இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளின்மீது மரியாயின் மாசற்ற இருதயம் கொண்டுள்ள அன்பு

"எங்கே அனைத்திலும் மேலான மாசற்றதனம் உள்ளதோ, அங்கே அனைத்திலும் மேலான தேவசிநேகமும் இருக்கிறது'' என்று அர்ச். ஆன்செல்ம் கூறுகிறார். ஓர் ஆத்துமம் எந்த அளவுக்கு மாசற்றதாகவும், தன்னையே வெறுமையாக்கியும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு, கடவுள் மீது அதற்குள்ள அன்பின் முழுமை பெரிதாயிருக்கும். மகா பரிசுத்த மாமரி, முற்றிலும் தாழ்ச்சியால் நிறைந்திருந்தார்கள். தான் என்ற சுயம் அவர்களிடம் அணுவளவும் இல்லாதிருந்தது. எனவே அவர்கள் எந்த அளவுக்கு தேவசிநேகத்தால் நிரப்பப்பட்டிருந்தார்கள் என்றால், ""கடவுள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு சகல மனிதர்கள் மற்றும் தேவதூதர்களின் அன்பையும் விஞ்சியதாக இருந்தது'' என்று அர்ச். பெர்னார்தீன் எழுதுகிறார். இதனாலேயே அர்ச். பிரான்சிஸ் சலேசியார் சரியான காரணத்தோடு தேவ அன்னையை, ""நேசத்தின் இராக்கினி'' என்று அழைக்கிறார்.

மனிதர்கள் தங்கள் முழு இருதயத்தோடு தம்மை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையைக் கடவுள் மெய்யாகவே மனிதர்களுக்குத் தந்திருக்கிறார்: ""உன் தேவனாகிய ஆண்டவரை உன முழு இருதயத்தோடு... நேசிப்பாயாக'' (மத்.22:37). ஆனால், அர்ச். தாமஸ் அக்குயினாஸ் அறிக்கையிடுவது போல, ""இந்தக் கட்டளை பூமியில் அல்ல, மோட்சத்தில்தான் முழுமையாகவும், உத்தமமான விதத்திலும் மனிதர்களால் நிறைவேற்றப்படும், பூமியில் அது குறைவுள்ள விதத்திலேயே நிறைவேற்றப்படுகிறது.'' ஒரு குறிப்பிட்ட விதத்தில் பார்க்கும்போது, உத்தமமான விதத்தில் ஒருபோதும் நிறைவேற்றப்பட இயலாத ஒரு கட்டளையைக் கடவுள் தந்திருப்பது பொருத்தமற்றதாகவே இருந்திருக்கும் என்று இதைப் பற்றிப் பேசும்போது அர்ச். பெரிய ஆல்பர்ட் கூறுகிறார். ஆனால் தேவமாதா இதை உத்தமமான விதத்தில் நிறைவேற்றியிராவிட்டால், மேற்கூறியதுதான் உண்மையாயிருந்திருக்கும். ""யாராவது ஒருவர் இந்தக் கட்டளையை நிறைவேற்றியிருக்கலாம், அல்லது யாருமே நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்; அப்படி யாராவது ஒருவர் அதை நிறைவேற்றியிருந்தால், அது மகா பரிசுத்த கன்னிகையால் மட்டுமே முடிந்திருக்கும்'' என்று இந்தப் புனிதர் கூறுகிறார். ""நம் எம்மானுவேலின் திருத்தாயார் புண்ணியங்களை அவற்றின் மிக உச்சமான முழுமையில் அனுசரித்தார்கள். ""உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக'' என்ற முதலாம் கட்டளையை அவர்கள் அனுசரித்தது போல வேறு யார் அனுசரித்திருக்க முடியும்? அவர்களில் தேவசிநேகம் எவ்வளவு தீவிரமுள்ளதாக இருந்தது என்றால், எந்த விதமான, மிக அற்பமான குறைபாடும் கூட அவர்களை அணுகியிருக்கவே முடியாது'' என் அவர் கூறுகிறார். ""தேவசிநேகம் மாமரியின் ஆத்துமத்தை எந்த அளவுக்கு ஊடுருவி அதை நிரப்பியிருந்தது என்றால், அவர்களின் எந்தப் பாகமும் அதனால் தொடப்படாமல் விடப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத்தோடும், முழு பலத்தோடும், வரப்பிரசாத முழுமையிலும் கடவுளை நேசித்தார்கள்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். ஆகவே, ""என் நேசர் தம்மை முழுவதும் எனக்குத் தந்திருக்கிறார், நானும் என்னை முழுவதும் அவருக்குத் தந்திருக்கிறேன்: - என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்'' (உந்.சங்.2:16) என்று மாமரி மட்டுமே கூற முடியும். ""ஆ, கடவுளை நேசிப்பது என்று கற்றுக்கொள்ளும்படி, பக்திச்சுவாலகர்களும் கூட பரலோகத்தில் இருந்து மாமரியின் இருதயத்திடம்தான் வந்திருக்க வேண்டும்!'' என்கிறார் ரிச்சர்ட் என்பவர்.

