இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வதன் முக்கியத்துவம்

சாவான பாவங்கள் செய்பவர்களைப் பற்றியும், தேவத் துரோகமான பாவசங்கீர்த்தனங்களைப் பற்றியும் விரைவில் நான் ஏதாவது சொல்வேன் என்றாலும், அவர்களுடைய பாவசங்கீர்த்தனங்களைப் பற்றிப் பேசுவது என் நோக்கமல்ல. மாறாக, உத்தமதனத்தை நேசிப்பவர்களும், அற்பப் பாவக் கறைகளிலிருந்து அதிகமதிகமாகத் தங்ள் ஆத்துமங்களைச் சுத்திகரிக்க இடைவிடாமல் முயன்று வருபவர்களுமான ஆத்துமங்களின் பாவசங்கீர்த்தனங்களைப் பற்றிப் பேசுவதற்கே நான் முதலிடம் கொடுக்கிறேன். 

பேயோட்டும் அதிகாரம் பெற்றிருந்த ஒரு நல்ல குருவைப் பற்றி செசாரியுஸ் விவரிக்கிறார். இந்த குரு ஒரு முறை தமக்குத் தோன்றிய ஒரு பசாசிடம், வேறு எதையும் விட அதிகமாக அவனைக் காயப் படுத்துவது எது என்று தமக்குக் கூறும்படி கடவுளின் திருப்பெயரால் கட்டளையிட்டார். அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வதை விடத் தன்னை அதிகம் காயப்படுத்துவதும் தனது வெறுப்புக்குரியதும் வேறு எதுவுமில்லை என்று பசாசு பதிலளித்தது. சேசுநாதர் ஒரு முறை அர்ச். பிரிஜித்தம்மாளிடம், தங்கள் பக்தியார்வத்தைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் எல்லாக் குறைபாடுகளையும், அவரது ஊழியத்தில் அவர்களுடைய அசட்டைத்தனத்தையும் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வதன் மூலம் தங்கள் ஆத்துமங்களை அடிக்கடி சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். உத்தமதனத்தை அடைய விரும்புகிறவன் மனச்சான்றின் பெரும் பரிசுத்ததனத்தைத் தன் நோக்கமாகக் கொள்ள வேண்டும், ஏனெனில் மனச்சான்றின் பரிசுத்ததனத்திலிருந்துதான் ஆத்துமம் உத்தமமான நேசத்திற்குக் கடந்து செல்கிறது, இவ்வாறு நேசமானது இருதய சுத்தத்தோடு தொடர்புள்ளதாக இருக்கிறது என்று காஸியன் கூறுகிறார். ஆயினும் தற்போதைய நிலையில் ஆத்துமத்தின் இந்தப் பரிசுத்ததனம் எல்லாப் பாவங்களிலிருந்தும் முற்றுமாக விலகி யிருப்பதில் அடங்கியிருக்கவில்லை என்பதை அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், நம் திவ்ய இரட்சகரையும், அவருடைய திவ்ய மாதாவையும் தவிர, உலகில் எல்லாப் பாவக் கறைகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டிருந்த ஆத்துமம் எதுவும் இதுவரை உலகில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. ""நாமெல்லோரும் அநேகக் காரியங்களிலே தவறிப் போகிறோம்'' (யாகப்.3:2). மாறாக அது இரண்டு காரியங்களில் அடங்கியுள்ளது. முதலாவது, எவ்வளவுதான் அற்பமானதாக இருந்தாலும், வேண்டுமென்றே செய்யும் ஒவ்வொரு அற்பப் பாவத்தையும் தடுக்கும்படியாக, இருதயத்தின் மீது கவனத்தோடு விழிப்பாயிருந்து அதைக் கண்காணிப்பது; இரண்டாவது, ஆத்துமம் கட்டிக் கொள்ளக் கூடிய எந்தப் பாவத்திலிருந்தும், எந்தத் தாமதமுமின்றி, உடனடியாக அதைச் சுத்திகரிப்பது. இனி, இந்த இரண்டும் மிக நுட்பமாக, அடிக்கடி பாவசங்கீர்ததனம் செய்வதன் நற்பலனாக இருக்கின்றன.நுட்பமாக, அடிக்கடி பாவசங்கீர்ததனம் செய்வதன் நற்பலனாக இருக்கின்றன.

