப் பெருவிழாவின்போது, தற்காலிகமாக ஏறத்தாழ 550 அறைகள் கீற்றுகளால் கட்டித்தரப்படுகின்றன. ஆங்காங்கே இத்தனை அறைகளுக்கும் குடிநீர், சமையல், மின்விளக்கு முதலிய வசதிகள் யாவும் அளிக்கப்படுகின்றன. குழுவாக வரும் திருப் பயணிகள் தங்குவதற்குப் பெரிய அறைகள் மூன்று ஒதுக்கப்பட்டு உள்ளன

பேராலயத்திற்குரிய இவ்வில்லங்கள் யாவும், பேராலயத் திற்கு திருப்பயணமாக வரும் எல்லாப் பயணிகளுக்கும் பயன்படும் வகையில் சில விதிமுறைகள் கையாளப்படுகின்றன. எந்நேரமும், திருப்பயணிகளை வரவேற்று, வேண்டிய வசதிகளை அளித்திட பேராலய அலுவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். திருப்பயணிகள் தங்கியிருக்கும்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரியவும் இரவில் காவல் காத்திடவும் பேராலயச் சேவையர் (servants) உள்ளனர். இங்குள்ள அறைகள் எவருக்கும் முன்பதிவு செய்யப்படுவதில்லை. திருப்பயணிகள் வந்து சேர்ந்தவுடன் வரிசையாக அவர்களுக்கு வசதியான அறைகள் அளிக்கப்படுகின்றன.

துப்புரவு செய்வதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் துப்புரவாளர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். அறைகள் பயணிகளுக்கு அளிக்கப்படு முன்பும் அவர்கள் அவற்றை விட்டுச் சென்றவுடனும் துப்புரவு செய்யப்படும். அறைகளைச் சுற்றிய இடங்களை எல்லாம் துப்புரவாளர்கள் அடிக்கடி துப்புரவு செய்வர். இவர்கள் தங்கள் பணியை முறையாகச் செய்வதைக் கண்காணிக்க மேற்பார்வையாளர் ஒருவர் உள்ளார்.

அன்னைக்கு அளிக்கக் காணிக்கைகள் :

பேராலயத்திற்கு வரும் திருப்பயணிகள் தாங்கள் மாதாவுக்கு அளிக்க விரும்பும் காணிக்கைப் பொருட்களைப் பேராலயக் காணிக்கை நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பொன் வெள்ளிக் காணிக்கைகள், மெழுகுவர்த்தி, தென்னம்பிள்ளை முதலியவை சாதாரணமாக அளிக்கும் ! காணிக்கைகளாகும். திருப்பலிக்காகப் பெயர்ப் பதிவு செய்ய விரும்புவோர் அதற்கான காணிக்கையை நிலையத்தில் வைக்கப் பட்டுள்ள பூசைக் காணிக்கைப் பெட்டியில் அளிக்கலாம். வெள்ளிக் காணிக்கைகளையும், பணக் காணிக்கைகளையும் பேராலயத்தில் அளித்திடப் தனித்தனிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொன் முதலிய விலை உயர்ந்த காணிக்கைகளாயின் ஆரோக்கிய அன்னையின் திருச்சுரூபத்தின் முன் வைத்து, பின் அவர்களே அவற்றை நேரடியாக பேராலயக் குருவிடம் ஒப்படைப்பர்.

காணிக்கைகளின் காட்சிச் சாலை :

புனித ஆரோக்கிய அன்னை செய்துவரும் நலன்களுக்கு நன்றி கூறுவது நல்ல உள்ளத்தின் ஒரு கடமை. அந்நன் றியை என்றும் மறவா திருக்கப் பொருட்களைக் காணிக்கையாக அளிக்கின்றனர். சிறந்த நலன்களுக்கு நன்றியாக வரும் பொருட்களை திருப்பயணிகள் காணும் பொருட்டு காட்சிசாலையில் வைத்துள்ளனர். அவற்றைப் பார்ப்பவர்களும் சிறப்பாக இதய நன்றி விளம்பரங்களைப் படிப்பவர்களும் அன்னையின் அரிய செயல்களை வியந்து மகிழ்ந்து செல்வதோடு தாங்களும் அவ்விதமே அன்னையிடம் மன்றாடி நலன்களைப் பெறுகின் றனர்.

