மரியாவால்டோர்ட்டாவின் வாழ்க்கைக் குறிப்புகள்

மரியா வால்டோர்ட்டா 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் 14 -ம் நாளில் இத்தாலி நாட்டு காசெர்ட்டா என்னும் ஊரில் பிறந்தாள். அவள் தந்தை ஜோசப் வால்டோர்ட்டா , 19-ம் குதிரைப் படைப் பிரிவில் இராணுவத் துறை அல்லாத அதிகாரியாக இருந்தார். அவள் தாய் இசைட் ஃபியோராவான்ஸி, பிரெஞ்ச் மொழி ஆசிரியை.

மரியா வால்டோர்ட்டாவின் ஆரம்பக் கல்வி ஊர்சலைன் சகோதரிகளின் மடத்துப் பள்ளியில் தொடங்கியது. அங்கு அவள் நாலரை வயதுச் சிறுமியாயிருக்கையில், "சேசுவுக்கு ஆறுதலளிக்க வேண்டும் - துயரத்தில் அவரைப் போலிருக்க வேண்டும் - அன்பினால் அதை ஏற்றுத் தாங்கிக் கொள்ள வேண்டும்'' என்ற கருத்து முதன்முதலாக அவளுடைய பிஞ்சு உள்ளத்தில் ஏற்பட்டது. மரியா வால்டோர்ட்டா எப்போதும் வகுப்பில் முதல் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

1908 அக்டோபர் முதல் ஞாயிறன்று மரியா புது நன்மை வாங்கினாள். அவ்வைபவத்திற்கு அவள் தந்தை வரக் கூடவில்லை.

அவர் வர அவசியமில்லையென்று அவள் தாய் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. தந்தை அன்று தன்னுடன் இல்லாத குறையை மரியா மிகத் துயரமாய் உணர்ந்தாள்.

1909-ல் பிறர் சிநேக சகோதரிகளின் பள்ளியில் உள் மாணவியாகச் சேர்ந்தாள் மரியா. அங்கு அவளுடைய "தாராள் குணம், உறுதி, மன வலிமை, பிரமாணிக்கம்" ஆகிய பண்புகள் அவளுக்கு "வால்டோர்ட்டீ னோ' என்ற செல்லப் பெயரைத் தேடித் தந்தன. அவளுடைய தாய் அடிக்கடி அவளுடைய கல்வியில் தலையிட்டு அது ஒரு முகமாக வளர்வதற்குத் தடையாயிருந்தாள்.

1917-ல் "நல்ல சமாரித்தன்" தாதியாக, யுத்தத்தில் காயப்பட்ட போர்வீரர்களுக்கு மரியா உதவி செய்தாள். 1920 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ம் நாளன்று அவள் தன் தாயுடன் தெருவில் நடந்து செல்கையில், நெறி கெட்டலைந்த இளைஞன் ஒருவன் காரணமின்றி ஓர் இரும்புக் கம்பியால் அவள் முதுகில் ஓங்கி அறைந்து விட்டான். முதுகெலும்பு பழுதுபட்டதால் அவள் மூன்று மாதம் படுக்கையிலிருந்தாள். இது அவளுடைய பலி ஜீவியம் பிற்காலத்தில் எப்படி அமையும் என்பதற்கு ஒரு முன்னடையாளமாக இருந்தது.

1924-ல் வால்டோர்ட்டா குடும்பம் வியாரேஜியா என்ற இடத்தில் ஒரு சிறு வீடு வாங்கி அங்கே நிரந்தரமாய்க் குடியேறியது. அச்சிறு இல்லத்தில்தான் "கடவுளில் அவளின் வளர்ச்சி'' தொடங்கியது. அங்குதான் அவள் அர்ச். குழந்தை தெரெசம் மாளின் சுய சரிதையாகிய "ஓர் ஆன்மாவின் வரலாறு' என்ற புத்தகத்தை வாசித்து, 1925 ஜனவரி 28 - ம் நாளன்று தன்னையே கடவுளின் இரக்கமுள்ள அன்பிற்கு அனுதின பலிப் பொருளாக அர்ப்பணித்தாள். அதுமுதல் அவள் தேவ சிநேக வாழ்வில் அசாதாரண உயர்வுகளைக் காணவும், சேசுவின் பிரசன்னத்தை தன் சிறு செயல்களிலும் வார்த்தைகளிலும் உணரவும் வரம் பெற்றாள்.

வர வர மரியா வால்டோர்ட்டாவிடம், தன்னை முழுவதும் கடவுளின் நீதிக்கு பரிகாரப் பலிப் பொருளாக்கும் விருப்பம் ஏற்பட்டு, அதற்கு அவள் தன்னையே "பரிசுத்த பலியாக" தயாரித்து வந்தாள். மூன்று துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, கீழ்ப்படிதல், தரித்திரம் ஆகியவற்றை தான்தானே சேசுவுக்கு ஒப்புக்கொடுத்தாள். 1931-ல் அவளுடைய சரீர நோவும், ஆன்ம துன்பங்களும் அதிகரித்தன. அவள் நடப்பதற்கு இயலாதவளாகி வந்தாள்.

