இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சுவாமி கிருபையாயிரும்.

கிறீஸ்துவில் நமது நம்பிக்கையைத் தூண்டி எழுப்பிய பின், திரும்பவும் ஒருமுறை “சுவாமி கிருபையாயிரும்” என்று அபயமிடுகிறோம். முன்னர் பயந்து நடுங்கிக் கொண்டு அபயமிட்டோம். சேசுக் கிறீஸ்துவின் திரு நாமத்தை உச்சரித்த பின்னரோ நமது அச்சமும் மனக் கிலேசமும் பறந்தோடி விட்டன. நம்பிக்கை நமதுள்ளத்தில் குடிகொண்டது; இந்நம்பிக்கை நமக்குத் துணிவு ஊட்டியது. ஆழ்ந்த நம்பிக்கையில் ஊன்றிய இத்துணிவுடன்தான், மீண்டும் நாம் “சுவாமி கிருபையாயிரும்” என்று இறைவனது இரக்கப் பெருக்கத்தை நம்மீது மீண்டும் கூவி அழைக்கிறோம். 

ஆயிரமாயிர முறை போற்றுதலுக்குரிய நம்பிக்கை! கிறீஸ்தவர்களாய், அதாவது கிறீஸ்துவின் உண்மைச் சீடர்களாயிருக்க விரும்புவோர் யாவரும் கைக்கொள்ள வேண்டிய நம்பிக்கை! நமது ஞான ஜீவியக் கட்டடத்தைத் தாங்கும் வச்சிரத் தூணாயிருக்க வேண்டிய திடமான நம்பிக்கை!

ஆம். சேசுவின் திருநாமத்தை பக்தியுடன் உச்சரிக்கும் உள்ளம் பயந்து நடுங்க வேண்டிய அவசியமேயில்லை. தனது அளவற்ற பேறுபலன்களால் வறியர் நம்மை, அவர் செல்வந்தர்களாக்கியிருக்க, நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? விலக்கப்பட்ட கனியைத் தின்றபின் சர்வேசுரன் சமூகத்தில் வர அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்த ஆதாமைப் போல, நாமும் ஏன் பயந்து சாக வேண்டும்? மாறாக, சேசு தேவனின் இனிய நாமத்தினாலே, ஏன் நாம் பரமபிதாவை நம்பிக்கை நிறை உள்ளத்தோடு அண்டிப் போகக் கூடாது? பரலோக பிதா இரண்டாம் ஆளாகிய சுதனை நமக்கு இரட்சகராகத் தந்தருளினார். பாவத்தால் கெட்டழிந்த மனுக்குலத்தைத் திரும்பவும் தன் வசம் கொணர அவரை உலகிற்கு அனுப்பினார். 

“சர்வேசுரன் உலகத்தை எம்மாத்திரம் நேசித்தாரெனில், தமது ஏக குமாரனில் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டழிந்து போகாது, நித்திய ஜீவியத்தை அடையும்பொருட்டு அவரையே தந்தருள சித்தமானார் என்று அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் (3,16) வாசிக்கிறோம். இப்படியிருக்க அவருடைய நாமத்தினால் அவர் பேரில் நம்பிக்கை வைத்து பிதாவை அண்டிப் போகிறவன் அஞ்சி நடுங்குவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

ஞானஸ்நானத்தினால் நாம் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளானோம். இம்மகிமையை நாம் ஒருவேளை அவமதித்திருக்கலாம்; மோட்சத்தை சுதந்தரிக்க நமக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமையை நாம் பாவத்தால் இழந்திருக்கலாம். ஆனால் கிறீஸ்துநாதர் தமது ஜீவியத்தாலும், பாடுகளாலும், மரணத்தாலும் நமக்காக அடைந்துள்ள அளவற்ற பேறுபலன்களில் ஆழ்ந்த நம்பிக்கை வைக்க, பாவிகளாகிய நமக்கிருக்கும் உரிமையை மாத்திரம் நாம் இழக்கவில்லை. பாவ நோய் போக்கும் தெய்வீக மருந்தான பாவசங்கீர்த்தனத்தால் நாம் இழந்தவற்றை மீண்டும் பெறலாம். 

