இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எங்கள் சந்தோஷத்தினடைய காரணமே!

“இம்மரத்தின் பழத்தைச் சாப்பிடுவீர்களாயின் நன்மை தின்மை அறிவீர்கள்; கடவுளைப் போலாவீர்கள்” என்று கபடமாக மொழிந்த சர்ப்பத்தின் ஆசை வார்த்தைகளை நம்பினாள் நம் ஆதித்தாய்; பழத்தைப் புசித்தாள் ஆதாமுக்கும் அளித்தாள். இவ்விதம் தேவ கட்டளையை மீறி தன் மக்கள் எல்லோர் மேலும் தேவ சாபத்தை வருவித்துக் கொண்டாள். எனவே உலகத்தில் துன்பமும், துயரமும் தோன்றக் காரணமானவள் ஏவை. உலகில் நோவும், சாவும், பிணியும், இன்னல்கள் பலவும் பிறக்கக் காரணமாயிருந்தவள் ஆதித்தாய். பெண் ஜென்மம் அடிமைப்படவும், பாவப் பழியேற்கவும் காரணமாயிருந்தவளும் அவளே. சுருங்கக் கூறின்-- மனிதர்களின் கண்ணீருக்கு அவளே காரணம்.

“உனக்கும் ஒரு பெண்ணுக்கும், பகைமையை மூட்டுவேன். அவள் உன் தலையை நசுக்குவாள்” என்று நரக சர்ப்பத்துக்கு தண்டனை விதித்தார் தேவன். அந்நாள் முதல் பிதாப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் பசாசின் தலையை நசுக்கப் போகிறவளுக்காகக் காத்திருக்கின்றனர். அதே பெண் மெசியாவுக்குத் தாயவாள் என்று தீர்க்க தரிசிகளின் மூலமாய் அறிந்த யூதகுலப் பெண்கள் எல்லோரும் அப்பாக்கியத்தை அடைய அதி ஆவலுடன் ஆசிக்கின்றனர். 

தேவனால் வாக்களிக்கப் பட்டவர்களும், பல்லாயிர வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டவர்களுமான அப்பெண் அன்னம்மாள் சுவக்கீன் என்ற தம்பதிகளின் அருந்தவப் புதல்வியாகப் பிறக்கிறார்கள். ஜென்மப் பாவ தோஷம் அவர்களை அற்பமும் அண்டாததால் அவர்கள் பேயின் தலையை நசுக்குகிறார்கள்; ஆதாம் ஏவையின் பாவத்தால் உலகத்தைப் பிடித்த தேவ சாபத்தை நீக்கு கிறார்கள். பெண் குலத்தைத் தொடர்ந்து வந்த பழியை அகற்றுகிறார்கள். அன்னையின் பிறப்போடு உலகத்தின் சாபம் அகலுகிறது. சந்தோஷம் பிறக்கின்றது, உலக இரட்சணியம் உருவெடுக்கின்றது.

“தேவ வரங்களாலே பூரணமானவளே, வாழ்க! தேவன் உம்மோடு வாசஞ்செய்கிறார். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. தேவகுமாரன் உம்மிடம் பிறப்பார். அவருக்கு “சேசு” என்னும் திருநாமம் சூட்டுவீர்” என்று உரைத்த தேவ தூதனின் வாழ்த்துக்கு, “உம்முடைய வார்த்தையின்படி என்னிடம் எல்லாம் நிறைவேறக் கடவது” என்று உரைத்தார்கள் நாசரேத்தூர் கன்னிமாமரி. அன்றே தேவசுதனைக் கருத்தரித்தார்கள். உலகின் பாவ இருளகற்றும் ஞானச் சூரியனைத் தன் வயிற்றில் தாங்கினார்கள். தேவ சித்தத்துக்கு முற்றும் அமைந்த கீழ்ப்படிதலால், ஏவையின் கீழ்ப்படிதலற்ற செய்கையால் விளைந்த தீமைகளைப் பரிகரித்தார்கள்.

மார்கழி மாதம்; மலையடிவாரம்; மாடடைக் குடில்; மேனி நடுங்கும் குளிர்; நள்ளிரவு; சூசையப்பர் நித்திரை செய்கிறார். அந்நேரத்தில் கன்னிமாமரி தான் அற்புதமாகக் கருத்தரித்த குழந்தையை அற்புதமாகவே பெற்றெடுக்கிறார்கள். இரட்சகர் பிறப்பின் மகிழ்ச்சியால் வானவர் கீதம் பாடுகின்றனர்; ஆட்டிடையர் தேவனுக்கு நன்றி செலுத்த பெத்லகேம் குகைக்கு விரைந்து வருகின்றனர். 

மூவரசர் பொன், தூபம், மீரையுடன் தேவ பாலனை ஆராதிக்க வருகின்றனர். அன்றைய மக்கள் கண்ணிருந்தும் காணாத குருடனைப் போல் தாங்கள் ஆசை ஆவலுடன் எதிர்பார்த்த பாக்கியத்தை அடைந்தும் அதை உணரவில்லை. கன்னிமாமரியை தேவனின் தாய் என்று அவர்கள் அறியவில்லை. தங்களைப் பாவத் தினின்று மீட்கப் பிறந்த இரட்சகரின் தாய் தங்கள் மத்தியில் வாழ்கிறார்கள் என்னும் உண்மை அவர்களுக்கு அன்று மறைந்திருந்தது. 