1933-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதிதான் அவள் வெளியே சென்று வந்த கடைசி நாள். அன்றும் அவள் மிகவும் களைப்படைந்து சோர்ந்த நிலையில்தான் வீடு வந்து சேர்ந்தாள். 1934 ஏப்ரல் முதல் நாளிலிருந்து அவள் தன் படுக்கையை விட்டு இறங்கிச் செல்ல இயலவில்லை. ஆனால் அதுவே அவளுடைய "அன்பின் ஆழ்ந்த பரவசத்தின் தொடக்கமாயிருந்தது. நமதாண்டவரின் கரத்தின் கருவியானாள்.

"வேதனை, பரிகாரம், அன்பு என்பவையே அவளு டைய அப்போஸ்தல் அலுவலாகின. அவளிடம் விசேஷமாய்த் துலங்கிய பண்பு யாதெனில், அவள் உலகத்தின் நிலையைப் பற்றி வேதனையான முன்னறிவிப்புகளைப் பெற்ற போதிலும், திடமான மனதையும், தெளிவான அறிவையும், கடவுள் மீது ஊன்றுதலையும் கொண்டிருந்ததே.

1942-ல் சங். ரோம் வால்ட் மிக்ளியோரினி என்ற மரியாயின் ஊழியர் சபைக் குரு, அவளுக்கு ஆன்ம குருவாகக் கொடுக்கப் பட்டார். அவருடைய விருப்பப் படியே அவள் தன் சுய சரிதையை எழுதினாள்.

1943-ம் ஆண்டு ஏப்ரல் 23, பெரிய வெள்ளிக்கிழமையன்று மரியா வால் டோர்ட்டா சேசு தனக்கு வெளிப்படுத்திய "உரைகளை'' முதல் முறையாக எழுதத் தொடங்கினாள். 1943 முதல் 1947 வரையிலும், அவள் சேசுவின் "குரலாகவும்,'' ''எழுதுகருவியாகவும் தெரிந்து கொள்ளப் பட்டு, அந்த அலுவலைத் தீவிரமாகச் செய்தாள். 1947-க்குப் பின் அவளுடைய எழுதும் பணி படிப்படியாகக் குறைந்து 1953-ல் நின்று விட்டது.

மரியா தன் படுக்கையில் ஏறக்குறைய செங்குத்தாக அமர்ந்த படியே, கால்களை மடித்து வைத்து, அவற்றில் ஒரு பலகையைச் சார்த்தி எழுதினாள். ஏறக்குறைய பதினையாயிரம் நோட்டுப் புத்தகங்களை எழுதி நிரப்பினாள். இரவு பகலென்றும், வேதனை களைப்பென்றும் பாராமல் எழுதினாள். அவள் எழுதியவற்றில் மூன்றில் இரண்டு பாகம் நமதாண்டவருடையவும், மாதாவுடை யவும் வாழ்வு, பாடுகள், மகிமை ஆகியவற்றை விவரிக்கிறது. இந்த வரலாறு சுவிசேஷத்தின் விரிவான தெளிவான விளக்கமாயிருக்கிறது. ஆண்டவர் அவளைத் தம் "சின்ன - அருள்" என்றழைத் தார். ஆகவே அவள் எழுதிய சேசு மரியின் வரலாற்றை "சின்ன அருள் மரியா வால்டோர்ட்டாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சேசு கிறீஸ்துவின் சுவிசேஷம்' என்று குறிப்பிட்டிருக்கிறாள்.

மரியா வால்டோர்ட்டா தான் சேசு கிறிஸ்துவுடன் வாழ்ந்த ஆழ்ந்த அந்தரங்க ஐக்கிய வாழ்வை வெளியில் யாருக்கும் காட்ட வேண்டாம் என்று அவரிடம் மன்றாடினாள். ஆனால் தன் அயலா ருடைய இன்ப துன்பங்களில் அக்கறை காட்டி, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளைக் கூறி, தன் உள்ளரங்க தீவிர பரித்தியாக தவ முயற்சிகளால் பல பிரச்சினைகளைப் புதுமையாக தீர்த்து வைத்தாள்.

மரியா வால்டோர்ட்டாவின் இறுதி ஐந்து ஆண்டுகளிலும் அவளுடைய அறிவு சிறு குழந்தை போலாகி விட்டது. அவள், தன் வழியாக ஆண்டவர் கொடுத்த வெளிப்படுத்தல்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெறாமலே அவள் இவ்வுலகை விட்டுப் பிரிய வேண்டியதை ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தபின், தன் அறிவையும் அவருக்கே பலியாக்கி அர்ப்பணித்திருந்தது அதற்குக் காரணமாயிருக்கலாம்.