திருப்பயணிகளுக்கு உணவு வசதி :

பேராலய நிர்வாகத்தால் நடத்தப்படுவது புனித ஆரோக்கிய அன்னை உணவகம், திருப்பயணிகளுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்ட இவ்வுணவகம் தன்னால் இயன்ற அளவு சுவையான உணவைச் சீரான விலையில் அளித்து வருகிறது. இவ்வுணவு அருந்தகம் பேராலயத்தின் எதிர்புறம் உள்ளது.

திருத்தல நினைவுச் சின்னம் :

வேளாங்கண்ணித் திருத்தலம் வந்து திரும்பும் மக்கள் நினைவுச் சின்னமாக திருப்பொருட்களையும், ஞான நூல்களையும் வாங்கிச் செல்வர். அவர்களுக்கு இவை யாவும் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்டு, குருக்கள் இல்லத்தின் அடித் தளத்தில் 'மரியாயின் சேனை - புத்தக, திருப்பண்ட நிலையம்' செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக நெருக்கமாக இருப்பதால் நூல் விநியோகத்திற்காகவும், கிறிஸ்துவை அறிய விரும்பும் இதர மத நண்பர்களுக்காகவும் ஒளி நிலையம் காட்சி சாலையில் இயங்குகிறது.

அன்னையின் புகழ் ஏடு :

ஆரோக்கிய அன்னையின் புகழ் பரப்பும் மாத இதழ் வேளாங்கண்ணிக் குரலொலி. இது ஆங்கிலத்திலும், தமிழிலும் திங்கள் தோறும் வெளியிடப்படுகிறது. இதற்கான புதிய சந்தாவையும் புதுப்பிக்கும் சந்தாவையும் 'மரியாயின் சேனை புத்தக, திருப்பண்ட நிலையத்தில் அளித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.

வேண்டுதல் முடி:

புனித சின்னப்பர் கொரிந்து நகரிலிருந்து புறப்பட்டு கெங்கிரைத்துறையை அடைந்ததும், அங்கு தான் செய்திருந்த பொருத்தணையின்படி அவர் முடி வெட்டிக்கொண்டதாக அப்போஸ்தலர் பணி (அதி : 18, 18) கூறுகிறது. அழகூட்டும் முடியை அர்ப்பணிக்கும் நோக்குடன் திருப்பயணிகள் வேளாங்கண்ணியிலும் அதுபோல முடி எடுத்துக்கொள்கிறார்கள். இதற்காகப் பேராலயத்தின் அருகில் நேர்ச்சை எடுக்கும் இடங்கள் பேராலயக் கண்காணிப்பில் அமைக்கப்பட்டு செயல்படுகின் றன.

மருந்தகம்:

உடல் நலம் குன்றி நோய்வாய்ப்படும் திருப்பயணிகளுக்கு மருத்துவ உதவியளிக்க ஆரோக்கிய அன்னை மருத்துவமனை உள்ளது. இது புனித அடைக்கல அன்னையின் கன்னியர் மடத்தின் முன் அமைந்துள்ளது. அம்மடத்தின் கன்னியர் இப்பணியை ஆற்றி வருகின்றனர்.

மாதா எண்ணெய்:

புனித ஆரோக்கிய அன்னையின் அரும்பெரும் கொடைகளை ஏழை மக்கள் எங்கும் சென்று எடுத்துரைத்தனர். மாதா எண்ணெயை மக்கள் நெற்றியில் சிலுவையிட்டு வரைந்து பக்தியைப் பரப்பினர். அந்த எண்ணெய் தனிச் சிறப்புச் செபங்களால் புனிதம் செய்யப்படுகின்றது. 

ஏனைய வசதிகள்:

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய 'அன்னையின் பள்ளியை அடுத்து தபால், தந்தி நிலையமும், காவல் நிலையமும், காய்கறி, மீன் சந்தையும் இருக்கின்றன. அகன்ற சாலையருகில் 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' திருப்பயணிகளுக்குச் சேவை செய்து வருகிறது.