ஓ மரியாயே, என் தாயாரே, நீங்கள் சேசு நேசிக்கப்படுவதைக் காண்பதைத் தவிர வேறு எதிலும் ஆசை கொள்வதில்லை ; மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள். உலகப் பொருட்களையோ, பட்டம் பதவிகளையோ, செல்வங்களையோ நான் கேட்கவில்லை. உமது நேச இருதயம் எனக்காக, மற்ற எதையும் விட அதிகமாக எதை ஆசிக்கிறதோ, அதையே நானும் கேட்கிறேன். என் கடவுளை நேசிக்க நான் விரும்புகிறேன்.

அன்பாகவே இருக்கிற கடவுள் அனைவரின் இருதயங்களிலும் தமது தேவசிநேகத்தின் தீச்சுவாலையைத் தூண்டுவதற்காக உலகிற்கு வந்தார். ஆனால் தமது திருத்தாயாரின் இருதயத்தில் அதைத் தூண்டிய அளவுக்கு அவர் வேறு எந்த இருதயத்திலும் அதைத் தூண்டவில்லை. ஏனெனில் அவர்களுடைய இருதயம் எல்லா உலக நாட்டங்களிலிருந்தும் விடுபட்டு மாசற்றதாக இருந்தது; இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தீச்சுவாலையால் சுட்டெரிக்கப்பட அது முழு ஆயத்தத்தோடு இருந்தது. இவ்வாறு, ""தேவசிநேகம் அவர்களிடம் எவ்வளவாகப் பற்றியெரிந்தது என்றால், இவ்வுலகைச் சார்ந்த எதுவும் அவர்களது நாட்டங்களில் நுழைந்திருக்கவே முடியாது'' என்று அர்ச். சோஃப்ரோனியுஸ் கூறுகிறார். மாமரி அவரது பரலோக நெருப்பால் எப்போதும் பற்றியெரிந்து கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில், அதை நிறைவாகப் பருகி, போதை கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக, உந்நத சங்கீதத்தில் அவர்களைப் பற்றி, ""அங்கிருக்கிற விளக்குகள் அக்கினித் தழலும், அதன் சுவாலை கடுஞ்சுவாலையுமாயிருக்கிறது'' (உந்.சங்.8:6) என்று நாம் வாசிக்கிறோம். அர்ச். ஆன்செல்ம் விளக்குகிறபடி, அது அன்பின் வழியாக மாமரியினுள் பற்றியெரியும் தீச்சுவாலை; வெளியில் பிரகாசித்து எரிகிற தீச்சுவாலைகள், புண்ணியத்தை அனுசரிப்பதில் மாமரி அனைவருக்கும் தந்த முன்மாதிரிகை; ஆகவே, மாமரி இவ்வுலகில் இருந்தபோது, அவர்கள் தன் கரங்களில் சேசுவைத் தாங்கியிருந்தபோது, அவர்கள் ""நெருப்பைச் சுமந்திருக்கும் நெருப்பு'' என்று அழைக்கப்படத் தகுதி யுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆம், ஏனெனில், ""நெருப்பு இரும்பில் செயல்படுவது போல, பரிசுத்த அவியானவர் அன்பைக் கொண்டு மாமரியை உஷ்ணப்படுத்தி, பற்றியெரியச் செய்து, உருக்கினார்; இவ்வாறு பரிசுத்த ஆவியானவரின் தீச்சுவாலை காணப்பட்டது, வேறு எதுவுமன்றி, தேவசிநேகத்தின் நெருப்பு மட்டுமே உணரப்பட்டது'' என்று அர்ச். இல்டஃபோன்ஸ் கூறினார். வெந்து போகாமல் எரிவதாக மோயீசன் கண்ட முட்செடி, மரியாயின் திரு இருதயத்தின் நிஜமான அடையாளம் என்று அர்ச். வில்லனோவா தோமையார் கூறுகிறார். எனவே, சரியான காரணத்தோடுதான் அர்ச். அருளப்பர் மாமரியை சூரியனை அணிந்தவர்களாகக் கண்டார் என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்:""அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது. ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்'' (காட்சி.12:1). அர்ச். பெர்னார்ட் தொடர்ந்து, ""ஏனெனில், மாமரி எந்த அளவுக்கு அன்பினால் கடவுளோடு ஐக்கியப்பட்டிருந்தார்கள், எந்த அளவுக்கு ஆழமாக தேவ ஞானத்தின் பாதாளத்தால் ஊடுருவப் பட்டிருந்தார்கள் என்றால், கடவுளோடு தனிப்பட்ட, சுய ஐக்கியம் இல்லாமல், அவரோடு ஒரு சிருஷ்டி நெருக்கமான ஐக்கியம் கொண்டிருப்பது இயலாத காரியமாகவே தோன்றும்'' என்று கூறுகிறார்.

ஓ மிகுந்த அழகுள்ள மரியாயே, ஓ மிகுந்த நேசத்திற்குரிய அன்னையே, நீங்கள் கடவுளின் திரு இருதயத்தையே சொந்தமாக்கிக் கொண்டீர்கள்! என் இருதயத்தையும் எடுத்துக் கொண்டு, என்னை ஒரு புனிதனாக ஆக்குங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். உங்களில்தான் என் நம்பிக்கை இருக்கிறது. அனைவரிலும் அதிகம் நேசிக்கப்படத் தக்கவராகிய மாதாவே, எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.