இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - ஒரு நாகரீகம் அழிந்துவிட்டது!

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலே மனிதனுக்கு மனிதன் கொள்ளும் உறவிலே ஒரு மாபெரும் அபாயம் துலக்கமாகக் காணப்படுகிறது. மனிதன் மனிதனோடு மோதுகிறான்; அடிக்கடி யுத்தங்கள் நிகழ்கின்றன; புரட்சிகள் எழுகின்றன; அக்கிரமங்கள் அதிகரிக்கின்றன; நாசங்கள் விளைகின்றன; ஒரு மனித இனத்துக்கும், மற்றொரு மனித இனத்துக்கும் உறவில் சீர்கேடு: சமுதாயங்கள் பெரிய ஜன்னியல் இருப்பதுபோல் குலுக்கப்படுகின்றன. பெரிய மருத்துவ மனைகளின் அறிக்கைகள் குறிப்பிடுவது எதை? மக்களிடைய நரம்புக் கோளாறுகள், மனக் கோளாறுகள் அதிகரித்துள்ளன என்று! இது எதைக் காட்டுகிறது? என்றுமில்லாத அளவில் மக்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சஞ்சலம் மிகுந்து வருகிறது என்பதைத்தான்.

இவற்றின் உச்சக்கட்டத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக் கிறோம் என்றே புலப்படுகிறது! நம் (ஐரோப்பிய) மூதாதையரின் யூத-கிறீஸ்தவ நாகரீகம் அழியும் தறுவாயில் உள்ளது என்று நிச்சயித்துக் கூறலாம். ஓர் உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு உலகம் பிறந்து கொண்டிருக்கிறது.

சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படி கிறீஸ்தவ நாகரீகத்தின் பொற்காலம் 13-வது நூற்றாண்டாகும். “இருண்ட ஆண்டுகளைத்” திருச்சபை கண்டது. அவ்விருண்ட காலத்தில் சாமிநாதர், பிரான்சிஸ் அஸிஸியார் என்பவர்களுடைய ஞான தீட்சணியமும், ஆல்பர்ட், அக்வீனாஸ் என்பவர்களுடைய அறிவுத் தீட்சணியமும் ஐரோப்பாவில் பிரகாசித்தன. இந்த ஒளி ஐரோப்பாக் கண்டம் முழுவதிற்கும் அறிவின் உயர்வையும், ஒழுக்க நெறியிலும், அழகு உணர்விலும் ஒரு நுட்ப உயர்வையும் அளித்தது. அது உலகின் மகிமையாய்த் திகழ்ந்தது.

இந்த ஐரோப்பிய நாகரீகம் மக்களால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரமும் இருந்தது. தேவ வரப்பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது தள்ளி விடவோ அவர்களால் கூடுமாயிருந்தது. 13-ம் நூற்றாண்டு (இவ்வளவு சிறப்பாக இருந்ததே) ஏன்? தங்கள் ஞானப் பெற்றோர்கள் ஞான ஸ்நானத்தில் தங்களுக்காகக் கடவுளுக்கு கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஏராளமான பேர் கிறீஸ்துவை ஏற்று, பசாசையும், அவனுடைய ஆரவாரங்களையும் தள்ளி விட்டார்கள். ஐரோப்பா ஒளியை நோக்கி மொத்தமாக நடந்து சென்ற காலம் அது. அது உலக முழுவதிலும் மிகவும் பயனுள்ள முறையில் பரவியது.

ஐரோப்பிய கிறீஸ்தவ நாகரீகம் அதன் உச்ச நிலையை அடைந்தும், அடையாமலும் இருந்தபோதே அது தளர்ச்சியடையத் துவக்கிற்று. மத்திய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சி, அதன் சீரிய கலைகள், கட்டடச் சிறப்புகள் யாவும் கிறீஸ்தவ வளர்ச்சியேயாகும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அக்காலத்திய புலவர் சிலர், அப்புது நாகரீகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர்களாய், அதற்குக் காரணமாயிருந்த தெய்வ கருணையை மறந்து விட்டார்கள். மனிதன் இவ்வாறு முன்னேறியே தீருவான் என்று முடிவு கட்டி விட்டார்கள். இங்ஙனம், கடவுளை மறந்த, மனிதாபிமானத்தின் விதை ஊன்றப் பட்டது. அக்காலத்துக்கேற்ற முறையில், சற்று மரியாதையாக, “கடவுளே, நீர் எங்களுக்கு அத்தியாவசியமில்லை” என்று கூறப் பட்டது.

