மாமரியின் சிலுவை!

 ஆகஸ்ட் 1, 1943

சேசு கூறுகிறார்:

ஒரு படைப்பு நிஜமாகவே தன் ஆண்டவரின் மகளாக இருக்கிறது என்றால், ஆண்டவரை நோக்கி வீசப்படும் அவமானங்களைக் கண்டு அது மிக அதிகமாகத் துன்புறுகிறது. எந்த அளவுக்கெனில், உலகிலுள்ள எந்த ஒரு மகிழ்ச்சியும், அது எவ்வளவுதான் பரிசுத்த மானதாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தாலும், அது அந்தப் படைப்பிற்கு ஆறுதல் தருவதில்லை.

என் தாய், ஒரு தாயாகவும், கடவுளின் தாயாராகவும் தான் இருப்பதில் பெரிய அளவுக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை, ஏனெனில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களால் கடவுள் ஆவியிலும் உண்மை யிலும் நேசிக்கப்படவில்லை என்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களை முழுமையாக நிரப்பியிருந்த வரப்பிரசாதம், கடவுளின் வார்த்தையானவரின் மெய்யான பேழை எப்படித் தேவத் துரோகமான முறையில் சத்தியத்தைப் பகைக்கும் ஒரு மக்களினத் தால் அவசங்கை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படும் என்பதன் ஒரு முன்சுவையை அவர்களுக்குத் தந்தது. இந்த உணர்தலில், ஏலியின மருமகளைப் போல அவர்கள் இறந்து விடவில்லை. ஏனெனில் கடவுள் எல்லா வேதனையிலிருந்தும் அவர்களைக் காக்க வேண்டியவராக இருந்ததால், அவர்களுடைய உதவிக்கு வந்தார், ஆனாலும் அதன் காரணமாக அவர்கள் தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடும் வாதைப்பட்டார்கள்.

நான் சிலுவை சுமக்குமுன்பே என் தாய் சிலுவை சுமந்தார்கள். நான் சிலுவையில் அறையப்படுவதன் கோரமான வாதைகளை அனுபவிப்பதற்கு முன்பே என் தாய் அதை அனுபவித் தார்கள். தன்னுடைய பணியும், என்னுடைய பணியும் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட நாள் முதல் அவர்கள் சிலுவை சுமந்தார்கள், அதன் வாதைகளை அனுபவித்தார்கள்.

நான் என் இரத்தத்தாலும், மாமரி தன் கண்ணீராலும் உங்களுக்குக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றுத் தந்தோம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி மிக அரிதாகவே நினைக்கிறீர்கள்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...