குகைக்குத் தென் கீழ்ப்பாகத்தில் கற்பாறையில் செதுக்கப்பட்ட சிலுவையொன்று இருக்கிறது. அது பெரிய மலையிலுள்ள கற்சிலுவையைப் போன்ற சாயலும் கொண்டுள்ளது; ஆனால் அளவில் சிறியது.
இச்சிலுவையை புனித தோமையாரே கல்லில் வெட்டி, அதனடியில் பீடமொன்று கட்டிப் பலிபூசை நிறைவேற்றி வந்தாரென்பது பாரம்பரை. அதன் மேல் ஒரு சிறு ஆலயம் அமைக்கப்பட்டது.
அதனுள் இக்கற்சிலுவை பீடத்தின் மேல் அமையுமாறு அக்கோவில் கட்டப்பட்டது. இது தான் உயிர்த்த ஆண்டவர் கோயில். இது நாம் மேலே கூறியுள்ள படி பிற்காலத்தில் இடிந்து அழிந்து போயிற்று.
பெரிய மலைமீதுள்ள கற்சிலுவையானது தண்ணீரும் இரத்தமும் வியர்க்கும்போது இதுவும் அதேபோல் அற்புதங் காட்டியதாம்.
(பெரியமலையில் நடந்த அற்புத வரலாறு பின்னால் விவரிக்கப்பட்டிருக்கின்றது.)
இதைக் கண் கூடாகக் கண்ட குருக்களின் சாட்சியம் வரலாற்றால் தெளிவாகிறது. பின்னும் வீரமாமுனிவர் தாம் மேல் நாட்டுக்கு எழுதிய கடிதங்களிலும் இவ்வற்புதங்களைப்பற்றி வரைந்துள்ளார்.
1711 ஆம் ஆண்டு இயேசு சபை தாஸார்டு சுவாமியார் எழுதிய கடிதத்தில், "பெரியமலைக் கற்சிலுவையானது வியர்த்ததை அறிந்தபின் சொந்தோம் சிரேஷ்டர் ஒரு குருவானவரைச் சின்னமலைக்கு அனுப்பிப் பார்க்க, அங்குள்ள சிலுவையும் வியர்வையால் கசிந்திருந்ததைக் கண்டார் என்று எனக்குச் சொன்னார் " என வரைந்துள்ளார்.