இந்தக் கிறீஸ்தவ நாகரீகத்தின் தளர்ச்சியைச் சில நிகழ்ச்சிகளும் உறுதிப்படுத்தின. 14-ம் நூற்றாண்டில் கிறீஸ்தவ அரசர்களுக்குள்ளே எழுந்த பல யுத்தங்கள், உரோமையிலிருந்து பாப்பரசர் வெளியேறி அவிஞ்ஞோன் நகரில் குடியேறியது, இரண்டு மூன்று போட்டிப் பாப்புகள் ஏற்பட்டது, இந்நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

15-ம் நூற்றாண்டு இதை விடக் கீழிறங்கியது: குருக்கள் மத்தியில் பரவலான ஊழல்கள் காணப்பட்டன. பெரிய துறவற சபைகளில் அவர்களுடைய பரிசுத்த ஊக்கம் தளர்ந்து போயிற்று. விக்ளிஃப், ஜான் ஹூஸ் என்பவர்களும், பிறரும் விரிவாகப் புரட்சிகள் ஏற்பட இருந்ததின் அறிவிப்புகçள் செய்து கொண்டு வந்தார்கள்.

16-ம் நூற்றாண்டு பிறந்தது. புயல் முழு வேகத்துடன் சீறி எழுந்தது. தையலில்லாத அங்கியாகிய கிறீஸ்தவ ஒற்றுமையை உடைத்து சிதைத்தார்கள். லூத்தர், கால்வின், நாக்ஸ், எட்டாம் யஹன்ரி என்பவர்கள். அன்று முதல் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் என்ற நிலை அற்றுப் போயிற்று.

இந்த தலைகீழ்ப் பாய்ச்சல் 17-ம் நூற்றாண்டில் நடந்த சமயச் சண்டைகளால் தொடர்ந்து வளர்ந்தது. திருச்சபையின் தலைமை போதக அதிகாரத்தை மிக நுட்பமான முறையில் எதிர்த்தார்கள், பிரிவினைக்காரர், ஜான்சனியர், கால்கானியர் போன்றோர். இவைகள் “உள் விளைந்த பதிதம்” என்று அழைக்கப்படுகின்றன.

ஐரோப்பிய கிறீஸ்தவ நாகரீகத்தின் ஒளி விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைந்தன. 18-ம் நூற்றாண்டில் இருள் இன்னும் அதிகமாகப் பரவியது. ஏற்கெனவே பலவீனப்பட்டிருந்த ஸ்தாபன முறையான சத்தியத் திருச்சபை, பசாசின் படைகளால் தாக்கப்பட்டு, மேலும் பலவீனமடைந்தது.

18-ம் நூற்றாண்டில் வோல்ட்டேரும், “ஒளிகாட்டிகள்” என்று தங்களை அழைத்துக் கொண்ட சக்திகளும் கிறீஸ்தவ நாகரீகத்தை அடித்துத் தாக்கிய தாக்குதலிலிருந்து அது முழுவதும் விடுதலை அடையவேயில்லை. இரகசிய சபைகள் வெற்றியோடு தங்கள் சதித் திட்டங்ளைச் செய்தன. ஐரோப்பாவின் கத்தோலிக்க இராச்சியங் களில் “எதையும் நம்பாமை” என்ற புதுத் தப்பறை பரவியது. இவைகளால் திருச்சபையின் படையணியாகவும், விசுவாச சத்தியங் களின் பாதுகாப்பாகவும் இருந்த சேசு சபை அழிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய கிறீஸ்தவ இராச்சியங்கள் எல்லாம் இரகசிய சபைகளுடன் சேர்ந்து திருச்சபையின் அழிவைக் கொண்டு வந்தன.

