அர்ச். தோமையார் வரலாறு - மயிலாப்பூரிலிருந்து வந்த தூது

தோமையார் பல ஊர்களில் பிரசங்கித்து விட்டுக் கரங்கனூர் திரும்பியபோது, சீத்தாராமன் என்ற ஒருவன் அவரிடம் வந்தான். இவன் மயிலாப்பூர் வாசி. அங்குள்ள அரசன் மஹாதேவனுடைய படைத்தள கர்த்தன். தோமையாரைத் தேடியே அங்கு வந்தான். அப்போஸ்தலரைப் பார்த்ததும், "கிறிஸ்துவின் அப்போஸ்தலராகிய முத்தப்பரே! ஆத்தும சரீரங்களுக்குக் குணம் அளிக்கும் முத்தரே! என் மீது இரக்கம் வையும். ஏனெனில், என் மனைவியும் மகளும் வாதனைப்படுகின்றனர். அவர்களைப் பேய்பிடித்து ஓயாத தொல்லைப்படுத்துகிறது. உம் தேவனின் பெயரால் அப்பேயை ஓட்ட உமக்குச் சக்தியிருக்கின்றதென்று நம்புகிறேன்; ஆதலால் என்னோடு மயிலாப்பூருக்கு வர உம்மை மன்றாடுகிறேன்'' என்றான்.

தோமையார் : உன் மனைவியும் மகளும் எம் ஆண்டவரின் கருணையால் குணப்படுவார்கள் என்று நம்புவாயேயானால் நான் வருகிறேன். 

சீத்தாராமன்: அப்போஸ்தலரே! அப்படி நம்பாவிடின் இவ்வளவு தூரம் உம்மைத் தேடி வருவேனா?

அச்சமயம் கடவுள் தம்மை வேறிடம் அழைக்கின்றார் என்று அறிந்து கொண்டார் அப்போஸ்தலர். உடனே அங்குள்ள கிறிஸ்தவர்களையெல்லாம் ஒருங்கே கூட்டி, அவர்களுக்குப் பின் வருமாறு சுருக்கமாக உபதேசித்தார். "என் மக்களே! உங்களை விட்டு நான் பிரியும் நேரம் கிட்டி விட்டது, ஏனெனில், நம் ஆண்டவர் வேறிடத்தில் அவரது திருச்சபையை நிறுவ என்னை அழைக்கின்றார். நான் உங்களை விட்டுப் போகப் போகிறேன். நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருங்கள், நான் கற்பித்தபடி நடந்து வாருங்கள்; சத்தியத்தைத் தவறவிடாதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு இயேசுவை நேசியுங்கள் , சாந்திப்புஸ் இனிமேலாக உங்களைக் கண்காணிப்பார். நீங்கள் என்னை இவ்வுலகில் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்" என்பதே. 

இவ்வாறு உரைத்ததும் கண்கள் வானத்தை நோக்க இருகைகளையும் உயர்த்தி, "ஆண்டவரே அடியேன் மூலமாக உமது மந்தையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு நீரே பாதுகாவலாய் இருப்பீராக. இவர்களில் ஒருவராகிலும் முன் வைத்த காலைப் பின் வைக்காது இருக்கும்படிப் பார்த்தருளும் தேவரீரது கண்காணிப்பால் அவர்கள் இயேசுகிறிஸ்துவால் தயாராக்கப்பட்ட பரலோக இன்பத்தையும் நித்திய வாழ்வையும் அடையச் செய்தருளும். பிதா சுதன் பரிசுத்த ஆவிக்கு என்றென்றும் மகிமையும் துதியும் உண்டாவதாக'' என்று கூறி, அவர்களை மனமார ஆசீர்வதித்தார். எல்லாரும் ஒன்றாக "ஆமென்' என்று முடித்தார்கள், "நம் ஆண்டவரின் சமாதானம் உன்னிடம் எப்போதும் இருக்கக்கடவது " என்று சொல்லி, ஒவ்வொருவர் தலையின் மீதும் தமது கையைவைத்து மந்திரித்தார். பின்னர் தன் சீடர்களை நெஞ்சோடு அணைத்து அவர்களுக்கு அரிய அறிவுரைகளைப் போதித்தபின் அவர்களை விட்டுப் பயணமானார்.

மக்களோ பெரிதும் மனங்கலங்கி அழுதனர்; அவரோடு சிறிது தூரம் சென்று 'முத்தப்பரே! தோமை முத்தப்பரே! எங்களை மறக்க வேண்டாம். இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேச நினைவு கூரும்" என்று மன்றாடினர்.

பிறகு சீத்தாராமன் ஏற்பாடு செய்திருந்த இரு வெண் காளைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஏறிக்கொண்டு அவனோடு மயிலாப்பூர் புறப்பட்டார். பீட்டர்ராபனும், தோமாராபனும், அவரோடு ஏழுமைல் தூரம் சென்று பயணம் அனுப்பிவிட்டுத் திரும்பினர். கிறிஸ்தவர்களோ ஆழ்ந்த வேதனையில் மூழ்கியிருந்தனர். திரும்பத் தம்மைப் பார்க்கமாட்டார்களென்று தோமையார் சொன்ன சொல் அவர்கள் மனத்தை வெகுவாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.