பேராலயமும் பெருமையும்

தஞ்சை மறைமாவட்ட முதல் ஆயராகிய மேன்மை தங்கிய இரா. ஆரோக்கியசாமி சுந்தரம் ஆண்டகை, இத்திருத்தலத்தைப் பேராலயத்தரத்திற்கு உயர்த்தவேண்டுமெனப் பரிசுத்த பாப்பரசர் 23-ஆம் அருளப்பரிடம் வேண்டிக்கொண்டார்கள். அதை ஏற்று, பாப்பரசர் ஒரு அப்போஸ்தலிக்க மடலை [Apostolic Brief] விடுத்து ஆயரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

“நிகழ்ச்சியின் நிரந்தர நினைவிற்காக" எனும் தலைப்பு இடப்பட்ட இம்மடல், இத்திருத்தலப் பேராலயத்தின் புராதனப் பெருமையினையும் புனித நலன்களையும் ஏற்றுப் போற்றுகிறது.

“இந்தியாவில் தஞ்சை மறைமாவட்ட எல்லைக்குட்பட்ட வேளாங்கண்ணியிலுள்ள புகழ்மிக்க ஆலயத்தில் தமது வல்லமை மிக்க மன்றாட்டினால் தம் பக்தர்களுக்கு மாண்பு மிக்க கன்னிமரி,

ஆரோக்கியம் அருள்வதாகவும் அங்கு அவளுக்குப் பக்தி மிகுந்த வணக்கம் செலுத்தப்படுவதாகவும் அறிகிறோம். ஏனெனில் திரள் திரளான மக்கள் 'தூரத் திசைகளிலிருந்தும் அங்கு வந்து கூடுவதும், அங்கு நடக்கும் புனித சடங்குகளிலும், குறிப்பாக தேவ அன்னையின் பிறப்பு விழாவிற்குமுன் நிகழும் நவ நாட்களிலும் பங்கு பெறுவதும் வழக்கமாய் இருக்கிறது. ஆகவே இக்கோவில் ‘கீழ்த்திசையின் லூர்து நகர்' என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது.

மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் இத் தனி ஆர்வம் ஏறக்குறைய பழங்காலத்திலிருந்தே மக்களிடையே வளர்ந்து வந்துள்ளது. பரம்பரைச் செய்தி கூறுவதுபோல், 18-ஆவது நூற்றாண்டில் கடும் புயலால் கப்பல் கவிழும் நிலையில் தவித்த போர்த்துக்கீசிய மாலுமிகளுக்கு இரக்கம் மிக்க தேவ அன்னை உதவி தந்து காப்பாற்றினார்கள். வேளாங்கண்ணி அருகே அவர்கள் கரை சேர்ந்த இடத்தில், தங்களைப் பாதுகாத்த அன்னையின் புகழை நிலைநாட்ட, ஒரு சிறு கோவில் எழுப்பினர். 

சீன சிற்பம் அமைந்த புனித உருவங்களால் அதை அழகு செய்தனர். அன்று முதல் பக்தியின் திரு இடமாகிய அக்கோவில் பேரும் புகழும் பெற்று வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் சிற்பக்கலை நுட்பம் வாய்ந்த மரியன்னையின் திரு ஆலையம் இன்று இருக்கும் உருவில் எழுப்பப்பட்டது. அந்த ஆலயத்தில் உள்ள மரியன்னையின் சுரூபம் பக்தர்களின் மன்றாட்டுக்களை ஆச்சரியமானவி தமாய் கேட்பதாய்ச் சொல்லப்படுகிறது. பக்தியின் திருப்பீடமாகிய இக்கோவில், சலவைக் கல் பதித்த பலவகை வேலைப்பாடுகளால் துலங்குவதோடு, இறை வழிபாட்டு முறையைச் சிறப்பிக்கும் பல்வேறு புனிதப் பொருட்களையும் கொண்டுள்ளது.

இவை அனைத்தையும் மனதிற்கொண்டு தஞ்சாவூர் மறை ஆயராகிய வணக்கமிகு நமது சகோதரர் இராஜரெத்தினம் ஆரோக்கியசாமி சுந்தரம் அவர்கள், திருப்பயணி களால் சிறப்புற்று விளங்கும் இந்த ஆலயத்திற்குச் 'சிறு தர பசிலிக்கா' [Minor Basilica) என்னும் சிறப்புப் பெயரையும், அதற்குரிய உரிமைகளையும் வழங்குமாறு வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு மனமுவந்து இசைந்து, திருவழிபாட்டுப் பேராயத்தைக் கலந்து ஆலோசித்து, எமது பூரண அதிகாரத்தைப்

பயன்படுத்தி இச்சிறு மடலின் [Apostolic Brief] வாயிலாக தஞ்சாவூர் மறைமாவட்ட எல்லைக்குட்பட்ட வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையாகிய பரிசுத்த கன்னிமரியின் பெயரால் எழுந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆலயத்தை , 'சிறுதர பசிலிக்கா', என்னும் பெயருக்கும். பெருமைக்கும் - உயர்த்துகிறோம். மேலும் இவ்விதச் சிறப்பு வாய்ந்த கோவில்களுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் வழங்குகிறோம். எதிராகக் கூறப்படுவன இருக்குமெனினும், மேற் கூறியவைகளை முடிவு செய்து நிலை நாட்டுவதோடு, பின்வருமாறு கட்டளை விடுக்கிறோம். 

இம்மடல் என்றும் உறுதி உடையதாகவும், சட்டப்படி செல்லுவதாகவும், குறிப்பதை செயல்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இதற்குரிய முழுப் பயனையும் அடைய வேண்டும். இதற்கு இப்போது உரியோருக்கும் இனி உரிமை அடைவோருக்கும் இது உறுதுணை செய்ய வேண்டும். இதற்கு மாறாக யாராவது, எவ்வித அதிகாரமும் உடையோராவது, அறிந்தோ அறியாமலோ கூறும் எந்தக் கூற்றும் பயனற்றதும் செல்லாததுமாகும்.

இம்மடல் உரோமையில் புனித இராயப்பர் தேவாலயத்தில் 1962-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் நாள் எமது முத்திரையோடு, எமது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில் கொடுக்கப்பட்டது.

கர்தினால் சிக்கோஞ்ஞானி,
பாப்பரசரின் செயலர்.