பிரெஞ்சு நாட்டைப் புரட்சிக்காரர்கள் வேத மறுதலிப்புக்கு இழுத்துக்கொண்டு வந்த 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கிறீஸ்தவ நாகரீகம் சாத்தானின் சக்தியில் அகப்பட்டிருந்தது தெளிவாயிற்று. இந்த சாத்தான் ஜெபத்தாலும் தவத்தினாலுமே விரட்டப்படக் கூடியது என்று பின்னால் தெரிய வந்தது.

19-ம் நூற்றாண்டு கார்ல் மார்க்ஸ் உயர்ந்து தோன்றிய காலம். அந்திக் கிறீஸ்துவின் தீர்க்கதரிசி என்றும், “கடவுளை அவருடைய பரலோகத்திலிருந்து கீழே இழுத்துப் போடும் மனிதன்” என்றும் தன் சீடர்களால் புகழப்பட்ட மனிதன்! இந்த 19-ம் நூற்றாண்டில் விசுவாசமும் ஒழுக்கமும் பரவலாகப் பட்டழிந்து வந்தன. கடவுளை மறந்த மனிதாபிமானம் வளர்ந்தது. நல்லொழுக்க விதிகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றப்படலாயின. இவைகள் கிறீஸ்தவ ஐரோப்பாவெங்கும் புற்று நோய் போலப் பரவி வந்தன. ஆயினும் இதே இருளின் நடுவில் இடைக்கிடையே ஒளிக்கதிர்கள் வீசி மறைந்தன. வரவிருக்கும் ஒரு பிரகாசத்தின் முன்னறிவிப்புகளாய் அவை இருந்தன. 1830-ம் ஆண்டில் புனித கத்தரீன் லபூரே என்பவளுக்குப் பாரீஸ் நகரில் தேவதாய் காட்சி தந்தார்கள். 1846-ல் மீண்டும் சலேத் நகரில் தரிசனையானார்கள். இன்னும் 1858-ம் வருடம் லூர்து மாநகரில் அர்ச். பெர்னதெத்துக்குக் காட்சியளித்தார்கள். மேலும் ஒருமுறை போன்ட்மேய்ன் என்னுமிடத்தில் 1871-ல் தோன்றினார்கள். தேவ தாயின் இந்த நான்கு காட்சிகளும் பிரெஞ்ச் நாட்டிலேயே நிகழ்ந்தன. முந்திய நூற்றாண்டின் இறுதியில் மாற்றான் விரித்த வலை பிரெஞ்ச் நாட்டையே குறியாகக் கொண்டிருந்தது. இந்த சவாலை ஒளியின் சக்திகளின் சார்பாக பரிசுத்த கன்னித்தாய் ஏற்றுக் கொண்டார்கள். மோட்சமும், நரகமும் நேரடி மோதலில் ஈடுபட்டாற்போல் மிகுந்த முக்கியத்துவமுடையதாய் அது இருந்தது. ஆதியாகமம் 3:15-ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனப் பெண்ணிற்கும், நரக சர்ப்பத்துக்கும் ஏற்பட்ட ஊழிகாலப் பெரும் போராக அது காணப்பட்டது. இந்தப் போர் கிறீஸ்தவத்தின் மாபெரும் தூண்களை உடைத்து சிருஷ்டிப்பு அனைத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய அளவிற்கு வளரக் கூடியதாயிருந்தது. இது ஒரு தனித்த யுத்தம். நன்மையும், தீமையும் நேருக்கு நேர் எதிர்த்தாற்போல், மானிட வரலாற்றிலேயே இது வரை காணப்படாததாய், உலகெங்கும் கவ்விப் பிடிப்பதாய் மிகப் பெரிய அளவில் தற்கால மனிதனுடைய ஆன்மாவைக் கொள்ளையிடுவதற் காக எழுந்த மாபெரும் போராயிருந்தது.

20-ம் நூற்றாண்டு புலர்ந்தது. சிவப்பு மயமாய்ப் புலர்ந்தது. இரத்தமும், வெறியும் தருவதாய், சரித்திர ஒப்புமை வேறு இல்லாத தாய்ப் புலர்ந்தது.

