இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே!

நம் அன்னை கன்னிமாமரி கடவுள்பால் கொண் டுள்ள உயரிய சிந்தனையையும், பகைவர் மட்டில் அவர்களது வலிமையையும், தன்னை அண்டினோருக்குத் தஞ்சம் அளித்துக் காக்கும் தயாள குணத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக்குகிறது “தாவீது இராஜாவினுடைய உப்பரிகையே” என்ற இவ்வுவமை.

தாவீது அரசர், எதிரிகள் ஜெருசலேம் பட்டணத் தைத் தாக்காதிருக்கவும், அவ்வாறு தாக்கினால் அவர்களை நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்திலிருந்து எதிர்த்துப் புறங்காட்டியோடச் செய்யவும், அரண்களால் சூழப் பட்ட, வன்மை மிக்க ஒரு கோபுரத்தை எழுப்பினார். 

இக்கோபுரம் பெத்லகேம் நகர் வாயிலண்டை கட்டப் பட்டிருந்தது. பிற்காலத்தில் இப்பாதுகாப்பிடம் அழிந்து போக அவ்விடத்தில் மற்றொரு கோபுரம் அமைக்கப் பட்டது. இக்கோபுரந்தான் தாவீது இராஜாவினுடைய உப்பரிகை என வழங்கலாயிற்று. இந்த உப்பரிகைக்குத்தான் பெண்களுக்குள் ஒப்பற்ற கன்னிமாமரி ஒப்பிடப்படுகிறார்கள்.

ஆம். உண்மையில் மாமரியன்னை, “அரண்களிடப்பட்ட தாவீதின் உப்பரிகைக்கு நிகராய் இருக்கின்றார்கள்.” கிறீஸ்துநாதர் கன்னிமாமரியை எண்ணிக்கையற்ற புண்ணியங்களால் உறுதிப்படுத்தி, எதிரிகள் இப்புண்ணியவதியைத் தாக்காவண்ணம் நிலைநாட்டிய தோடு அண்டுவோருக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கும் கோபுரமாகவும் அவர்களை ஏற்படுத்தினார்.

கோபுரமானது மற்ற கட்டடங்களை விட உயர்ந்தது. அதுபோலவே கன்னிமாமரியும் மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் உலகக் காரியங்களில் நாட்டம் செலுத்தாது எப்போதும் விண்ணை நோக்கியவண்ணம் உயர்ந்து நின்றார்கள். உலக ஆசாபாசங்களை அறுத்தெறிந்து சர்வேசுரனைத் தியானிக்கிற எவனும் உலகத்தில் உயர்ந்தவன் என்பது உண்மையானால், சிருஷ்டிகளுக்குள் சிறந்து ஆசாபாச வாடை முதலாய்ப் படாத மாமரியின் மாட்சிமையை என்னென்பது! 

இப்புவியில் பிறந்தவர்களுள் மரியாயை விட அதிகமாய் ஆண்டவரைத் தியானித்தோர் யார்? கன்னிமாமரியின் இவ்வுலக வாழ்வு முழுவதுமே மகனைப் பற்றிய நீண்டதோர் தியானம் என்றாலும் தகும். கழுகானது எப்போதும் உயர உயரப் பறந்து சூரியனை நோக்குவது போன்று அன்னை மாமரி எப்போதும் யாவர்க்கும் மேலாக எழுந்து ஞானச் சூரியனாகிய தன் மைந்தன் சேசுவை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார்கள். அர்ச். சின்னப்பர் உரைப்பது போல, அவர்கள் பூமியில் உறைந்தபோதிலும், அவர்களது “சம்பாஷணை பரலோகத்திலிருந்தது.” 

