வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - திருத்தலமும் அறிமுகமும்

“பாரினில் உள்ள பல பேரோங்கும் ஊர்களில்
பாக்ய மிகசிலாக்யம் நிறை வேளாங்கண்ணி”

எனப் பாடினார் இசைக் கவிஞர் சந்தியாகு சுவாமிகள். அவர்கள் பாடியது போல் வருவோர்க்கெல்லாம் பாக்கியமும், சிலாக்கியமும் நல்கும் புனிதத் தலமாக வேளாங்கண்ணி புகழ் பெற்று உள்ளது. கீழை நாடுகளின் கீர்த்திமிகு தலங்களில் எல்லாம் பெருங்கீர்த்தியுடைய தலமாக அத் திருநகரம் நாளும் வளர்ந்து வருகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் எனப் பெருமை பெற்று விளங்குகிறது வேளாங்கண்ணி. அன்னை மரியின் புகழ் பாடும் உலக நகர்கள் பலவற்றுள்ளும், அணிநக ரான வேளாங்கண்ணி மிகவும் தனிச் சிறப்படைந்துள்ளது. அதன் சீரும் சிறப்பும் திக்கெல்லாம் பரவிப் பண்ணிசைக்கின்றன.

''உனது சந்நிதி அடுத்தேன் - உலகந்தனில்
எனது கவலை விடுத்தேன்'' 

எனப் பாடிய விற்பன்னர் வேதநாயகரைப் போல, வேளாங்கண்ணி அன்னையின் சந்நிதிக்கு வந்து, வேண்டிய வரங்களைப் பெற்றுக் கவலை தீர்ந்து செல்வோரின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

வேளாங்கண்ணியில் மக்கள் நடமாட்டம் ஒரு நகரைப் போன்று உண்டு. என்றாலும் அது ஓர் அழகிய சிற்றூர் தான். இஞ்சியும், மஞ்சளும் கொஞ்சித் தழைக்கும் பட்டினமான நாகப்பட்டினத்திற்குத் தெற்கே 10 கி. மீட்டர் தூரத்தில் வேளாங்கண்ணி அமைந்துள்ளது.

ஒருபுறத்தில் வங்கக் கடலின் நீல விளிம்புகள்; 
மறுபுறத்தில் வெள்ளையாறு கடலோடு 
கலக்கும் கோலக் காட்சிகள்; 
வெள்ளப் பெருக்கு வரும்போதெல்லாம் ஆற்று நீரும், 
கடல் நீரும் மயங்கிக் கலந்து செக்கச் செவேல் எனத்
தெரியும் செந்தூரக் கலவைகள்;
மக்கள் திரள் வரும்போதெல்லாம் அன்னையின் 
அருளோடு கலந்து மயங்கி மகிழ்ந்து தோன்றும்
சிந்தனைக் கோலங்கள்; 
தாள் பணிந்து தாலாட்டுப் பாடும் 
அலைகளை ஏற்று அரவணைக்கக் 
கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் 
ஆரோக்கிய அன்னையின் பேராலயக் கோபுரங்கள்; 
ஆண்டாண்டுகளாய் அந்த அன்னை காட்சி தந்த 
வரலாற்றுத் தடயங்கள்; வாழ்வின் வைப்புக்கள்; 
இவையெல்லாம் சேர்ந்தமைந்த இடம்தான்
வேளாங்கண்ணி.

வேளாங்கண்ணி ஒரு காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியதற்கான சான்றுகள் உள்ளன. உரோமை, கிரீஸ் [யவனம்) முதலிய மேலை நாடுகளுக்குப் பொருள்களை ஏற்றி இறக் கும் வாணிகத் தலமாக இதன் அமைதியான, ஆனால் ஆழமான கடலோரப் பகுதி அமைந்திருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. நாளடைவில் நாகப்பட்டினம் பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது. அங்கிருந்து வேதாரணியம் செல்வதற்காக வெட்டப்பட்ட வணிகப் போக்குவரவுக் கால்வாய் வேளாங்கண்ணிக்கு மேற்கேதான் செல்கிறது. அன்னையின் அருளைப் பொழியும் அளப்பரிய வாய்க்காலாக வேளாங்கண்ணி மாறியவுடன், அதற்கு அருகில் செல்லும் வணிக வாய்க்காலின் புகழ் மங்கிவிட்டது.