இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரலோகத்தினுடைய வாசலே!

இத்தலைப்பைக் கண்டவுடன் சிலர் வியப்பும் திகைப்பும் அடைந்து, “இது என்ன விந்தை! “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே; என்னாலன்றிப் பிதாவினிடத்திற் சேருகிறவன் ஒருவனுமில்லை” என்று நமதாண்டவர் திருவுளம்பற்றியிருக்க, மரியாயி “பரலோகத்தின் வாசல்” ஆவது எங்ஙனம்?” என்று வினவலாம். உண்மை; கிறீஸ்துநாதரே நம்மை சர்வேசுரனிடம் இட்டுச் செல்லும் வாசல்; அவர் வழியன்றி சர்வேசுரனிடம் செல்வது இயலாத காரியம். 

ஆனால் கிறீஸ்துநாதரிடம் நம்மை இட்டுச் செல்லும் வாசலொன்று இருக்கிறது. அவ்வாசலே மாமரி அன்னை. அன்றியும் அர்ச். ஜெரோம் சொல்லுவது போல்: “நாம் மரியாயிக்குச் செலுத்தும் வணக்கம் யாவும் சர்வேசுரனுக்குச் செலுத்தும் மகிமையேயாகும்” (Ad Eustoch). ஏனெனில் அவரது விசேஷ வரத்தாலன்றி மாமரி அன்னை பரலோக வாசலாதல் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, “இரட்சகரின் அன்பு நிறை தாயே! மோட்சத்தின் திறந்த வாசல் நீரே” (“Alma Redemptoris Mater, quae pervia caeli porta manes”). என்று திருச்சபை பாடும் கீதம் பொருத்தமுடையது. “மோட்ச வாசல், கன்னிமை குன்றாத வாசல், இரட்சணியத்தின் வாசல்” எனப் பல அர்ச்சியசிஷ்டவர்கள் மாமரியைப் போற்றுகின்றனர்.

ஓரிடத்தினுள் போவதும், அதினின்று வெளிவரு வதும் வாசலின் வழியாகவே. நமது இரட்சகர் வானுலகி லிருந்து இப்பூவுலகிற்கு வந்த வாசல் மாமரி. வேறு வழியாக அவர் வந்திருக்கலாம். அவரது திருவுளத்தை அளப்பவர் யார்? மாதாவாயிருக்க மாமரிக்குக் கிடைத்த பாக்கியமே பாக்கியம்! சிருஷ்டிகர் சிசுவாய்ப் பிறக்க கன்னிமாமரி அதன்மூலம் சிருஷ்டிகரின் தாயானார்கள். மோட்ச வாசலானார்கள். அவர்களிடமிருந்து உதித்த சிசுவன்றோ அடைக்கப்பட்ட மோட்ச வாசலைத் திறந்தது? 

மேலும் வேறொரு அர்த்தத்திலும் “பரலோகத்தின் வாசல்” என்ற புகழ் மாமரி அன்னைக்குப் பொருந்தும். எசேக்கியேல் தீர்க்கதரிசி கைதியாக பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்ட காலத்தில் ஜெருசலேம் பட்டணத்துத் தேவாலயம் பாழாய்க் கிடந்தது. அது திரும்பக் கட்டப்படும் காட்சியைக் கடவுள் அவருக்குக் காண்பித்தார். ஆலயத்தின் உள்ளளவுகளை எசக்கியேல் கண்டபின் சம்மனசானவர் அவரைக் கிழக்கு வாசலுக்கு இட்டு வந்தார். அது பூட்டப்பட்டிருந்தது. அப்போது தூதர் அவரை நோக்கி: “இந்த வாசலின் கதவு பூட்டியே கிடக்கும்; அது திறக்கப்படுவதில்லை. ஏனெனில் இஸ்ராயேலின் தேவனாகிய ஆண்டவர் அதன் வழியாகப் பிரவேசித்தார்” என்றார் (எசக்.44:1). 

கொர்னேலியுஸ் தெ லாப்பிதே என்பவர் சொல்லுவது போல். இவ்வார்த்தைகள் மரியாயைச் சுட்டிக் காட்டுகின்றன. நமது இரட்சகர் மரியாயின் வழியாக வந்ததால் அவர்கள் ஒரு வாசல். ஆயினும் அவர்கள் கன்னிமையை இழக்காததாலும், வேறெவரும் அதனுள் பிரவேசியாததினாலும் அவர்கள் கன்னிமை பூட்டப்பட்டதோர் வாசலானார்கள். கர்த்தர் அவ்வழியாய் வந்தபடியால் வேறெவரும் அதன் மார்க்கமாய்ப் பிரவேசிக்க முடியாமல் போயிற்று.