ஒரு பட்டணத்தின் பாதுகாப்பிற்காக எழுப்பப் படும் கோபுரம் ஏனைய கட்டிடங்களைவிட உயர்ந்து தோற்றமளிக்கிறது; பலத்திலும் சிறந்து விளங்குகிறது. எதிரிகள் அதைத் தாக்கும்போது அது உறுதியுடன் நிற்க வேண்டியிருப்பதால், கோபுரம் எப்போதும் பலமாகக் கட்டப்படும். அதுபோல் மாமரியும் ஓர் பலமுள்ள கோபுரமாகத் திகழ்கின்றார்கள். மரியாயை விட உறுதியும் வலிமையும் வாய்ந்த மானிடன் யார்? அவர்கள் மெய் யாகவே பலமுள்ளவர்கள். ஏனெனில் அவர்களது வீரமும் வலிமையும் சர்வேசுரனிடத்திலிருந்து சுரந்தது. அவர்களது பலம் ஆண்டவர் அளித்த வரப்பிரசாதக் கொடைகளின் விளைவு. இப்பலத்தினிமித்தம் அவர்கள் ஆபத்துக்களுக்கு அஞ்சவில்லை. பசாசின் தலையை நசுக்கவும் தயங்கவில்லை.

இங்ஙனம் தேவதாயை ஓர் கோபுரத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவது முற்றிலும் பொருந்தும்; ஆனால் அவர்களை ஏன் தாவீதின் கோபுரத்திற்கு ஒப்பிட வேண்டும். அக்காலத்தில் பெத்லகேம் நகரில் கட்டப்பட்டிருந்த கோபுரம் “தாவீதின் கோபுரம்” அல்லது “தாவீது இராஜாவினுடைய உப்பரிகை” எனப் பிரபலமாக விளங்கியதால், பரிசுத்த கன்னிகையின் உயரிய நோக்கங்களையும் ஞானப் பலத்தையும் நன்கு விளக்க ஓர் உதவியாக இந்த உவமையை மக்கள் கையாண்டிருக்கலாம். 

எனினும் மாதாவை நாம் தாவீது இராஜாவின் கோபுரம் என்று அழைப்பதற்குத் தனிக் காரணம் உண்டு. தேவமாதா தாவீதின் மரபில் உதித்தவர்கள். தாவீது அரசகுல மாது அவர்கள். தாவீது இராஜாவின் இரத்தம் அவர்கள் உடலில் ஒடியது. சாலமோனின் தந்தை தாவீது, மெய்யான தாவீதாகிய கிறீஸ்துவின் முன்னோடி. உண்மைத் தாவீது தான் பேயாகிய கோலியாத்தைக் கொன்று மனுக்குலத்தின் மாசை அகற்ற கோபுரமாகிய கன்னிமாமரியைத் துணை யாகக் கொண்டார். நமது மீட்பின் கிரயமாக அவர் அளித்த சரீரமும், இரத்தமும் கன்னிமாமரியிடத் திலிருந்தே அடைந்தார். இக்காரணத்தை முன்னிட்டே அர்ச். மாமரி தாவீதின் கோபுரத்திற்கு உபமானமாகக் கூறப்படுகின்றார்கள். 

உப்பரிகை அல்லது கோபுரமானது, முன் கூறியவாறு ஒரு பாதுகாப்பிடம். போர் புரிவோருக்குப் புகலிடம் அது. இதன் உதவியால் பகைவர்களைத் தடுக்கவும், துரத்தவும் கூடும். இத்தகைய கோபுரம் ஒன்று நமக்கு அத்தியாவசியம் என்று சொல்லத் தேவையில்லை. இவ்வுலகம் ஒரு போர்க்களம். வீரமும் தீரமும் படைத்த பகைவர்கள் நம்மை எதிர்க்கின்றனர். திருச்சபைக்கு விரோதமாக எழும் பிரச்சினைகள் பல; உலகம், பசாசு, சரீரம் என்ற நம் ஜென்ம எதிரிகள் நம்மை எப்போது விழுங்கலாம் எனத் திறந்த வாயுடன் திரிகின்றனர். இத்தருணத்தில் நாம் அலட்சியமாயிராது வீரப் போர் புரிய வேண்டும். பகைவர்கள் நம்மைவிடப் பன்மடங்கு வலிமையும் தந்திரமும் வாய்ந்தவர்கள் என்பது உண்மை எனினும், நாம் பலவீனர்களாக இருந்த போதிலும், வீரத்துடன் போர் செய்து, விரோதிகளை வெல்ல உதவும் கோபுரம் ஒன்று நமக்கு உண்டு. அக்கோபுரம்தான் அர்ச். கன்னிமாமரி.