லூத்தர், வோல்ட்டேர், கார்ல் மார்க்ஸ் என்பவர்களின் திட்டமிட்ட செயல்கள் பலனளிக்க ஆரம்பித்தன. இருள் இன்னும் இருளாயிற்று. மனிதர்கள் தங்களுக்கு உண்மையாகவே நல்லது எது என்பதைக் காண இயலாமல் போனார்கள். தாங்கள் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்று அறியாமல் போனார்கள். இரட்சண்ய சுப செய்தியைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளக் கூடிய விசுவாசம் அற்றவர்கள் ஆனார்கள்.

நல்ல உரமுள்ள நிலம், பண்படுத்தப்படாமல் விடப்பட்டால் பெரிய புதர்களைப் பிறப்பிக்கும் என்று கூறினார் ப்ளூட்டார்க் என்ற தத்துவ மேதை. இந்தக் கிறீஸ்தவ நாகரீகம் ஒரு நல்ல உரமுள்ள நிலம். கடவுளுடைய அருள் வரப்பிரசாதத்தால் முன்பு போல் அது பண்படுத்தப்படவில்லை. ஆதலால் அது நாஸிஸம், கம்யூனிஸம் போன்ற புதர்களையும், விஷ வாயுக் கொலை அறைகள், அடக்கு முறைச் சிறைக்கூடம், வர்ணிக்க முடியாத கொடுமை நிறைந்த சித்திரவதை போன்ற கொடிய முட்புதர்களையும் முளைப்பித்தது.

ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்த இருட்டு இன்னும் அதிக இருட்டாகியது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக சலிப்பூட்டும் அளவுக்கு யுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. போராயுதங்கள் அதிகக் கொடியனவாகி, அழிவும் மிஞ்சிப் போயிற்று.

இவ்வாறு மிகுந்து வந்த காரிருளின் நடுவே ஒரு பிரகாச முள்ள ஒளி தோன்றியது! அது ஒரு வரப்பிரசாத ஒளிக்கதிர்! கிறீஸ் தவப் பண்பாடு தன் முந்திய உயர்நிலைக்கு வரும்படி அதன் உறக் கத்தில் இருந்து அதைத் தட்டியெழுப்பும் ஒளியாக அது இருந்தது. இருள் மூடியிருந்த உலகத்தின் நடுவே வெளிச்சமுள்ள பாதையை வகுத்துக் கொடுத்தது அந்த ஒளி. பரலோகக் காட்சி ஒன்று காணப்பட்டது. மோட்சத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. பிரமை தரும் ஒரு சூரிய அதிசயம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மவுனம்...

மனித இனத்தின் பிற்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றிப் பல தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டன. இவையெல்லாம் நிகழ்ந்தது 1917-ம் ஆண்டில்!

குறிப்பு: 

பாத்திமா காட்சிகள் பற்றி அறிமுகமில்லாத வாசகர்கள் அதுபற்றிய விவரங்களை இப்புத்தகத்தின் ஆரம்பத்திலும், 33-ம் அத்தியாயத்திலும் சுருக்கமாக அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இறக்கும் தறுவாயிலிருந்த கிறீஸ்தவ நாகரீகத்தின் அவஸ் தையை இந்தத் தீர்க்கதரிசனங்கள் எடுத்துக் கூறின. அதே சமயத்தில், ஒரு புதிய கிறீஸ்தவ சமுதாய அமைப்புக்குள் மனுக்குலம் நுழைகிறது என்ற உணர்ச்சியூட்டும் செய்தியையும் அதே ஆண்டு 1917 நமக்களித்தது.

சிலுவையின் மகிமை துலங்கும் காலம் வந்ததெனவும் நாம் அறியலானோம். சிலுவையின் வெற்றி--கடைக்கோடி மட்டும் எட்டக்கூடியதாயும், அர்ச்சியசிஷ்டவர்களும், அன்பின் அர்ச்சிய சிஷ்டவர்களும் (னிதீவிமிஷ்உவி) கண்டு எதிர்பார்த்த வெற்றியாகவும் அது அமையவிருந்தது.

ஒரு புதிய சமாதான யுகத்தைப் பற்றியும், சிங்காரத் தோப்பில் கடவுளாலேயே கூறப்பட்ட தீர்க்க வசனங்கள் நிறைவேறுவது பற்றியும் அந்தப் பரலோகக் குரல் பேசியது. சரித்திரத்தின் சிகரம் இந்நிகழ்ச்சி யாகும்.