“நாமே வழியும், சத்தியமும், ஜீவியமும்” என்று திருவுளம் பற்றிய பரலோக நாதரே இவ்வாசல் வழியாக வந்திருப்பின் நாம் வேறு வழியாக மோட்சத்தை அடைய எண்ணுவது சரியன்று. நமது இரட்சணியத்துக்கு அவசியமான வரப்பிரசாதங்கள் யாவும் இவ்வாசல் வழியாகவே நம்மை வந்தடைகின்றன. வரப்பிரசாதங் களின் கர்த்தர் தாமே மரியாயி வழியாய் வந்திருக்கையில், அவரது வரப்பிரசாதம் வேறு எவ்வழியாய் வர முடியும்? 

அம்மாசற்ற கன்னிகையே கடவுளுக்கும் நமக்கும் ஓர் மத்தியஸ்தி. எனவே நாம் ஈடேற்றமடைய விரும்பினால், சர்வேசுரனையடைந்து என்றும் அவரோடு ஒன்றித்திருக்க ஆசித்தால், அவ்வாசலின் வழியாக, அந்த மத்தியஸ்தியின் வழியாகப் போவதே உசிதம். பாவியும் புண்ணியவானும் அவ்வாசலின் வழிச் செல்லலாம். “என் ஆண்டவரே! என் மீது கருணை கொண்டிருப்பீராகில் என் ஜனத்தின் மீது கிருபை பாலித்தருளும். என்னை நேசிப் பீராகில் நான் மன்றாடும் பாவிகள் மீது இரங்கும்” என்று அவர்கள் நமக்காக மன்றாடுகிறார்கள். 

மாமரி அன்னை நாம் செல்லுவதற்கு வழி மட்டுமன்று; அதன் வழியாகப் போகும்படி நம்மை ஏவும் தூண்டுகோலாகவுமிருக்கிறார்கள். அவர்களிடம் நம்பிக்கையுடன் அண்டிச் செல்லுவோரைத் தானே கூட்டிச் செல்லவும், பாவியைப் பாவ வழியினின்று மீட்டு மோட்ச மார்க்கத்தில் நடத்தவும் காத்திருக்கின்றார்கள்.

“மரியாயே மோட்ச வாசல், அவர்கள் வழியாகத் தான் மோட்சம் போகலாம். ஏனெனில் மோட்சம் போவதற்கு வேண்டிய வரப்பிரசாதம் அவர்கள் மூலமாகவே வருகின்றது” என்று அர்ச். அல்போன்சும், “மரியாயின் வழியாய் மட்டும் யாரும் மோட்சம் போகலாம். ஏனெனில் அவர்கள்தான் வாசல்” என அர்ச். பொனவெந்தூரும் சொல்லியிருக்கின்றனர். நாம் அவ்வாசலண்டை போக நமது பாவத்தினிமித்தம் அபாத்திரவான்களாயினும், அத்தாயின் சலுகையை நம்பி, துணிந்த மனதோடு செல்லுவோம்.

“எம் தாயே, உமது வாசல் வழியாய்ச் சென்று இனிமேல் பாவ வழி நடவாதிருக்கும் வண்ணம் உமது அன்பின், இரக்கத்தின் வாசலைத் திறந்தருளும். பரிசுத்த ஆண்டவளே! உமது இரக்கப் பெருக்கத்தை அறுதியிட்டுச் சொல்ல யாரால் முடியும்? உமது இரக்கமானது நீண்டு கடைசி நாள் வரை கேட்போர்க்கெல்லாம் உதவுகின்றது; அகன்று உலகத்தை நிரப்புகின்றது; உயர்ந்து பாவியை பரலோக வாசலில் கொண்டு சேர்க்கின்றது; ஆழ்ந்து மரண நிழலிலும், பாவ இருளிலும் இருப்போர்க்கு இரட்சணியம் பெற்றருளுகின்றது. 

உமது சகாயத்தால் மோட்சம் முக்தர்களால் நிறையப் பெறுகிறது; நரகம் தனது இரையை இழக்கிறது. பாழடைந்த ஜெருசலேம் புதுப்பிக்கப்படுகிறது; பாவிகள் புது ஜீவியமடைகிறார்கள். எமது இரட்சகரின் அன்புள்ள தாயே! மோட்சத்தின் திறந்த வாசலே! பாவிகளைப் பாவ வழியினின்று மீட்டு மோட்ச பாதையில் செல்ல அவர்களுக்கு உதவும்; நீதிமான்களைப் புண்ணியத்தில் நிலைநிறுத்தி ஆனந்தம் சுகிக்க அழைத்துச் செல்லும்.” 


பரலோகத்தினுடைய வாசலே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!