அவ்வுண்மையை அவர்கள் அறிந்திருப்பார்களேயானால் அவர்கள் அடைந்திருக்கும் ஆனந்தத் திற்கும் அளவுண்டோ? அன்று அவர்களுக்குக் கிடைக்காத அரும்பெரும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாசரேத்தூர் கன்னிமரியாயே தேவனால் நமது ஆதித்தாய் தந்தையருக்கு வாக்களிக்கப்பட்டவர்கள்; நரக சர்ப்பத்தின் தலையை நசுக்கினவர்கள்; உலக இரட்சகரை ஈன்றளித்தவர்கள்; அவர்களே தேவனின் தாய்; அவர்களே நமது தாய். இவ்வுண்மைகளை நாம் நன்கு அறிவோம். எனவே நமது இரட்சகரை ஈன்ற தாயின் பெருமைகளை நினைக்க நாம் சந்தோஷப்படாதிருத்தல் எங்ஙனம்?

கன்னிமரியாயின் பெருமைகளை நினைக்குந் தோறும் நாம் ஆனந்தங் கொள்ளக் காரணம் ஒன்று உள்ளது; அவர்கள் மனிதனாகப் பிறந்த தேவனின் தாயாக இருப்பதுடன் நமது தாயாகவும் இருப்பதே அதிமுக்கிய காரணம். தேவதாய் நமது தாய், இது உண்மை; சத்தியம். தாயின் பெருமை, சேயின் பெருமை. சேயின் பெருமை தாயின் பெருமை. 

நம் மாதாவின் பெருமைகள் நமது பெருமைகளன்றோ? ஏதாவது ஒன்றை நினைத்துப் பெருமை கொள்ளும் ஒருவன் தனது பெருமையின் காரணமாக மகிழ்ச்சியும் அடைதல் இயற்கையன்றோ? நம் மாதாவின் மகிமை பெருமைகளோ எண்ணிலடங்காதவை. “தேவனின் தாய்” என்னும் பட்டத்துக்கு இணை இவ்வுலகிலுண்டோ? “நாமே அமலோற்பவம்” என்று லூர்து கெபியில் உரைத்து தனக்கு மிகவும் பிரியமான மகிமைப் பட்டத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார்கள். 

இஃதன்றி, மாமரியன்னை, பரலோக பூலோக இராக்கினி; சகல வரப்பிரசாத வாய்க்கால்; கன்னியர்க்கரசி; அர்ச்சியசிஷ்ட வர்களுக்குள்ளும் மேலான அர்ச்சியசிஷ்டவர்; கிறீஸ்துவர் களின் சகாயம்; பாவிகளின் தஞ்சம். சுருங்கக் கூறின், அன்னை மாமரி தேவனின் அதி உன்னத சிருஷ்டி; தேவ னுக்கு மிகவும் பிரியமானவர்கள்; பெண்களுக்குள் பாக் கியம் பெற்றவர்கள். அவர்களே நமது நேசத்தாய். பெற்ற தாயினும் பதின்மடங்கு அன்புடன் நம்மை நேசிக்கும் தாய்; என்னே நமது பாக்கியம்! இந்நினைவு நம்மைப் பூரிக்கச் செய்கிறது! ஆனந்தமழையில் ஆழ்த்துகிறது!

தூணில் கட்டப்பட்டிருக்கும் கன்று தொழுவில் கட்டப்பட்டிருக்கும் தன் தாய்ப்பசுவின் நினைவால் துள்ளிக் குதிப்பதுபோல, நமது உள்ளமும் நம் மாதாவின் நினைவால் துள்ளிக் குதிக்க வேண்டும். கன்று, தன் தாய்ப் பசுவை அடையும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்திருப் பது போல நாமும் நம் மாதா வாழும் மோட்ச பாக்கிய மடைய ஆவலோடு எதிர்பார்த்திருப்போம். நமது கஷ்டங்களிலும், சோதனைகளிலும், துன்பதுயர மிகுதியால் கண்ணீர் சிந்தும் நேரங்களிலும் “அம்மா!” என்று அலறி நம் அன்னையை நோக்கி ஓடுவோம். அன்னை நம்மை வாரியெடுத்து, நமது கண்ணீரைத் துடைப்பார்கள்; நமது துயர் யாவும் சூரியன் முன் பனி போல் மறையும். நமதுள்ளத்தில் அமரிக்கை நிலவும்.

“அன்னையே, “அம்மா” என்றழைப்பது எவ்விதம் குழந்தைகளின் இன்பமோ, அவ்விதம் “மரியாயே” என்றழைப்பது மனுக்குலத்தின் இன்பமுமாகும். உம்மாலன்றோ எங்கள் சாபம் நீங்கியது! உம்மாலன்றோ மனுக்குலம் தேவ ஆசீர்வாதம் பெற்றுய்ந்தது? ஆகவே எங்கள் சந்தோஷத்தின் காரணம் நீரன்றோ? அன்னையே, தேவனின் தாயாகிய நீரே எங்கள் தாயாகவுமிருக்கிறீர் என்று நினைக்க நாங்கள் கொள்ளும் ஆனந்தத்துக்கும் அளவுண்டோ? அம்மா, இதோ உம்மை நம்பி உமது அடைக்கலத்தை நாடி ஓடி வருகிறோம். எம்மை ஏற்றுக் காப்பாற்றி எமது நித்திய சந்தோஷத்தின் காரணமாயிரும், தாயே.” 


எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!