தமது பேறுபலன்களின் பொக்கிஷச் சாலையை திருச்சபையின் கரங்களில் விட்டுச் சென்றிருக்கிறார் நமது இரட்சகர்; தேவத்திரவிய அனுமானங்கள் வழியாகவும் அப்பொக்கிஷத்திலிருந்து நமக்கு வேண்டிய தேவ வரப்பிரசாதங்களை அடைய நமக்கு யாதொரு தடையுமில்லை. அள்ள அள்ளக் குறையாத் திரவியம் இது: இதை நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு வேண்டுமட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். “எனது நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் ஏதாகிலும் கேட்பீர்களேயாகில், அதை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (அரு.16:23) என்று நமது இரட்சகர் சொல்லவில்லையா?

ஓ! என் ஆத்துமமே! கிறீஸ்துநாதரின் பேறு பலன்கள் உன் கரங்களிலிருக்கின்றன; இதைவிட மகிமை வேறென்ன வேண்டும்? இப்பேறுபலன்களின் அற்புத சக்தியினால் நீ தேவாதிதேவனிடம் எப்பொழுதும் தைரியமாகப் பேசலாம். இப்பலன்களால் உன்னைப் பலப்படுத்திக் கொண்டு அவருடைய திருச்சமூகத்தில் தைரியமாக வந்து உனக்கு விருப்பமானதை அவரிடத்தில் கேட்டடையலாம். இவ்விதம் நீ செய்யுங்கால், உன்னில் உன்னையல்ல, தமது திருக்குமாரனையே காண்கிறார் பரமபிதா. நீ மன்றாடுகிறாய்; ஆனால் உன்னில் தமது திருக்குமாரன் மன்றாடுவதைக் காண்கிறார். தமது திருக்குமாரனின் மன்றாட்டை பிதா எங்ஙனம் ஏற்காதிருக்கக் கூடும்? கிறீஸ்துவின் மன்றாட்டு வீண்போவது எங்ஙனம்?

“ஓ! இரக்கமே உருவான தேவனே! கங்கு கரையற்ற உமது கருணைப் பெருக்கால் உமது திருக்குமாரனின் பேறுபலன்களை எங்கள் வசம் ஒப்புவிக்கத் திருவுளம் கொண்டீர்! இப்பேறுபலன்களின்மேல் நம்பிக்கை கொண்டுதான், இதோ உமது திருச்சந்நிதியில் எங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கிறோம். இப்பேறுபலன்களின் அற்புத சக்தியில் அசையா நம்பிக்கை கொண்டு தான் தேவரீரை நோக்கி, “சுவாமி கிருபையாயிரும்” என்று திரும்பத் திரும்ப அபயமிடுகிறோம். 

நாங்கள் இனி உமது ஊழியரல்ல; நாங்கள் உமது பிள்ளைகள்; கிறீஸ்துவின் சகோதரர்கள்; அவர் எங்கள் மூத்த சகோதரர். ஆகவே, கிருபையின் சிம்மாசனத்தை நம்பிக்கையோடு அண்டி வருகிறோம். உமது திருக்குமாரனின் முகத்தைப் பார்த்து, அவரது பேறுபலன்களை முன்னிட்டு எங்கள் அபயக் குரலொலியைக் கேட்டருள வேண்டுமென்று உம்மைத் தாழ்மையோடு கெஞ்சி மன்றாடுகிறோம். 

எங்கள் மன்றாட்டு வீண்போகாதென்று உறுதியாக நம்புகிறோம்; ஏனெனில் எங்கள் மன்றாட்டு, உமது திருக்குமாரனின் மன்றாட்டு என்பதை அறிவோம். ஆகவே அவருடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் தேவரீரை நோக்கி மன்றாடுகிறோம்.” 

சுவாமி கிருபையாயிரும்!