முதலாவதாக, பாவசங்கீர்த்தனம் ஆத்துமத்தை அது தன் மீது இழுத்து விட்டுக் கொள்கிற கறைகளிலிருந்து சுத்திகரிக்கிறது. அர்ச். கிளிமாக்குஸ் அருளப்பர் ஓர் இளைஞனைப் பற்றிப் பேசுகிறார். இவ்வுலகில் தான் நடத்தி வந்த துர்மாதிரிகையான வாழ்வை விட்டு விலகத் தீர்மானித்த அவன், ஒரு துறவியாகுமாறு ஒரு துறவற மடத்திற்குச் சென்றான். அவனை சேர்த்துக் கொள்வதற்குமுன் மடத்தின் அதிபர், அவன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமானால், அவன் தன் எல்லாப் பாவங்களையும் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று கூறினார். கடவுளுக்குத் தன்னைக் கையளிக்க உண்மையுள்ள மனதோடு பிரதிக்கினை செய்திருந்த அந்த இளைஞனும் உடனே கீழ்ப்படிந்தான். இதோ, துறவிகளுக்கு முன்பாக அவன் தன் பாவங்களை சங்கீர்த்தனம் செய்தபோது, அவர்களில் பரிசுத்தராயிருந்த ஒரு துறவி கண்ணியமான, வணக்கத்துக்குரிய தோற்றத்தில் இருந்த ஒரு மனிதரை அவனருகில் கண்டார். அந்த மனிதர் தமது கையிலிருந்த, அவனது பாவங்கள் எழுதப்பட்டிருந்த ஒரு தாளிலிருந்து அவன் பாவசங்கீர்த்தனம் செய்த ஒவ்வொரு பாவத்தையும் அடித்துக் கொண்டே வந்தார். இவ்வாறு இறுதியில் அவர் அவனுடைய எல்லாப் பாவங்களையும் அடித்து முடித்திருந்தார். அச்சமயத்தில் காணக்கூடிய விதமாக நடந்த இக்காரியம், அவசியமான மனநிலைகளோடு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொருவருக்கும் கண்காணாத முறையில் நிகழ்கிறது.

பாவசங்கீர்த்தனம் ஆத்துமத்தின் பாவக் கறைகளைக் கழுவிப் போக்குவது மட்டுமின்றி, அது மீண்டும் பாவம் செய்யாதிருக்கத் தேவையான பலத்தையும் தருகிறது. தேவதூதருக்கு ஒப்பான வேதபாரகரான அர்ச். தாமஸ் அக்குயினாஸ் இதைப் பற்றி, பாவசங்கீர்த்தனத்தின் பலன் செய்யப்பட்ட பாவங்களை அழிப்பது மட்டுமின்றி, அது மீண்டும் துளிர்க்காதபடி தடுத்தும் விடுகிறது என்று கற்பிக்கிறார். அர்ச். மலாக்கியின் வரலாறு என்னும் தமது நூலில் அர்ச். பெர்னார்ட் ஒரு பெண்ணைப் பற்றி விவரிக்கிறார். இவள் எந்த அளவுக்கு பொறுமையின்மைக்கும் கோபத்திற்கும் அடிமையாகியிருந்தாள் என்றால், பிறரால் பொறுத்துக்கொள்ளப் பட இயலாத நிலைக்கு அவள் ஆளாகி விட்டாள். தனது பொறுமையின்மை பற்றி அவள் பாவசங்கீர்த்தனத்தில் சொன்னதே யில்லை என்றுஅவள் சொல்லக் கேட்ட அர்ச். மலாக்கி, கோபம் தொடர்பான தன் எல்லாப் பாவங்களையும் சங்கீர்த்தனம் செய்யும் படி அவளைத் தூண்டினார். தனது பாவசங்கீர்த்தனத்திற்குப் பிறகு அவள் எவ்வளவு சாந்தமும் பொறுமையும் உள்ளவளாக ஆகி விட்டாள் என்றால், பிறர் தன்னைக் காயப்படுத்தும்போது, அல்லது அவமானப்படுத்தும்போது கூட, பதிலுக்குக் கோபப்பட இயலாதவளாக அவள் ஆகிவிட்டாள் என்று அர்ச். பெர்னார்ட் குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாக, மனச்சான்றின் பரிசுத்ததனத்தை அடைவதற்காகப் பல அர்ச்சியசிஷ்டவர்கள் அனுதினமும் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். அவர்களில் அர்ச். சியென்னா கத்தரீனம்மாளும், அர்ச். பிரிஜித்தம்மாளும், முத். கொலெட்டாவும், அர்ச். சார்லஸ் பொரோமியோவும், அர்ச். லொயோலா இஞ்ஞாசியாரும், இன்னும் பலரும் அடங்குவர். அர்ச். பிரான்சிஸ் போர்ஜியா ஒரு நாளில் இரண்டு தடவை கூட பாவசங்கீர்த்தனம் செய்வார். உலக விரும்பிகள், தாங்கள் நேசிப்பவர்களுக்கு முன்பாகத் தங்கள் முகத்தில் ஒரு கறையோடு தோன்றுவதை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றால்,கடவுளை நேசிப்பவர்கள், தங்கள் நேச ஆண்டவரின் கண்களில் அதிகப் பிரியத்துக்குரியவர்களாக ஆகும்படியாக, அதிகமதிகமாகத் தங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள எப்போதும் முயன்று வர வேண்டும் என்பதில் என்ன அதிசயம் இருக்கிறது! இப்போது, அடிக்கடி திவ்ய நன்மை உட்கொள்பவர்கள், தாங்கள் நன்மை வாங்கும் ஒவ்வொரு முறையும் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனாலும், அவர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு இரு முறையோ, அல்லது வேண்டுமென்று அவர்கள் ஏதாவது ஒரு பாவத்தைக் கட்டிக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாவசங்கீர்த்தனம் செய்வதுதான் சரியானது என்றுநான் கூறுகிறேன்.