அதன்படியே அவள் தன் அறிவை மெல்ல மெல்ல இழந் தாள். எந்தத் துண்டுக் காகிதத்தைக் கண்டாலும் அதில் "சேசுவே உம்மை நம்பியிருக்கிறேன்,'' அல்லது அது போன்ற ஏதாவது மனவல்லய ஜெபங்களை எழுதி நிறைத்து விடுவாள். அவளுடன் உரையாடுவது சிரமமாகி வந்தது. யாரும் பேசிய கடைசி வார்த்தை களைத் திருப்பித் திருப்பிச் சொல்வாள். மேலும் அவள் மிகவும் அமைதியாகி, தன் ஆகாரத்தைக் கூட கேட்டுப் பெற்றுக் கொள்ளா மல் குழந்தை போல் ஊட்டப்படும் நிலைக்கு வந்து விட்டாள்.

1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மருத்துவ மனைக்கு அவளைக் கொண்டு சென்றார்கள். அங்கு எவ்வித பயனும் ஏற்படாததால் மீண்டும் அவள் வீட்டிற்கே கொண்டு வரப்பட்டாள். அவள் பெற்றோர் இறந்து போனதிலிருந்து அவளுக்கு செவிலித் தாயாக இருந்த மார்த்தா ரிச்சியோற்றி என்ற மாதின் ஆதரவிலேயே அவள் இருந்து வந்தாள்.

1961 அக்டோபர் மாதம் 12-ம் தேதி, காலை 10.35 மணிக்கு அவள் ஆவி அதிசயமாகப் பிரிந்தது. அதாவது அவளுடைய மரண சமயத்தில் ஜெபங்களைச் சொல்லும்போது, "கிறீஸ்தவ ஆத்துமமே! உன்னைச் சிருஷ்டித்த எல்லாம் வல்ல பரம பிதாவின் நாமத்தினாலும், உனக் காகப் பாடுபட்ட சீவிய கடவுளின் குமாரனான சேசு கிறீஸ்துவின் நாமத்தினாலும், உன் மேல் பொழியப்பட்ட இஸ்பிரீத்து சாந்துவின் நாமத்தினாலும், கடவுளின் கன்னித்தாயான மகிமை பொருந்திய பரிசுத்த மாமரியின் பெயராலும் ... இந்த உலகத்தை விட்டுப் புறப்படுவாயாக!'' என்று உச்சரித்த அதே வேளையில் அவளுடைய ஆவி பிரிந்தது. வாழ்நாள் முழுவதும் கீழ்ப்படிதலில் வாழ்ந்த அவ ளுடைய இறுதிக் கீழ்ப்படிதல் அதுவாயிருந்தது. மரணமடைந்த பின், "ஆண்டவரின் எழுதுகோல்" என்றழைக்கப்பட்ட அவளுடைய வலது கை பிரகாசமாயிருந்ததையும், அவளுடைய எழுதும் மேசையாகப் பயன்பட்ட முழங்கால்கள் நிமிர்ந்திருந் ததையும் அநேக பெரியவர்கள் கண்டார்கள்.

தான் இறந்தபின், தன் ஞானஸ்நானத்தில் பயன்படுத்தப் பட்ட வெள்ளைத் துகிலால் தன் தலை மூடப்பட வேண்டுமென்றும், தன் மரண ஞாபகச் சின்னத்தில், "நான் வேதனைப்பட்டு முடித்து விட்டேன். ஆனால் தொடர்ந்து நேசிப்பேன்" என்ற வாக்கியம் எழுதப்படவும் அவள் கேட்டிருந்தபடியே நிறைவேற்றப்பட்டு, 1961 அக்டோபர் 14 -ம் நாளில் அவள் நல்லடக்கம் செய்யப்பட்டாள். 10 ஆண்டுகளுக்குப் பின் 12.10.1971-ல் அவளுடைய மீ பொருள்கள் எடுக்கப்பட்டு, அவள் குடும்பக் கல்லறையில் சேமிக்கப்பட்டன. பின்னும் 2.7.1973-ல் அது திருச்சபையின் அனுமதியோடு எடுக்கப்பட்டு, பிளாரன்ஸ் நகர் மரியாயின் மங்கள வார்த்தை பேராலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டு, இன்று வரையும் சங்கிக்கப்பட்டு வருகிறது.

மரியா வால்டோர்ட்டாவுக்கு வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷ விளக்கமானது முதலில் "சேசுவின் காவியம்" என்று வெளியிடப்பட்டது. இப்பெயரில் வேறொரு புத்தகம் ஏற்கனவே இருந்ததால் இதை "கடவுள் - மனிதனின் காவியம்'' என்று மாற்றியமைத்து இன்று உலகமெங்கும் வாசிக்க வகை செய்யப்பட்டு வருகிறது.

இந்நூலைப் பக்தியுடன் படிக்கிறவர்கள் தங்கள் உள்ளங்களில் சேசுவையும், அவருடைய திருத்தாயையும் நேசிக்கும் தாகம் எழுவதை உணர்ந்து கொள்வார்கள்.