கோபுரமானது ஓர் ஊருக்கு எவ்விதம் பாதுகாப் பிடமோ அவ்வாறே அர்ச். கன்னிமாமரி நமக்கோர் பாதுகாப்பிடம், தஞ்சமளிக்கும் கோபுரம். பகைவர்கள் நம்மைத் தாக்கும்போது அடைக்கலம் தந்து காக்கும் புகலிடம் அவர்கள். அவர்களிடம் அடைக்கலம் புகுவோர் அச்சமென்பதை அறியார். ஏனெனில் அவர்கள் நமது தாய்; நமது பாதுகாவலி; நமக்காகப் பரிந்து பேசுபவர்கள்; நம்மை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் பலமுள்ள தாவீதின் உப்பரிகை. அதனால்தான், “விசுவாசத்தின் அடைக்கலமாய் மாமரி இருப்பதால் அவர்கள் தாவீதின் கோபுரத்திற்கு ஒப்பிடப்பட்டிருக் கிறார்கள்” என அர்ச். பெரிய ஆல்பெர்ட் என்னும் மகா சாஸ்திரி கூறுகிறார்.

ஆகையால் தாவீதின் உப்பரிகைக்கு ஒப்பான நம் மாதாவிடத்தில் விரைந்து செல்ல நாம் ஏன் தயங்க வேண்டும்? அவர்களிடத்தில் தாமதமின்றி தஞ்சமடை வோம். அப்பொழுது அச்சமின்றி அவர்களது அடைக் கலத்தில் என்றும் வாழ்வோம். மாமரி சத்திய திருச்சபை யின் அரண்; பாவிகளுக்கு அடைக்கலம்; தன்னை அண்டும் எப்பாவியையும் அணைத்துக் காப்பாற்றுவது அவர்களது விசேஷ குணம். “மாமரியின் நாமம் ஓர் பல முள்ள கோபுரம். ஓர் பாவி அவர்களிடம் தஞ்சமடைவா னானால் காப்பாற்றப்படுவான்” என்று ரிச்சர்ட் என்பவர் கூறுகிறார். 

“இந்தக் கோபுரம் சத்திய திருச்சபையின் அரண். அதுவே பாவிகளின் அடைக்கலம். ஆகையால் எல்லாக் குற்றவாளிகளும், பலவீனர்களும், துன்புறு வோரும் மரியாயிடம் போகட்டும். அத்தாய் அவர்களைக் காப்பாற்றுவார்கள். பகைவர்களிடமிருந்து அவர்களை இரட்சிப்பார்கள்” என்று கூறுகின்றார் அர்ச். வில்லா நோவா தோமையார். எனவே நமக்கு வரும் இக்கட்டு இடைஞ்சல்களில் மரியாயை நாடுவோம். 

பாரத்தால் அழுத்தப்பட்டு, சோதனையால் நெருக்கப்பட்டு மனம் குலைந்திருக்கும்போது மரியாயை நினைவுகூர்வோம். அவர்களை அண்டிய எத்தனையோ நாடுகள் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. அவர்களை வேண்டிய எத்தனையோ பாவிகள் இறுதி நேரத்தில் பயமின்றிப் பகைவர்களை வென்று ஆத்துமத்தைக் காத்து வெற்றி விருதுடன் மோட்சம் புகுந்திருக்கின்றனர். சந்தேகமில் லாமல் கன்னிமாமரியை பக்தி செய்து அன்புடனும், நம்பிக்கையுடனும் அவர்களிடம் அடைக்கலம் அடைவோர் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

“அர்ச். மரியாயே! எங்கள் தஞ்சமே! ஓர் ஊருக்குப் பாதுகாப்பாக கோபுரம் இருப்பது போல நீர் பாவிகளாகிய எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிறீர். பரிசுத்த தேவ தாயே! தாவீதின் உப்பரிகையே! இதோ உமது அடைக் கலத்தை நாடி வருகிறோம். கண்ணீர்க் கணவாயாகிய இவ்வுலகில் தள்ளாடும் எங்களுக்கு உதவியாக வாரும். அன்புள்ள தாயே! சத்துராதிகளோடு நாங்கள் செய்யும் போரில், முக்கியமாக எங்கள் மரண நேரத்தில் நாங்கள் செய்யும் இறுதிப் போரில், நீர் எங்களுக்கு அரணாகவும், கோபுரமாகவும் நின்று எங்களைக் காத்து இரட்சித் தருளும்.” 


தாவீது இராஜாவினுடைய உப்பரிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!